???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு! 0 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! 0 இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் 0 கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து 0 சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம்! 0 மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் 0 சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை 0 வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம்! 0 அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி 0 மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது 0 ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி 0 காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி! 0 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! 0 இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

துப்புரவுத்தொழிலாளியின் வேலை என்னுடயது - பாமரன்

Posted : வியாழக்கிழமை,   ஏப்ரல்   28 , 2005  00:39:47 IST

"ஒரு விமர்சகனுக்கான தகுதி கூட எனக்கு கிடையாது. ஒரு துப்புரவுத் தொழிலாளியின் வேலைதான் என்னுடய வேலை. ஒரு நல்ல படைப்பாளிக்கு தடையாய் உள்ள முட்களையும், சக்திகளையும் களைந்து நல்ல பாதை அமைப்பதுதான் எனது வேலை", என்று கூறும் பாமரன் தமிழக சூழலை தன் நையாண்டித் தனமான எழுத்துக்கள் மூலம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கியவர். அதற்கான எதிர் விளைவுகளையும் சந்தித்தவர். அவரிடம் உரையாடியதிலிருந்து..

இன்றைய தமிழக அரசியல் சூழல் எப்படி இருக்குன்னு நினைக்கிறீங்க?
இன்றைய அரசியல்வாதிகள் நாம் முழித்து கொண்டு இருக்கும்போதே நம் தொடையில் கயிறு திரிக்கிறாங்க.
விவசாயிகளை அரசியல்வாதிகள் ஏமாளியாக்கி விட்டார்கள். காலையில் கிராமத்தில் விவசாயிகளிடம் கரும்பு விலையை ஏற்றுவோம்னு மார்தட்டி பேசிவிட்டு மாலையில் நகரத்துக்கு போய் சர்க்கரை விலையை குறையப்போம்னு வாய்ச்சவடால் அடிக்கிறாங்க நாம்தான் கரும்பிலிருந்து தான் சர்க்கரை வருகிறது என்ற உண்மை தெரியாத முட்டாள்களாக ஏமாந்து போகிறோம்.

விவசாயிகளின் தற்கொலைகள் இப்படித்தான் உருவாகின்றனவா?

ஆமாம். இங்கு விவசாயக் கொள்கையே பன்னாட்டு நிறுவனங்களுக்கு வால் பிடிக்கிற. தான் உலகம் முழுவதும் 1960களில் தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லிகளைத்தான் நமது விவசாயிகள் இன்றளவும் பயன்படுத்திட்டு இருக்காங்க. நமது விஞ்ஞானிகளும் இந்த மருந்தை அடி அந்த மருந்தை அடின்னு சொல்லி நம்மோட மண்ணையும் சூழலையும் மாசு படுத்திட்டாங்க. இப்போ அதே விஞ்ஞானிகள் பரிந்துரைக்கிற இயற்கை விவசாயம் 50 ஆண்டுகளுக்கு முன் நமது தாத்தன் பாட்டி செய்த விவசாயம்தான்.

இதற்கான இயக்கங்கள் இருக்கின்றனவா?

1980களில் மிகத் தீவிரமாக இருந்தது. இப்போது நம்மாழ்வார் போன்ற ஒரு சிலர்தான் அதை ஒரு இயக்கமாக செயல்படுத்துறாங்க. கூடங்குளம் அணு ஆயுத கூடத்தின் விளைவுகளையும் அபாயத்தையும் பற்றி நான் எழுதிய "புத்தர் சிரித்தார்" என்கிற நூல் வெளிவந்து 10 வருடங்கள் ஆகியும் அதற்கான எதிர்வினைகள் மிகவும் குறைவானதாகவே இருக்கு. ஏனென்றால் இங்கு சுற்றுச் சூழல் போல் வாழ்வு முறையும் மாசுபட்டு இருக்குது.

உலகமயமாக்கலின் விளைவுகளாகத்தான் இதனை பார்க்கிறீர்களா?

கொரிய விவசாயி லீ-யெங் உலக வர்த்தக கழகம் முன்னாடி தனக்குத்தானே இதயத்துல கத்தியை சொறுகிகிட்டு என்னோட அரசாங்கம் என்ன கவிட்டுடிச்சுன்னு சொல்லி இறந்து போனாரே, இதைப் போன்ற விளைவுதான் உலகமயமாக்கலினால். என்ன? இங்க விவசாயிகள் மௌனமாக பூச்சி மருந்தை குடித்து இறந்து போகிறார்கள் அதுதான் வித்தியாசம்.

இதைப்போன்ற விளைவுகளை, நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டிய ஊடகங்கள் என்ன செய்கின்றன?

சினிமாவுல காதலை கண்ட கோணத்துல பிரிச்சு மேய்ச்சி காட்டி சாதனை செய்துட்டிருக்காங்க. பத்திரிகைகள் அந்த நடிகனுக்கும் இந்த நடிகைக்கும் "கசமுசா"ன்னு கவர் ஸ்டோரி எழுதுறதோட சரி. இந்த டி.வி. 23 மணி நேரம் சினிமா நிகழ்ச்சிகளையும் 1 மணி நேரம் விளம்பரமும் காட்டி கலக்குறாங்க. அவ்வளவுதான்.

இன்றைய இப்படிப்பட்ட சூழலில் சமூகம் எப்படி இருக்கிறது?

சமூகம் பல்வேறு அடுக்குகளா பிரிந்து போய் கிடக்குது. இங்கு ஒடுக்கப்படுபவர்கள் நாம் ஒடுக்கப்படுகிறோம் என்ற உண்மையை உணர முடியாத அளவிற்கு அறியாமையில் இருக்குறாங்க. இதை உணர வைக்க வேண்டிய இயக்கங்களோ 'அன்பே' ன்னு கொஞ்ச பொண்டாட்டி இல்லாம பிள்ளைக்கு என்ன பேர் வைக்கிறன்னு மண்டையை உடைச்சுகிட்டவன் மாதிரி எது நடந்தால் எது நடக்கும் எது வந்தால் என்னவாகும். எத்தனையாம் தேதி எத்தனை மணிக்கு நடக்கும் என்று யோசித்து கொண்டு மட்டும் இருப்பதால் சூழலின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் திணறுறாங்க.

இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?

பெரியாருக்கு பிறகு இந்த சமூதாயத்தின் மேல் காதல் கொண்ட தலைவர் இல்லாமல் போனதுதான் இன்றைய இழிநிலைக்கு காரணம் இயக்கங்கள் வேறு, கட்சிகள் வேறு என்ற நிலை மாறி இன்று வரும் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு தருவது என்பதில்தான் பகுத்தறிவை பயன்படுத்தி கொண்டு இருக்கின்றன இயக்கங்கள்.

என்னைக் கேட்டால் தேர்தலுக்கு முன்பு 6 மாதம் பின்பு 6 மாதம் இயக்கங்கள் வாயை மூடிக்கொள்ள வேண்டும். இடைப்பட்ட 4 வருடங்களில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்த கால கட்டங்கள்ல நடக்கிற சமூக நீதி மனித உரிமைகளுக்கு எதிரா எது நடந்தாலும் அதை எதிர்த்து ஈவு இரக்கமின்றி போராடுவதுதான். இவற்றின் வேலைகள். தேர்தலைப்பற்றி சிந்திப்பது அல்ல. இல்லையென்றால் போகிற போக்கில் இயக்கங்கள் மறைந்து கட்சிகள் மட்டும் தான் எஞ்சும்.

இன்றைய சூழலின் தேவையை பூர்த்தி செய்ய உண்மையான இயக்கங்கள் இனி உருவாகுமா?

கண்டிப்பாக இந்த தலைமுறை உருவாக்கும். மார்க்ஸ், ஏஞ்செல்ஸ், பெரியார் உருவானதெல்லாம் காலத்தோட தேவைக்கு ஏற்பத்தானே. இப்ப மட்டுமல்ல சித்தர் காலத்துலேயே இப்படிப்பட்ட தேவை இருந்திருப்பதால்தான்.
"பறத்தியாவேததடா பனத்தியாவேததடா என்புதோல் எலும்பிலும் இலக்கமிட்டிருக்குதோ" என்று சித்தர் பாட்டெல்லாம் உருவாகியிருக்கு.

ஒரு எழுத்தாளனாய் இருந்து கொண்டு இலக்கியம் புரியவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உங்களின் பதில் என்ன?

சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் தான் எதையும் கற்றுக் கொள்ள முடியும். ஒரு புத்தகத்தை ஒரு முறைக்கு பத்து முறை படி அப்பவும் புரியலைன்னா கிழிச்சு எறி ஆனா எழுதுனவன்ன குறை சொல்லாத என்று தான் சொல்லுவேன். அதுக்காக மத்தவங்களுக்கு புரியக் கூடாதுன்னே எழுதுபவர்கள் மீது எனக்கு நம்பிக்க கிடையாது. வாசகர்களும் எதுவுமே பயிற்சி செய்யாம தனக்கு எல்லாமே புரியனும்ணு நினைக்கிறாங்க. இப்படி இரண்டு பக்கமும் பொறுப்பற்ற தனங்கள் இருக்கு இரண்டுமே களையப்பட வேண்டும்.

அமெரிக்காவை ஏன் நீங்க எதிர்க்கிறீர்கள்?

சங்கராச்சாரியார் தீண்டாமை பற்றி பேசுவது போலத்தான் அமெரிக்கா அஹிம்சை பற்றி பேசுவதும், பயங்கரவாதத்திற்கு எதிரா போராடுவதாய் சொல்வதும். நமக்கெல்லாம் பூச்சி கொல்லிகளை தயாரித்து அனுப்பும் கம்பெனிகளை வைத்துக் கொண்டு நாம் ஏற்றுமதி செய்யும் காய்கறி, பழங்கள் மட்டும் இயற்கை உரம் பயன்படுத்திய மட்டும்தான் வேண்டும் என்று சொல்கிறார்கள். இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகள அமெரிக்கா ஹிரோசிமா, நாகசாகியில் குண்டு போட்டு சோதனை செய்து பார்த்த மாதிரி சோதனை நிலங்களாகத்தான் பயன்படுத்திவருது. குண்டு போட்டு கொன்றதைவிட இதைப்போன்ற சோதனைகளாலும் தனக்கு பிடிக்காத தன்னை எதிர்த்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்ததின் மூலமாகவும் அது நடத்திய மனிதக் கொலைகள் ஏராளம் அதனால்தான் அமெரிக்காவை எதிர்க்கிறேன்.

எனினும் இன்றைய இளைஞர்கள் அமெரிக்க மோகத்துடன்தான் இருக்கிறார்கள்?
ஆமாம். இந்தியாவில் இந்தியர்கள் என்று யாரும் இல்லை. எல்லாரும் அமெரிக்கர்கள்தான் கம்யூட்டர்படிக்கிறவனாலும் சரி. கால்நடை மருத்துவம் படிப்பவனாலும் சரி அமெரிக்கா போவதுதான் இலட்சியம். இவங்க தட்டி தட்டி Computer keyboardல U.S.A. என்ற மூன்று எழுத்தும் மழுங்கியே போச்சு. இப்படி தேய்ச்சு தேய்ச்சு பாதிப்பேர் கையே குஷ்டரோகி போல் ஆகிப்போச்சு. ஒரு பக்கம் தேசபக்தியும் பேசறான், மறுபக்கம் அமெரிக்கதாசனாகவும் இருக்கிறான். இப்படிப்பட்ட மனநோயாளி நாடாகவே மாறிப் போச்சு.
அப்படி உண்மையான தேசபக்தினா லஞ்சம் வாங்காம இருக்கிறது, ஊழல் செய்யாம, சேரிகளை கொளுத்தாம மற்றவர்களை தாழ்வா நினைக்காம, தன்னோட மண்ணுக்கே தன்னுடய உழைப்பையும், படிப்பையும் கொடுத்து, சமூகத்தின் கடைசி மனிதனின் சுதந்திரக்காற்றை சுவாசிப்பது தான் உண்மையான தேசபக்தி சுதந்திரம் எல்லாம்.

இளைய சமுதாயம் இதற்கான எதிர்வினையை எப்படி தருகிறது?

எங்க தருகிறது? ஆண்கள் பெண்கள் பின்னாடி தெரு நாய் மாதிரி சுத்துறதையே முழுநேர வேலையா வைத்திருக்காங்க. பெண்கள் பெரும்பாலும் மடையர்கள். அவர்களோட வாழ்நாள் இலட்சியமே ஆண்களை ஈர்ப்பது. ஆணின் கவனத்திற்காகேவ தான் படைக்கப்பட்டிருப்பதாய் நம்புவது. தன்னை நகை மாட்டும் ஸ்டாண்டு என்று மட்டும் நினைத்து கொள்வது. ஆனால் இந்த இரண்டு வரையரை எல்லா ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொருந்தாது.

எனில் காதலை நீங்கள் எதிர்க்கிறீர்களா?

இல்லை. காதலை எதிர்க்கவில்லை. காதல் என்கிற பெயரில் இங்கு நடக்கிற கண்றாவித்தனங்களத்தான் எதிர்க்கிறேன்.
"களத்து மேட்டில் உழைத்து களைத்து கிடக்கும் மாமனுக்கு கஞ்சி சுமந்து போகும் பெண்ணுக்கு ரோமாபுரி தெரியாது. காதலர் தினம் தெரியாது. ஆனால் காதல் தெரியும்"
ஐரோப்பிய நாடுகளில் உள்ள வெறும், வறட்டு வாழ்க்கை வாழ்பவர்கள் தம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பதாய் நினைத்து கொண்டால் கிடைக்கும் அற்ப சந்தோசத்திற்காக கொண்டாடும் தினம்தான் இந்த காதலர் தினம். பாட்டி தினம், கொழுந்தியாள் தினம் எல்லாம். மற்றபடி எல்லா நாளும் காதலர் தினம்தான்.

ஆங்கில மோகம் பற்றி?

நம்ம மக்கள் கிட்ட எவ்வளவோ மூட நம்பிக்கைகள் இருக்கு. அதுல ஒன்றுதான் அச்சில் வருவதெல்லாம் உண்மைன்னும், ஆங்கிலம் படித்தால் வேலை என்றும் நம்புவது. என்ன, தமிழ்ல படித்தவன் தமிழில் பிச்சை எடுப்பதுபோல ஆங்கில வழி படித்தவன் ஆங்கிலத்துல பிச்சை எடுக்கிறான் அவ்வளவுதான்.
"மிதிவண்டி" என்று ஒன்று இருந்தால்தான் மிதிக்காத வண்டி இருக்கிறதா என்றும், வானூர்தி என்று இருந்தால்தான் தரையில் போகும் ஊர்தி இருக்கிறதா என்ற கேள்வி குழந்தைகளிடம் எழும்பும். இல்லையென்றால் சைக்கிள், ஏரோப்பிளான் என்று படித்து ஒப்புவிக்குமே தவிர அறிவின் அடிப்படைத் தேவையான கேள்வி எழும்பாது. படித்து ஒப்புவிக்கும் எந்திரமாக மட்டும்தான் இருக்கும். அதனால்தான் தாய்மொழி தமிழில் பாடங்கள் வேண்டும். ஆங்கிலம் என்பது ஒரு மொழியே தவிர அதுவே அறிவாகாது.

இன்றைய தமிழ் திரைப்படங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
அது விடலைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மட்டும் தான் இருக்கு.
நாக்கை அறுக்குற. கண்தானம் செய்றது. கிட்னி தானம் பண்றது போன்ற கண்ட கருமங்களை காதலா நெனைச்சு படம் வந்தாச்சு. பார்த்தாச்சு. இனி யாராவது மூளைய தானம் பண்ற மாதிரி படம் எடுத்தா பல வருசம் ஓடும்னு நினைக்கிறேன் ஏன்னா? அதுதான் படம் எடுக்குறவங்க கிட்டயும் இல்ல. படம் பாக்குறவங்ககிட்டயும் இல்ல.

நல்ல படங்களையும், இயக்குநர்களையும் உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?
ஆம். முடியும்.

உதிரிப்பூக்கள் - மகேந்திரன்
வீடு - பாலு மகேந்திரா
பிதா மகன் - பாலா

தமிழ் தேசியம் பற்றி....
மென்மையான தமிழ் தேசியம் பேச என்னால முடியாது. தனது மலம் அள்ளுவதற்கு மட்டும் அருந்ததியினர் வேண்டும். ஆனால் தமிழ் தேசியம் என்று வரும்போது மட்டும் அவர்கள் தெலுங்கர்கள் ஆகி விடுவார்களா?
தமிழ், தெலுங்கு, கட்லாங் எந்த மொழி பேசினாலும் உழைக்கும் மக்களாக இருக்கிறார்களா? என்பதுதான் முக்கியம். இல்லையென்றால் சேகுவேரா, லெனின் எல்லாம் படித்து பிரயோஜனம் இல்லை. மென்மையான தமிழ் தேசியம் பேசுபவர்கள் மலம் அள்ளும் பணியை அனைத்து சாதியினருக்கும் பகிர்ந்து அளிக்க போராட வேண்டும்.

எல்லாவற்றையும் அது நொள்ளை, இது நொள்ளை என்று சொல்வது எளிது. ஆனால், உங்களால் சரியான விசயத்தை செய்து காட்ட முடியுமா?

முடியும். என்னால் முடிந்ததை செய்து கொண்டுதான் இருக்கிறேன். இப்போதைக்கு ஒரு நல்ல படைப்பாளிக்கு பாதை அமைக்கும் வேலையை செய்கிறேன்.
இன்னும் நிறைய படைப்புகள் செய்ய காலமும் அவகாசமும் எனக்கு உள்ளது. அது படைப்பென்று ஏற்றுக் கொள்ளப்படலாம். அல்லது குப்பையென்று ஒதுக்கவும்படலாம். அதைப்பற்றிக் கவலையில்லை.

சந்திப்பு :கனகராசு &
ரமேஷ்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...