![]() |
நாடு பாதுகாப்புக் கொடுக்காத மொழி மெல்ல அழிந்துபோகும் - ஈழத் எழுத்தாளர் அ.முத்துலிங்கம்Posted : வியாழக்கிழமை, டிசம்பர் 11 , 2008 12:37:07 IST
திரு.அ.முத்துலிங்கம் அறுபகளிலிருந்து தொடர்ந்து எழுதி வரும் மிக முக்கியமான ஈழத் எழுத்தாளர். தற்போது கனடாவில் வசித்து வரும் அ. முத்துலிங்கம் எண்ணற்ற சிறுகதைகள் எழுதியவர். அதைத் தவிர பல கட்டுரைகள், பேட்டிகள், விமர்சனங்கள், மற்றும் நாவல்கள் எழுதியவர். 'தீராநதி' இலக்கிய இதழுக்காக கிருஷ்ணா டாவின்ஸிக்கு அவர் அளித்த பேட்டி இப்போ 'அந்திமழை' வாசகர்களுக்காக.
தற்போது இலங்கையில் தமிழ் புத்தகம் வைத்திருப்பதும், படிப்பதும் குற்றம் என்று கருதப்படுவதாக ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அதைப் பற்றி விரிவாகச் சொல்லமுடியுமா? சில ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்புக்கு போய்வந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்ணிடம் சில தமிழ் புத்தகங்கள் கொண்டு வரும்படி செல்லியிருந்தேன். அந்தச் சாதுவான பெண்ணும் சம்மதித்து புத்தகங்களை வாங்கி விமான நிலையத்துக்கு எடுத்து போனார். அங்கே அவரை அதிகாரிகள் பல கேள்விகள் கேட்டு தொல்லை கொடுத்தார்கள். என்ன புத்தகம், அதிலே என்ன இருக்கிறது, யாருக்கு எடுத்துப் போகிறீர்கள் என்றெல்லாம் கேள்விகள். அவர் பயந்துவிட்டார். சூட்கேசை தலைகீழாகக் கொட்டி ஆராய்ந்தார்கள். கடைசியில் விமானம் புறப்பட சில நிமிடங்கள் இருந்தபோது அவரை விடுவித்தார்கள். ஆனாலும் சில வாரங்களுக்கு முன்னர் மின்னஞ்சலில் முன்பின் தெரியாத ஒருவரிடம் இருந்து வந்த தகவல் எனக்கு ச்சரியமாகத்தான் இருந்தது. 'இங்கே இப்பொழுது தமிழ் புத்தகத்தை வைத்திருப்பதே ஆபத்து. அதை ஏன் வைத்திருக்கிறீர்கள், அதிலே என்ன எழுதியிருக்கிறது என்றெல்லாம் ராணுவம் கேள்வி கேட்கிறது' என்று எழுதியிருந்தார். நான் இதை என் நண்பரிடம் சொன்னபோது அவர் இது வழக்கமாக நடப்பதுதான் என்றார். காவல் அரண்களில் இருக்கும் ராணுவம் யாரைப் பார்த்தாலும் சந்தேகப்படும். அவர்களுக்கு பதில் சொல்லி லேசில் திருப்திப் படுத்தமுடியாது.. யாராவது தமிழ் புத்தகத்தை அல்லது சஞ்சிகையை காவினாலோ அவர் உடனே பயங்கரவாதி ஆகிவிடுகிறார். அகப்பட்ட ஆளை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (Terrorism Investigation Division) கொண்டு போவார்கள். அப்படி போனவர்களில் பலர் திரும்பி வருவதே இல்லை.அந்த நண்பர் இன்னும் ஒரு விசயத்தையும் சொன்னார். கனடாவில் கணவன் வெளிநாட்டிலிருக்கும் மனைவியை ஸ்பொன்சர் செய்து அழைக்கலாம்.ஆனால் மனைவி வன்னியை சேர்ந்தவரென்றால் ஸ்பொன்சர் செய்யவே முடியாது. போலீசாரிடம் இருந்து சான்றிதழ் பெற்றால்தான் கனடாவுக்கு வரமுடியும். வன்னியில் பிறந்தவருக்கு சான்றிதழ் எப்படி கிடைக்கும்? இதுதான் இன்றைய நிலை. ஈழத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களெல்லாம் இருபது வருடங்களுக்கு முன்னரே புலம் பெயர்ந்துவிட்டார்கள். இன்று அங்கே நிகழ்பவற்றை ஆவணமாக்கவோ, இலக்கிய ரீதியில் பதிவு செய்யவோ எழுத்தாளர்கள் இல்லை என்பது உண்மையா? சமீபத்தில் கனடா தொலைக் காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். ஈழத்து எழுத்தாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கொடுத்த பேட்டியை கனடாவில் ஒளிபரப்பினார்கள். இவர் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து ஒரு நூலை எழுதினார். முற்றிலும் போர்ச் சூழலில், அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு நிலையில், தொடர்ந்து ஆராய்ச்சி செய்வது என்பது எவ்வளவு பெரிய விசயம். நூலை முடித்துவிட்டு அதைப் பிரசுரிப்பதற்காக அலைந்தார். சரிவரவில்லை.இந்தியா சென்று பதிப்பகம் பதிப்பகமாக ஏறி இறங்கினார். ஒருவருமே ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் தன் வாழ்நாள் சேமிப்பை செலவழித்து புத்தகத்தை வெளியிட்டதாகக் கூறினார். அவர் சொன்னதைக் கேட்ட எனக்கு மனம் துணுக்கென்றது. ஒருவர் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை அர்ப்பணம் செய்து நூலை எழுதியது மட்டுமில்லாமல் தன் சேமிப்பையும் கொடுத்துத்தான் புத்தகத்தை வெளியிடவேண்டும் என்பது எவ்வளவு துர்ப்பாக்கியமானது. இதுதான் இன்றைய ஈழத்து எழுத்தாளரின் நிலை. ஒன்றைப் பதிப்பித்தால் தான் அவர் எழுத்தாளர் என்பதில்லை. அவர் எழுதினாலும் எழுத்தாளர்தான்; எழுதாமல் சிந்தித்தாலும் எழுத்தாளர்தான். புலம் பெயர்ந்த சூழலில் என்ன நடக்கிறது என்றால் அதிக வசதிகள் உண்டு. ஒரு கணினியும் சிறு பணமும் இருந்துவிட்டால் ஒரு புத்தகம் போட்டுவிடலாம். இணையம் வந்த பிறகு நூற்றுக்கணக்கானோர் இணைய தளங்களில் எழுதி தங்கள் எழுத்தைக் கூர்மைப்படுத்துகிறார்கள். உலகம் அவர்கள் எழுத்தை படிக்கிறது. உடனுக்குடன் எதிர்வினை கிடைப்பதால் எழுத்தாளர் தன்னை மேம்படுத்திக்கொள்ள நல்ல வசதி கிடைக்கிறது. புலம்பெயர்ந்த சூழலில் அதிக எழுத்தாளர்கள் உருவாவதற்கு இதுவே முக்கிய காரணம்.யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு வாசகர் என்னை அழைத்து பேசினார். அவர் எல்லா தீவிரமான இலக்கியப் பத்திரிகைகளையும் பசியோடு படிக்கிறார். அது எப்படி என்று கேட்டேன். அவர்களுக்கு ஆறுமாதம் பிந்தித்தான் பத்திரிகைகள் கிடைக்கின்றன என்றாலும் அவர் ஒன்றையும் விடுவதில்லை. எழுதுகிறீர்களா என்று கேட்டேன். எழுதி எழுதி வைத்திருக்கிறேன். எங்கே, எப்படி அனுப்புவது என்பதுதான் பிரச்சினை என்றார். ஆனால் தலை சிறந்த எழுத்தாளர்கள் எல்லாம் புலம் பெயர்ந்துவிட்டார்கள் என்று சொல்வது சரியாகாது. தலை சிறந்த எழுத்தாளர்கள் இன்னமும் ஈழத்தில் இருக்கிறார்கள். எழுதுகிறார்கள். ஆனால் அவை எமக்குக் கிடைப்பதில்லை. மு.பொன்னம்பலம், மல்லிகை ஜீவா, தெளிவத்தை ஜோசப், செங்கை ஆழியான், யேசுராசா, சாந்தன், உமா வரதராஜன் என்று சொல்லிக்கொண்டே போகலாம். கல்வியாளர்களில் கா.சிவத்தம்பி, மௌனகுரு, சித்திரலேகா, நுஃமான் என்று இன்னும் நிறையப் பேர் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இளம் தலைமுறையினரில் இராகவன், அனார் போன்றவர்கள் நம்பிக்கை நட்சந்திரங்களாகத் தெரிகிறார்கள். நிச்சயமாக ஈழத்து நிகழ்வுகள் ஒருநாள் ஆவணங்களாகவோ, இலக்கியப் படைப்புகளாகவோ வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு தமிழ் எழுத்தாளர் பல நாடுகளில் பணிபுரிந்து அனுபவங்களைப் பெறுவது என்பது அபூர்வமாக நிகழ்கிற ஒன்று. உங்களுக்கு அந்த அனுபவம் வாய்த்திருக்கிறது. அப்படிப்பட்ட உலகளாவிய கண்ணோட்டத்தில் சமகால தமிழ் இலக்கியம் பற்றிய உங்கள் எண்ணங்கள் என்ன? நான் எந்த நாட்டுக்கு போனாலும் அந்த நாட்டு இலக்கியங்களை படிப்பேன். அந்த நாட்டு எழுத்தாளர்களை சந்திக்க முயற்சி எடுப்பேன். அப்பொழுதெல்லாம் எனக்கு ஒரு எண்ணம் தோன்றி வலுப்பெற்று வந்தது. தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்து தமிழ் வளர்ச்சியில் ஒரு மறுமலர்ச்சி தென்படுகிறது. அமோகமான படைப்புகள் தமிழில் வெளிவரத் தொடங்கியிருந்தன. நவீன தமிழ் படைப்புகளுடன் வேற்று நாட்டு இலக்கியங்களை ஒப்பிடும்போது எங்கள் இலக்கியத்தின் தரம் சமமாகவே இருக்கிறது. இன்னும் பார்த்தால் மேலானது என்று கூடச் சொல்லலாம்.சு.ரா, அசோகமித்திரன், ஜெயகாந்தன், எஸ்.பொ போன்றவர்களுடைய படைப்புகள் எல்லாம் உலகத் தரமானவை. ஜெயமோகனின் விஷ்ணுபுரம், காடு, ஏழாம் உலகம் நாவல்களை மொழிபெயர்த்தால் அவை உலகநாடுகளில் பெரிய அலையை கிளப்பும். எஸ். ராமகிருஷ்ணனின் யாமம் இன்னொரு சிறந்த படைப்பு. தமிழின் மறுமலர்ச்சிக்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று புலம்பெயர்ந்த தமிழர்கள். இரண்டு, தமிழ் கணிமை வளர்ச்சி. புலம் பெயர்ந்த தமிழர்கள் நிறையப் படிக்கிறார்கள் அத்துடன் புத்தகங்களை காசு கொடுத்து வாங்குகிறார்கள். சமீபத்தில் கனடாவில் நாள் கூலிக்கு வேலை செய்யும் ஒரு தமிழர் தன் சம்பளத்தில் 10 சதவீதம் புத்தகங்கள் வாங்குவதற்கு செலவழிப்பதாகச் சொன்னார். இரண்டாவது, தமிழ் கணினிப் புரட்சி. பல எழுத்தாளர்கள் கணினியில் நேராக எழுதத் தொடங்கிவிட்டார்கள். அது எவ்வளவு எளிது. வலைப்பூக்கள் வந்து நிறையப்பேர் எழுதினார்கள். நிறைய எழுதினால் நிறையத் தேறும். இன்று எழுதும் பல புதிய எழுத்தாளர்கள் இணையத்தின் மூலம் உருவாகினவர்கள்தான். இன்று ஆப்பிரிக்க எழுத்தாளர்களில் சிறந்த இடத்தில் இருப்பவர் 31 வயதான சிமமண்டா என்ற பெண். சென்ற மாதம் இவருடைய Half of a Yellow Sun புத்தகத்துக்கு அமெரிக்காவில் பரிசு கிடைத்திருக்கிறது. நம்பமுடியாத பெரிய தொகை, 500,000 டொலர்கள். நாவல் அருமையான நாவல். ஆனால் இவருடைய நாவலிலும் பார்க்க சிறந்த நாலு தமிழ் நாவல்களையாவது என்னால் சொல்ல முடியும். ஆனால் யாரும் அவற்றை தேர்ந்து பரிசு கொடுப்பதில்லை. காரணம் அப்படி ஒன்று இருப்பதே தெரியாது. இதைத்தான் நான் திருப்பித்திருப்பி சொல்லியும் எழுதியும் வருகிறேன். தமிழின் இன்றைய அவசரத் தேவை ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள். உலக இலக்கியத் தரத்தில் மேலான படைப்புகள் தமிழில் இருக்கின்றன. தி.ஜானகிராமன், சுந்தரராமசாமி, ப.சிங்காரம், அசோகமித்திரன், ஜெயமோகன்,பிரமிள், அம்பை, மு.தளையசிங்கம், சல்மா என நிறைய எழுத்தாளர்களின் படைப்புகளைச் சொல்லலாம். அவை வெளியுலகத்துக்கு தெரிய வருவதில்லை. காரணம் அவற்றை மொழிபெயர்க்க ஆங்கில இலக்கியத்தில் தேர்ந்தவர்கள் முன்வராததுதான். போருக்கு ஆதரவு எதிர்ப்பு என்று இரு பெரும் அணிகளாக இன்று தமிழகம் பிரிந்து நிற்கிறது.போரில் இரண்டு பக்கத்தினரும் வன்முறையையும் சர்வாதிகாரத்தையும் விடுவதாயில்லை. இரு தரப்பும் திறந்த மனத்துடன் சமாதான உடன்படிக்கைக்கு வந்தால்தான் அமைதி சாத்தியம் என்ற யதார்த்தமும் தமிழ் மக்களுக்கு புரிந்தே இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ஈழத்தில் அமைதி நிலவ என்ன மாறுதல் ஏற்படவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? 1995ம் ஆண்டு கனடாவில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. கியூபெக் மாகாணம் தனி நாடாகப் பிரிவதற்கு ஒரு வாக்கெடுப்பு மிக அமைதியான முறையில் நடந்தது. கனடா முழுவதும், ஏன் உலகமே அதை அவதானித்தது. முடிவில் கியூபெக் மக்கள் 51, 49 விகிதத்தில் பிரிவினைக்கு எதிராக வாக்களித்து தொடர்ந்து கனடாவில் ஓர் அங்கமாக வாழ்வதற்கு தீர்மானித்தார்கள். ஓரு மயிரிழையில் கனடா பிரிந்து இரண்டு நாடாவது தடுக்கப்பட்டது. இதற்கு முன்னர் 1980ல் கூட அப்படியான ஒரு வாக்கெடுப்பு நடந்தது.1962ல் எத்தியோப்பியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. எரித்திரிய பிரதேச மக்கள் 31 வருடங்கள் சுதந்திரத்துக்காகப் போராடினார்கள். இறுதியில் 1993ல் ஐ.நா.சபை கண்காணிப்பில் ஒரு வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் வெற்றிபெற்ற எரித்திரியா, எத்தியோப்பியாவிலிருந்து தனி நாடாகப் பிரிந்து ஐ.நா. சபையில் உடனே ஓர் உறுப்பினராகவும் சேர்ந்தது. இந்த வருடம் பிப்ரவரி மாதம் கொசோவோ ( 20 லட்சம் மக்கள் கொண்ட அல்பேனிய மொழி பேசும் பிரதேசம்) சேர்பியாவில் இருந்து தனியாகப் பிரிந்துபோய் சுதந்திரத்தை பிரகடனம் செய்தது. அதை 52 உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுவிட்டன. அமெரிக்காவின் ஐம்பதாவது மாநிலமான, 12 லட்சம் மக்கள் தொகை கொண்ட, ஹவாய் தீவை எடுத்துக்கொள்வோம். இது அமெரிக்காவில் இருந்து 1600 மைல் தூரத்தில் இருக்கிறது. அங்கே ஹவாயும் ஆங்கிலமும் அரச மொழிகள். ஒரு பேச்சுக்கு அவர்கள் தனி நாடு கேட்டால் என்ன நடக்கும்? கனடாவில் நடந்ததுபோல ஒரு நாகரிகமான வாக்கெடுப்பு நடக்கலாம்.ஆனால் தனி நாடு கேட்கும் அளவுக்கு அவர்கள் உரிமைகள் மறுக்கப்படவில்லை. அவர்களுக்கு நிறைந்த சம உரிமை கிடைக்கிறது ஆகையால் தனிநாடு என்ற கோரிக்கையை யாருமே விரும்பமாட்டார்கள். உலகத்தில் இரண்டாயிருந்த நாடுகள் ஒன்றாக இணைவதும் ஒன்றாயிருந்த நாடுகள் பிரிவதும் நடந்துகொண்டே இருக்கிறது. மத ரீதியில் பிரிந்தது பாகிஸ்தான். மொழி ரீதியில் பிறந்தது பங்களதேஷ். 1948ல் பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாக மொகமத் அலி ஜின்னா பேசியபோது உருது மொழியை அரச கரும மொழியாக பிரகடனம் செய்தார். அன்று அவர் உருது மொழியையும் வங்காள மொழியையும் அரச மொழிகளாக அறிவித்து சம உரிமை வழங்கி இருந்தால் இன்று பங்களதேஷ் பிரிந்திருக்காது என்று சொல்லும் அரசியல் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். ஒரு சிறுபான்மை உள்ள ஜனநாயக நாட்டில் சம உரிமைகளுடனான கூட்டாட்சி இருக்கலாம். அல்லது தனிநாடு வழங்கலாம். கூட்டாட்சி என்றால் சிறுபான்மையினரின் உரிமைகள் அந்த நாட்டு அரசியல் சட்டத்தில் நிலைநிறுத்தப்படவேண்டும். அது மாத்திரம் போதாது. ஒரு மூன்றாவது நாடோ (பிராந்திய வல்லரசான இந்தியாவாக அது இருந்தால் நல்லது) ஐ.நா சபையோ சிறுபான்மையினரின் நலனுக்கு உத்திரவாதம் கொடுக்கவேண்டும். ஆனால் சமீபத்தில், கனடாவில் வெளியாகும் ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிகைக்கு இலங்கை இராணுவ தளபதி கொடுத்த பேட்டி ஒன்றில் 'இலங்கை சிங்களவருடைய தேசம் என்பதை நான் வலுவாக நம்புகிறேன்' என்று பேசியிருக்கிறார். இந்த நிலையில் சிறுபான்மையினரின் உரிமை காக்கப்படும் என்பதை எப்படி எதிர்பார்க்கலாம்.இந்தியாவின் பிராந்தியப் பலம் இலங்கையில் அமைதி நிலவுவதற்கு உதவியாக இருக்கும். முதலில் நிபந்தனையற்ற போர் நிறுத்தம் ஏற்படவேண்டும். அடுத்து சமாதானப் பேச்சு வார்த்தை. இரு தரப்பாலும் முடியும். மக்கள் பின்னுக்கு நிற்கிறார்கள். இந்தியாவும் நிற்கவேண்டும். அமெரிக்க அரசியல் சட்டத்தைப் பற்றி பேசும்போது constitutional democracy என்று சொல்வார்கள். அதன் தாத்பரியம் பெரும்பான்மையினரின் அரசியல் சட்டம் அல்ல; சிறுபான்மையரின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம். இன்று அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கரான பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஒரு சிங்கள பௌத்தரே ஜனாதிபதியாக முடியும் என்று அரசியல் சட்டத்தில் எழுதிவைத்திருக்கும் இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கும் என்பது எவ்வளவு சாத்தியமானது. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் அடுத்த தலைமுறை தமிழ் எழுதப் பேசத் தெரியாத நிலைக்கு தள்ளப்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறதே. இதைப்பற்றி? ஒரு காலத்தில் மிருகண்டு முனிவர் வாழ்ந்தார். அவர் மணமுடித்து பல வருடம் ஆகியும் அவருக்கு பிள்ளை இல்லை. கடவுளை நோக்கி தவம் செய்யவும் அவர் தோன்றி ஒரு கேள்வி கேட்டார். ' உமக்கு 100 வயது வாழும் சாதாரண புதல்வன் வேண்டுமா அல்லது உலகுள்ளவரை பெருமை சேர்க்கக்கூடிய, 16 வயது மட்டுமே உயிர் வாழும் பிள்ளை வேண்டுமா?' மிருகண்டு முனிவர் யோசிக்காமல் 16 வயது என்று சொன்னார். பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயர் என்று பெயர் சூட்டினார். மீதி உங்களுக்கு தெரியும். புலம் பெயர்ந்த ஈழத்து தமிழர்கள் இன்று பத்து லட்சத்துக்கும் மேல் உலகமெங்கும் வாழ்கின்றனர். கனடாவில் மாத்திரம் மூன்று லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். நான் அவர்களைப் பற்றியே பேசுகிறேன். மீதிப் பேருக்கும் இது பொருந்தும். சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டார்கள். ஆங்கில மொழியில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் சொற்கள் எவை? சிறுவர்களுக்காக எழுதப்படும் புத்தகங்களுக்கு இந்த ஆராய்ச்சி தேவைப்பட்டது. அந்த ஆராய்ச்சியில் இந்த உண்மையை கண்டுபிடித்திருக்கிறார்கள். 12 வார்த்தைகள் நாம் படித்து எழுதும் வார்த்தைகளில் கால்வாசியாகும். 100 வார்த்தைகள் நாம் படித்து எழுதும் வார்த்தைகளில் அரைவாசியாகும். 300 வார்த்தைகள் நாம் படித்து எழுதும் வார்த்தைகளில் முக்கால்வாசியாகும். இதே மாதிரி தமிழிலும் 500, 600 தேர்ந்தெடுத்த வார்த்தைகள் தெரிந்தால் ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தை வாசிக்கவும் எழுதவும் முடியும். ஆயிரம் வார்த்தைகள் தெரிந்தால் வீரகேசரியையும், தினத்தந்தியையும் படிக்கலாம். ஆசிரியருக்கு கடிதம் எழுதலாம். தமிழ் படிப்பது என்பது இப்போது கம்பயூட்டரில் வெகு இலகுவாகிவிட்டது. ஐந்து வயதில் 'அணில், ஆடு, இலை, ஈ' என்று எழுதிப் படிக்கத் தேவையில்லை. ஒரு 15 வயது மாணவர், இரண்டு வாரப் பயிற்சியில் 500 வார்த்தைகளைக் கற்றுவிடலாம். வருடாவருடம் ரொறொன்ரோவில் தமிழியல் மாநாடு நடக்கிறது. கடந்த மாநாட்டில் ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்பாளிகளும், கல்வியாளர்களும், 50 - 60 மாணவர்களும் கலந்து கொண்டார்கள். நுழைவு இலவசம் அல்ல; முன்கூட்டியே பதிவுசெய்து கட்டணம் கட்டியாகவேண்டும். அப்படியிருந்தும் பல மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. தானாக விரும்பி தமிழ் படிக்க முனையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுதான் உண்மை நிலை. புலம் பெயர் தமிழர்களில் எதிர்காலத்தில் குறைந்தது யிரத்துக்கு ஒருவர் தமிழை உயர் பாடமாக எடுத்து முனைவர் பட்டம் வரை படிக்கும் வாய்ப்பு உள்ளது. இவர்கள் தமிழ் ஆராய்ச்சியில் இறங்குவார்கள், உயர்ந்த இலக்கியங்கள் படைப்பார்கள். தமிழை உலக அரங்கில் முன்னிறுத்துவார்கள். இந்தச் சமயத்தில் புலம் பெயர் தமிழர்கள் தங்களைக் கேட்டுக் கொள்ளவேண்டிய ஒரு கேள்வி உண்டு. 'உங்களுக்கு என்ன வேண்டும். நாலாம் வகுப்பு தமிழில் எழுதப் படிக்கத் தெரியும் பத்து லட்சம் பேரா அல்லது தமிழில் உலகத் தரத்துக்கு உயர்ந்த இலக்கியம் படைக்கும் 10,000 பேரா?' மிருகண்டு முனிவர் தன்னுடைய முடிவைச் சொல்ல ஒரு வித தயக்கமும் காட்டவில்லை. ஓர் இனத்தை அழிக்க அதன் மொழியை அழித்தால் போதும் என்ற கருத்தை ஒரு கட்டுரையில் தாங்கள் சொல்லியிருந்தீர்கள். (அரபு நாட்டைச் சேர்ந்த ஒரு கனடிய வாழ் சிகையலங்காரர் சொல்வதாகிய கட்டுரை) தமிழ் மொழி அழித்தல் இலங்கையில் எப்படி எந்தெந்த வகைகளில் நடத்தப் படுகிறது? நான் என்னுடைய கட்டுரையில் எழுதியது ஒரு முடி திருத்துபவர் சொன்னதைத்தான்.கிறிஸ்து பிறப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே ஹீப்ரு மொழியும், அராமிக் மொழியும் செழித்து வளர்ந்தன. இரண்டுக்குமே சமவயது. இரண்டிலுமே எழுதப்பட்ட செல்வங்கள் இன்றுவரை பாதுக்காக்கப்பட்டு வருகின்றன. நாளடைவில் இரண்டு மொழிகளுமே நலிந்தன. 100 வருடங்களுக்கு முன் ஹீப்ரு மொழி, எழுத்தில் மட்டுமே வாழ்ந்தது. பேசுவதற்கு ஓர் ஆன்மா இல்லை. இன்று ஐந்து மில்லியன் மக்கள் ஹீப்ரு பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். அவர்களுக்கு ஒரு நாடு உண்டு. அதன் பெயர் இஸ்ரேல். ஆனால் அராபிக் மொழிக்கு நாடு இல்லாததால் அது அழிவை நோக்கி நகர்கிறது. ஒரு தமிழ் எழுத்தாளர் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். 'ஆனால் இந்தியாவில் ஒரு தமிழ் மாநிலம் இருக்கிறதே.' மாநிலம் வேறு, நாடு வேறு. இன்று உலகத்திலுள்ள மால்ட்டா என்ற சின்னஞ்சிறிய நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கே 400,000 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய மொழி மால்ட்டீஷ். அந்த மொழி அழியுமா? அழியாது. அவர்களுடைய மொழி அழிய வேண்டுமென்றால் முதலில் அவர்கள் நாடு அழியவேண்டும். ஒரு மாநிலம் செய்ய முடியாததை நாடு செய்துவிடும். தமிழை செம்மொழியாக்க நாங்கள் எத்தனை வருடங்கள் பாடுபடவேண்டியிருந்தது. ஒரு நாடாக இருந்திருந்தால் இதை எளிதாகச் செய்து முடித்திருக்கலாம். ஒரு காலத்தில் உலகிலே 50,000க்கும் மேலே மொழிகள் இருந்தன. உலகம் சுருங்கச் சுருங்க மொழிகளின் எண்ணிக்கையும் சுருங்கிக்கொண்டே வந்தது.இப்பொழுது 7000 மொழிகள் இருக்கின்றன. அவையும் வரவரக் குறைந்துகொண்டே வரும்.. உலகத்திலே அதிகம் பேசப்படும் 12 மொழிகளை வரிசைப் படுத்தினால் அது இப்படி இருக்கும்.மண்டரின், ஆங்கிலம், இந்தி, ஸ்பானிஷ், ரஸ்யன், வங்காளம், போர்ச்சுகீயம், அராபி, ஜேர்மன், பிரெஞ்சு, ஜப்பான், உருது. இவை எல்லாவற்றுக்கும் தேசம் உண்டு. இதற்கு பின்னே வரும் தெலுங்கு,மாராத்தி, தமிழ் போன்ற மொழிகளுக்கு தேசம் இல்லை. உலகத்தின் அரைவாசி சனத்தொகை இந்த 12 மொழிகளைப் பேசுகிறது. உலகம் சுருங்கச் சுருங்க சின்ன மொழிகளை பெரிய மொழிகள் விழுங்கும். ஒரு நாடு பாதுகாப்புக் கொடுக்காத மொழி மெல்ல அழிந்துபோகும். இன்று 8 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழியை விட மூன்று லட்சம் மக்கள் பேசும் ஐஸ்லாண்டிக் மொழியின் எதிர்காலம் பிரகாசமானது. ஏனென்றால் அதற்கு ஒரு நாடு உண்டு. யேசு பேசிய மொழியான அராமிக் இன்று அழிந்து போகிறதென்றால் அதற்கு காரணம் அராமிக் மொழிக்கு ஒரு நாடு இல்லை. ஒரு ஆங்கில எழுத்தாளர் என்னிடம் சொன்னார் பிரிட்டிஷ் அரசாங்கம் வருடம் தோறும் எத்தனையோ மில்லியன் பவுண்டுகளை சேக்ஸ்பியரைப் பரப்ப செலவுசெய்கிறது என்று. ஒரு நாடு இருப்பதனால்தானே அவர்களால் அப்படி செய்யமுடிகிறது. ஐ.நா சபையில் ஒரு அதிகாரியாக பல நாடுகளில் பணியாற்றியவர் நீங்கள். எத்தனையோ நாடுகளில் ஜனநாயக சுதந்திரத்துக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் வலிமை மிகுந்த ஐ.நா.சபையினால் கையைப் பிசைந்து நிற்பதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாத நிலையைக் காண்கிறோம். ஐ.நா.சபையும் சுதந்திரமின்றி இருக்கிறதா? 1945ல் 50 உலக நாடுகள் ஒன்றுகூடி ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்கின. ஐக்கிய நாடுகளின் எண்ணிக்கை வரவர அதிகரித்தாலும் சுவிட்சர்லாந்து மட்டும் சபையில் சேரவில்லை. 2001 இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு பின்னர் சுவிட்சர்லாந்தும் ஐ.நாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து சேர்ந்தது. இன்று 192 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன.ஐக்கிய நாடுகள் சபையின் முக்கியமான பணிகளில் ஒன்று அங்கத்துவ நாடுகளுக்கிடையில் ஏற்படும் பிணக்குகளை தீர்த்துவைப்பது. போர் மூளாமல் தடுப்பது.ஆனால் ஐ.நா.சபையினால் தீர்மானங்களை நிறைவேற்ற மட்டுமே முடியும், அதனால் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியாது.அதுதான் கையைப் பிசைந்துகொண்டு ஒன்றும் செய்யமுடியாமல் நிற்கிறது. ஐ.நா சபையின் சாதனைகளை குறைவாக மதிப்பிட முடியாது. 1948ல் மனித உரிமை பிரகடனத்தை கொண்டுவந்து உலகமெங்கணும் மனித உரிமையின் முக்கியத்துவத்தை அதனால் நிலைநாட்ட முடிந்தது. இது பெரிய சாதனை. உலக நாடுகளின் உள்நாட்டு, வெளிநாட்டு போர்களில் அகதிகளான கோடிக் கணக்கான மக்களுக்கு உரைவிடமும், உணவும் சிலசமயங்களில் நாடும் அளித்து உதவிசெய்தது UNHCR அமைப்பு. அதன் சேவைக்காக அதற்கு இரண்டு தடவை சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.UNICEF, ILO போன்ற அமைப்புகளுக்கும் நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. உலகத்திலிருந்து பெரிய அம்மை நோய் ஒரேயடியாக ஒழிந்துவிட்டது என்று உலக சுகாதார மையம் ( WHO) 1980ல் அறிவித்தது. இந்த மையம் இல்லாவிட்டால் இது ஒருபோதும் சாத்தியமாகியிருக்காது. 1988ல் உலக சமாதானத்துக்காக போராடிய 10,000 ஐ.நா சமாதான வீரர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்தப் போரில் 700 வீரர்கள் சமாதானத்தை நிறுவுவதற்காக மாண்டார்கள். இவர்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், சைப்பிரஸ், லெபனான் போன்ற நாடுகளை போரிலிருந்து காப்பாற்றினார்கள். இன்னும் முக்கியமாக கம்போடிய, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் முறையாக தேர்தல் நடப்பதற்கு உதவியாக இருந்து, புது நாடு உருவாவதற்கும் காரணமாக அமைந்தது ஐ.நா சபைதான். 1993ல் எரித்திரியா சுதந்திர நாடாக பிரகடனம் செய்யப்பட்டதற்கு ஐ.நா.சபையின் முயற்சி முக்கியமானது. இப்பொழுது உள்ள உலக நாடுகளை அடக்கிய கப்பெரிய சபை ஐ.நா.சபைதான். இந்தச் சபையின் தோல்விகளைப் பட்டியலிட்டு அதைக் கலைத்துவிடவேண்டும் என்று சில வருடங்களாக குரல்கள் எழும்பிக்கொண்டிருக்கின்றன. இதனிலும் சிறந்த செயல்திறன் கொண்ட ஓர் அமைப்பு உருவாகும் வரை ஐ.நா.சபை தொடரத்தான் செய்யும். உங்களுடைய பால்ய காலமும், இளமைக்காலமும் இலங்கையில் நிகழ்ந்திருக்கிறது. அந்த இனிய நிகழ்வுகளை பல படைப்புகளில் பதிவுசெய்திருக்கிறீர்கள். அந்த நாட்களை மீண்டும் மீட்டெடுக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறதா? மறுபடி உங்கள் நினைவுகள் உருவான இடங்களைக் காணும் சந்தர்ப்பம் ஏற்பட்டதா? அப்போ உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்கள் என்ன? என்னுடைய பால்ய, இளமைக்கால வாழ்க்கையை நான் ஒரு நாவலாக பதிவு செய்திருக்கிறேன். சுயசரிதைத் தன்மையான அந்த நாவலில் உண்மையும், கற்பனையும் கலந்திருக்கும். அதனால்தான் தலைப்பாக 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்' என்று பெயர் வைத்திருக்கிறேன். உயிர்மை பதிப்பக வெளியீடாக டிசம்பர் மாதம் வருகிறது. போர் துடங்கிய பிறகு என் பிறந்த ஊருக்கு போய்வரும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.சமீபத்தில் எங்கள் அண்ணர் இறந்துபோனார். அவருக்கு இரு சகோதரிகள், நாலு சகோதரர்கள். நான் இன்றைக்கு இந்நிலையில் இருப்பதற்கு அவரே காரணம். அவருடைய மரணச்சடங்கில் ஒரு சகோதரரும் கலந்து கொள்ளவில்லை. அப்போது அங்கே ஊரடங்குச் சட்டம் இருந்தது. மருந்துகள் இல்லாத, கூரையில் ஓட்டை விழுந்த ஒரு சின்ன ஆஸ்பத்திரியில் அவர் தனியாகக் கிடந்து உயிர் நீத்தார். என் மீதி வாழ்நாளில் நான் பிறந்த பூமியை திரும்பவும் பார்க்கக் கிடைக்காது என்றே நினைக்கிறேன். அப்படி கிடைத்தால் நான் பார்க்க விரும்புவது மரங்களை. எங்கள் வீட்டு வளவில் தென்னை, பனை, வேம்பு, இலுப்பை, பலா, மா, நாவல், கொய்யா, இலந்தை, மாதுளை, எலுமிச்சை என்று நிறைய மரங்கள் இருந்தன. 20 வகையான மாம்பழங்கள். மிகச் சின்ன வயதிலேயே ஒரு பழத்தை சாப்பிடும்போது அது எந்த மரத்திலிருந்து வந்தது என்று சொல்லிவிடுவேன். கிணறுகளைப் பார்க்க விருப்பம். யாழ்ப்பாணத்தில் ஆறே இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கிணறு இருக்கும். எங்கள் வீட்டுக்கு கிட்ட நடு வீதியில் ஒரு கிணறு இருந்தது. அதை பொதுவாக ஐந்து, ஆறு குடும்பங்கள் பாவித்தன. அடிக்கடி யாராவது தவறி விழுந்து சாவார்கள். மாடு, நாய் விழுந்து செத்துப்போகும். நாங்கள் சிறுவர்கள் எங்கே தவறி அதற்குள் விழுந்துவிடுவோமோ என்று அம்மா பயந்தபடியே இருப்பார். இன்னொன்று கொக்குவில் ரயில் ஸ்டேசன். என்னுடைய ஐயா சிறுவனாக இருந்தபோது ரயில் நிலையம் அங்கே வந்தது. என்னுடைய சிறு வயதில் ரயில் நிலையம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. எங்கள் கிராமத்து மணிக்கூடு அதுதான். விருந்தினர்கள் ரயிலில் வந்து இறங்குவார்கள், நாங்கள் போய் அழைத்து வருவோம். பரிசுகள் கிடைக்கும். ரயில் கூவும் சத்தத்துக்காக காத்திருப்போம். இன்று ஸ்டேசன், தண்டவாளம் சிலிப்பர் கட்டைகள் எல்லாமே அழிந்துவிட்டன. அது இருந்த இடமே இல்லை. குண்டு விழுந்து நடுவீதிக் கிணறும் முற்றிலுமாக அழிந்து மூடப்பட்டுவிட்டது என்று கேள்விப்படுகிறேன். ஒரு அழிவு துக்கமானது; மற்றது சந்தோசமானது. பொதுவாகப் புலம்பெயர்ந்த தமிழர்களின் வெளிநாட்டு வாழ்க்கை எப்படி இருக்கிறது? சில நாட்களுக்கு முன்னர் நான் ஒரு புலம் பெயர்ந்த தமிழ் இளைஞரைச் சந்தித்தேன்.இவருக்கு முப்பது வயதிருக்கும். உலகத்துப் பாரத்தை எல்லாம் சுமப்பதுபோல மற்றவர்கள் தோற்றமளிப்பார்கள். இவர் உற்சாகமாக இருந்தார். நூற்றுக்கணக்கான புலம் பெயர் கதைகளைக் கேட்டிருக்கிறேன். இவருடையது வித்தியாசமானது. இலங்கையில் இவரை மூன்றுதரம் பிடித்து சிறையில் அடைத்தார்கள். பாங்கொக்கில் சிறையில் இருந்திருக்கிறார். ரஸ்யாவில் பனிப்புதையலில் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார். சிங்கப்பூரில் இவரைக் குப்புறக் கிடக்க வைத்து ஒன்பது பிரம்படிகள் கொடுத்திருக்கிறார்கள், ஒன்பது நாள் விசா கெடுவை மீறி தங்கியதற்காக. கழுத்திலே மரப்பூட்டைப் போட்டுவிட்டு ஒரு தடியான மனிதன் பிரம்பினால் அடித்தான். அடித்து முடிந்த பிறகு அதே இடத்தில் ஒரு சீனக் கிழவி மயிலிறகால் முதுகில் எண்ணெய் பூசிவிட்டாள். இருவருக்கும் சிங்கப்பூர் அரசு சம்பளம் கொடுத்தது. அமெரிக்கா போய்ச் சேர்ந்தபோது அவருடைய கள்ளப் பாஸ்போர்ட்டை கண்டுபிடித்துவிட்டார்கள். ஆறுமாதம் சிறையில் வைத்தார்கள். கடைசியில் மூன்று வருட பயணத்துக்குப் பிறகு கனடாவுக்கு வந்து சேர்ந்தார். அகதியாக இருந்தபோது 17 கம்பனிகளில் வேலைக்கு நேர்முகத் தேர்விற்கு போனார். எல்லோரும் அவரிடம் 'உங்கள் கனடிய அனுபவம் என்ன? உங்கள் திறமை என்ன?' என்றே கேள்வி கேட்டார்கள். 18வது இடத்தில் அவர் இப்படி பதில் சொன்னார். ' ஐயா, எனக்கு கனடா அனுபவம் இல்லை, ஆனால் என்னிடம் நிறைய உலக அனுபவம் உள்ளது. என் திறமை நான் உயிர் வாழ்வது. இன்று வரைக்கும் உயிர் தப்பி நான் வாழ்கிறேன் என்றால் அது என்னுடைய திறமை.' அப்போதும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இப்பொழுது அவர் கனரக வாகனம் ஓட்டுகிறார். அவருடைய வருமானம் சராசரி கனடியரின் வருமானத்திலும் பார்க்க இரண்டு மடங்கு அதிகம். இது ஓர் உதாரணம்தான். கனடாவில் வாய் வேலை செய்யவேண்டும். அல்லது கை வேலை செய்யவேண்டும் அல்லது மூளை வேலை செய்யவேண்டும். நீங்கள் உயர்ந்து விடலாம். மிகக் கடுமையாக உழைக்கிறார்கள். ஒரு புது நாடு கிடைத்துவிட்ட சந்தோசம் அவர்களுக்கு இருக்கிறது.ஆனால் ஒருவரும் பிறந்த நாட்டை மறப்பதில்லை. தங்கள் சொந்தங்களுக்கு தொடர்ந்து உதவி செய்கிறார்கள். அவர்களையும் வரவழைக்கிறார்கள். கடுமையாகப் படித்து முன்னேறுகிறார்கள். தமிழ் இலக்கியத்தில் தீவிரமாகச் செயல்படுகிறார்கள். கலை நிகழ்ச்சிகளுக்கு கைகொடுக்கிறார்கள். இன்றைய ஈழத் தமிழர்களின் அவலங்களைக் கண்டு பெரும் எழுச்சியாகத் திரண்டு தங்கள் தரவை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பல வேற்றின தொண்டு அமைப்புகளுடன் சேர்ந்து தொடர் உண்ணாவிரதம், கவனயீர்ப்பு என்று பல நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். போரை நிறுத்த இலங்கை அரசை இணங்கச் செய்வதற்கு கனடிய அரசு தனது பலத்தை பிரயோக்கிக்கவேண்டும் என்று ஒருமித்து அழுத்தம் கொடுக்கிறார்கள். ஈழத்தில் நிகழும் போர் மற்றும் அரசியல் நிகழ்வுகளில் தங்களின் திறந்த விமர்சனத்தை வைக்கக்கூடிய ஜனநாயக சுதந்திரம் ஈழத்து எழுத்தாளர்களுக்கு இன்று இருக்கிறதா? ஆரம்பத்திலிருந்தே ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் என்பன கேள்விக்குறியாகவே இலங்கையில் இருந்தன. இவை படிப்படியா இறுக்கப்பட்டு 2005ல் மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு முடிவுக்கு வந்து விட்டது என்றே தோன்றுகிறது. ஊடக சுதந்திரம் இருக்கட்டும், போர் நடக்கும் பிரதேசங்களில் ஊடகவியலாளர்களே இல்லை. தொண்டு நிறுவனங்களும் இல்லை. ஐ.நா குழுக்களும் இல்லை. நிலைமை எப்படி இர
|
|