???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பாஜக மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: காங்கிரஸ் நோட்டீஸ்! 0 கார்த்தி சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் 0 ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 147 பேர் ராஜினாமா அறிவிப்பு! 0 நடிகர் தனுஷை சொந்தம் கொண்டாடிய மதுரை தம்பதி: வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் 0 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லாது: டெல்லி உயர்நீதிமன்றம் 0 உலகின் அதிவேக ஏவுகணை: பிரமோஸ் சோதனை வெற்றி! 0 மாநிலங்களவை தேர்தல்: பாஜகவிற்கு வாக்களித்த பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ-க்கள்! 0 உள்ளாட்சித் தேர்தல் தாமதத்திற்கு திமுக காரணம் என்பது வடிகட்டிய பொய்: ஸ்டாலின் 0 திசை மாறிப்போன குழந்தைகள் மீண்டும் தாய் கட்சிக்கு திரும்புவார்கள்: முதல்வர் நம்பிக்கை 0 பேஸ்புக் தகவல் திருட்டு: விஷயம் இதோடு முடிந்துபோய் விடவில்லை! 0 காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நாடகமாடுகிறது: கமல் குற்றச்சாட்டு! 0 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் தொடங்கியது! 0 தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா - சென்னையில் இன்று நடக்கிறது! 0 இன்று பகத்சிங்கின் 87வது நினைவு தினம்! 0 குரங்கணி காட்டுத்தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கருப்பு, கருப்பிகள் - சா.கந்தசாமியின் எழுத்தோவியம்

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   27 , 2005  14:12:56 IST

நிறம் கலாச்சாரத்தோடு தொடர்பு கொண்டது.

இயற்கையில் உள்ள மண், செடி கொடிகள், மலர்கள், கடல், வானம் ஆகியவற்றில் நிறங்கள் உள்ளன. நிறம் உணர்ச்சி, உணர்வு, கலை, கலாச்சாரம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வண்ணமாக உள்ளது.

நிறம் என்பது தமிழ்ச் சொல். நிறத்தைக் குறிக்கும் இன்னொரு தமிழ்ச் சொல் கேழ். வர்ணம் என்பது பிராகிருத மொழிச் சொல். தமிழில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வர்ணம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு
வருகிறது.

கருப்பு, சிவப்பு, பச்சை, பொன் நிறம் என்பது தமிழ் மக்கள் நெடுங்காலமாக அறிந்திருந்த நிறங்கள். மஞ்சள் என்பதை பொன்நிறம் என்று குறிப்பிட்டார்கள். சந்தனம், தாழம்பூ-எல்லாம் பொன் நிறத்தில் அடக்கம். வெள்ளையும் தமிழ் மக்கள் அறிந்திருந்த நிறந்தான். அது உண்மை, தாய்மை, எளிமை ஆகியவற்றின் குறியீடாகப் பயன்பட்டது.

கருப்பு என்றோ சிவப்பு என்றோ சொல்ல முடியாத நிறம் மா நிறமாகியது.

தமிழ் மக்களின் அடிப்படை நிறம் கருப்பு. அது அவர்களின் பொது
நிறம். அதாவது தோலின் நிறம். கருப்பு தொல்காப்பியத்து நிறம் என்ற பொருளிலேயே இடம் பெற்று உள்ளது.

ஆனால் கலாச்சார வளர்ச்சியில், கருப்பு ஒதுக்கப்பட்டு விட்டது. கருப்பு
நிறம் தாழ்வு, இழிவு, துக்கம் என்பதில் அடையாளமாக மாறிவிட்டது. அது இன்னொருவர் சொல்லிச் சொல்லி கருப்பர்களே அப்படி உணர
ஆரம்பித்துவிட்டார்கள் என்பதுதான் சமூக அவலம்.

எனவே கருப்பின் இடத்தை நீலம் பிடித்துக் கொண்டு மேலே
வந்துவிட்டது. அதாவது கருப்பின் வளர்ச்சி நீலம்.

கருப்புக் கண்ணன் நீலநிற கண்ணனான்

கருமாரி கிருஷ்ணமாரியானாள்

கருப்பன், கருப்புசாமி- எல்லாம் கிராம கோவில்களில் மட்டுமே இடம் பெறும் கடவுள்களானார்கள்.

அவர்களுக்குக் கள்ளும் கறியும் படைக்கப்பட்டதால் எல்லைக் குறுக்கப்பட்டது. இருட்டில் பாடப்படும் ராகம் நீலாம்பரியானது.

கருப்பர்களின் ஆசை, இலட்சியம் என்பதே கருப்பைத் தொலைத்துவிட வேண்டும் என்பதாகிவிட்டது.

கருப்பாக இருக்கும் தாய், தந்தையர்கள் தங்களுக்கு கருப்புப் பெண் குழந்தை பிறந்துவிடக் கூடாது என்று மனம் பதறுகிறார்கள். ஏனெனில் கல்யாண மார்க்கெட்டில் கருப்பர்கள் விலை போவதில்லை. எத்தனைத்தான் அழகும், அறிவும், வளமும் கொண்டு இருந்தாலும் கூட.

இளைஞர்கள், குறிப்பாக கருப்பாக இருக்கும் இளைஞர்கள் பெரும்பாலும்
சிவப்பிகளையும், பொன் நிறமான கோதுமை நிறமான பெண்களையே
விரும்புகிறார்கள். காரணம், தன்னுடைய சமூக அந்தஸ்தை சிவப்பிகளைக் கொண்டு மேம்படுத்திக் கொள்ள முடியும் என்ற நினைப்புத்தான்.

கல்யாண விளம்பரங்கள் எல்லாம் சிவப்பிகளையும் கோதுமைகளையும் கொண்ட யுவதிகளையும் குறிவைத்தே விடப்படுகின்றன. கருப்பிகள் கடைசி இடத்தில் இருக்கிறார்கள்.அதற்கு எடுத்துக்காட்டு டி.வி. தொடர்கள், டி.வி.யில் காட்டப்படும் விளம்பரங்கள். கருப்பன்களையும் கருப்பிகளையும் வேலைக்காரர்களாகவும்- வேலைக்காரிகளாகவும் தவிர கதாபாத்திரங்களில் காண முடியாது.

அதற்கு விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் பொது குணம் இல்லை. அதற்குக் காரணம் கருப்பன்களையும் கறுப்பிகளையும் காண கருப்பர்களே தயாராக இல்லை என்று விளம்பரம் கொடுக்கும் நிறுவனங்கள்- விளம்பரத் தயாரிப்பாளர்கள் கருத்துகிறார்கள். அது சமூகத்தில் கல்வி, சமத்துவம், படிப்பு- கூடக் கூட அதிகமாகி வருகிறது.

நிறம் பற்றிய சிந்தனையில் அதில் ஓடும் கலாச்சாரத் தன்மையை எதிர்க்கும் நோக்கில்தான் பெரியார் கருப்புச் சட்டையை போட்டுக்கொண்டார்.கருப்புக் கொடி ஏற்றி வைத்தார். கருப்பே சிறப்பு. கருப்பே அழகு காந்தலே ருசி என்ற பழமொழியின் அடிப்படையில். ஆனால் மக்கள் மனத்தில் கருப்பு பற்றிய சிந்தனை தன் நிஜமான அர்த்தத்தில் ஏறவில்லை.

கருப்பைச் சிவப்பாக்கித் தருகிறோம் என்று கிரீம் கம்பெனிகள் பெரிய பெரிய விளம்பரத்தோடு வந்துவிட்டன.அதை கருப்பிகள் வாங்கி மூஞ்சி, கை, கால், உடம்பில் பூசிக் கொள்கிறார்கள். எந்தவொரு கிரீமும் தோலின் நிறத்தை மாற்றிவிடாது என்ற அடிப்படை அறிவை, சிவப்பு மீது இருக்கும் மோகம் மழுங்கடித்துவிட்டது.

நிறம் அழகு, அறிவோடு சம்பந்தப்பட்டது இல்லை என்பது தமிழர்களுக்குப் புரியும் வரையில் கறுப்பிகள் பாடு கஷ்டந்தான். தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்வு, கலாச்சார, சமூக அறிவின்மையின் பாற்பட்டு இருப்பது. அது படிப்பு, உத்தியோகம் சார்ந்து இருப்பதில்லை. கறுப்பு அழகு, கறுப்பு நேர்த்தி, கறுப்பு வனப்புக் கொண்டது. அது பிறிதொரு நிறம் போல ஒரு நிறம்.

வாழ்க்கையின் செழிப்பு, வளம், அமைதி ஆகியவற்றுக்குக் கறுப்புத் தடை இல்லை.கறுப்புக் கொடி, கறுப்புச் சட்டை, கறுப்புத் துண்டு எல்லாம் கலாச்சார வாழ்க்கையில் இடம் பெறாத வகையில் வெறும் அலங்காரமே.
அலங்காரம் வாழ்க்கை அல்ல. வாழ்க்கை என்பது அலங்காரத்தை ஒழித்தது.

கறுப்பு எப்பொழுது அதற்குரிய இடத்தை பெறுகிறதோ-அப்பொழுதுதான் கலாச்சாரம் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதாக அமையும்.

சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.
அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...
Profile
Article I, Article II,Article III,Article IV


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...