அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

எந்த படைப்புமே ஒரு மாற்றத்திற்கு உலகை எடுத்துப் போக வேண்டும் -சந்திரலேகா

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   01 , 2007  00:37:40 IST

(31/12/06 அன்று காலமான சந்திரலேகா அவர்கள் தனது சிந்தனையை , பணியை முன்னெடுத்துச் செல்ல பல சக்திகளைத் தயார்படுத்தி விட்டுச் சென்றுள்ளார்)
பெசன்ட் நகரின் ஒரு மிருதுவான அமைதிக்குள் மூழ்கி கிடக்கிறது அந்தவீடு. நுழைவதற்கு முன் எளியகேட். அங்கு மின்சார அழைப்பு மணிக்குப் பதிலாக கோயிலில் அடிக்கப்படும் பித்தளை மணியொன்று தொங்குகிறது. அதன் நாவை அசைத்து ஒலி எழுப்புகிறோம். ஒருவர் வந்து நம்மை உள்ளை அழைத்துச் செல்கிறார். கோரை பாய் விரிக்கப்பட்ட ஹாலில் அமர்ந்து காத்திருக்கிறோம், எதிரே மிகவும் தாழ்ந்த ஊஞ்சல் . அந்த அறையின் ஏ.சி. செய்யப்படாத குளுமை ஆச்சரியப்படுத்துகிறது.

சில நிமிடங்களில் உள்ளிருந்து வருகிறார் ஒருவர்...அவர், சந்திரலேகா..! இந்திய நடன உலகில் பரதநாட்டியத்தை நவீன காலத்திற்கு எடுத்துச்சென்ற மாபெரும் கலைஞர்! வயதாயிருந்தாலும் அந்த பெண்மணியிடம் நடனம் இளமையோடும் , ஆற்றலோடும் ததும்பிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.

"என்னால தரையில் அமர முடியாது...கால் வலிக்கும்" என்றவாறு ஊஞ்சலில் அமர்ந்துக்கொள்கிறார்.

அவரே பேசத் தொடங்குகிறார். தெளிவான ஆங்கிலத்தில் வார்த்தைகள் மென்மையான அருவியாய் சொரிகின்றன.

நடன இயக்கங்களின் அடிப்படையை உணர்ந்துக் கொள்ள விலங்குகளின் இயக்கங்கள் உதவுகின்றன. ஒரு தவளை நகருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அது தன் நான்கு கால்களையும் அதற்குப் பயன்படுத்துகிறது. சிங்கமும் அப்படிதான் . சில சமயங்களில் அதனால் தான் நடன அசைவுகளில் தவளைகளில் பாய்ச்சலை குறிப்பவை, சிங்கத்தின் பாய்ச்சலை குறிப்பவையாக தப்பர்த்தத்தில் கொள்ளப்படுகின்றன. விலங்குகள் தாக்குதலுக்காக மேற்கொள்ளும் அசைவுகளும் இயக்கங்களின் அடிப்படையை உணர உதவுகின்றன. பாம்பு நேர்க்கோட்டில் பாய்ந்து சென்று கொத்துகிறது. ஒரு புலியோ இரை மீது பாய்வதற்கு முன் சற்று பின் நகர்ந்து முன்னோக்கி பாய்கிறது.(சிலகணங்களுக்கு அவர் புலியாகவே மாறுகிறார்). முயல் சற்றுமென்மையாக குதித்தோடுகிறது.

யோகா மற்றும் களரியில் இருக்கும் அஷ்டவடிவங்கள் விலங்குகளின் இயக்கங்களிலிருந்து உருவானவைதான். ஒரு நாய் எழும் போது சற்று கீழே தணிந்து தான் மேலெழுகிறது.அதோமுக்காசானா என்ற ஆசன வகை இதுதான்... அதாவது 'நாய்கள் எழும் போதெல்லாம் யோகா செய்கின்றன' என்று சொல்லலாம் ! (சிரிக்கிறார்) களரியில் தப்பி ஓடும் போது முன் காலை வைத்த இடத்தில் பின்காலை வைத்து ஓடும் படி சொல்வார்கள். இதன் மூலம் வேகமாக நகர முடியும்!

நடனம் , களரி , யோகா இம்மூன்றிற்கும் அடிப்படையான கொள்கை எது?

பல ஆண்டுகளுக்கு முன்பு இவை மூன்றும் ஒரே இடத்தில் பயிலப்பட்டன. தற்போது இவையனைத்தும் தனித்தனி வடிவாக கற்கப்படுகின்றன. அது தவறு என்றுதான் படுகிறது. ஏனெனில் இம்மூன்று வடிவங்களின் அடிப்படை ஒற்றுமை தற்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை .

எது இம்மூன்றையும் ஒருங்கிணைக்கிறது?

உடல்... இந்த மூன்று வடிவங்களின் இயக்கங்கள் விரிவானவை . அறிவியல் பூர்வமானவை , அடிக்கடி இவற்றில் ஒரே வார்த்தைகளும் வெளிப்பாடுகளும் பொதுவாக பயன்படுத்துவதை காணலாம். மதத்தை நடனத்தின் அடிநாதமாக நான் கருதுவதில்லை. நடனத்தின் லௌகீக சமூக அடிப்படையில் இயங்கவே நான் விரும்புகிறேன். வாழ்க்கையை சமாளிக்கவும் , அதன் அபாயங்களை எதிர்கொள்ளவும் மனிதர்கள் விரும்பும்போது தற்காப்புக்கலைகள் அவர்களுக்கு உதவியாய் இருக்கின்றன.வாழ்க்கையை சாதிக்கத் தேவையான வலிமையை இது வழங்குகிறது. இது போன்ற ஆழமான புரிதல் நடனத்திற்கான ஆழமான அடிப்படையை அமைத்துக்கொடுக்கிறது.

நடனத்தின் மரபு ரீதியான வடிவங்களை நன்கு பயின்றபின் நீங்கள் அதிலிருந்து விலகி உங்களுக்கான புது வடிவை சிருஷ்டித்துக்கொண்டீர்கள். அதனால் மரபுக்கு ஏதேனும் ஊறு விளைவித்து விட்டதாய் எப்போதாவது நீங்கள் கருதியதுண்டா ? பல நூற்றண்டுகள் சுமையை தாங்கி நிற்கும் எந்த வடிவத்தையும் நீங்கள் அணுகும் போது அதை நீங்கள் துடைத்து சுத்தப்படுத்த வேண்டியிருக்கிறது. பிறகு தான் அதன் பின்னே ஒளிந்திருக்கும் ஒற்றுமையை உணர முடியும். மரபு ரீதியான நடனம் , வெறும் அழகையும் பொழுது போக்கையும் முன் வைக்கிறது. அது வெறுமனே புத்தகங்களைச் சார்ந்து , அதன் அடிப்படையை புறக்கணிக்கிறது . அதனால்தான் நான் அதை புறக்கணித்து விட்டேன்.

மரபு ரீதியான நடனத்தில் கற்றுக்கொடுக்கப்படும் அசைவுகள் கேள்விக்குறியாய் இருக்கின்றன. அதில் அசைவுகள் சொல்லித்தரப்படுவதில்லை.உதாரணத்திற்கு உடலின் கீழ் பாதியை அசைக்கும் போது மேல் பாதியின் எதிரசைவு மரபு ரீதியான நடனத்தில் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் யோகாவில் இது இருக்கிறது.

கலைஞர்கள் வாழ்க்கையிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ள முடியாது. அவர்கள் வாழ்க்கைக்குச் செவி சாய்க்கத்தான் வேண்டியிருக்கிறது. உண்மையில் கலை பாதுகாப்பளிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்க்கையின் இன்பத்தை நுகர அது உதவிச் செய்கிறது. கலையின் நோக்கமே மகிழ்ச்சிதானே! வெளிப்படையான மகிழ்ச்சியை நான் சொல்லவில்லை. இது உள்ளார்ந்த இன்ப உணர்வு. கலை உங்களை மனிதர்களாக்குகிறது. அதே போல் மற்றவர்களையும் மனிதர்களாக்குகிறது.

படைப்பாளிகளுக்கு சமூக அக்கறை உண்டா?

உலகமெங்கும் பல்வேறு பார்வைகளை மாற்றியிருப்பது படைப்பாளிகள் தானே!

எம்மாதிரியான பொறுப்புணர்ச்சி படைப்பாளிகளுக்கு வேண்டும்?

எந்த படைப்புமே ஒரு மாற்றத்திற்கு உலகை எடுத்துப் போக வேண்டும். முன்பிருந்த நிலையிலே இருக்கச் செய்யக்கூடாது. உலகை, வாழ்க்கை குறித்த அதன் கருதுகோள்களை மாற்றவேண்டும். வாழ்க்கைக்கு எதிரான எதையும் நொறுக்க வேண்டும் . கலை அதைத்தான் செய்ய வேண்டும்.

நவீன நடனங்கள் வெளிப்படையானவை இல்லை. அவை தனிமனித தளங்களில் இயங்குகின்றன. அவை எப்படி சமூக மாற்றத்தைக் கொண்டு வரமுடியும்?

தனிமனித தளமெனில் அதை நான் வரவேற்கிறேன்.ஆனால் அது ,தான் என்று மட்டும் இருந்துவிடக் கூடாது.

மரபு நடனம் பழைய துருப்பிடித்த காலங்களில் இருக்கிறது.அது நம்மையும் அந்த காலக்கட்டத்தில் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளச் செய்கிறது.
நான் நடனக் கலையை நிகழ்காலத்தோடும், உடலோடும் இணைக்கிறேன்.தனி மனிதனுக்கான இடத்தை நவீன நடனம் தேடுகிறது.இறுகிய வடிவத்தை உடைத்து , புது யோசனைகள், புரிதல்கள் என்று விரிகிறது.வழிவழியாக மரபு நடனம் பெண்ணை கீழ்படிந்தவளாக, கடவுளுக்கு தன்னை அர்ப்பணிப்பவளாகக் காட்டுகிறது.நான் பெண்ணை அவளது உண்மையான வடிவில் , சக்தி மிக்கவளாக ஆற்றல் மிகுந்தவளாகக் காட்டுகிறேன்.
நவீன நடனம் தனி மனித தளத்தில் இருந்தாலும் கூட அது பல்வேறு கருத்தாக்கங்களை உருவாக்க முடியும். ஏனெனில் அது மிக வெளிப்படையானதாக உள்ளது.

பார்வையாளானுக்கு நடனத்தைப் பற்றிய அடிப்படை அறிவு அதை ரசிப்பதற்குத் தேவைப்படுகிறதா?

இது டாக்டரிடம் போவதற்குமுன் ஒரு நோயாளிக்கு மருத்துவ அறிவு தேவையா என்று கேட்பது போலத்தான்!

கற்பனைதிறனால் கலைஞர்கள் கொஞ்சம் பார்வையாளர்களை விட முன்னால் இருக்கின்றார்கள். வழக்கத்திலிருந்து தங்களை மாற்றிக் கொள்ளும் ரிஸ்க்கை அவர்கள் எதிர் கொள்கிறார்கள்.

பார்வையாளனும் கலைஞனை பின் தொடர வேண்டியிருக்கிறது. தூண்டு கோலாய் இருந்து, கேள்வி கேட்டு பங்கேற்க வேண்டியிருக்கிறது.

நடனத்தின் எதையாவது வலியுறுத்தும் தன்மையும் , பார்வையாளர்களின் நுகர்வோர் தன்மையும் மாற வேண்டும்.

எங்களுடைய பார்வையாளர்கள் பழங்காலத்து குடுமி வைத்த மனிதர்கள் அலல்... கட்டிடக் கலைஞர்கள் , கவிஞர்கள், எழுத்தாளர்கள் , ஓவியர்கள்,அறிவுள்ளவர்கள் என்று எங்களுக்கென்று தனியாக பார்வையாளர்களை உருவாக்க முயன்றிருக்கிறோம். அவர்களால் நடனக் கலைஞன் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியாமல், எந்த பதிலினையும் காட்டாமல் இருக்க முடியாது.

நடனம் நிகழும் போதே பார்வையாளனுக்கு அதை நன்கு ரசிக்க கற்றுக் கொடுக்கும் விதத்தில் அமைவதாக இருக்க வேண்டும்.

நடனத்தால் பார்வையாளன் அடையும் அனுபவம் பற்றி?

உங்களுக்கு நடனம் பற்றிய அறிவு இல்லாவிட்டாலும் கூட அது ஒரு விதமான அனுபவத்தைக் கொடுக்கும்..

நான் சக்தியின் கருதுகோள்கள் பற்றி , அதன் பரிமாற்றம் பற்றி ஆராய விரும்புகிறேன். ஏன் வாழ்வில் விரக்தி ஏற்படுகிறது ? ஏன் மனிதர்கள் கொடுமைக்குள்ளாக்கப்படுகிறார்கள் ? வாழ்வைக்குறித்த நம்பிக்கைகளை ஏன் இழக்கிறார்கள்..? இவற்றை மாற்ற முடியுமா? முடியும்.

எனக்கு இப்போது நிறைய வயதாகிவிட்டது. என்னைச் சுற்றி நிறைய சக்திகள் இயங்குகின்றன. இவற்றைத் தாண்டி நான் உழைக்க வேண்டியிருக்கிறது.

இத்துடன் கேள்விகள் போதும்... நாம் பேட்டியை நிறுத்திக் கொள்வோமா?

அவரது பேச்சு பல இடங்களில் தொடர்பற்றது போல தோற்றமளித்தாலும் ..அவர் பேச்சினூடே காட்டியிருக்கும் இடைவெளிகள் , நாம் நிரப்பிக் கொள்ளத்தான் என்ற எண்ணத்துடன் வெளியே வந்தோம்.



[2002 ஆம் ஆண்டு சந்திரலேகாவிடம் எஸ்.பி.மது & என்.சிவராமன் எடுத்த பேட்டி இது]

.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...