???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி 0 பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்து்றை போலீசார் சோதனை: சார் பதிவாளர்கள் கைது 0 தினகரனைத் தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்: ராஜேந்திர பாலாஜி 0 தமிழகத்தில் அடுத்த இருநாட்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 25 காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் 0 இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நல்லுறவுடன் செயல்பட வேண்டும்: சீனா அறிவுரை! 0 இடைத்தேர்தல்: இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது! 0 அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்ததுள்ளது: ஸ்டாலின் 0 டெண்டர் முறைகேடு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளிக்க இறுதி கெடு 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தெற்கே உதித்த சூரியன் 1 - ராவ்

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   15 , 2007  15:55:10 IST

பல யுகங்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது காலம். என் 50 ஆண்டுகள் என்பது மின்னல் வேகத்தில் காலம் கடந்தது ஒன்றும் ஆச்சரியமானதல்ல.

ஆயிரம் வாசல் இதயத்தில் யார் வந்து யார் போனாலும் 56 ஆண்டுகளுக்கு முன் , நான் வளர்ந்த அந்த கிராமத்து நிகழ்வுகள் புத்தம் புதியது போல அப்படியே படிந்து , என் முன் அடிக்கடி
நிழலாடி செல்லத்தான் செல்கிறது.

அன்ன வயல் சூழ்ந்த அழகான கிராமம் குத்தாலம் . என் தெருவில் இருந்து தொட்டுவிடும் தூரத்தில் காவிரி ஓடிக்கொண்டிருக்கும். வடக்கே திரும்பி ஓடுவதால் எங்கள் ஊர் காவிரியில் குளிப்பது விஷேசம்.

பெரிய சிவன் கோவில் தருமபுரி ஆதினத்தின் கவனிப்பில் சுத்தமாக . தலவிருட்சம் - ஒரு வித்தியாசமான ஆலமரம். அது இந்திரலோகத்தில் இருந்து வந்ததாம். அதன் நிழலில் சிவபெருமானும் பார்வதியும் , மணமாகி வந்து இளைப்பாற - யாரோ வர - மறைந்தார்களாம். அந்த ஆலமரம் போல் உலகில் எங்கும் இல்லை என்கிறார்கள்.

அந்த கிராமம் சில சமயம் பரபரப்பு அடையும். அது அதன் அழகை மிகைப்படுத்தும்.

காஞ்சி மாமுனிவர் என்று போற்றப்படும் தவயோகி சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் , திடீரென்று குத்தாலம் வருவார். சர்வமான்ய அக்கிரகாரத்தில் தங்குவார்.

ஊரே கோலாகலமாக மாறிவிடும் . எந்த நேரத்திலும் சுவாமிகள் பிட்சைக்காக தெருக்களில் வலம் வரலாம் என்பதால் வீடுகள் முன்பு கோலம் போடப்பட்டு தெருக்கள் சுத்தமாக இருக்கும்.

எனக்கு மிகச்சிறிய வயது. என்ன காரணத்தினாலோ சாமியார்கள் என்றால் பயம். காவி உடை , தாடி - இப்படி யார் வந்தாலும் ஓட்டம் பிடிப்பேன். சுவாமிகள் தெருமுனையில் வேதகோஷங்கள் முழங்க வருவார். நான் எட்டிப்பார்த்து விட்டு , தோட்டத்துக்குப் பக்கம் ஓடி விடுவேன்.

எங்கள் ஊரில் இதற்கு முன் ஒரு துறவி இருந்தார். அவரைப் பார்த்ததும் நான் ஓடுவது வழக்கம். ஒரு நாள் அந்த துறவி , என்னை 'பிடி...பிடி' என்று கத்தியவாறு விடாமல் துரத்தினார்.என் ஓட்டம் பயன் தரவில்லை. என் வீட்டு வாசலில் என்னைப் பிடித்தார் அவர். அப்படியே என்னைத் தூக்கி திண்ணையில் நிற்க வைத்து , தூண் ஒன்றின் பின்னால் என் கைகளைக் கட்டி , தன் ஒரு கையால் பிடித்துக் கொண்டார்.

எனக்கு குரல் எழும்பவில்லை. " ஏண்டா ஓடறே ! நான் யாருன்னு உனக்கு தெரியல்லே ... முட்டாள் .. இப்போ நான் சொல்ற ஸ்லோகத்தை சொல்லு.. நாளைக்கு வருவேன் ...அந்த ஸ்லோகத்தை ஒப்பிக்கணும் .' என்று கூறியது ஞாபகத்தில் இருக்கிறது இன்றும் ! தன் தலையால் என் தலையில் முட்டினார்.

'புத்திர் பலம் யஸோ தைர்யம்...' என்று தொடங்கும் ஆஞ்சநேயர் ஸ்லோகத்தை அவர் சொல்ல நானும் சொன்னேன். ஐந்து ஆஞ்சநேயர் சுலோகங்களை அவர் சொல்லச் சொல்ல நானும் கூறினேன்.

திரும்ப திரும்ப சொல்லிக் கொடுத்தார். பிறகு கீழே இறக்கி ' ஓடு ' என்றார்.

நான் ஓடவில்லை. அவரைப்பார்த்தவாறே பின் வாங்கினேன் .

அதற்கு பிறகு , அந்த துறவியை நான் சந்தித்த நினைவுகள் இல்லை. அந்த சுலோகங்கள் உடனே மனப்பாடம் ஆனது உண்மை.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகும் ' சாமியார் பயம் ' போகவில்லை .

சங்கராச்சாரியாரை பார்த்து ஓடிக்கொண்டிருந்ததற்கும் முற்றுப்புள்ளி விழுந்தது.

சங்கராச்சாரியார் தங்கியிருந்த இல்லத்தின் முன்பு ஒரு நாள் மாலை , யானை தும்பிக்கையை தூக்கியும் , மண்டியிட்டும் வித்தை காட்டிக் கொண்டிருந்தது. நான் அப்படி நினைத்தேன். ஆனால் அது ' கஜ பூஜை'.

திடிரென்று கூட்டம் நெருக்கியது . ஓட நினைத்த என்னை பெண்கள் கூட்டம் தள்ளிவிட , நான் சுவாமிகள் முன் நிற்கும் படி ஆகிவிட்டேன்.

சுவாமிகள் ஒரு சீப்பு மலைப்பழத்தை தூக்கி போட , நான் பிடித்தேன் . யானையிடம் கொடு என்பதாக சைகை காட்டினார். யானையிடம் நீட்டினேன் . தும்பிக்கையால் பழத்தை எடுத்து வாயில் போட்டுக்கொண்ட யானை , தும்பிக்கையால் என் தலையைத் தொட்டது . திரும்பிப்பார்த்தேன் . சுவாமிகள் உள்ளே போய்க் கொண்டிருந்தார்.

துறவிகள் பற்றிய என் பயம் வெளியேறியது.

அதன் பிறகு சுவாமிகள் தங்கியிருந்த இல்லத்தின் முன்பு நிற்பதும் , சுவாமிகளைத் தரிசிப்பதும் , காவிரியில் நீராட அவர் செல்லும் போது கூடவே செல்வதும் , வேத கோஷங்களில் மனதை பறிகொடுத்ததும் - கிட்டத்தட்ட தினமும் நடந்தது.

தமிழ் நாட்டை மட்டுமல்ல - இந்தியா முழுவதையும் தன் கருணை உள்ளத்தோடு கொள்ளை
கொண்ட அந்த மாபெரும் ஞானியை - ஞானதபோனரை வணங்கி எழுந்த முதல் தரிசனம் கிராமத்தில் தான்.

ஒரு நாள் , சுவாமிகள் தங்கியிருந்த இல்லம் மிகப்பரபரப்பு அடைந்தது . பல பெரியவர்கள் கையைப் பிசைந்து கொண்டிருந்தார்கள் . தஞ்சை போன்ற இடங்களில் இருந்து வந்திருந்த பிரமுகர்களும் தவித்த முகத்துடன் இருந்தார்கள். " என்ன தவறு செய்தோமோ தெரியவில்லையே " என்ற கவலை இருந்தது.

"பெரியவா ரெண்டு நாளா சாப்பிடவில்லையாம் ... பூஜை முடிந்து - அறையில் போய் பூட்டிக் கொள்கிறார்..." இப்படி பேசிக்கொண்டார்கள்.

அன்று மாலை கோ பூஜை - கஜ பூஜைக்குப் பிறகு விடை கிடைத்தது.

சுவாமிகளுக்கு சமையல் செய்ய தேர்ந்த சமையல்காரர் நியமிக்கப்பட்டிருந்தார்.

சமையல்காரர் கீரை மசியலை சுவாமிகளுக்கு பரிமாறி இருக்கிறார். சுவாமிகள் சுவைத்து
சாப்பிட்டார் போலும்!சுவாமிக்கு பிடித்திருக்கிறதென்று அடுத்தடுத்த நாட்களும் கீரை மசியலை செய்து பரிமாறி இருக்கிறார்.

"நான் ஒரு துறவி . சுவையை கட்டுப்படுத்த வேண்டியவன் . நாக்கை அடக்கத் தெரியாது இருந்துவிட்டேனே . சமையல்காரர் எனக்கு பிடித்திருக்கிறது என்று கண்டு பிடிக்கும் அளவுக்கு ரசித்து சாப்பிட்டிருக்கிறேனே .. ஆகவே எனக்கு நானே தண்டனை விதித்துக் கொண்டேன் " என்று சுவாமிகள் சொல்ல கூடியிருந்தவர்கள் கண்ணீர் விட்டனர்.

என் சிறுவயதில் அதை அறிந்த போது , என் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. மறு நாள் சுவாமிகள் நீராடச் சென்றபோது சாஷ்டாங்கமாக அவர் காலில்
விழுந்தேன்.

(இன்னும் வரும் )

ராவ் - நாற்பது ஆண்டுகளாக தமிழில் தீவிரமாக இயங்கும் தலைமை பத்திரிக்கையாளர். தமிழ் பத்திரிக்கையுலகின் சில முக்கிய போக்குகளுக்கு காரணமாக இருந்தவர்.
தமிழகத்தின் முக்கிய ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ராவ் தன்னை அதிகம் பாதித்த காஞ்சி மாமுனிவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் பற்றிய அரிய தகவல்களை எழுதவிருக்கிறார்.

புதன் தோறும் இரவு ராவ் அவர்களின் 'தெற்கே உதித்த சூரியன்' அந்திமழையில் வெளிவரும்....

'தெற்கே உதித்த சூரியன்' பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...