???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி 0 பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்து்றை போலீசார் சோதனை: சார் பதிவாளர்கள் கைது 0 தினகரனைத் தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்: ராஜேந்திர பாலாஜி 0 தமிழகத்தில் அடுத்த இருநாட்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 25 காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் 0 இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நல்லுறவுடன் செயல்பட வேண்டும்: சீனா அறிவுரை! 0 இடைத்தேர்தல்: இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது! 0 அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்ததுள்ளது: ஸ்டாலின் 0 டெண்டர் முறைகேடு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளிக்க இறுதி கெடு 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவம் நடத்திய சுவாமிகள் 2 - தெற்கே உதித்த சூரியன் - ராவ்

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   22 , 2007  20:53:42 IST

பலப்பல ஆண்டுகளுக்குப்பிறகும் , எனது 28 ஆவது வயதில்
திருப்பதியில் சுவாமிகள் என்னிடம் கேட்டார் : "குத்தாலத்துக்கு நான் வந்த போது என்னை பார்த்திருக்கிறாயா ? இல்லை , பயந்து ஓடினியா ? "

திகைப்போடு ," முதலில் அப்படி இருந்தேன் ...பிறகு தினமும் பெரியவாளை கிட்டேயே தரிசனம் செய்தேன் " என்றேன். சுவாமிகள் சிரித்தார். ( இதைப்பற்றி பிறகு...)

குத்தாலத்தில் சுவாமிகள் இருந்த போது வீட்டில் என் அம்மா சகோதர சகோதரிகள் உட்பட வட்டமாக அமர்வோம் . நடுவே ஒரு படி நெல் கொட்டியிருக்கும். நாங்கள் கையால் உமியை நீக்கி நெல்லிலிருந்து அரிசியை எடுப்போம். இப்படி எடுக்கப்பட்ட அரிசியை சுவாமிகள் தங்கியிருக்கும் வீட்டில் ஒரு புறம் இயங்கிய ஸ்ரீமடத்து நிர்வாகிகளிடம் தருவோம் . ஒரு சிறு வெள்ளிக்காசு தருவார் அவர் . இப்படி ஊரே திரண்டு வந்து அரிசி தருவார்கள். சுவாமிகள் அதையே பயன்படுத்துவதாக கூறினார்கள்.
....

சுவாமிகளை அதற்கு பிறகு எனது 16 அல்லது 17 வயதில் சென்னையில் தரிசனம் செய்தேன். என் குடும்பம் சென்னையில். நுங்கம்பாக்கத்தில் வீடு. சுவாமிகளை நுங்கம்பாக்கத்தில் தத்தாஜி என்கிற மாமனிதர் இல்லத்தில் தங்கியிருந்த சமயத்திலும், மயிலை சமஸ்கிருத கல்லூரியில் தங்கியிருந்த சமயத்திலும் தரிசிக்கும் பேறு கிடைத்தது. நுங்கம்பாக்கத்தில் விடியற்காலை நேரத்தில் குளித்துவிட்டு சுவாமிகளை பார்க்க செல்வேன். 'ஹிண்டு' பேப்பரை என்னிடம் தந்து உள்ளே அனுப்புவார்கள். ஒரு பெரிய பூதக்கண்ணாடியை பிடித்தவாறு அதை படிப்பார் சுவாமிகள்
...
எனக்கு வயது 28. ஆனந்தவிகடனில் நிருபராக பதவி உயர்வு கிடைத்தது . அது 1969. சுவாமிகள் திருப்பதியில் இருந்தார்கள் . அங்கே சென்று அவருடைய ஆசியை பெற சீனியர் அழைத்தார். முதலில் கீழ் திருப்பதியில் சுவாமிகளை தரிசித்தோம். மிக வீக்காக இருப்பதுபோல தரையில் படுத்து முனகிக்கொண்டிருந்தார். ஆனந்தவிகடனிலிருந்து வந்திருப்பதாக என் சீனியர் கூறியபோது அவர் புரிந்துகொண்டதாக காட்டிக்கொள்ளவில்லை. 'ஆனந்தா ஓட்டலா... ஆனந்தா தியேட்டரா' என்று சுவாமிகள் மெல்ல ஏதோதோ கேட்டார். 'பிறகு பேசலாம்' என்று சீனியர் நகர்ந்தார். நான் அங்கு சற்று நின்றேன்.

சுவாமிகளின் ஆடை நழுவியது . ' அவதூத் ' போல சுவாமிகள் காட்சி தர நான் கீழே விழுந்து நமஸ்கரித்தேன்.

இரவு எட்டுமணிக்கு சிவிகையில் பயணம் செய்து திருப்பதி மலைஅடிவாரத்தை அடைந்தார் சுவாமிகள் " கோவிந்தா ..கோவிந்தா ... கோவிந்தா" என்று சொல்லியவாறு சுவாமிகள் திருப்பதி மலை மீது படியேற ஆரம்பித்தார்கள்.

நானும் , சீனியரும் இன்னும் சிலரும் சுவாமிகளுடன் படியேறினோம் . இளைய சங்கராச்சாரியாராக இளமை அழகுடன் காட்சிதந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மிக வேகமாக படிகளில் ஏறி பாய்ந்து சென்று விட்டார். சுவாமிகள் மெதுவாகவே படியேறினார்கள். வானில் நிலாவின் முழு ஜொலிப்பில் இறைவன் நாமாவை சொல்லியவாறு திருப்பதி மலையேறினோம் - சுவாமிகளுடன்! எப்படிபட்ட பாக்கியம்!

' காளிகோபுரம் '( காளி என்றால் தெலுங்கில் காற்று - காற்று அந்த இடத்தில் பலமாக வீசும்) அடைந்த போது மணி இரவு 11.

சுவாமிகள் களைப்புடன் ஓரமாக அமர்ந்து கொண்டார்.

பிறகு , அங்கேயே மண் தரையில் படுத்துவிட்டார்.

நாங்களும் சற்று தள்ளிப்படுத்தோம். குளிர் காற்று வீசிற்று . சுவாமிகள் தன் ஆடையால் உடம்பை போர்த்திக் கொண்டு விட்டார் .

விடியற்காலை மூன்று மணி . சுவாமிகள் எழுந்துவிட்டார்கள் . மலைச்சாலைவழியே நடக்க ஆரம்பித்தார்கள்.

இப்போது போல அன்று மலையில் பஸ் - கார்கள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் இரண்டு சாலைகள் கிடையாது. ஒரே வழிதான் . போக்குவரத்துக்கள் அந்த சாலையில் காலை 6 மணிக்குத்தான் ஆரம்பிக்கும்.

ஆகவே சுவாமிகள் அந்த சாலையிலேயே நடக்க ஆரம்பித்தார்கள்.

காலை 3 முதல் 4 வரை தன்னை தனது தலை முதல் கால் வரை காவித்துணியால் மூடியவாறு , தன்னை மறைத்துக்கொண்டு ஒருவர் ' டார்ச் ' லைட் அடித்து வழிகாட்ட நடந்துவந்தார் சுவாமிகள் . உள்ளே சுவாமிகள் ' ' ஜெபம் ' செய்வதாகக் கூறினார்கள் .

சரியாக 4 மணிக்கு சுவாமிகள் , துணிகளை கழற்றி தரிசனம் தர , எல்லோரும் கீழே விழுந்து வணங்கினோம் . கூட வந்தவர்கள் ' விஷ்ணு சகஸ்ர நாமம் ' சொல்லத் தொடங்கினார்கள். மலைப்பாதை வழியிலேயே காலை 6 மணிக்கு உச்சியை - திருப்பதி கோயில் சமீபத்தை அடைந்தோம்.

திருப்பதி தேவஸ்தானத்தில் பூரண கும்ப - நாதஸ்வர மரியாதையுடன் சுவாமிகள் தங்கவேண்டிய இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அன்று சுவாமிகள் தயவால் எழுமலையானை கண் குளிர - எளிதாக பார்க்கும் பாக்கியமும் கிடைத்தது.

சுவாமிகள் ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவம் நடத்தினார்.

கோயிலை விட்டு வெளியே வரும் போது பக்தர்கள் சமர்பித்த காணிக்கைகளை திருப்பதி உண்டியலில் போடவேண்டுமென்று உத்தரவிட்டார்.

எழு மலையானின் சக்தி பற்றி எங்களிடம் எடுத்து உரைத்தார். அதே சமயம் மலையை இடித்து 'காட்டேஜ் ' கட்டிக்கொண்டு போவதை சுவாமிகள் ரசிக்கவில்லை.

திருப்பதியில் நான்கு நாட்கள் ஸ்ரீமடம் 'காம்ப்' அடித்த இடத்திலேயே நாங்களும் தங்கி இருந்தோம்.

நாலாவது நாள் விடியற்காலை 4 மணிக்கு.

சுவாமிகள் அழைப்பதாக காரில் படுத்திருந்த என்னை சீனியர் எழுப்பினார்.

சுவாமிகள் தங்கி இருந்த அறையில் வாய் பொத்தி குனிந்தவாறு அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன்.

அப்போது தான் " குத்தாலத்துக்கு நான் வந்தபோது என்னை பார்த்து இருக்கியா ? இல்லை பயந்து ஓடினாயா " என்று சுவாமிகள் கேட்டார்!


(இன்னும் வரும் )

ராவ் - நாற்பது ஆண்டுகளாக தமிழில் தீவிரமாக இயங்கும் தலைமை பத்திரிக்கையாளர். தமிழ் பத்திரிக்கையுலகின் சில முக்கிய போக்குகளுக்கு காரணமாக இருந்தவர்.
தமிழகத்தின் முக்கிய ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ராவ் தன்னை அதிகம் பாதித்த காஞ்சி மாமுனிவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பற்றிய அரிய தகவல்களை எழுதவிருக்கிறார்.

புதன் தோறும் இரவு ராவ் அவர்களின் 'தெற்கே உதித்த சூரியன்' அந்திமழையில் வெளிவரும்....

'தெற்கே உதித்த சூரியன்' பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

தெற்கே உதித்த சூரியன் - ராவ் - 1


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...