அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அண்ணாவை வழி அனுப்ப போன போது..கலாப்ரியாவின் 'நினைவின் தாழ்வாரங்கள்'1

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   16 , 2008  08:27:51 IST

அன்று இரவில் நெடு நேரம் தூங்கவில்லை.

அப்போதெல்லாம் தொலைபேசி தெருவுக்கு இரண்டு வீட்டில் தான் இருக்கும். நீண்ட நேரம் பத்மனாப அண்ணாச்சியின் ஆஸ்பத்திரியில் காத்திருந்தோம் அவர் ஒரு எல் எம் பி டாக்டர்.அங்கே ஒரு தொலைபேசி உண்டு,அவர் 14 -வது வார்டு தி.மு.க உறுப்பினர்.திருநெல்வேலியின் முதல் தி.மு.க சேர்மன் ஆக வேண்டியவர். ஆக முடியவில்லை. பின்னாளில் 71-ல் எம் எல் ஏ ஆனார். சென்னை கர்ப்பரேஷன் தேர்தல் முடிவோ, செ.கந்தப்பன் இடைத் தேர்தல் முடிவோ அங்கே தான் காத்துக்கிடப்போம்.

தினமலரில் என் அண்ணன் ஒருவர் நிருபராய் இருந்தார். அவன்
டெலிபிரிண்டர் செய்தி பார்த்து விட்டு எப்போதாவது சொல்வான்.அவன் தான் எம்.ஜி.ஆர் குண்டடி பட்டதும் தகவல் சொன்னான்.ஆனால் அவன் அவருக்கு காலில் குண்டு பட்டிருப்பதாகச் சொன்னான்.அதிலிருந்து அவனிடம் போய் கேட்பதில்லை.ரேடியோவிலும் கடைசி ஆங்கிலச் செய்தி இரவு 11 மணிக்கு. அதிலும் அண்ணாவுடைய உடல் நிலை பற்றி ஒன்றும் விசேஷ மாகச் சொல்லவில்லை.

காலை ஐந்து மணிக்கு தூக்கம் விழித்து ஒரு கோஷ்டியாக சந்திப் பிள்ளையார் முக்கு டீக் கடைகளில் ரேடியோ செய்தி கேட்கப் போனோம்.பாதித் தெருவில் கிருஷ்ணன் வைத்த வீட்டில் ஆல் இந்தியா ரேடியோவின் ‘கையெழுத்து இசை'(signature music) கேட்டது.எல்லாரும் அங்கே போனோம். வீட்டில் பெண்களும் குழந்தைகளும் படுத்துறங்கும் பட்டாசலினுள் தயங்கித் தயங்கி நுழைந்தோம்.வீட்டில் வாடகைக்கு இருந்தவர் தி.மு.க அனுதாபி அதனால் அவர் வாங்கடே என்று சோகமாக அழைத்தார். ரேடியோ தன் வழக்கமான- சக வருஷம் சராவண மாதம் போன்ற வழக்கமான- முகமன்களுக்குப் பின் ஒரு முக்கிய செய்தி என்று குரல் கம்மத்தொடங்கியது.வீட்டின் பெண்களும் பிள்ளைகளும் அந்நிய ஆண்களை அப்போதுதான் உணர்ந்தார்களோ என்னவோ வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருக்கத் தொடங்கும் போது “அண்ணா அமரரானார்....”என்று பட்டாபிராமனோ பஞ்சாபகேசனோ அறிவிக்கத் தொடங்கியதும் வீட்டுக்காரர் அழத் தொடங்கினார்.வீட்டின் பெண்கள் கலவரம் அடையத் தொடங்கிய போது நாங்கள் நம்ப முடியாமல் வீட்டை விட்டு கிளம்பினோம்.

சிவசங்கரனோ யாரோ பொறுப்பாக அவரிடம் நன்றி சொல்லி விட்டு வந்தார்கள்.அழுதோம் என்று சொல்ல முடியாது, ஆனால் தொண்டைக்குள் ஏதோ அடைத்தது. தெரு முனைக்கு வரவும் யாரோ ஒரு ஜவுளிக் கடை அட்டையும் சாக் பீஸுமாக வரவும் சரியாக இருந்தது.”பேரறிஞர் அண்ணா மறைவு” என்று எழுதி தி.மு.க கொடிக் கம்பத்தில் எட்டும் உயரத்தில் கட்டி விட்டு. எதிர்த்த மெடிக்கல் ஸ்டோரின் உயர்ந்த படிகளில் உட்கார்ந்து பேசத் தொடங்கினோம்.அண்ணாவின் பல மேடைப் பேச்சுகள், எழுத்துக்கள் பற்றித் தான் பெரும்பாலான பேச்சு அமைந்திருந்தது.1967 தேர்தலுக்கு முந்திய நெல்லைக் கூட்டத்தில் அவர் பேசிய நகைச்சுவையும் நளினமும் மிக்க பேச்சு,”பக்காக் காங்கிரஸ்காரரும் சொக்காக் காங்கிரஸ்காரரும்....” பற்றிய பேச்சு. இந்துக் கல்லூரியில் மதியத்திலிருந்து இரவு 9 மணி வரை கலையாமல் காத்திருந்து கேட்ட ஆங்கில உரை....என்று காலையில் ஆறு மணி சுமாருக்கு ஆரம்பித்த பேச்சு பத்து மணியாகியும் முடியவில்லை.அப்பொழுதுதான் காய்கறி மார்க்கெட்டிலிருந்து தி.மு.க தோழர்கள் சிலர் வந்து நாங்கள் சென்னை செல்ல ஒரு பஸ் ஏற்பாடு செய்திருக்கிறோம் போக வர முப்பத்தி ஐந்து ரூபாய். நீங்கள் யாரும் வருவதாக இருந்தால் பன்னிரெண்டு மணிக்குள் சொல்லுங்கள் என்றார்கள்.

அவர்கள் சொல்லி விட்டுப் போன நேரத்திலிருந்து பிடித்துக் கொண்டது ஆசை.முப்பத்தி ஐந்து ரூபாய் என்பது ரொம்பக் குறைவுதான்.ஆனாலும் அது எங்களுக்கு கிடைப்பது சுமார் நாற்பது வருடத்துக்கு முன்னால் ரொம்பக் கடினமான விஷயம்.நான் பெரிய கோபால் செல்வகணபதி, ராமு என்று நாலைந்து பேர் எப்படியோ பணம் பெறட்டி விட்டோம். ஒருத்தர் வைத்திருக்கும் ரூபாய் இன்னொருவருக்கு தெரியாது.ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.ஆனால் அதெல்லாம் கொஞ்ச நேரத்திற்குத்தான். அப்பா எப்படியும் ஒழி காசு கீசெல்லாம் கிடையாது என்று சொல்லி விட்டார்.அம்மாவிடம் காசு இருந்த நாளே கிடையாது.பழைய பேப்பர், புஸ்தகம் எல்லாம் பொறக்கினாலும் ஐந்து பத்துக்கு மேல் தேறாது.அப்படியும் அந்தப் பழைய பேப்பர் கடைக்காரர் கட்சிக்காரர்தான், அடைத்த கடையைத் திறந்து பேப்பரை வாங்கிக் கொண்டு ஒன்பதோ என்னவோ தந்தார். அவர் விஷயத்தைக் கேட்டு கூட ஒன்றோ இரண்டோ தந்த நினைவு.ஒன்றும் ஒப்பேறாத நிலையில் வீட்டுக்கு வந்த போது பெரிய அண்ணன் சிரிச்சமானிக்கே கேட்டான் என்ன துட்டு கிடக்கலையா. எனக்கு சரியான கோவம். ”ஆமா இவரு முடிஞ்சு வச்சிருக்காரு தரப் போறாரு”என்று திட்ட ஆரம்பித்தேன். அவன் வேலை வெட்டி எதுவும் இல்லாத மூத்த பிள்ளை.அவனுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் மதினி சமீபத்தில்தான் இறந்து போயிருந்தாள்.என்ன செய்தானோ தெரியவில்லை கொஞ்ச நேரம் கழித்து தெருவில் அமர்ந்து சேக்காளிகளுடன் போக முடியாத பயணத்தைப் பற்றி ப்ளான் பண்ணிக் கொண்டிருந்த போது அண்ணன் வந்து கூப்பிட்டான்.எனக்கு எரிச்சல். அவன் முகத்திலோ ஒரு கேலிப் புன்னகை ”வாடே இங்கே” என்றான். கையில் முப்பது ரூபாய் தந்தான் .எனக்கு பெரிய ஆச்சரியம். என் வாழ்க்கையில் அவன் எனக்கு காசு தந்ததே கிடையாது. ஒரே ஒரு சமயம் சாரிடான் வாங்கி வந்த போது அரையணா தந்த நினைவு.அது பத்து வயது வாக்கிலிருக்கும்.தெருவில் எல்லாருக்குமே அது ஆச்சரியம்.அவனைப் பற்றிய அபூர்வக் குறிப்புகள் என்னை விட என் வயது தோழர்களுக்கே நன்கு தெரியும். அதெல்லாம் அடல்ட்ஸ் ஒன்லி விஷயங்கள்.என்னிடம் அப்படியும் இப்படியுமாக நாற்பது ரூபாய்க்கு மேல் தேறியது. அதற்குள் பஸ் ஏற்பாடு செய்தவர்கள் வந்து முப்பது ரூபாய் இருந்தாலும் போதும். சீதாபதி நாய்னா பஸ் தான். அவரும் கூட வாராரு என்றார்கள். ரெண்டு நாள்தானே. அழகாப் போதும் வா என்று பெரிய கோபால்தான் சொன்னான்.அதற்கிடையில் வராத ரெண்டு மூன்று பேர் மொத்ததில் கடன் தர முன் வந்தார்கள். கணபதியோ யாரோ அதை வங்கி வைத்துக் கொண்டார்கள்.ஒரு துண்டு, ஒரு சட்டை. அவசரத்தில் மாற்று ஜட்டி கூட எடுக்க வில்லை.

எங்களுக்கு “பின்ன என்னடே” என்று தோன்றியது. . பஸ்ஸில் ஏறியதும் குனிந்து தான் நடமாட முடிந்தது. பஸ்ஸுக்குள் எங்கு பார்த்தாலும் வாழைத்தார் காயும் பழமுமாக கட்டி இருந்தது. எல்லாரும் சாப்பிடுவதற்குத் தான் என்றாகள், மார்க்கெட் தோழர்கள். எங்களுக்கு “பின்ன என்னடே” என்று தோன்றியது.

மதுரை தாண்டும் போது சற்று கண்ணசந்தது. ஒன்றிரண்டு பழம் தின்றிருந்தோம். இன்னும் நன்றாகக் கனியவில்லை சில.திருச்சி நெருங்கும் போது பஸ் நின்றிருப்பது தெரிந்து விழிப்பு வந்தது.ஒரே டிராபிக் ஜாம். நெடுஞ்சாலையில் சேரும் எந்த சிறிய சாலையிலிருந்தும் வாகனங்கள் வந்து கொண்டே இருப்பாதாக பஸ் முதலாளி சீதாபதி நாய்னா சொல்லிக்கொண்டிருந்தார். அவர்தான் பஸ்ஸை அப்போது ஓட்டிக் கொண்டிருந்தார்.பசி வயிற்றைக் கிள்ளியது. மெதுவாக கீழே இறங்கினோம். எல்லாக் கடைகள், வீடு எங்கும் அண்ணா படம் மாலை போட்டு ஊதுவத்தி எரிந்த வண்ணம்...... இருந்தது. பத்து பதினோரு மணியிருக்கும்.சாப்பிட எதுவுமில்லை. கையிலும் ஒன்றும் கிடையாது. அம்மா கொஞ்சம் தயிர்ச் சோறாவது கொண்டு போ என்றிருந்தாள்.அவசரத்தில் யார் அதைக் கேட்க. ஒரு பெஞ்ச் மாதிரிப் போட்டு ஏதோ வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். உப்புமா. விலை கேட்ட போது தலை சுற்றியது. மூன்று பேரும் சேர்ந்து ஒரு பொட்டலம் வாங்கினோம். பொட்டலத்தைப் பிரித்தால் கொழு கொழுவென்று கஞ்சி மாதிரி இருந்தது. ருசியாவது ஒன்றாவது.... தூர எறியும் போதுதான் பார்த்தோம். அங்கே நிறையப் பொட்டலங்களை.நல்ல வேளை ஒன்றோடு நிறுத்தினோம். சரி பஸ்ஸுக்குள் வந்து பழம் தின்னலாம் என்று ஏறினோம். குலை இருந்தது, தொலி இருந்தது. பழம் இல்லை.
அவ்வளவு பசி மக்களுக்கு.அதற்குள் பஸ் நகர ஆரம்பித்தது. தூக்கமும் சுழற்றியது. பசியோடு சென்னையை ஊர்ந்து ஊர்ந்து அடைவதற்குள், மணி பகல் பன்னிரெண்டு வாக்கில் ஆகி விட்டது. குளிக்கவோ பல் விளக்கவோ நேரமேயில்லை. சித்ரா டாக்கீஸ் அருகே பஸ்ஸை நிப்பாட்டி விட்டு. சாயந்தரம் ஆறு மணிக்குள் இங்கே வந்து விட வேண்டும் என்று சொன்ன நினைவு.அங்கிருந்து ராஜாஜி ஹால் வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. ஆனால் யாரைப் பார்த்தாலும் அவர்கள் தங்கள் சொந்த சோகத்தில் அமிழ்ந்து போனவர்கள் போலவே இருந்தனர். யாரும் வேடிக்கை உணர்வுடன் இருந்தது போல் இல்லவே இல்லை. கணபதிக்குத்தான் சென்னை நன்றாகத் தெரியும். எனக்கு ஓரளவுக்கு மவுண்ட் ரோடு ஏரியா தெரியும். இருந்தாலும் யாரும் யாரையும் பிரிந்து விடாமல் ராஜாஜி அரங்கம் அருகே நெருங்கிவிட்டோம். அதற்குள் ஊர்வலம் தொடங்க ஏற்பாடுகள் தொடங்கி, குதிரைப் போலீஸார் விரட்ட ஆரம்பித்து விடவே ஸ்டார் தியேட்டரா காசினோவா நினைவில்லை அதற்கருகே ஒதுங்குமாறு கணபதி சொல்ல ஒதுங்கி நின்று ஊர்வலத்தைப் பார்த்தோம்.ஊர்வலம் தங்களைக் கடக்கும் போதெல்லம் அழுகையும் கூக்குரலுமாய் இருந்தது. கொஞ்ச தூரம் கூடவே போனோம்.ஒரு மகத்தான மனிதனின் மறைவில் இவ்வளவு சோகமா என்று புரியவில்லை. அம்மா, காந்தி இறந்தபோது திருநெல்வேலி அல்லோல கல்லோலப் பட்டதை சொன்னபோதெல்லாம் அதன் சாத்தியம் எனக்கு புரிந்திருக்கவில்லை....இன்று கூட. இதை எழுதும் இந்த வினாடி கூட நான் சம்பந்தப்பட்டிருந்த அந்த இறுதிப் பயணத்தை சரியாகச் சொல்கிறேனா தெரியவில்லை. கணபதி சில விஷயங்களில் கெட்டிக்காரன். ஊர்வலம் எங்களைக் கடந்து போய் சிறிது நேரத்தில் பசி நினைவுக்கு வரத் தொடங்கி விட்டது.மதுரைக்கு அருகில் இரண்டு பழம் சாப்பிட்டது. ஒரு கடை கூட கிடையாது.கடற்கரைக்குப் போக வேண்டுமென்று சிலர் விரும்பிய போது கணபதி சொன்னான் அவன் தங்கை வீடு
தாம்பரத்தில் இருந்தது ..மின்ரயிலில் போய் சாப்பிட்டு விட்டு திரும்பினால் சரியாக இருக்கும். அவனது யோசனைப்படியே போனோம். ரயிலிலும் கூட்டம் கூட்டம். பயங்கர நெரிசல்.அவன் தங்கை வீட்டுக்குப் போனதும் அவனது மாமா எல்லோரையும் பார்த்து, ”போய் உங்க மூஞ்சிய கண்ணாடில பாருங்கடா...”என்று ஒரே ஏச்சு. அவர் ரொம்ப அன்பானவர்.உரிமையில் ஏசினாலும் அவருக்கும் ஊர்வலத்தைப் பற்றிக் கேட்க ஆசையாக இருப்பது புரிந்தது.அவர் சொன்னார் உங்க ஒரு பயகிட்டயும் காசு இருக்காது பேசாம இங்க தங்கிட்டு ரெண்டு நாள் கழிச்சுப் போங்க.ரயிலில் அனுப்பி வைக்கிறேன் என்று.நாங்கள் தட்டிக் கழித்துப் பேசிக் கொண்டிருப்பதற்குள் தங்கை சமையலை முடித்து விட்டாள்.சமையல் சிம்பிளானது தான். ஆனால் பசி.....சாப்பிட்டு முடித்து மறுபடி ரயில் இப்போது கூட்டம் அவ்வளவு இல்லை.எட்டு மணிக்குள் சித்ரா டாக்கீஸ் பக்கம் வந்து சேர்ந்து விட்டோம். பாதிப்பேர் பசி மயக்கத்தில் இருப்பது போலிருந்தாலும் எல்லோருமே சம்பவத்தின் துயரிலிருந்து விடுபடாமலிருப்பது தெரிந்தது.பஸ் மறுபடி நத்தை போல் பயணத்தை தொடர... நான் தூங்கி விட்டேன்.

மறு நாள் பகல் பன்னிரெண்டு மணி அளவில் ஸ்ரீரங்கம் ஆற்றில் ஒரு அற்புதமான குளியல் போட்டு , இருக்கிற காசுக்கு சாப்பிட்டுவிட்டு ஏறி உட்கார்ந்ததுதான் தெரியும் நடு ராத்திரி போல் ஊர் திரும்பினோம்.நல்ல வேளை அப்பா விழித்திருக்கவில்லை.

************

அந்த அனுபவத்தை தொடர்ந்து ரேடியோவில் கலைஞர் வாசித்த அஞ்சலிக் கவிதையின் பாதிப்புடன் இதே போல் ஒரு ராத்திரியில் எழுதிய கவிதை .....!

1) புகழ் வாழும் தமிழ் நாட்டில்
பொய் வாழும் என்றறிந்தே-பொன்
துகள் விளையும் எழில் மண்ணில்
துயர் விளையும் என்றறிந்தே
பொய்யாப் புலவனவன்
பொன் மொழிகள் தந்திட்டான்
மெய்யான வழி கூறி
மேன் மாட விளக்கானான்

2)சோர்வுற்ற தமிழகத்தில்-தமிழ்ச்
சொல்லழிப்பார் புகக் கண்டு
பேரற்ற வடவரினம்
பெருக்கிடும் துயர் கண்டு
தாயவள் மானங்காக்க
தமிழ் மண்ணில் வீரஞ்சேர்க்க
சேயொருவன் மலர்ந்திட்டான்
சிந்தனைச் சிற்பி”அண்ணாவாய்”

3)வள்ளுவப் பெரியோன்
வகுத்திட்ட வழி நின்றான்
தெள்ளு தமிழ்க் குடில்களில்
தீரமாய் ஒளிர்கின்றான்
அறம் பொருளின் பமென முப்பாலாய்
அன்னவன் மொழிந்திட்ட
திறம் வழியே அண்ணன்
திகழும் விதம் காண்போம்

4)காட்சிக்கு எளியனாய்
கடுஞ்சொல்லன் அல்லனாய்
காட்டுகின்றான் ஆள்பவனை
கன்னித் தமிழ்ப் புலவனவன்
அறிவுக் கடலின் மணற் பரப்பாய்
அகன்றிருக்கும் நெற்றியும்
அறிவொழுகும் கண் மலரும்
அன்பாய் முகிழும் புன்னகையும்

5)அடுத்தார் மனம் மதிக்கும்
அரசியல்ப் பண்புகளும்-கணை
தொடுத்தார் வாய் கைக்க
பொறுத்திடும் மாண்பும்
காஞ்சியின் மைந்தனுக்கு
கை வந்த கலையன்றோ

6)அறிவுடை மூத்தோர் கேண்மை
அன்னவன் கொள்ளச் சொன்னான்
அறிஞனோ ஈரோட்டுப் பெரியாரின்
அரவணைப்பைப் பெற்றிட்டார்
கேளாரும் வேட்ப மொழிவதில்
கேட்டாரைப் பிணிப்பதில்
நேராரோ அறிஞருக்கு
நிகராரோ அண்ணனுக்கு

7)சொல்வல்லான் சோர்விலான்
சோமசுந்தர பாரதியை
சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளையை
சொற்போரில் சொக்கவைத்தார்
இணரூழ்த்தும் நாறா மலராயின்றி
எல்லோரையும் சிக்க வைத்தார்
துணை நின்றோர் நெஞ்சிலெல்லாம்-தமிழ்ச்
சொல்லாய் நிறைந்திட்டார்

8)பணியுமாம் என்றும் பெருமை
பகர்ந்திட்டான் வள்ளுவன்
அணியானதே அண்ணனுக்கிந்த
அருமையான மொழிச் சிதறல்
வாழ்வெல்லாம் வள்ளுவமாய்
வடிவெல்லாந் தமிழுருவாய்
ஆழ்கடல் நித்திலமாய்
அண்ணா இருந்திட்டார்

9)உவப்பத் தலைக் கூடி
உள்ளப் பிரிதலை
உரைத்திட்டார் வள்ளுவர்
ஓர் புலவன் கடமையென
இன்று நாம் அழுகின்றோம்
எதையும் தாங்கும் இதயமே
இதயமுறைத் தெய்வமே-இனி
என்றுன்னைக் காண்போமோ
23/2/1969


(இன்னும் வரும்)

கலாப்ரியா
எழுபதுகளில் எழுதத் தொடங்கி ,குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலாப்ரியா கவிதைக்குள் கதையை சுருக்கி வைக்கும் முயற்சியை தொடங்கினார். பேச்சுவழக்கை கவிதைக்குள் கொண்டுவந்த கலாப்ரியாவினது கவிதைகளின் பாடுபொருளாக அடித்தட்டு மக்களும் அவர்களது வாழ்வு சார்ந்த சிக்கல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்ப) எழுதிய சோமசுந்தரம் ,வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிக்கையான 'பொருநை'யில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். இந்த பெயருக்குள் சோமசுந்தரத்தின் ஒரு தலைக் காதலியின் பெயரோடு கலாப்பூர்வமானவன் என்ற அர்த்தமும் அடைக்கலம்.

பின்னர் 'கசடதபற'வில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார்.

'கசடதபற'விற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபத்தில் எழுதும் போது மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையில் தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வரும் 'கலாப்ரியா' தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.பிறந்த தினம்: 30 - 7 - 1950

கவிதைத் தொகுப்புகள்

வெள்ளம் (1973)
தீர்த்தயாத்திரை (1973)
மற்றாங்கே(1980)
எட்டயபுரம் (1982)
உலகெல்லாம் சூரியன் (1993)
கலாப்ரியா கவிதைகள்(1994)
கலாப்ரியா கவிதைகள் (2000)
அனிச்சம்(2000)
வனம் புகுதல்(2003)


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...