???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி 0 பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்து்றை போலீசார் சோதனை: சார் பதிவாளர்கள் கைது 0 தினகரனைத் தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்: ராஜேந்திர பாலாஜி 0 தமிழகத்தில் அடுத்த இருநாட்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 25 காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் 0 இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நல்லுறவுடன் செயல்பட வேண்டும்: சீனா அறிவுரை! 0 இடைத்தேர்தல்: இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது! 0 அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்ததுள்ளது: ஸ்டாலின் 0 டெண்டர் முறைகேடு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளிக்க இறுதி கெடு 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மனசாட்சி விசுவரூபம் எடுத்தது - தெற்கே உதித்த சூரியன் 3- ராவ்

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   29 , 2007  19:29:16 IST

பரம்மாச்சாரியார் என்று போற்றப்படும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை திருப்பதியில் விடியற்காலை நேரத்தில் சந்தித்த நினைவுகள் நேற்று நடந்தது போல இருக்கிறது.
என் படிப்பு , ஜர்னலிசத்தை எடுத்துக் கொண்ட காரணம் , அதன் பெருமை தெரியுமா - இதற்கு முன்பு பத்திரிக்கைத்துறையில் சாதித்த பெரியவர்கள் பற்றி தெரியுமா... என்று பல கேள்விகள் கேட்டார் சுவாமிகள்.

அச்சத்துடன் - மனசாட்சி எச்சரிக்க - கர்வமின்றி பதில் தந்தேன்.

பொழுது விடிந்தது. ஒரு வயதான பெண்மணி ஓடிவந்து சுவாமிகளை பார்த்து அழுதார். தன் மகள் ஓடிவிட்டதாகவும் அவளை தான் பார்க்க வேண்டும் என்றும் அந்த தாய் கதறினாள்.

நான் வெளியே வந்து சீனியருடனும் சில நண்பர்களுடனும் பேசியவாறு இருந்தேன். மூன்று அடுக்கு வீடு அது .

சுவாமிகள் உள்ளே - கடைசி அறையில் .

திடீரென்று " ராகவேந்திர ஆச்சார் " என்று சுவாமிகள் அழைப்பது கேட்டது.

நாங்கள் யாரையோ அழைப்பதாக பேசாமல் இருந்தோம்.

இரண்டாவது தடவை ' ராகவேந்திர ஆச்சார் ' என்று அழைக்க நாங்கள் சற்று திரும்பினோம்.

அதற்குள் மூன்றாவது தடவை இன்னும் சற்று உரக்க ' ராகவேந்திர ஆச்சார் ' என்று அழைத்தார்.

"உன்னைத்தான்" என்று சீனியரும் மற்றவர்களும் என்னை உள்ளே அனுப்பினர்.

என் பெயர் ராகவேந்திர ராவ் தான். ' ராவ் ' என்றே அழைக்கப்பட்டுவந்ததால் 'ராகவேந்திர ஆச்சார்' என்று சுவாமிகள் அழைத்த போது - என்னை அழைப்பதாக தோன்றவில்லை.

உள்ளே - சுவாமிகள் இருந்த அறைக்குள் நுழைந்தேன்.

சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தேன்.

"ராகவேந்திர ஆச்சார்...! இப்போது போல மனசாட்சி சொல்கிற படி எப்போதும் நடந்து வா! எது வந்தாலும் மனசாட்சி சொல்படி கேள். எல்லாம் உனக்கு நல்லதாகவே இருக்கும்"

- சுவாமிகள் கணீர் என்று ஆசி வழங்கினார்கள்.

என் உடம்பு நடுங்கியது . சுவாமிகளிடம் பேசிய போது , மனசாட்சி எச்சரிக்கை
விடுத்தவாறு இருந்ததை நினைத்தேன்.

அன்று முதல் என் ' மனசாட்சி ' விசுவரூபம் எடுத்து என் எஜமானனாகவே ஆகிவிட்டது எனலாம்.

என்னை தவறு செய்யவோ , இன்னொரு சக நண்பனைப் பார்த்து பொறாமைப் படவோ - மனசாட்சி அனுமதித்ததில்லை.

ஆச்சரியம் தான் . என்னால் அதன் உத்தரவை இன்று வரை மீற முடிவதில்லை.

சில சமயம் என் வேலையை விடவும் - மனசாட்சி திட்டவட்டமாக உத்தரவிட - பணிந்தேன்.

சுவாமிகள் உபதேசம் இன்றும் எனக்கு நல்திசை காட்டும் வழிகாட்டியாகவே இருக்கிறது.

மனசாட்சி என்கிற அந்த அந்தராத்மாவின் குரலை கேட்கும் போதெல்லாம் - காவி உடையுடன் மெலிதான சுவாமிகளின் தேகம் என் கண் எதிரே தெரியும்...

******* ********* *********

அன்பான வாசக நண்பர்களே!

காஞ்சி மாமுனிவரை பிறகு பலமுறை பார்த்த போது - ஓர் அதிசயம் - அவர் வயதான ஆஞ்சநேயர் போல் என் கண்களுக்கு தெரிய தொடங்கினார்.

கார்வேட் நகரில் குளக்கரையில் அப்படி ஒரு காட்சி.

யாரிடமும் சொல்லவில்லை . சுவாமிகளுக்கு கடிதம் எழுதி தெரிவித்தேன் . பிரசாதம் வந்தது.

******* ********* *********

பெரியவாளுடனான என் நேர் அனுபவம் இவை . காஞ்சி மாமுனிவர் நடத்திய 'சதஸ்' போன்ற நிகழ்ச்சிகளுக்கு செய்தி சேகரிக்க சென்ற நாட்கள் உண்டு. அந்த தவயோகி இந்து மதத்துக்கு மட்டுமின்றி , நமது பழமையான கலைகள் மறைந்து விடாது பாதுகாக்க பட்ட பாடுகளை பார்த்திருக்கிறேன். கிராம மக்களின் எளிய கலைகளை அவர் போற்றி மரியாதை செய்த காட்சிகள் அற்புதம். புரசை நடேச தம்பிரான் போன்ற மகத்தான கலைஞர்களை காட்டியவர் அவரே.

******* ********* *********

இமயம் முதல் குமரி வரை கால் நடையாகவே நடந்து அவர் நமது கலாசாரத்தை - பண்புகளை காத்தார். தெய்வ நம்பிக்கையின் பொருளை உணர்த்தினார்.
நமது நாட்டு விடுதலைப் போரிலும் அவர் பங்கு உண்டு . மகாத்மா முதல் விடுதலைக்குப் பாடுபட்ட மிகப்பெரும் தலைவர்கள் அவரை நாடிவந்தனர். அவர் ஆலோசனைகளைக் கேட்டனர்.......

பாரத தேசமெங்கும் ஒரு நூற்றாண்டு காலம் ஒளி வீசிய அந்த சூரியன்........!

******* ********* *********

' எந்தரோ மகானுபாவரு .. அந்தரீக்கி வந்தனமு ' என்று கரம் குவித்தார் தியாகப் பிரம்மம்.

மகா முனிவர்கள் , ரிஷிகள் , துறவிகள் , அவதார புருஷர்கள் , பக்த சிகாமணிகள் , பரமாச்சரியர்கள் என்று எத்தனையோ மகான்களால் இந்து மதம் செழித்தது.

ஆனால் இந்துமதம் என்று ஒரு மதம் கிடையாது . நமது முன்னோர்கள் பின்பற்றிய மதம் ' ஸநாதன தர்மம் ' என்று அழைக்கப்பட்டது. பிறகு அது இந்து மதம் ஆயிற்று.
சிந்து நதி பாயும் நம் நாட்டில் வாழ்ந்தவர்களை ' சிந்துக்கள் ' என்றும் வெளி நாட்டினர் அழைத்தனர். சிந்து - இண்டஸ் ஆயிற்று. அது போல சிந்துக்கள் - இண்டூஸ் !

இந்து மதம் யாராலும் உண்டாக்கப்படவில்லை . அது தானாகவே தோன்றியது . வளர்ந்தது.

(இன்னும் வரும் )

ராவ் - கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழில் தீவிரமாக இயங்கும் பத்திரிகையாளர்.
ஆனந்த விகடனில் பல ஆண்டுகள் பணி புரிந்தவர். அக்குழுமத்தின் புலனாய்வு பத்திரிகையான ஜூனியர் விகடன் அவர் பெயரை இன்னும் சொல்லக்கூடிய பத்திரிகை. பிறகு குமுதம், குங்குமம் இதழ்களிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.
தமிழின் சில முக்கியமான இதழியல் போக்குகளுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் இவர்தான்.

தமிழகத்தின் முக்கிய ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ராவ் தன்னை அதிகம் பாதித்த காஞ்சி மாமுனிவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பற்றிய அரிய தகவல்களை எழுதவிருக்கிறார்.

புதன் தோறும் இரவு ராவ் அவர்களின் 'தெற்கே உதித்த சூரியன்' அந்திமழையில் வெளிவரும்....

'தெற்கே உதித்த சூரியன்' பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.


தெற்கே உதித்த சூரியன்-1 - ராவ்
ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவம் நடத்திய சுவாமிகள் -தெற்கே உதித்த சூரியன் -2 - ராவ்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...