அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழர்கள் வளர வேண்டுமானால் அவர்களை பணம் சம்பாதிக்க தூண்ட வேண்டும் :ஜெயகிருஷ்ணன்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   17 , 2008  20:19:12 IST

'பெரும்பாலான தமிழர்கள் , தங்களுடைய இலக்கே ஒரு வேலையில் அமர்வது என்று தான் இருந்தார்கள் . ஒரு இனத்தின் வளர்ச்சி பணம் , படிப்பு சார்ந்து தான் இருக்கிறது. தமிழர்கள் வளர வேண்டுமானால் அவர்களை பணம் சம்பாதிக்க தூண்ட வேண்டும்.பத்திரிக்கை வழியாக அதை எப்படி செய்வது என்று யோசித்தபோது உருவானது தான் தொழில் துறைக்கான தமிழ் இதழ்' என்று கூறும் ஜெயகிருஷ்ணன் தமிழில் முதன் முதலில் தொழில் துறைக்கான இதழாக 'வளர் தொழிலை' 1989 - ல் தொடங்கியவர்.

'வளர் தொழில்' இன்று தமிழில் வெளிவரும் பல தொழில் சார்ந்த மற்றும் தன்னம்பிக்கை இதழ்களின் முன்னோடி , அதே போல தமிழர்களின் கம்யூட்டர் சம்பந்தமான அறிவுத் தேடலை உணர்ந்து 1994 ல் முதல் தமிழ் கம்யூட்டர் இதழான " தமிழ் கம்யூட்டர் " இதழை தொடங்கியவர் . இந்த ஆண்டில் " நேயா " மற்றும் "PC Friend " என்ற இரண்டு புது இதழ்களை தொடங்கியிருக்கும் ஜெயகிருஷ்ணனுடன் ஒரு சந்திப்பு ...

தங்களின் குடும்ப பின்னணி மற்றும் பத்திரிகை துறைக்கு வருவதற்கான சூழல் உருவானது எப்படி ?

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிறுத்தொண்டநல்லூர் சொந்த ஊர் , வியாபாரத்திற்காக சென்னைக்கு வந்த அப்பா கும்மிடிப்பூண்டியில் விறகு கடை வைத்திருந்தார். பத்திரிகை முகவரும் கூட. கும்மிடிப்பூண்டியில் பள்ளிக்கல்வி , பொன்னேரியில் கல்லூரிக்கல்வி . வீட்டில் அனைவருக்கும் கடவுள் நம்பிக்கை அதிகம் , எனக்கும் . பிறகு பொன்னேரி கல்லூரியில் பி.எஸ்.சி. தாவரவியல் பரிணாம வளர்ச்சி பற்றிய பாடம் படிக்கும் போது evolution theory முதல் முதலில் என்னை பகுத்தறிவு நோக்கி சிந்திக்க வைத்தது. தேடல் தொடங்கியது.தேடலில் முதலாவதாக பெரியார் கிடைத்தார்.திராவிடர் கழகத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. பிறகு திராவிடர் கழக தலைவர்களை அழைத்து கும்மிடிப்பூண்டியில் கூட்டம் நடத்த தொடங்கினேன். அப்பா பத்திரிக்கை முகவர் என்பதால் நிறைய இதழ்கள் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வீட்டிற்கு எதிரிலேயே நூலகமும் அமைந்துவிட்டதால் நிறைய படித்தேன்.திராவிடர் கழகத்தின் பொறுப்புகளில் இருந்தேன் . அப்பா வணிகர் , நான் தொழிலில் இருந்து விலகிச் சென்று கொண்டிருப்பதாக அவருக்கு பயம் வந்துவிட்டது. அதனால் என்னை வேலைக்கு சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் மாலை முரசில் சேர்த்துவிட திரு.இராமச்சந்திர ஆதித்தனாரிடம் அழைத்து சென்றார் . அவரும் பையனை வியாபாரத்திலேயே ஈடுபடுத்தலாமே , பத்திரிக்கையில் என்ன சம்பளம் கொடுத்துவிடப்போகிறோம் ? என்று தான் சொன்னார்.

தேவியில் விருப்பமான முறையில் வேலை செய்து கொண்டிருந்த போது தொழில் துறைக்கான தனி இதழ் தொடங்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது ?

தேவியில் மிகவும் விரும்பி மகிழ்ச்சியாக வேலை செய்து கொண்டிருந்தேன் . இராமச்சந்திர ஆதித்தனாரிடம் கற்றுக் கொள்ள நிறைய விஷயமிருந்தது. நிறைய புத்தகங்கள் வாங்குவதற்கு அனுமதி கொடுத்திருந்தார் . நிறைய படித்தேன் . சென்னையில் லேண்ட்மார்க் அப்போது தான் தொடங்கியிருந்தார்கள். நிறைய ஆங்கில இதழ்கள் , புத்தங்கள் படிக்கும் வாய்ப்பு கிடைத்து.தமிழர்கள் வளர்ச்சி , தமிழ் சமுதாய முன்னேற்றம் சார்ந்த நிறைய ஆர்வம் இருந்தது. ஆங்கிலத்தில் நிறைய தன்னம்பிக்கை புத்தகங்கள் , தொழில் புத்தகங்கள் , இதழ்கள் இருந்தன. ஆங்கிலத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழில் அதுபோன்று எதுவுமேயில்லை. அந்த சமயத்தில் தமிழகத்தில் மார்வாடிகளுக்கு எதிரான போராட்டமும் நடந்து கொண்டிருந்தன. மார்வாடிகள் தமிழகத்திற்கு வந்து நிறைய சுரண்டி செல்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு இருந்தது. இது ஏனென்று யோசிக்கும் போது , அவர்கள் தொழில் தொடங்கி சம்பாதிக்கிறார்கள் . பெரும்பாலான தமிழர்கள் அப்படியில்லாமல் , தங்களுடைய இலக்கே ஒரு வேலையில் அமர்வது என்று தான் இருந்தார்கள் . ஒரு இனத்தின் வளர்ச்சி பணம் , படிப்பு சார்ந்து தான் இருக்கிறது. தமிழர்கள் வளர வேண்டுமானால் அவர்களை பணம் சம்பாதிக்க தூண்ட வேண்டும் . பத்திரிக்கை வழியாக அதை எப்படி செய்வது என்று யோசித்தபோது உருவானது தான் தொழில் துறைக்கான தமிழ் இதழ்.

அப்போது எனக்கு தனியாக பத்திரிக்கை தொடங்கும் எண்ணம் எதுவுமில்லை. முதலில் எங்களுடைய ஆசிரியர் திரு.இராமச்சந்திர ஆதித்தனாரிடம் தான் தொடங்க வேண்டினேன். விற்பனையாகாதுன்னு சொல்லிவிட்டார். பிறகு வா.செ.குழந்தைசாமி அவர்களை சந்தித்தேன். அவர் நிறைய உற்சாகப்படுத்தினார். பெரிய தொழிலதிபர் கிடைத்தால் சொல்கிறேன், அவர்களை தொடங்க சொல்லுவோம் என்றார். அப்போதைய தொழில்துறை அமைச்சர் திரு.ஆர்.எம்.வீரப்பனுக்கு கடிதம் எழுதினேன். எதுவுமே சரியாக வரவில்லை. இதற்கிடையில் " வளர் தொழில் " என்ற பெயரை உருவாக்கி பதிவு செய்து வைத்திருந்தேன். நண்பர்கள் கிடைத்த பிறகு நாமே தொடங்கினால் என்ன ? என்ற எண்ணம் உருவாகி தனியாக தொடங்கிவிட்டோம்.

" வளர்தொழில் " இதழ் தொடக்க காலத்தில் சந்தித்த சிக்கல்கள் ?

முதலில் முகவர்கள் பத்திரிகையை கடையில் மாட்டவில்லை . மெல்ல மெல்ல பத்திரிக்கை விற்க தொடங்கி பின்னர் தான் கடையில் மாட்ட தொடங்கினார்கள். எந்த ஒரு புது இதழுக்கும் இது பொருந்தும். கொஞ்சகாலம் காத்திருந்துதான் ஆகணும்.

முதலிலேயே தொலை நோக்கோடு நாங்கள் சில விஷயங்களை செய்தோம் . பத்திரிக்கை வாசகர்களை நம்பித்தான் இருக்கவேண்டும். விளம்பரதாரர்களை நம்பி இருக்கக்கூடாது என்பது முதலாவது . பத்திரிக்கைக்கான விலையை ஆறு ரூபாய்னு வைத்தோம். அந்த சமயத்தில் ஆறு ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரே தமிழ் இதழ் 'வளர் தொழில்' மட்டும்தான். விலைக்கு தகுந்த மாதிரி செய்திகளை கொடுத்தோம். பத்திரிக்கை வாங்கின பணம் நஷ்டமில்லை என்று வாசகர்கள் உணருமளவிற்கு செய்திகள் கொடுத்தோம் . அதனால் படிப்படியாக வளர்ந்தது.

நிறைய சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருந்தது . தமிழ் தினசரி இதழ்களுக்கு ஆதித்தனார் அவர்களும் பருவ இதழ்களுக்கு "குமுதம்" எஸ்.ஏ.பி அவர்களும் தான் பாதை அமைத்தவர்கள். இவர்களுடைய பாதிப்பு இல்லாமல் தமிழில் யாரும் பத்திரிக்கை நடத்த முடியாது. எஸ்.ஏ.பி. அவர்கள் எடிட்டோரியலையும் அவர் நண்பர் பார்த்தசாரதி அவர்கள் நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டார்கள் . அதே போல நான் எடிட்டோரியலை கவனித்துக் கொள்ள நண்பர்களில் ஒருவர் சர்குலேசனையும் , ஒருவர் மார்க்கெட்டிங்கையும் கவனித்து கொண்டார்கள் . பத்திரிக்கையின் வெற்றியைப் பார்த்த நண்பர்கள் தனியாக பிரிந்து இரண்டு பேரும் தொழிலுக்கான இரண்டு வேறு இதழ்களை தொடங்கினார்கள். அதனால் சர்குலேசன் மற்றும் மார்க்கெட்டிங் துறையை சமாளிக்க நான் சிரமப்பட்டேன். அதே போன்று அவர்களுக்கும் எடிட்டோரியலில் பிரச்சினை இருந்திருக்கும். நாங்கள் ஒன்றாக இருந்திருந்தால் இன்னும் பெரிய வெற்றியை கண்டிருக்க முடியும்.

வளர்தொழிலின் வளர்ச்சிக்கு மேற்கொண்ட முயற்சிகள் ? கையாண்ட உத்திகள்...

ஏற்கனவே தேவியில் 10 ஆண்டு காலம் வேலை பார்த்த அனுபவம் ரொம்ப உதவியாக இருந்தது . துணை ஆசிரியராக இருந்தாலும் அதோடு நிற்காமல் இதழ் சார்ந்த மாற்ற பணிகளிலும் ஆர்வம் காட்டியதால் அவற்றையும் கற்றுக்கொள்ள முடிந்தது.அப்பா பத்திரிகை முகவராக இருந்ததினால் அந்த அனுபவமும் கைகொடுத்தது. செலவுகளை முடிந்த அளவிற்கு குறைத்தோம் . போஸ்டர் ஒட்டுகிற வேலை முதல் என்னென்ன வேலைகள் நம்மால் செய்யமுடியுமோ எல்லா வேலைகளையும் செய்தோம். சிக்கனமும் எங்கள் வளர்ச்சிக்கான முக்கியமான காரணம்.

இரண்டாவதாக எதையுமே கடனுக்கு வாங்குவதில்லை முடிவு செய்தோம். ஏனென்றால் , பணம் கொடுத்து வாங்கும் போது விலையை குறைத்து வாங்க முடிகிறது. தரமான பொருளையும் வாங்க முடிகிறது. வியாபார குடும்பத்திலிருந்து வந்ததால் இதை ஆரம்பம் முதலே பழக்கப்படுத்திக் கொண்டோம் . இதுவும் தொழில் சார்ந்த வளர்ச்சிக்கு முக்கியமான காரணம்.

வளர்தொழில் வெற்றிக்கான காரணமாக நீங்கள் நினைப்பது ?

அந்த காலகட்டத்தில் வளர்தொழில் போன்ற ஒரு பத்திரிக்கைக்கு தேவை இருந்திருக்கலாம் . நாங்கள் அதை நிறைவு செய்தோம் . இரண்டாவதாக அந்த சமயத்தில் வேலை வாய்ப்பு குறைந்துவிட்டது. எல்லோரும் சொந்தமாக ஏதாவது தொழில் செய்யவேண்டும் என்ற எண்ணத்திலிருந்ததால் வாசகர் வட்டம் வளர்ந்தது.

வளர்தொழிலின் சாதனைகள் ...

சொந்தமாக தொழில் தொடங்கி வெற்றி பெறலாம் என்ற தன்னம்பிக்கையை படிப்படியாக வளர்த்துள்ளோம். தொழில் செய்பவர்களுக்கு நிர்வாகம் சார்ந்த நிறைய விஷயங்களை அதற்கான வல்லுநர்களிடமிருந்து பெற்றுக் கொடுத்திருக்கிறோம். தமிழில் துறை சார்ந்த இதழ்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்த முடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறோம்.

தொழில் சார்ந்த நிறைய எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறோம். எழுதத்த்தெரியாது , நேரமில்லை என்று சொன்ன பல பேரை வற்புறுத்தி எழுத வைத்திருக்கிறோம். டாக்டர் பெசன்ட் ராஜ் உலகளாவிய தொழில் ஆலோசகர் . ஆங்கிலத்தில் மட்டுமே இவருடைய புத்தகங்கள் வெளிவந்திருக்கிறது. முதன் முதலில் தமிழில் இவருடைய கட்டுரைகளை வளர்தொழிலில் எழுதி வருகிறார். பங்கு சந்தை குறித்த கட்டுரைகளை , செய்திகளை வெளியிட்டு அது குறித்த விழிப்புணர்ச்சியை உருவாக்கியுள்ளோம்.

இதே போல எம்.எல்.எம் க்கு எதிரான கட்டுரைகள் வெளியிட்டு வருகிறோம். நிரந்தர வளர்ச்சிக்கு எம்.எல்.எம் உதவாது. எம்.எல்.எம் விளம்பரங்களை கூட நாங்கள் வெளியிடுவதில்லை. மூட நம்பிக்கையை உருவாக்கும் , பேராசையை தூண்டும் விளம்பரங்கள் எதையுமே வெளியிடுவதில்லை. உழைத்தால் மட்டுமே முன்னேறலாம் போன்ற விஷயங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம்.

தமிழ் பத்திரிக்கை உலகில் முதன் முதலில் தொழில் துறை சாதனையாளர்களை அட்டைப்படத்தில் வெளியிட்டது வளர்தொழில்தான்.

தமிழக தொழில் துறையில் ஏற்படவேண்டிய மாற்றங்கள் ?

தமிழர்கள் பெரிய நிறுவனங்களாக வளரவேண்டும் . பலர் தொழில் துறையில் ஒரு அளவோடு நின்றுவிடுகிறார்கள். தொழிலில் ஒரு நிலையை எட்டிய உடன் , தங்களுடைய வளர்ச்சி தங்களால் ஏற்பட்டதல்ல விதிப்படி நடந்தது என்று ஆன்மீக வழியில் இறங்கிவிடுகிறார்கள். சாதாரணமாக ஒரு மின் இணைப்பு வாங்குவதற்குக் கூட நம்முடைய தொழில் முனைவோர்கள் சந்திக்கும் போராட்டம் அதிகம் . இவ்வளவு முயற்சி செய்து வெற்றிபெறுகிறவர்கள் ஒரு அளவில் மனநிறைவு அடைந்துவிடுவதுதான் வருத்தப்படவேண்டிய விஷயம். இது மாறவேண்டுமானால் , பெரிய நிறுவனங்கள் வந்தால் தான் முடியும் . அந்த மாற்றமும் படிப்படியாக சரியான பாதையில் வந்து கொண்டுதான் இருக்கிறது.

மற்றொன்று தொழில் துறைக்கான ஆலோசகர்கள் நிறைய உருவாக வேண்டும். ஆங்கிலத்தில் இதற்காக நிறைய புத்தகங்கள் உள்ளன. தமிழிலும் அதுபோன்று வரவேண்டும்.

தொழில் முனைவோர்களும் பணம் கொடுத்து ஆலோசனை பெற முயற்சிக்கும் போதுதான் அந்த துறையும் வளரும் . தொழில் துறைக்கான ஆலோசனைகளை இலவசமாகவே எதிர்பார்க்கக்கூடாது.

தமிழகத்தில் உங்களை கவர்ந்த தொழில்துறை சாதனையாளர்கள் ?

'மா·பா' பாண்டியராஜன் . மனிதவள மேம்பாட்டு துறையில் உலகளாவிய அளவில் சாதனை புரியும் அவரை மிக பிடிக்கும் . அடுத்து அய்ய நாடார் , மழையே பெய்யாத , வெயில் மட்டுமே வாட்டகூடிய ஒரு ஊரில் வெயில் என்பதை Negative ஆக பார்க்காமல் பட்டாசு தொழிலுக்கு உகந்த இடமாக Positive ஆக பார்த்து சிவகாசியின் வளர்ச்சிக்கு வித்திட்ட சாதனையாளர். பிறகு Cadd Centre வைத்தீசுவரன். தொழில் துறை சாதனைக்கு வயது தடையில்லை என்று நிரூபித்தவர் வங்கி மேலாளராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு தொழில் தொடங்கி வெற்றி பெற்ற சாதனையாளர் . இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள் . சொல்லிக்கொண்டே போகலாம்.

தொழில் சாராத குடும்ப பின்னணியிலிருந்து முதன் முதலில் தொழில் தொடங்க வருபவர்களுக்கு தேவையான பண்புகள்.. ?

முதலில் தன்னம்பிக்கை வேண்டும் . நம்மால் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கைதான் தொழிலுக்கான மூலதனம்.
பிறகு கணக்கிட்டு செலவு செய்யவேண்டும் . செலவினங்களை முடிந்த அளவிற்கு குறைக்க வேண்டும் . சிக்கனம் அவசியம் .
பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
முழு ஈடுபாட்டோடு கூடிய கடின உழைப்பு தேவை. தங்கள் துறை சார்ந்த செய்திகளை படிக்கும் பழக்கம் அவசியம். அது தான் அன்றாடம் அவர்களுடைய தொழிலில் நடக்கும் மாற்றங்கள் வளர்ச்சியை தெரிவிக்கும்.


தமிழில் புதிதாக பத்திரிக்கை தொடங்க நினைப்பவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது...

எடிட்டோரியலை நம்பி மட்டுமே பத்திரிக்கை தொடங்க முடியாது . எடிட்டோரியலை தொடர்ந்து சர்குலேசன் , விளம்பரப்பிரிவு , சந்தைப்படுத்தல் எல்லாம் சரியாக செய்ய வேண்டும் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும். பத்திரிக்கைக்கு தெளிவான நோக்கம் வேண்டும் யாருக்காக பத்திரிக்கை நடத்தப்படுகிறதோ அதற்கான வாசகர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும் . ஏனெனில் இது பணம் மட்டுமே முதலீடு செய்து வெற்றி பெறுகிற துறை இல்லை. எல்லா தொழிலிலும் வெற்றி பெற்ற அம்பானி போன்றவர்கள் தோற்ற தொழில் இது. தெளிவான பார்வை கொண்ட ஆசிரியர் , சரியான பத்திரிக்கையாளர்களை கொண்டு நல்ல நோக்கத்திற்காக நடத்தினால் வெற்றி பெறலாம்.

சந்திப்பு : கௌதம்


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...