![]() |
விரல்நுனி விபரீதம் - வா.மணிகண்டன் - புதிய தொடர்..Posted : திங்கட்கிழமை, ஏப்ரல் 14 , 2008 04:40:54 IST
நமது வாழ்க்கையை இணையம் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இனி வரும் காலங்களில் இது இன்னும் அதிகமாகும் . நன்மைகளோடு வரும் இணையம் கவனக்குறைவாக இருக்கும்போது சில விபரீதங்களையும் கையோடு அழைத்து வருகிறது.
சமீபத்தில் எழுத்தாளர் சாருநிவேதிதா பெயரைச் சொல்லி யாரோ மோசடி செய்யப்பார்த்தார்கள்.ஒவ்வொரு நொடியின் போதும் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் சைபர் கிரைம் எனப்படும் இணைய விபரீதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் உஷார் தொடர் தான் 'விரல் நுனி விபரீதம்.' பிரம்மாண்ட உலகின் இருண்ட முகம் - விரல்நுனி விபரீதம் - வா.மணிகண்டன் சைபர் குற்றங்கள். இந்தச் சொல்லுக்கான சிக்கல்கள் கூடிக்கொண்டே இருக்கிறது. இந்தக் குற்றங்களை மேலோட்டமாக புரிந்து கொள்வதே சுவாரசியமானது. ஆயிரம் ரூபாய் கொடுத்து கம்ப்யூட்ட்ர் கோர்ஸ் படித்தவனால் செய்யப்படுபவை அல்ல இந்தக் குற்றங்கள். கம்ப்யூட்டரிலேயே கசங்கி மண்டையை உடைத்து "ரூட்" கண்டறிந்து மிக இலாவகமாக சைபர் குற்றங்களைச் செய்கிறார்கள் "கம்ப்யூட்டர் பிதாமகன்"கள். சுவரேறி, பூட்டு உடைத்து, கன்னக்கோல் போடுவதெல்லாம் தேவையே இல்லை. இருந்த இடத்தில் இருந்து நடத்தும் ஜகஜ்ஜாலங்கள்தான் சைபர் குற்றங்கள். பிரதமருக்கோ, முதலமைச்சருக்கோ மிரட்டல் இமெயில் 'கமுக்கமாக' அனுப்பிவிட்டு, யாரிடமும் அகப்படாமல் தப்பித்து விடலாம் என நினைத்துக் கொண்டிருப்பதுதான் மிக மட்டமான அல்லது குறைந்த பட்சமான இணையக் குற்றமாக இருக்க முடியும். ஒவ்வொரு கணிப்பொறிக்கென இருக்கும் பிரத்தியேக எண்ணை ஐ.பி.(இன்டர்நெட் புரொடோகால்) முகவரி என்கிறோம். அனுப்புகிற மெயிலில் ஒட்டிச் செல்லும் இந்த எண் எந்த ஊரில், எந்த இணைப்பிலிருந்து மெயில் வருகிறது என்ற தகவலை மிகத் துல்லியமாக காட்டிக் கொடுத்துவிடும். பின்னர் அந்த கணிப்பொறியின் மெமரியை சோதனையிட்டால் போதும். அனுப்பியவரின் கையில் விலங்கு விழ வேண்டியதுதான் பாக்கியாக இருக்கும். இந்த நுட்பத்திலும் தங்கள் வித்தையைக் காண்பித்து போலீஸ் கண்களில் மண் தூவுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் உலகின் பெரிய சைபர் குற்றங்களோடு இவற்றை ஒப்பிட்டால், ஈமெயில் குற்றங்கள் எல்லாம் 'ஜுஜுபி'குற்றம். சாப்ட்வேர் வந்த புதிதில் ஒரு வங்கிக்கான புரோகிராம் எழுதிய கில்லாடி, அந்த வங்கியில் நடைபெறும் ஒவ்வொரு பணப்பரிமாற்றத்திற்கும் (அது கம்பெனிக்கு வரும் பணமாக இருக்கலாம் அல்லது கம்பெனியிலிருந்து வெளியில் செல்லும் பணமாக இருக்கலாம்)மிக மிகக் குறைந்த தொகையொன்று (1லிருந்து 5 பைசா என்ற அளவில்) தன் கணக்கிற்கு மாற்றும்படி எழுதிவிட்டார். தன்னுடைய ஒவ்வொரு பரிமாற்றத்திலும் 1 பைசா குறைகிறது என்பதை எந்த வாடிக்கையாளரும் கவனித்திருக்கவில்லை. இந்தக் கதை பல நாட்களுக்குத் தொடர்ந்து, அந்த வங்கி விழிக்கும் தருவாயில் கணக்கை சுத்தமாக மூடிவிட்டு மூட்டை கட்டிவிட்டார். இது பல முறைகளில் பல இடங்களில் நடந்து, தற்பொழுது இதன் பெயர் சலாமி தாக்குதல். இப்படியான இணையக் குற்றங்களையும் அதை கண்டறிந்த விதங்களையும் கவனிக்கும் போது மிக அலாதியான "கிரைம் நாவல்" படிப்பதற்கு ஈடான அனுபவம் கிடைக்கிறது. உலகில் நடந்த மிகக் கொடூரமானது முதல் மிகக் காமெடியானது வரையிலான சில இணையக் குற்றங்களை பற்றி வாசிக்கப் போகிறீர்கள். மற்ற வகைக் குற்றங்களோடு இணையக் குற்றங்களை நம்மால் எந்த வகையிலும் ஒப்பிடமுடிவதில்லை. ஒரு தனித்த உலகத்தில் மிகச் சிறந்த அறிவாளிகளால் செய்யப்படுபவை இந்தக் குற்றங்கள். இந்தக் குற்றங்கள் ஏன் நடைபெறுகின்றன என்று பார்க்கும் போது உளவியல் ரீதியாக மிகப்பெரும் தாக்கத்தை உண்டாக்குவதோடு, நவீனத் தொழில் நுட்பத்தின் உச்சகட்ட வளர்ச்சி சமூகத்தின் போக்கில் உண்டாக்கியிருக்கும் முடிச்சுகள் நம்மை புதிரான இருள் உலகிற்குள் அழைத்துச் செல்கின்றன. எந்த பெரிய விஷயத்தையும் மிக எளிதாக தாண்டிவிடும் கம்ப்யூட்டர், இணையம் என்ற மாய உலகத்தின் தற்போதைய மாபெரும் குற்றங்கள் கூட வருங்காலத்தில் சின்னக் குழந்தைகளின் திருடன் போலீஸ் விளையாட்டாக மாறிவிடலாம். (இன்னும்...) ஞாயிற்றுக்கிழமை தோறும் 'விரல்நுனி விபரீதம்' அந்திமழையில் வெளிவரும்.... 'விரல்நுனி விபரீதம்' பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும். வா.மணிகண்டன் ஹைதரபாத்தில் கணனித்துறையில் பணியாற்றும் வா.மணிகண்டனுக்கு வயது இருபத்தைந்து.சொந்த ஊர் கோபிசெட்டிபாளையம். முதல் கவிதை 2005 ஆம் ஆண்டில் உயிர்மை இதழில் வெளி வந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக உயிர்மை, காலச்சுவடு, உன்னதம், புதிய பார்வை, உயிர் எழுத்து, தக்கை, அம்ருதா உட்பட தமிழின் முக்கியமான இலக்கிய பத்திரிக்கைகளில் கவிதைகள் எழுதி வருகிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு "கண்ணாடியில் நகரும் வெய்யில்" உயிர்மை வெளியீடு.
|
|