இந்தியா தனது 14வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், படிநிலையான ஏற்றத்தாழ்வு கொண்ட சமூகத்தில் வாழ நேர்ந்த கிராமத்து தாத்தாவுக்கும் பேரனுக்குமான வாழ்க்கைப் போராட்டமே ‘சேத்துமான்’ திரைப்படம்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமம் தான் படத்தின் கதைக்களம். ஆதிக்க சாதியினர் வாழும் பகுதியில் நான்கைந்து மாடுகள் திடீரென்று இறந்துவிட, அதை ஒடுக்கப்பட்ட மக்களிடம் கொடுக்கின்றனர். அதை அவர்கள் சமைத்து சாப்பிடுகிறார்கள். அச்சமயம் ஆதிக்க சாதியினருக்கு மாடுகளின் மரணத்தில் சந்தேகம் ஏற்படுகிறது. கறி தின்பதற்காகத்தான் அவர்கள் மாடுகளை விஷம் வைத்துக் கொன்றிருப்பார்கள் என்று எண்ணி, ஒடுக்கப்பட்டவர்களின் குடியிருப்பை சூறையாடுகின்றனர். அந்த கலவரத்தில் தாயையும் தந்தையும் இழந்தநிலையில் குழந்தை ஒன்று பிறக்கிறது.
அந்த குழந்தையை வளர்த்தெடுக்கிறார் குழந்தையின் தாத்தாவான பூச்சியப்பா. அவரே சிறுவனுக்கு (குமரேசன்) முழு உலகமாக இருக்கிறார். குமரேசனை எப்படியாவது படிக்க வைக்க வைத்து பெரியவனாக்கிவிட வேண்டும் என நினைக்கும் பூச்சியப்பா, ஆதிக்க சாதியினரின் வசவு சொற்களைத் தாங்கிக்கொள்கிறார். அதுவே அவரின் இயல்பாகவும் இருக்கிறது.
பண்ணையாரான வெள்ளையனும் அவரது நண்பர்களும் இணைந்து சேத்துமான் கறி (பன்றிக்கறி) சாப்பிட ஆசைப்படுகின்றனர். இதனால் ஏற்படும் விபரீதம் என்ன? பேரனை ஆசைப்பட்ட மாதிரி பூச்சியப்பா படிக்க வைத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.
தாத்தா பேரனுக்கு இடையிலான பாசப் போராட்டம் என்று படத்தின் கதையை சுருக்கி பார்க்க முடியாது. இதை ஒரு இனவரைவியல் படமாக கூறலாம். அதற்குக் காரணம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘வறுகறி’என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டு இருப்பதே. இயக்குநர் தமிழ் நேர்த்தியாகப் படத்தை செதுக்கியிருக்கிறார்.
கதாபாத்திரங்களின் உருவாக்கம் கனகச்சிதம். இந்த கதாபாத்திரம் இதைத்தான் பேசும், இப்படித்தான் நடந்து கொள்ளும் என்பதை பிசிறு தட்டாமல் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். அந்தந்த கதாபாத்திரங்களுக்கு அப்படியே உயிர் கொடுத்திருக்கின்றனர் மாணிக்கம், அஸ்வின், பிரசன்னா பாலசந்திரன், சுருளி, குமார், சாவித்திரி ஆகியோர்.
ஒளிப்பதிவாளர் பிரதீப் காளி ராஜாவின் ஒளிப்பதிவு கோடை காலத்தையும், பொட்டல் காட்டையும், மனித முகங்களின் பாவனைகளையும், சண்டை காட்சிகளையும் மிக யதார்த்தமாக காட்சிப்படுத்தியுள்ளார். பிந்துமாலினியின் இசையும், பாடலும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
படத்தில் குறிப்பிட வேண்டிய ஒன்று வசனம். எழுத்தாளர் பெருமாள் முருகனும், படத்தின் இயக்குநரும் சேர்ந்து எழுதியிருக்கின்றனர். ‘இருட்டுக்குள் இருக்கின்ற வெளிச்சம் எங்களுத்தான் தெரியும்’ என்பது போன்ற வசனங்களும், 'பள்ளிகூடத்துல டீச்சர் என்கிட்ட, நீ எல்லா கறியும் சாப்பிடுவியா?'னு கேட்டாங்க, அதுக்கு நான் 'எல்லாமே சாப்பிடுவேன்'னு சொன்னதும் சிரிச்சாங்க. 'ஏன் தாத்தா கறி சாப்பிட்றது தப்பா?' என கேட்கும் வசனங்களும் ஒடுக்கப்பட்ட ஒருவரின் பன்முக வாழ்க்கையைப் பிரதிபலிக்கக் கூடியதாக இருக்கிறது.
படத்தில் குடியரசுத் தலைவர் பதவியேற்பு குறியீடாகக் காட்டப்பட்டு கொண்டே இருக்கிறது. இந்தியா, தலித் ஒருவரைக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுத்தாலும், அதன் உண்மை முகம் என்ன என்பதை ‘சேத்துமான்’ கலை நேர்த்தியுடன் காத்திரமாக விமர்சித்திருக்கிறது.
தா.பிரகாஷ்