![]() |
எழுத்தாளனின் தனி நபர் கருத்துக்களும் ,அபிப்பிராயங்களும் பெரிதாக உதவக்கூடியதல்ல -அசோகமித்திரன்Posted : திங்கட்கிழமை, செப்டம்பர் 19 , 2005 23:14:54 IST
சுமார் நாற்பதாண்டு காலமாக தமிழில் எழுதிவரும்
அசோகமித்திரனின் 'தண்ணீர்' தமிழின் முதல் குறியீட்டு நாவல் அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழக உலக எழுத்தாளர் பட்டறையில் பங்கேற்க அழைக்கப்பட்ட முதல் தமிழ் எழுத்தாளரான அசோகமித்திரன் கொலாஜ் உத்தியை பயன்படுத்தி 'இன்று' நாவலை எழுதியுள்ளார். இவரது '18 -வது அட்சயக்கோடு' , ' இன்று ' ,'கரைந்த நிழல்கள் ' ஆகிய நாவல்களும் , 'புலிக்கலைஞன்' , 'எலி ' போன்ற சிறுகதைகளும் நவீன தமிழ் இலக்கியத்தின் முதல்தர படைப்புகளாகும். நிராசைகளால் புண்பட்டு,பொருளாதார நெருக்கடியால் தெரிந்தே பிறரை புண்படுத்தி, நம்பிக்கை மேல் நம்பிக்கையிழந்து , நிச்சயமற்று நகர்ந்து கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தை தன் எழுத்தில் சிறைபிடிக்கும் அசோகமித்திரனை பேட்டி கண்டபோது... இந்த தலைமுறையை சேர்ந்தவர்கள் ஜனரஞ்சக பத்திரிக்கைகளில் வரும் மட்டமான கதைகளைப் படித்து படித்து அவை மட்டும் தான் கதை என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா? இல்லை .பலருக்கு அவை திருப்தி தருவதில்லை. ஆனால் கதை தொடர்ந்து படிப்பதற்கு ஓய்வும்,வசதியும் வேண்டும். கதையின் ஆதாரநோக்கமே அனுபவத்தை பிறருக்கு சொல்வதுதான்.புரியாதமாதிரி குறியீடுகள் புகுத்தி கதை எழுதும் பரிசோதனை முயற்சிகள் அபத்தம் என்று சொல்பவர்கள் பற்றி... புரியாத,விடையில்லாத புதிர்கள் நடைமுறை வாழ்க்கையில் அபத்தமே. சமகால பெண்களின் நிலைபற்றி? பல தளங்களில் முன்னேற்றம் இருக்கிறது. மேலைநாடுகளைவிட இந்தியா போன்ற நாடுகளில் பெண்களின் நிலை மேலாகவே உள்ளது. பாலகுமாரன் அவர்களின் எழுத்துக்கள் பிரபலமானதற்கு எது காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இன்று பரவலாகப் பத்திரிக்கைகளைப் படிக்கும் இளைஞர்களைப் பாத்திரங்களாக வைத்து எழுதுகிறார். அவர்கள் சபலங்களுக்கு உட்படுவதாகவும் ,அதில் அவர்களுக்கு மீட்சி இருப்பதாகவும் அமைக்கிறார். சரளமான நடை. சிறுகதை எழுத முயற்சிக்கும் ஆரம்பகால எழுத்தாளர்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள் எவை? ஆங்கிலத்தில் செகாவ் கார்கி,எட்கர் ஆலன்போ ஜார்ஜ் லூயி போன்றோர்.தமிழில் புதுமைப்பித்தன் ,குபரா,ஜானகிராமன். செக்ஸ் பிரச்சனைகளை மையமாக வைத்து கதை எழுதும் முயற்சிகள் வியாபார நோக்கு கொண்டவையா? அதை எழுதுபவருக்கு அது ஒரு பிரச்சனையாக இருக்கும் பட்சத்தில், அவர் அதைத்தான் எழுதுவார் என்று எதிர்பார்க்க வேண்டும். இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கைத் தருபவர்கள் யார்? திலீப்குமார்,பாவண்ணன் ,பழமலய், அழகிய சிங்கர் எனப் பலபேர்கள் தரமுடியும்.சிறுபத்திரிக்கைகள் எல்லாமே எல்லாரையும் எட்டுவதில்லை.அதனால்தான் ஒவ்வொருவர் ஒவ்வொருபட்டியல் தருகின்றனர். விமர்சனங்கள் உங்களை பாதித்ததுண்டா? என் படைப்புகள் குறித்து அதிகமாக விமர்சனங்கள் வந்ததில்லை.நான் பிறர் கருத்து சுதந்திரத்தை மதிப்பவன்.ஆதலால் பாதிப்புக்குள்ளாவது சரியல்ல. பேட்டியின் இறுதியில் அவர், எந்த எழுத்தாளனின் தனி நபர் கருத்துக்களும் ,அபிப்பிராயங்களும் பெரிதாக உதவக்கூடியதல்ல.வாசகனுக்கும் இதர எழுத்தாளர்களுக்கும் உதவக்கூடியது அவனுடைய படைப்புகளே. [பிப்ரவரி 92'ல் அந்திமழைக்காக அசோகமித்திரனை சென்னை தி.நகரிலுள்ள அவரது வீட்டில் சந்தித்தது.க.நடராஜன் & ந.இளங்கோவன்]
|
|