அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரட்டை தலைமை கலைப்பு தன்னிச்சையானது: ஓபிஎஸ் தரப்பு வாதம் 0 ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு! 0 பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை! 0 ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம்: செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை 0 எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்! 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

'சென்சாரில் சிக்கிய காந்தி படம்'- சா.கந்தசாமியின் எழுத்தோவியம்

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   19 , 2005  05:20:16 IST

பொது இடத்தில் காட்டப்படும் படத்திற்கு சென்சார் உண்டு. எனவே 1940 -ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி படம் சென்சார்க்குச் சென்றது. சென்சார் போர்டில் இருந்த இந்து நாளிதழ் ஆசிரியர் கஸ்தூரி சீனிவாசனும், டாக்டர் யூ.கிருஷ்ணாராவும் படத்தைப் பார்த்து விட்டு 'யு' சர்டிபிகேட் தந்து விட்டார்கள். அரசாங்கத்திற்கு அது பிடிக்கவில்லை. இரண்டு பேரையும் டிஸ்மிஸ் செய்துவிட்டது. பதவி இழந்த டாக்டர். கிருஷ்ணராவ் தேசத்திற்குத்தான் சிறிய அளவில் சேவை செய்து இருப்பதை அரசாங்கம் அங்கீகரித்து இருப்பதாகச்சொன்னார்.

மகாத்மா காந்தி டாக்குமெண்டரி படம் எடுத்த ஏ.கே.செட்டியார் நாற்பதாண்டு காலம் குமரி மலர் என்ற மாத இதழை நடத்தி வந்தார். உலகின் பல நாடுகளுக்கும் பயணம் செய்தவர். நிறைய பயணக் கட்டுரைகளை எழுதி உள்ளார். 'உலகம் சுற்றும் தமிழன்'– என்ற அவரின் பயண நூல் பிரபலமானது.

ஆட்டன்பரோவின் காந்தி படம் வெளிவந்த பின்னர் ஏ.கே.செட்டியாரைச் சந்தித்தேன். அவரோடு எனக்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு மேலாகப் பழக்கம் உண்டு.

“காந்தி படம் பார்த்தீர்களா? என்று கேட்டேன்.

“இல்லை. நான் காந்தி பார்ப்பதாக இல்லை. என் மனதில் ஒரு காந்தி இருக்கிறார். ஆட்டன்பரோ படத்தில் இன்னொரு காந்தி இருப்பார். காந்தி வேகமாக நடப்பதாகச் சொல்கிறார்கள். அவர் வேகமாகப் போகக்கூடியவர்தான். ஆனால் ஓடக்கூடியவர் இல்லை” என்றார்.

பிரபலமான, புகழ்மிக்க இயக்குனர்கள் எல்லாம் டாக்குமெண்டரி எடுத்து இருக்கிறார்கள். கதைப்படத்தின் வழியாகக் கிடைக்காத நம்பகத்தன்மையை நிலைநாட்ட டாக்குமெண்டரிகளை நாடுகிறார்கள். சினிமா மீது ஈடுபாடு கொண்டவர்கள் உள்ளே புகுந்துகொள்ள முதல்படியாக டாக்குமெண்டரி எடுக்கிறார்கள்.

இந்தியாவில் சத்தியஜித்ரே முக்கியமான டாக்குமெண்டரி இயக்குனர். கதைப்படங்களில் இருந்த ஆர்வம் அவருக்கு டாக்குமெண்டரி மீதும் இருந்தது. கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பற்றி அவர் டாக்குமெண்டரி எடுத்து உள்ளார். இருபதாண்டுகளுக்கு முன்னால் தற்போதைய சென்னை கலைவாணர் அரங்கில் தாகூர் படம் பார்க்க முடிந்தது.

சத்தியஜித்ரே நம்மூர் பிரபல நடனமணி பாலசரஸ்வதி தேவி பற்றி ஒரு டாக்குமெண்டரி எடுத்தார். முதிய வயது நடனமணியை கடற்கரையில் காற்றில் ஆடைகள் பறக்க எடுத்தார். அது பாலாவிற்கும் பெருமை சேர்க்கவில்லை; சத்தியஜித்ரேக்கும் பெருமை சேர்க்கவில்லையென ஒரு பத்திரிகை எழுதியது. ஆனால் படம் அப்படி ஒன்றும் மோசமில்லை. சூழ்நிலை, கருத்து, படம் ஆக்கப்பட்ட இடம், வெளி வந்த நேரம் – எல்லாம் ஒரு படத்தின் தரத்தை தீர்மானிக்கக் கூடிய காரணிகளாக அமைந்து விடுகின்றன. அதன் காரணமாக ஒரு படம் அது வெளிவந்த காலத்தில் மதிப்பு பெறாமல் போய் – பின்னால் மதிக்கப்படுவதும் உண்டு. அது பொதுவிதி இல்லை என்பதுதான் முக்கியம்.

இந்தியாவில் நெருக்கடிநிலை அமுலில் இருந்தபோது சத்தியஜித்ரேவைக் கூப்பிட்டு அரசாங்கம் ஒரு டாக்குமெண்டரி எடுக்கச்சொன்னது. அவர் நான் கதை படம் எடுக்கிற ஆள் என்று சொல்லி தப்பித்துக்கொண்டார்.

டாக்குமெண்டரி படம் என்பது எல்லா மக்களையும் கவரக்கூடியது இல்லை. அது உண்மையும் நம்பகத்தன்மையுங் கொண்டது. அதனால் கவர்ச்சிகரமாக இருப்பதில்லை. பொழுதுபோக்கிற்காகப் படம் பார்க்கும் கூட்டம் டாக்குமெண்டரி பக்கம் வருவதில்லை. ஆனால் உண்மை மீதும் - நிகழ்வுகள் மீதும் – அக்கறை கொண்ட கலைஞர்கள் தொடர்ந்து டாக்குமெண்டரி எடுத்துக் கொண்டு வருகிறார்கள். சர்வதேச அளவிலும் டாக்குமெண்டரி படங்களுக்குப் பரிசு கொடுக்கிறார்கள்.

சுதந்திர இந்தியாவில் பிலிம் டிவிஷன் ஒரு காலத்தில் நிறைய டாக்குமெண்டரி படங்கள் எடுத்து திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்னே வெளியிட்டு வந்தது. வீடியோ வந்ததும் அதெல்லாம் அடிபட்டு போய்விட்டது. ஆனால் பழைய டாக்குமெண்டரிகளை சி.டி.யில் போட்டு அது பொதுமக்களுக்கு விற்று வருகிறது. அதில் தரமானது மோசமானது எல்லாம் உண்டு. தனக்குத் தேவையானதைத் தானே தேடி எடுத்துக் கொள்ளவேண்டும்.

சா.கந்தசாமிசாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...

Profile ,Article I, Article II


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...