![]() |
சா.கந்தசாமியின் எழுத்தோவியம்Posted : திங்கட்கிழமை, செப்டம்பர் 19 , 2005 05:08:26 IST
மனித சரித்திரம் என்பதே புலம் பெயர்ந்த சரித்திரந்தான். ஏனெனில் கால்கொண்ட மனிதன் ஒரிடத்தில் நிலையாக நின்று கொண்டிருப்பதில்லை. அவனை மனசு துரத்திகொண்டே இருக்கிறது. இருக்கிற இடத்தைவிட வளமான, சௌகரியமான, பிடித்தமான புலம் என்று இருக்கிற இடத்தை விட்டுவிட்டு போகிறான். இடம் மாறினாலும் மனிதன் மாறுவதில்லை. அவன், அவனாகவே இருக்கிறான். எனவேதான் நீ எங்கே போனாலும் நீ நீயாகவே இருக்கிறாய் என்று சொல்வது பழக்கமாகவே இருக்கிறது.
மனிதனைப் பற்றி அறிந்ததில் எல்லாம் முதன்மையாக இருப்பது புலம் பெயர்ந்த சரித்திரந்தான் அவன் மன ரீதியிலும், உடல் ரீதியிலும், திருப்தி அடையாதவன் என்பதோடு அவனை யாரும் திருப்தி படுத்த முடியாது என்பதுதான். கட்டுக்குள் இருப்பது மாதிரியே கட்டுக்கு வெளியில் சஞ்சரித்து கொண்டிருக்கிறான். தனக்கு தானே கேள்வி கேட்டு பதிலை இன்னொருவரிடம் எதிர்பார்க்காமல் தானே தெரிந்து கொள்ள கிளம்பி விடுகிறான். அதில் வணிகம், தொழில், படிப்பு, திறமை, உழைப்பு எல்லாம் உண்டு. மனித மனம் என்பது ஆற்றில் ஓடும் நீர். அது வேகமாக ஓடிகொண்டே இருக்கிறது. மலை, காடு, பாலை என்று மாறி மாறி பூமிக்கு மேலேயும் பூமிக்குள்ளேயும் ஓடிக்கொண்டே இருக்கிறது. அது இன்னும் கடலையோ சமுத்திரத்தையோ அடையவில்லை என்பதுதான் முக்கியம். முடிவு இல்லாத அந்த ஓட்டத்தின் போக்கு பற்றி தெரிந்துகொள்ள ஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொரு விதமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அந்த முயற்சியில் முடிவு முக்கியமல்ல. முயற்சி என்பதே முக்கியம். ஏனெனெனில் மனிதர்களை பற்றிய வரையில் இறுதியானது, முடிவானது என்பது ஏதுமில்லை. அரசியல், சமூக நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் ஒரு சமூகத்தின் மீது இன்னொரு சமூகம் தாக்குதலை நடத்துகிறது. அதன் காரணமாக புலம் பெயர்வது நடைபெறுகிறது.இப்படி நெருக்கடியில் சிக்கிய சமூகம் யூத சமூகம் யேசுநாதர் கொலைக்குப் பிறகு யூதர்கள் நாடு நாடு நாடாக புலம் பெயர்ந்தார்கள்.'Diaspora' என்ற சொல்லே யூதர் குடிப் பெயர்ச்சியை ஒட்டி வந்ததுதான். ஓர் இனத்திற்கு பிரச்சினை ஏற்படுவது மாதிரியே தனிப்பட்டவர்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. பெரும்பாலும் அது சமாதானம் செய்து கொள்ளப்பட்டு விடும் என்றாலும் கவிஞர்கள், புலவர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்து பிறந்த மண்ணை விட்டு புலம் பெயர்ந்து விடுகிறார்கள். அதற்கு ஓர் எடுத்துகாட்டு கவிசக்ரவர்த்தி கம்பர். கம்பர்க்கும், சோழமன்னனுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு விடுகிறது. மன்னவனும் நீயோ, வளநாடும் உனதோ - என்று பாடிகொண்டே கம்பர் சோழநாட்டை விட்டுப் போய்விட்டார்.அது பதினோறாவது நூற்றாண்டில் நடந்தது. வைணவப் பெரியவர் ராமானுஜருக்கும் சோழனுக்கும் ஏற்பட்ட பிணக்கு பிரசித்தம். வைணவர்கள் சோழ மன்னன் பெயரைக் கூட அதன் காரணமாகச் சொல்வதில்லை. பெயர்ச் சொல்ல தகாதவன் என்றே சொல்கிறார்கள். ராமானுஜர் உயிர் பிழைக்கக் காவியைக் களைந்து விட்டு, மைசூர் புலம் பெயர்ந்து , மாண்டியாவில் திரு நாராயணபுரம் கோவில் கட்டினார். ஜெர்மனியில் ஹிட்லர் காலத்தில் யூதர்கள் புலம் பெயர்ந்து ஓடினார்கள்.அவர்களில் பலருக்கு அமெரிக்காவில் புகலிடம் கிடைத்தது.இருபதாம் நூற்றாண்டின் மகத்தான அறிவு ஜீவி - விஞ்ஞான மேதையென கொண்டாடப்படும் ஐன்ஸ்டீன் புலம் பெயர்ந்த நாட்டின் குடிமகனாக உரிமைபெறுவதை படத்துடன் ஆவணமாக வெளியிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மனிதனும் பெருமைக்கும் சிறப்புக்கும் உரியவன் தான். அவனுக்கு அவனே பெரியவன்.குடும்பத்திற்கு தலைவன். வேராகவும் விழுதாகவும் இருக்கிறான்.பின்னர் தன் சமூகம் சார்ந்து பெயர் பெறுகிறான்.அதன்பின் முழுசமூகத்திற்கும் பொது சம்பத்தாகிறான். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது அது பாடப்பட்ட பழங்காலத்தைவிட தற்காலத்திற்கு இசைந்த சிந்தனையாக உள்ளது.மனிதனின் மகத்தான சரித்திரத்தின் தொடர்ச்சியாக உள்ளது. புலம் - புலம் என்பது பல பொருள் தரும் ஒரு சொல்.திசை,நிலம், நாடு,அறிவு, இருப்பிடம்,புலமை, நூல்,காட்சி, தேயம் என்பவை சில. கலம் தரும் தெருவில் புலம் பெயர் மாக்கள் என்பது சிலப்பதிகாரம். புலம் புகுதரு பேர் இசைமாலை- நற்றினை. பொருள் இருப்பிடம் என்பது. இனப் பிரச்சினை காரணமாக இலங்கைத் தமிழர்கள் இடம் பெயர்ந்த போது புலம் பெயர்வு என்ற பழமையான சொல் , புழக்கத்திற்கு வந்துவிட்டது அதன் பழமையான அர்த்தத்திலேயே.(மீண்டும் வருவேன்...) சா.கந்தசாமி சொல் விளக்கம் ------------- வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி. நான்காம் தொகுதி. சாந்தி சாதனா பதிப்பகம், சென்னை. சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள... Sa.Kandasamy Profile
|
|