அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரட்டை தலைமை கலைப்பு தன்னிச்சையானது: ஓபிஎஸ் தரப்பு வாதம் 0 ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு! 0 பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை! 0 ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம்: செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை 0 எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்! 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழ்மொழி எத்தனை ஆண்டுகளாக எழுத்துமொழியாக இருந்து வருகிறது? - சா.கந்தசாமி

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   19 , 2005  05:27:43 IST

தமிழ்மொழியை செம்மொழி என மத்திய அரசாங்கம் அறிவித்துவிட்டது. வடமொழி என்று தமிழர்களால் அழைக்கப்படும் சமஸ்கிருதம் அரசாணை ஏதும் இல்லாமல் செம்மொழியாக இருந்து வருகிறது. ஒரு மொழி செம்மொழியாகக் கருதப்பட நான்கைந்து தகுதிகள் முக்கியமாக இருக்கவேண்டும். அதில் ஒன்று அம்மொழி சொந்தமாக இலக்கிய,இலக்கண நூல் கொண்டு இருக்கவேண்டும். தனித்து இயங்க வேண்டும். பழமையான மொழியாக இருக்கவேண்டும்.

பழமையை எங்கிருந்து ஆரம்பிப்பது?

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான மொழியை செம்மொழியாகக் கொள்ளலாம்-என்று காலவரையறை செய்து, இந்திய மொழிகள் நிறுவனம் - மைசூர் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. மொழிகள் பற்றிய ஆய்வுக்கென மத்திய அரசு அமைத்த நிறுவனந்தான் அது. இந்திய மொழிகள் பற்றிய பிரச்சனைகளில்-இந்திய மொழிகள் நிறுவனத்தின் கருத்துக்களை கேட்பது நடைமுறைதான். ஆனால் முடிவு எடுப்பது அரசாங்கம்தான். சந்தர்ப்ப சூழ்நிலைகள் , அரசியல் பிரச்சினைகள் அடிப்படையில் முடிவு எடுக்கப்படுவதுண்டு.

செம்மொழி பற்றியதில், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான மொழி-செம்மொழி என்பது வேண்டாம். ஆயிரம் ஆண்டுகள் போதும் என்று அரசாங்கம் முடிவு எடுத்துவிட்டது. அதனால் தெலுங்கு, கன்னட மொழிகள் செம்மொழி உரிமை கோர ஆரம்பித்து இருக்கின்றன.

தமிழ்மொழி எத்தனை ஆண்டுகளாக எழுத்துமொழியாக இருந்து வருகிறது? அதாவது எப்போது அது எழுதப்படும் மொழியானது? அதை உறுதிப்படுத்த ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால் கி.மு. இரண்டாயிரம் நூற்றாண்டில் தமிழர்கள் எழுதிவைத்து இருந்ததை ஐராவதம் மகாதேவன் அதே எழுத்து உருவில் அச்சில் கொடுத்துள்ளார்.

கல்வெட்டுக்களில் தமிழர்கள் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள். சமண முனிவர்களுக்கு இருக்கை செய்து கொடுத்தது பற்றி-அந்த இருக்கைகளில் அருகிலேயே எழுதி வைத்திருகிறார்கள். கி.மு. இரண்டாயிரம் நூற்றாண்டில் இருந்து தமிழ் நாட்டில் கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. தமிழ் கல்வெட்டு எழுத்துக்கள் இடமிருந்து வலமாகவே எழுதப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூரில் தென்பெண்ணையாற்றின் கரையில் உள்ள ஜம்பை என்ற கிராமத்தில் தமிழ்நாடு தொல்லியல்துறை ஒரு கல்வெட்டை 1981ஆம் ஆண்டு கண்டுபிடித்தது.ஒரே வரிதான் உள்ளது. அதன் பழமையான எழுத்துக்கள், அது ‘சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பழி’ என்று, தமிழ்நாடு தொல்லியல்துறை இயக்குனர் ஆர்.நாகசாமி படித்தார். ஐராவதம் மகாதேவன் மைப்பிரதி எடுத்து வெளியிட்டுள்ளார்.
2005-மார்ச்சு மாதத்தில் வெயில் சுள்ளென்று அடிக்க தாசிமலை என்று அழைக்கப்படும் ஜம்பை குன்று மீது வீடியோ கேமராமேன், டிஜிட்டல் புகைப்பட நிபுணர், ஒலி, ஒளி அமைப்பாளர்களுடன் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்தோம். சரியாக பாதை ஏதும் கிடையாது. நெல்வயல்களை கடந்து குன்றின் மீது ஏறினோம். கவனமாக கால் வைத்து காமிராவை தூக்கிகொண்டு சென்றோம். கிராமவாசி ஒருவர் வழி காட்டிக்கொண்டு வந்தார். அதன் காரணமாக நேராக எழுத்து உள்ள குகைக்கு செல்ல முடிந்தது.

வழுவழுப்பாக செதுக்கப்பட்ட படுக்கத்தகுந்த பாறை. ஆள் வைத்துதான் செதுக்கி இருக்கிறார்கள். தலையணை மாதிரி இன்னொரு சிறிய மேடு. உடம்பு எப்போதும் சுகம் கேட்கிறது;சிறிய அளவில்கூட அதை செதுக்கி கொடுத்தவன் சத்தியபுத்ரன் அதியமான் நெடுமான் அஞ்சி. தகடூரை ஆண்ட சங்க காலத்து மன்னன். சத்திய புத்ர-என்பது பாலி மொழி சொல். அது அசோகன் கல்வெட்டில் காணப்படுகிறது-என்பதெல்லாம் உதிரியான தகவல்கள். ஐராவதம் மகாதேவன் அரிதின் முயன்று திரட்டி தந்துள்ளார்.
இரண்டு மணி நேரம் நாங்கள் ஜம்பை மலைக்குகையில்- அதாவது தாசிமேட்டில் இருந்தோம். சூரியன் தலைக்கு மேல் ஏறிவிட்டது. வெய்யலில் தலைவலி ஏற்பட்டது.மாத்திரை போட்டு, கொஞ்சம் தண்ணீர் குடித்தேன். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. எல்லாம் திருப்திகரமாக இருந்தது- என்று பவா செல்லத்துரைக்கு-அவர்தான் ஜம்பையின் இருப்பை சொல்லி வழி காட்டியவர் அவர்க்கு செல்போனில் சொல்லிவிட்டு கீழே வந்தேன்.
எங்கள் ஊரில் யார் அனுமதி பேரில் வீடியோ படம் எடுக்கிறீர்கள்? என்று ஒருவர் வழி மறித்துக்கொண்டார். தான் கிராம அதிகாரி என்று சொல்லிக்கொண்டார். உண்மையில் அவர் கிராம அதிகாரிதான். ஜம்பை தமிழ்நாடு தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இன்னும் கொண்டு வரப்படவில்லை. அது மக்களின் சொத்தாகவே இருக்கிறது. கிராம அதிகாரிகாரியிடம் அதையெல்லாம் சொல்லவில்லை. தமிழ்நாடு முழுவதும் படம் பிடிக்க மத்திய, மாநில அரசுகளின் தொல்லியல்துறையிடம் அனுமதி பெற்று இருப்பதை சொல்லிவிட்டு, வட்டெழுத்து இருக்கும் திருநாதகுன்றுக்கு புறப்பட்டோம்.

தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுக்களில் சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், திருக்குறள், தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாடல்கள், ஆத்திச்சுவடி, கொன்றைவேந்தன் என்று எதுவுமே கிடையாது.
கல்வெட்டுக்களில் இருப்பதெல்லாம் மன்னர்களின் கொடை, நிலபரிவர்த்தனை, வரிவிதிப்பு, வணிகர்கள் செய்த தானம் பற்றிய விவரந்தான்.

தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுக்களிலேயே அழகான, நேர்த்தியான கல்வெட்டு- ராஜராஜசோழன் கல்வெட்டுதான். தஞ்சாவூர் பெரியகோவிலிலும் திருப்பதியிலும் அவன் சிறந்த கல்தச்சர்களை கொண்டு கலையம்சத்துடன் கல்வெட்டு எழுத்துக்களை பொறித்துள்ளான். கல்வெட்டு என்பது கலை என்பதை 11வது நூற்றாண்டை சேர்ந்த ராஜராஜன் கல்வெட்டுக்கள் தீர்க்கமாக சொல்கின்றன. சிவபாத சேகரன் என்னும் ராஜராஜனின் மெய்கீர்த்தி , கோவில் தானம், ஊழியர்கள், தேவரடியார்கள்-எல்லாம் கல்வெட்டில் உண்டு.

தமிழ்நாட்டில் கல்வெட்டு வெட்டி வைப்பது ஒரு பழக்கமாகவே இருந்து வருகிறது. அதில் அடிப்படையான அம்சம் மாறவே இல்லை. அதாவது அன்று மன்னர்களின் கொடை கல்லில் வெட்டப்பட்டது. இன்று ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர், அதிகாரிகள் அடிக்கல் நாட்டுவது- கட்டிடம் திறப்பது கல்லில் பொறிக்கப்படுகிறது.ஆனால் எல்லாம் மூன்றாம்தரமான நான்காம்தரமான முறையில். ஒரு கல்வெட்டுகூட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பொறிக்கப்பட்ட ராஜராஜன் எழுத்துக்களின் பக்கத்தில்கூட செல்ல தகுதியற்றவையாகும். கல்வெட்டு கால கலைபொருட்கள் என்ற யோசனை போகவே இல்லை.

ஏலக் கம்பெனி நடத்திய மர்ரே ராஜம் என்பவரின் சாந்தி சாதனா அறக்கட்டளை, தமிழ்நாட்டுக்கு கல்வெட்டுக்கள் பற்றிய தமிழ் கல்வெட்டு சொல்லகராதி என்று இரண்டு தொகுதிகளை கொண்டு வந்துள்ளது. கல்வெட்டில் வரிதான் அதிகமாக இடம்பெற்று உள்ளது.

தமிழ் மொழியை செம்மொழி என்று அறிவித்த மத்திய அரசு, தமிழ் செம்மொழி பரிசை கொடுக்க இருக்கிறது. பரிசுகொடுக்கும் பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டிருக்கிறது என்று தகவல்கள் வருகின்றன.

சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...

S.Kandasamy Profile

Previous Article


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...