???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வணங்கும் நாளை தள்ளிப்போட்டிருக்கிறோம் - அ.முத்துலிங்கம்

Posted : புதன்கிழமை,   ஜனவரி   14 , 2009  11:42:50 IST

ஒக்டோபர் மாதம் பிறந்தபோது சூரியன் வானத்திலிருந்து ஒரேயடியாக மறைந்துபோனான். மரங்கள் ஓர் இரவு முடிவதற்கிடையில்
பொலபொலவென்று இலைகள் எல்லாவற்றையும் கொட்டி குளிர்காலத்தை
எதிர்கொள்ளத் தயாராகிவிட்டன. பறவைகள் தென்திசை நோக்கி
பறந்தன. பூமாரி பொழிவதுபோல மெல்லத் தூவிய பனி கொத்துக்
கொத்தாகக் கொட்டத் தொடங்கியது. அந்த வருடம்தான் நாங்கள்
கனடா வந்து சேர்ந்தோம்.

கனடா பத்து மாகாணங்களும் மூன்று பிரதேசங்களும் கொண்டது.
மூன்று பிரதேசங்களின் கூட்டு சனத்தொகை 100,000. அதில் ஒரு
மாகாணத்தின் சனத்தொகை 140,000. ஆனால் ரொறன்ரோவில்
தமிழர்களின் எண்ணிக்கை நான் போய் இறங்கிய வருடம் 300,000 ஐ
தாண்டிவிட்டது. அவர்கள் ஒரு மாகாணத்துக்கு சமமாக இருந்தார்கள்.
அந்த வருடம்தான் ரொறொன்ரோவில் ஈழத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து
ஒரு காரியம் செய்தார்கள். ரொறொன்ரோ மாநகரத்தின் பெயரை சுத்தத்
தமிழாக்கும் நோக்கில் 'துரந்தை' என்று மாற்றினார்கள். இது ஒரு
பழிக்கு பழி வாங்கும் செயல். இலங்கையை ஆண்ட
வெள்ளைக்காரர்கள் திருகோணமலை என்ற அழகான பெயரை
'றிங்கமலி' (Trincomalee) என்று மாற்றியது அவர்களுக்கு
சம்மதமாயில்லை. திருஞானசம்பந்தர் 'கோயிலுஞ் சுனை கடலுடன்
சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தவரே' என்று பாடிய ஸ்தலத்தை இப்படிச்
சிதைத்த கோபம் அவர்களுக்கு இன்னும் ஆறவில்லை. அடுத்தநாள்
காலை நான் அவசர அவசரமாக தினப்பத்திரிகைகளைப் புரட்டிப்
பார்த்தேன். 'ரொறொன்ரோ' என்றே பத்திரிகைகளில் அச்சாகியிருந்தது.
தொலைக்காட்சி, ரேடியோச் செய்திகளிலும் ரொறொன்ரோ என்றே
சொன்னார்கள்.

ஆனால் அந்தக் கவலையை நான் முற்றிலும் அனுபவிக்க முடியாமல்
புதிய கவலை ஒன்று என்னை சூழ்ந்தது. கொட்டிய பனி ஓர் அடி
உயரத்துக்கு வளர்ந்துவிட்டது. கால்கள் வைத்ததும் புதைந்தன.
புதைந்ததை மீட்க மற்றதும் புதைந்தது. மேற்காக ஓடும் ஹம்பெர் ஆறு
உறைந்துபோய் இறுகிக்கிடந்தது. ஆனாலும் அடியில் நீர் ஓடியது. அந்த
நீரில் மீன்கள் பொறுமையுடன் உயிர்தரித்தன.

பனியகற்றும் மெசின்கள் பெரும் இரைச்சலுடன் பனியை
அப்புறப்படுத்தின. அகற்றிய இடத்தில் மீண்டும் பனி விழுந்து மூடியது.
பனியுடன் சேர்ந்து பனிக்காற்றும் அடித்தது. அது எலும்பை எப்படியோ
போய் தொட்டு சேக்ஸ்பியரின் புகழ்பெற்ற 'Blow blow thou winter wind" பாடலை ஞாபகத்துக்கு கொண்டுவந்தது.
'வீசு வீசு பனிக்காற்றே
உன் கொடூரமான பற்கள்
நன்றிகொன்றவனின் செயலிலும் பார்க்க
குறைவாகவே நெருக்குகின்றன.'

டிசெம்பர் 21ம் தேதி வந்தபோது அதுவே ஆக நீளமான இரவுகொண்ட
நாள் என்று சொன்னார்கள். ஆனால் எங்கே இரவு முடிகிறது எங்கே
பகல் தொடங்குகிறது என்பதை ஒருவராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை.
குளிரில் ஆடிய என் உடம்பு பொங்கல் நெருங்க நெருங்க இன்னும்
அதிகமாக ஆடத்தொடங்கியது. காரணம் குளிரல்ல, மனைவிதான்.
அவர் பொங்கல் பண்டிகையை குளிரோ, வெய்யிலோ, பனியோ, புயலோ
கொண்டாடவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.
நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் கிராமத்தில் பொங்கல் காலத்தில்
முழு பொறுப்பேற்பது ஐயாதான். வழக்கமாக அம்மா கோலம்
போடுவார். ஆனால் பொங்கல் அன்று ஐயா வெகு சிக்கலான கோலம்
ஒன்றை வரைவார். சூரியனுடைய ஒரு சக்கரத் தேரை ஏழு குதிரைகள்
இழுத்துவரும் படம். கனடாவில் பனிவண்டியை நாய்கள் இழுப்பதுபோல
குதிரைகள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக பூட்டியிராது. அவற்றை ஐயா
பக்கவாட்டில் வரைந்திருப்பார். ஒரு சில்லுத் தேருக்கு ஏன் ஏழு
குதிரைகள் என்று ஐயாவிடம் கேட்டால் அவர் பதில் சொல்லமாட்டார்,
விஞ்ஞான ஆசிரியர்தான் அதற்குபதில் கூறுவார். ஏழுகுதிரைகள்
என்றால் சூரியனின் ஏழு வர்ணங்கள். சூரிய வெளிச்சத்தை நியூட்டன்
ஆய்வு செய்யமுன்னரே எங்கள் முன்னோர்கள் அந்த ரகஸ்யத்தை
கண்டுபிடித்துவிட்டார்கள் என்பார்.

நானும் பொங்கலை பொறுப்பேற்கவேண்டும் என்று மனைவி
எதிர்பார்த்தார். ரொறொன்ரோவில் ஒரு மாகாணத்துக்கு தேவையான
தமிழ் மக்கள் வாழ்வதால் சாமான்களுக்கு பிரச்சினை இல்லை. பானை
பச்சையரிசி, பயறு, வெல்லம், சர்க்கரை, கல்கண்டு என்று அனைத்துமே
சுலபமாகக் கிடைத்தன. பாலும் தேனும் வேறு வேறு கடைகளில்
வாங்கிக்கொண்டு வீடு திரும்பினேன். பனிச்சேற்று பூட்சை கழற்றி,
காந்திபோல என்னிலும் உயரமான கரும்பை கையிலே பிடித்துக்கொண்டு
உள்ளே நுழைந்ததும், மனைவி உருக்கிய நெய்போல வழுக்கும் குரலில்
'மூன்று இலைகள் வாங்கினீர்களா?' என்று கேட்டார். அவர் எழுதித்
தந்த பட்டியலில் அது இல்லை. அது என்ன மூன்று இலை? வாழை
இலை, மாவிலை, வெற்றிலை. ஒரு குழந்தைபிள்ளைக்குக்கூட தெரியும்.
எனக்கு தெரியவில்லை. நல்லகாலமாக கனடா தேசியக்கொடியின் நடுவில்
இருக்கும் மேப்பிள் இலையை கேட்கவில்லை. அவை ஒக்டோபரிலேயே
உதிர்ந்து மறைந்துவிட்டன. மறுபடியும் அதிவேக நெடுஞ்சாலையில் 16
மைல்தூரம் போய் மூன்று இலைகளை தேடி அலைந்து வாங்கி வந்தேன்.
பிரச்சினை தீர்ந்தது என்று நினைத்தேன். அப்போதுதான் ஆரம்பமானது.

என் மனைவி சமைக்கும்போது நாலு சமையல் புத்தகங்கள் திறந்தபடி
கிடக்கும். அனைத்தும் அதிலே சொன்ன பிரகாரம்தான் வேலை
நடக்கும். நிறுத்தல், முகத்தல், பெய்தல் அளவுகள் எல்லாம் இம்மியும்
(இம்மி = 1/2150400) பிசகாமல் கடைப்பிடிக்கப்படும். ஆனால்
சமைப்பதில் ஒருபாகம் வேகவைப்பதாக இருந்தால் அந்தச் சமையலை
கடவுள்கூட காப்பாற்ற முடியாது. சமையல் குறிப்புகளில் நேரக் கணக்கு
கொடுப்பதில்லை. அவிக்கவும், வேகவைக்கவும், பொரிக்கவும் என்று
சொல்வார்களே ஒழிய எத்தனை நிமிடங்கள் அதைச் செய்யவேண்டும்
என்பதை சொல்ல மாட்டார்கள்.

அறுவைச் சிகிச்சைக்கு ஒரு மனச்சாட்சிக்கு விரோதமில்லாத,
அதிகவனமான தாதி ஆயுதங்களைக் கொதிக்கவைப்பதுபோல காய்
கறிகளைப்போட்டு கொதிக்க வைப்பார் என் மனைவி. நேரக் கணக்கு
கிடையாது. அவை தம் சுய உருவத்தை முற்றிலும் துறக்கும்வரை
வேலை நடக்கும். பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கும்போது என்ன
வேகவைத்தோம் என்ன இறக்கினோம் என்பது அவருக்கே மறந்துவிடும்.
இந்தக் காரியத்தை என் மனைவி பல வருடங்களாகச் செய்து வருவதால்
அவரை ஒருவரும் இனிமேல் நிறுத்தமுடியாது.

கணினியில் இருந்து இறக்கிய சமையல் குறிப்பை வைத்துக்கொண்டு
மனைவி பொங்குவதற்கு தயாரானார். சூரியனை நோக்கி
பொங்கவேண்டும் என்பது மரபு. சூரியனே இல்லாத ஒரு தேசத்தில் இது
எப்படி சாத்தியம். கைதி வராமலே சில வழக்குகள் தீர்க்கப்படுவதுபோல
சூரியன் இல்லாமலே பொங்குவதற்கு தீர்மானித்தோம். ஆகவே புகை
கூட்டுக்குள் அடுப்பு வைத்து பொங்குவது என்று முடிவானது.
தைப்பொங்கல் என்பது தமிழர் திருநாள். இலங்கை, தமிழ்நாடு,
சிங்கப்பூர், மலேசியா மொரீசியஸ் என்று தமிழர்கள் வாழும் இடம்
எல்லாம் இதை கொண்டாடுவார்கள். கனடாவில் ரொறொன்ரோ
மாநகரை நிறைத்திருக்கும் தமிழர்கள் கொண்டாடாவிட்டால் எப்படி
சரியாகும். அதிலும் உழைக்கும் மக்கள் இயற்கைக்கு, பிரதானமாக
சூரியனுக்கு நன்றி சொல்லும் நாள். எங்கள் மனித உழைப்பு
குறைந்ததல்ல. இந்தச் சாமான்களை சேகரிப்பதற்கு மட்டும் பனிக்குளிரில்
எவ்வளவு உழைத்திருக்கிறேன்.

மனைவி அரிசியையும் பயறையும் நிறுத்துப் போட்டார். தண்ணீரையும்,
கொழுப்பு அகற்றாத பாலையும், நெய்யையும் அளந்து ஊற்றினார்.
முந்திரிய வற்றல், கல்கண்டு, கசுக்கொட்டை போன்றவற்றை எண்ணிச்
சேர்த்தார். அடுப்பிலே பானையை வைத்து சுப்பர்மார்க்கெட்டில் கடன்
அட்டையில் வாங்கிய விறகுகட்டைகளை போட்டு அடுப்பை
மூட்டினார். எதிர்பார்த்ததுபோல பைன் விறகு தீ பற்றியதும்
படபடவென்று எரிந்தது. வெள்ளை ஓக் நின்று எரிந்தது. பேர்ச் விறகு
நறுமணம் பரப்பி எரிந்தது. ஆனால் எதிர்பாராமல் புகை அபாயமணி
அலறத்தொடங்கியது. புகை வீடு நிறையும் என்பதை நானோ, எல்லாம்
அறிந்த மனைவியோ அனுமானிக்கவில்லை. அபாய மணியை
நிறுத்தாவிட்டால் பொலீஸ் வந்துவிடும் அபாயம் இருந்தது. ஏணி
வைத்து ஏறி அபாய மணியை அகற்றினேன். புகை அபாய மணிக்கு
ஒரு கடவுள் இருந்தால் அவருக்கு ஒரு சிறு பிரார்த்தனை
செலுத்திவிட்டு மீதி சமையலை தொடர்ந்தோம்.

அன்றைய பொங்கலை வாழ்நாளில் மறக்கமுடியாது. பானையை இறக்கி
பொங்கலை கண்ணுற்றபோது என்னுடைய கண்ணா மனைவியின்
கண்ணா அகலமாக விரிந்தது என்பதை சொல்லமுடியாது. முந்தாநாள் பூசிய
சீமெந்துபோல பொங்கல் இறுகிப்போய் கிடந்தது. நாங்கள் எவ்வளவு
முயன்றும் அதற்குள் அகப்பட்ட அகப்பையை வெளியே இழுக்க
முடியவில்லை. என் மனைவியின் மேல் உதட்டில் துளி வியர்வை
கோத்து நின்றது. நானும் மனைவியும் மேசையின் எதிர் எதிரே
உட்கார்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு பொங்கலை கிழக்குப்
பக்கமாகவும் மேற்குப் பக்கமாகவும் வெட்டி உண்டோம். அன்று
இறுகிப்போய் இருந்தது பொங்கல் மட்டுமல்ல; என் மனைவியின்
உதடுகளும்தான்.

இது நடந்து இப்போது பல வருடங்களாகிவிட்டன. கனடாவின் ஒரு
மாகாணத்துக்கும் மூன்று பிரதேசங்களுக்கு சமனான தமிழர்கள் வாழும்
ரொறொன்ரோவில் இந்த வருடமும் பானை, பச்சையரிசி, பயறு, கரும்பு
மூன்று இலைகள், வெல்லம், கல்கண்டு, தேன் என்று சகலமும்
கிடைக்கின்றன. ஆனால் இந்த ஆண்டு ஒருவருமே பொங்கல்
கொண்டாடவில்லை.
'கிழங்கை கிண்டி
இழுப்பதுபோல அல்லவா
எடுத்தார்கள்.
என் மகனே, என் மகனே.'
என்று ஓலம் இரண்டு சமுத்திரம் தாண்டி வந்துகொண்டிருக்கிறது.
ஆகவே இவ்வருடம் சூரியனுக்கு வணக்கம் இல்லை. வணங்கும் நாளை
தள்ளிப்போட்டிருக்கிறோம். அவன் வரும் நாளை இலையுதிர்த்த
மரங்கள் பார்த்திருக்கின்றன. தென்திசை ஏகின பறவைகள்
பார்த்திருக்கின்றன. ஆற்றின் அடியில் வாழும் மீன்கள்
பார்த்திருக்கின்றன. துரந்தை மாநகர் வாழ் மூன்று லட்சம் தமிழ் மக்கள்
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

- அ.முத்துலிங்கம்


நன்றி - த சன்டே இந்தியன்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...