???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

என்னுடைய மரணத்தின்போது நீங்கள் வழக்கம்போல விசாரணை நடத்துவதாகக் கூறுவீர்கள்

Posted : புதன்கிழமை,   ஜனவரி   28 , 2009  10:24:09 IST

இலங்கையில் சமீபத்தில் கொல்லப்பட்ட சன்டே லீடர் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க எழுதிய கடசி தலையங்கம் இது. இது வெளிவருவதற்க்கு முன்பே அவர் சுட்டு கொல்லப்பட்டார்.
புத்த தர்மத்தைக் காப்பதாகச் சொல்லிக்கொள்ளும் சிங்களர்களுக்கு இது அவமானம்.தணிக்கை இருப்பதால் மக்களுக்கு அது தெரியவரவில்லை-
லசந்த விக்ரமதுங்க


ராணுவம் & இலங்கையில் பத்திரிகையாளராகப் பணிபுரிவது இந்த இரண்டையும் விட்டால் வேறு எந்தத் துறையிலும் பணிக்காக உயிர்த் தியாகத்தைக் கோருவதில்லை. கடந்த சில ஆண்டுகளில் சுதந்தரமாகச் செயல் படும் ஊடகங்கள் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. எண்ணற்ற பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப் பட்டிருக்கிறார்கள், அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள், கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் நான் அனுபவித்திருக்கிறேன். குறிப்பாக கடைசியாகச் சொல்லப்பட்டதையும்.
2009, சன்டே லீடர் பத்திரிகையின் 15வது ஆண்டு. கட்டற்ற ரத்த தாகம் கொண்டவர்களால் நடத்தப்படும் மோசமான உள்நாட்டுப் போரின் மத்தியில் நாம் இருக்கிறோம். பயங்கரவாதிகளும், அரசும் நிகழ்த்துகின்ற பயங்கரவாதம் அன்றாட நிகழ்வாகிவிட்டது. சுதந்தரத்தின் கரங்களைக் கட்டுப்படுத்த, கொலை செய்வதைத்தான் அரசு முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. இன்று பத்திரிகையாளர்கள்; நாளை நீதிபதிகள். இந்த இருவருக்குமே இதுவரை இருந்திராத மிகப்பெரிய அபாயம் நிலவுகிறது.
இருந்தும் இந்தப் பணியில் நாங்கள் ஏன் இருக்கிறோம்? இதுபற்றி நான் யோசித்ததுண்டு. நானும்கூட ஒரு கணவனாக, மூன்று அற்புதமான குழந்தைகளின் தகப்பனாக இருக்கிறேன். என்னுடைய தொழிலான சட்டம், பத்திரிகைத் துறை ஆகியவற்றைத் தாண்டிய பொறுப்புகளும், கடமைகளும் எனக்கு இருக்கின்றன. இந்த ரிஸ்க் தேவைதானா? நிறையப் பேர் தேவையில்லை என்று என்னிடம் கூறுவார்கள். நண்பர்கள் என்னிடம் வக்கீல் பணிக்கே திரும்பிவிடுமாறு சொல்வதுண்டு. இருதரப்பையும் சார்ந்த அரசியல் தலைவர்கள் பலமுறை என்னிடம் அரசியலுக்கு வருமாறு கூறியிருக்கிறார்கள். நான் விரும்பும் துறையின் அமைச்சுப் பதவியை அளிப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். இலங்கையில் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களை அறிந்த தூதரக அதிகாரிகள் தங்கள் நாடுகளில் எனக்கு குடியுரிமை அளிக்க முன்வந்துள்ளனர். பலவற்றில் குறைபாடுகள் ஏற்பட்டாலும், வாய்ப்புகளில் மட்டும் எனக்கு எந்தக் குறைவும் இல்லை.
அதிகாரம், புகழ், பாதுகாப்பு இதையெல்லாம் தாண்டிய ஒரு உணர்வு இருக்கிறது. அது மனச்சாட்சி.
ஒரு விஷயத்தை, அதை நாங்கள் எப்படிப் பார்க்கிறோமோ, அதை அப்படியே நேரடியாக எழுதுவதால் சன்டே லீடர் சர்ச்சைக்குரிய செய்தித்தாளாகவே இருந்திருக்கிறது. எங்கள் புலனாய்வுக் கட்டுரைகளுக்கு மறுக்கமுடியாத ஆதாரங்கள் இருக்கும். பொதுவாழ்வில் அக்கறையுள்ள மக்கள் எங்களுக்கு அளிக்கும் ஆதாரங்கள் அவை. ஏராளமான ஊழல்களை நாங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளோம். இந்த 15 ஆண்டில் இதையெல்லாம் தவறு என்று வெற்றிகரமாக மறுத்தவர்கள் யாருமில்லை.
ஒவ்வொரு செய்தித்தாளுக்கும் தனிப்பட்ட கோணம் உண்டு. எங்களுக்கும் அதுபோல ஒன்று உண்டு. இலங்கையை வெளிப்படையான, மதச்சார்பற்ற, லிபரல், ஜனநாயகமாகப் பார்க்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இந்த வார்த்தைகளுக்கு ஆழமான அர்த்தம் உண்டு. வெளிப்படையான என்றால் அரசு மக்களுக்குப் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறது. அவர்களுடைய நம்பிக்கையை வீணடிக்கக்கூடாது என்று அர்த்தம். பல இனங்களும், பல கலாச்சாரமும் கொண்ட நம் சமூகத்தில் மதச்சார்பின்மை என்பதன் மூலம்தான் நாம் அனைவரும் இணைக்கப்பட முடியும். அனைத்து மனிதர்களும் வேறுவேறானவர்கள்; அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் லிபரல் என்பதற்கு அர்த்தம். ஜனநாயகம் ஏன் முக்கியமானது என்று நான் கூறவேண்டுமெனில், இந்தச் செய்தித்தாளை வாங்குவதை நீங்கள் நிறுத்துவது நல்லது.
பெரும்பான்மையினர் என்ன சொல்கிறார்களோ அதையே கேள்வி கேட்காமல் திரும்பச் சொல்லி எப்போதுமே சன்டே லீடர் பாதுகாப்பைத் தேடிக்கொண்டதில்லை. அப்படித்தான் செய்தித்தாள்களை விற்கவேண்டும் என்பதே உண்மை. அதற்கு மாறாக மக்களுக்கு விருப்ப மில்லாத கருத்துக்களை எங்கள் கட்டுரைகள் மூலம் நாங்கள் சொல்லி வந்திருக்கிறோம். உதாரணத்துக்கு, பிரிவினைவாத பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கூறிய அதேசமயம், பயங்கரவாதத்தின் ஆணிவேரான காரணங்களும் களைய வேண்டும் என்று கூறியுள்ளோம். வரலாற்றின் அடிப்படையில் இலங்கையின் இன மோதல் தீர்க்கப்பட வேண்டும் என்றும், பயங்கரவாதப் பின்னணியில் அல்ல என்றும் அரசை நாங்கள் வற்புறுத்தியுள்ளோம். பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று அழைக்கப்படுவதில் அரசின் பயங்கரவாதத்தை நாங்கள் எதிர்க்கின்றோம். தன்னுடைய சொந்த குடிமக்கள் மீதே குண்டுவீசும் நாடு உலகத்திலேயே இலங்கைதான் என்பது பற்றிய எங்கள் அச்சத்தையும் நாங்கள் மறைத்ததில்லை. இதற்காக எங்களை துரோகி என்றார்கள். இது துரோகம் என்றால் அந்தப் பட்டத்தை நாங்கள் மகிழ்ச்சியோடு ஏற்கிறோம்.
போருக்கான எங்கள் எதிர்ப்பு, புலிகளுக்கான ஆதரவாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது. புலிகள் அமைப்பு களையப்படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் தமிழ் குடிமக்களின் உரிமைகளை மீறுவதன் மூலம் அதைச் செய்வது, அவர்கள்மீது குண்டுவீசுவதும், கருணையற்று சுடுவதும் தவறு. புத்த தர்மத்தைக் காப்பதாகச் சொல்லிக்கொள்ளும் சிங்களர்களுக்கு அது அவமானம். இதனால் அது தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்பட்டே வந்திருக்கிறது. தணிக்கை இருப்பதால் மக்களுக்கு அது தெரியவரவில்லை.
நாட்டின் வடக்கு கிழக்கை ராணுவரீதியாக ஆக்கிரமிப்பது அப்பகுதியின் தமிழ் மக்களை எல்லா சுயமரியாதையையும் இழந்து இரண்டாம்தர குடிமக்களாக வாழச் செய்யும். வளர்ச்சி, மறுசீரமைப்பு ஆகியவற்றைக் கொண்டு போருக்குப் பிறகு அவர்களை உற்சாகப்படுத்தலாம் என்று கற்பனை செய்யவேண்டாம். போரின் காயங்கள் அவர்களை விட்டு நீங்காது. அதுமட்டுமல்லாமல், இன்னும் கசப்புடனும் வெறுப்புடனும் கூடிய வெளிநாடுவாழ் மக்களையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். அரசியல் தீர்வால் அடங்கிவிடக்கூடிய ஒரு பிரச்னை எப்போதும் தீராத காயமாக மாறிவிடும். நான் கோபமானவனாகவும், சலிப்புற்றவனாகவும் தென்பட்டால் அதற்குக் காரணம், இது இவ்வளவு தெள்ளத்தெளிவாக தெரிந்திருந்தும்கூட அதை எனது பெரும்பாலான நாட்டு மக்களும், அரசும் உணர மறுக்கிறார்களே என்பதால்தான்.
இரண்டுமுறை நான் கொடூரமாக தாக்கப்பட்டிருக்கிறேன். ஒருமுறை எனது வீடு துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் தீவிரமான காவல்துறை விசாரணை இந்தச் சம்பவங்களில் நடத்தப்பட்டதில்லை. தாக்கியவர்கள் பிடிக்கப்பட்டதில்லை. இந்தத் தாக்குதல்கள் அரசால் நடத்தப்பட்டவை என்றே நான் நம்புகிறேன். இறுதியில் நான் கொல்லப்படும்போதும் அரசுதான் என்னை கொலை செய்யும்.
பலருக்கும் தெரியாத ஒன்று, மகிந்தாவும் நானும் 25 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்கள். அவரை எப்போதும் அவருடைய முதல் பெயரைச் சொல்லி அழைக்கக்கூடிய ஒருசிலரில் நானும் ஒருவன் என்று நினைக்கிறேன். செய்தித்தாள் ஆசிரியர்களுக்கு அவர் நடத்தும் கூட்டங்களுக்கு நான் செல்வதில்லை என்றாலும், அவரை தனிப்பட்ட முறையில் நண்பர்கள் முன்னிலையில் சந்திக்காமல் ஒருமாதம்கூட கழிவதில்லை. மகிந்தா, நீங்கள் 2005&ல் அதிபர் பதவி வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது என்னுடைய கட்டுரையைவிட சிறப்பாக வேறு எங்கும் நீங்கள் வரவேற்கப்படவில்லை. பிறகு ஹம்பந்தோட்டா ஊழலில் நீங்கள் சிக்கினீர்கள். நிறைய சிந்தனைக்குப் பிறகு அந்தச் செய்தியை வெளியிட்டோம். அதேசமயம், பணத்தை திருப்பிச் செலுத்திவிடுமாறும் கூறினோம். பல வாரங்கள் கழித்து நீங்கள் அப்படிச் செய்தபோது, உங்கள் புகழ் பலமடங்கு வீழ்ச்சி அடைந்திருந்தது.
அதிபராக வேண்டும் என்று பேராசைப்பட்டதில்லை என்று நீங்கள் என்னிடம் கூறியுள்ளீர்கள். அதுவே உங்கள் மடியில் விழுந்தது. உங்கள் மகன்கள்தான் உங்களுடைய மாபெரும் சந்தோஷம் என்று கூறியிருக்கிறீர்கள். ஆனால் அவர்களோடு நேரத்தைக் கழிக்க விரும்புவதாகவும், அரசு நிர்வாகத்தை நடத்துவதை உங்கள் சகோதரர்களுக்கு விட்டுவிடுவதாகவும் கூறியிருக்கிறீர்கள். இப்போது எல்லோருக்கும் நன்கு புரிந்திருக்கும். அந்த நிர்வாகம் மிகச்சிறப்பாக நடந்திருக்கிறது. என்னுடைய மகன்களுக்கும் மகளுக்கும் இப்போது தந்தையில்லை!
என்னுடைய மரணத்தின்போது நீங்கள் வழக்கம்போல விசாரணை நடத்துவதாகக் கூறுவீர்கள் என்பதை நான் அறிவேன். முன்பு நடத்தப்பட்ட விசாரணைகள் போலவே இதிலும் எதுவும் நடக்காது. உண்மையைச் சொல்வதென்றால் நாம் இருவருமே என்னுடைய மரணத்திற்கு யார் காரணம் என்று அறிவோம். அந்தப் பெயரைத்தான் கூறமாட்டோம். என்னுடைய வாழ்க்கை மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையும் அதைத்தான் சார்ந்திருக்கிறது.
உங்கள் இளமைக்காலத்தில் நமது நாடு பற்றி கொண்டிருந்த கனவுகளோடு ஒப்பிடுகையில், மூன்றே ஆண்டுகளில் அதையெல்லாம் தூள்தூளாக்கிவிட்டீர்கள். நாட்டுபற்று என்ற பெயரில் மனித உரிமைகளை நசுக்கி, கட்டற்ற ஊழலை வளர்த்து உங்களுக்கு முன்பிருந்த அதிபர்களை எல்லாம்விட, அதிகமாக பொதுமக்கள் பணத்தைச் சூறையாடிவிட்டீர்கள். ஒரு பொம்மை கடையில் அவிழ்த்துவிடப்பட்ட சிறு குழந்தைபோல உங்கள் நடவடிக்கை இருக்கிறது. இந்த உவமைகூட அவ்வளவு சரியில்லை. ஏனெனில், எந்தக் குழந்தையும் உங்களைப்போல இந்த மண்ணில் இவ்வளவு ரத்தத்தை வடியச் செய்யாது. இப்போது அதிகாரம் உங்கள் கண்ணை மறைக்கிறது. ஆனால் உங்கள் மகன்களுக்கு ரத்தக்கறைதான் சொத்தாகக் கிடைக்கும் என்பதை அறிந்து நீங்கள் வருந்தும் காலம் வரும். அது துயரத்தையே தரும். என்னைப் பொறுத்தவரையில் மனசாட்சிக்கு குறையின்றி என்னைப் படைத்தவனைச் சந்திக்கச் செல்கிறேன். உங்களுக்கும் நேரம் வரும்போது நீங்களும் அப்படிச் செய்யவேண்டும் என்பதே என் விருப்பம். விருப்பம் மட்டுமே.
ஏன் இப்படி அபாயங்களை நான் சந்திக்கிறேன் என்றும், நான் கொல்லப்படுவது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் மக்கள் கூறுவது வழக்கம். ஆனால் இன ரீதியான சிறுபான்மையினர், திக்கற்றவர்கள் அல்லது பழிதீர்க்கப்படுபவர்கள் ஆகியோருக்காக இப்போது பேசாவிட்டால், பிறகு அவர்களுக்காகப் பேச எப்போதுமே யாருமே இருக்கமாட்டார்கள். பத்திரிகைப் பணியில் எனக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தவர் ஜெர்மன் இறையியலாளரான மார்ட்டின் நிம்லர். அவருடைய இளம்பருவத்தில் யூதர்களுக்கு எதிரானவராகவும், ஹிட்லர் ஆதரவாளராகவும் இருந்தார். ஆனால் ஜெர்மனியில் நாஜிசம் பரவியபோது, ஹிட்லர் யூதர்களை மட்டும் அழிக்க அல்ல, மாறுபட்ட கருத்துக்கொண்ட யாரையுமே அழிக்கவே விரும்பினார் என்பதை உணர்ந்தார். இதை எதிர்த்தபோது 1937லிருந்து 1945 வரை சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டார். முகாம்களில் இருந்தபோது நிம்லர் ஒரு கவிதை எழுதினார். எனது இளம்வயதில் நான் முதன்முதலாக படித்ததிலிருந்தே அதன் வரிகள் என் மனதில் அப்படியே இருக்கின்றன:

முதலில் அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள்
நான் யூதன் அல்ல என்பதால் அதை எதிர்க்கவில்லை
பிறகு அவர்கள் கம்யூனிஸ்டுகளுக்காக வந்தார்கள்
நான் கம்யூனிஸ்டு அல்ல என்பதால் அதை எதிர்க்கவில்லை
பிறகு அவர்கள் தொழிற்சங்கவாதிகளுக்காக வந்தார்கள்
நான் தொழிற்சங்கவாதி அல்ல என்பதால் அதை எதிர்க்கவில்லை
பிறகு அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்
அதை எதிர்ப்பதற்கு யாருமே எஞ்சியில்லை.
நீங்கள் சிங்களராகவோ, தமிழராகவோ, முஸ்லிமாகவோ, தாழ்ந்த சாதிக்காரராகவோ, ஓரினச்சேர்க்கையாளராகவோ, ஊனமுற்றவ ராகவோ இருக்கலாம். சன்டே லீடர் உங்களுக்காக இருக்கிறது. அதன் பணியாளர்கள் அச்சமின்றி தலைவணங்காமல் துணிச்சலோடு போராடுவார்கள். பத்திரிகையாளராகிய நாங்கள் செய்யும் எந்த தியாகமும் எங்கள் புகழுக்காகவும், செழிப்புக்காகவும் அல்ல என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். அவை எல்லாம் உங்களுக்காகச் செய்யப்படுகின்றன. அந்த தியாகத்துக்கு நீங்கள் தகுதியானவர்களா என்பது வேறு விஷயம். என்னைப் பொறுத்தவரை யில் நான் முயற்சி செய்தேன் என்பதை கடவுள் அறிவார்.

மொழிபெயர்ப்பு :என்.அசோகன், தமிழ் பதிப்பு ஆசிரியர்,த சன்டே இந்தியன்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...