நிலை
பற்றியிழுத்துத் துய்த்த இதழ்களில்
சற்றுமுன் நீ சுவைத்த இனிப்புப்பண்டத்தின் மதுரம்
பரவசமாய் உன் முடிச்சுருளில்
இடறி நகர்ந்த விரல்களில்
படர்ந்த உன் சௌந்தர்யக்கூச்சம்
திளைக்கத்திளைக்கக் கவ்விய
உன் கனிந்த மார்புகளின்
உள்ளொடுங்கிய காம்புகள்
விறைத்து நிமிர்ந்த திவ்விய நொடி
உன் நாபிச்சுழலில் வட்டமிட்டிறங்கி
உன்னில் கரைந்த மாயச்சுழற்சி
சுழற்சியை உள்வாங்கும் உன் கருணை
விரியத் திறந்து வரவேற்கும்
மென்மயிர்க் கருஞ்சுடரில்
முத்தங்கள் உதிர்க்கையில் கேட்கும்
உயிரின் அசைவுகள்
பரஸ்பரம் பகிர்ந்து
ஒருவரில் ஒருவர் நிறைந்து கிடந்தோம்
சலனமற்ற நீர்நிலையாயிற்று படுக்கை
ஒரே கணத்தில் தனித்தனித் துளியாகத் திரண்டு
ஒரே கணத்தில் ஒரே திவலையாகக் கலந்து
ஒரே கணத்தில் சொட்டி விழுந்தோம்
அலைபுரள நிறைந்து ததும்புகிறது நீர்நிலை
***** ***** *****
துலாபாரம்
நீ அமர்ந்த கனத்தால்
தாழ்ந்திருக்கும் தட்டுக்கு மறுதட்டில்
எதையெதையோ வைத்துப்பார்த்தேன்.
எனினும்
உயர்ந்தேயிருந்தது நானமர்ந்த மறுதட்டு.
என்னைச் சமநிலைப்படுத்த
நான் வைத்தவை:
எனது துளசிமணப் பிரியம்
உப்புக் கரிக்கும் என் துக்கம்
பருத்தி வாடையுள்ள என் அம்மணம்
பவழமல்லிக் காதல்
சண்பகக் காமம்
உறவுகளை வெட்டியெறிந்த நிணம்
நண்பர்களைக் கீறிய தாழம்பூ முட்கள்
வெற்றியின் செவ்வந்தி
சரணாகதியில் பூத்த எருக்கு
இடறி விழுந்த காயத்தின் மண்
வெற்றுப்புணர்ச்சியில் கசிந்து
நெடியழியாது உறைந்த விந்து
மரணம் தீண்டி விலகிய
கடிவாயிலிருந்து பீறிட்ட உதிரத்தின் தேக்கம்.
எனினும்
உயர்ந்தேயிருந்தது நானமர்ந்த தட்டு.
என்னை விலைபேசிக் கிடைத்த
முப்பது வெள்ளிக்காசுகளை
ஒவ்வொன்றாய் வைக்கிறேன்
நெடுங்காலமாய்த் தாழாத என் தட்டு
காசுக்கு ஒரு வினாடியாகச்
சிணுங்கி நெளிந்து இறங்குகிறது
இப்போது
நானும் நீயும் ஒரே கனம்
நானும் நீயும் சமம்.
***** ***** *****
வாசிப்பு
காத்திருக்க வேறிடமின்றி
நூலகத்தை நீங்கள் தேர்ந்தது
இயல்பானது -
காலத்தைக் கடந்து
வெளியை மீறி
மொழியைத் துறந்து கேட்கும்
குரலுக்காகவோ
அல்லது
காகிதமணத்தின் போதைக்காகவோ
அல்லது
அலுத்துச் சுழலும் மின்விசிறியின்
சங்கீத மீட்டலுக்காகவோ
அல்லது
நூலகத்தில் கவிந்திருக்கும்
நிர்ப்பந்த அமைதிக்காகவோ
நீங்கள் நூலகத்தைத் தேர்ந்திருக்கலாம்.
காலியிருக்கைகள் பல கிடக்க
முந்திய விநாடியில்
ஆளெழுந்துபோன
நாற்காலையைத் தேர்ந்ததும்
இயல்பானது -
காற்றோட்டமான இடமென்பதாலோ
அல்லது
முன்னவர் மிச்சமாக்கிய
மனிதச் சூட்டை உணர்வதற்காகவோ
அல்லது
பின்னல் அவிழ்ந்த ஆசனத்தை
யோசனையுடன் முடைவதற்காகவோ
அல்லது
கற்பனைக்கு உகந்த தோற்றத்தில் உட்கார்ந்து
மனதுக்குள் ரசிப்பதற்காகவோ
நீங்கள் நாற்காலியைத் தேர்ந்திருக்கலாம்.
நூலகத்தில் நீங்கள் அமர்ந்திருக்கும் மேஜைமேல்
முன்பு இருந்தவர்
பாதி வாசித்துக் குப்புறக் கிடத்திய
புத்தகத்தை எடுத்ததும்
அவர் விட்டுப்போன பக்கத்தில்
வாசிப்பைத் தொடங்கியதும்
இயல்பானது.
எனது சந்தேகம்
அவர் எங்கே நிறுத்தினார் என்பதை
நீங்கள் அறிவீர்களா?
இரண்டு பக்கங்களில்
இரண்டு பக்கங்களிலுமுள்ள பத்திகளில்
இரண்டு பக்கப் பத்திகளின் வாக்கியங்களில்
எங்கே அவரது நிறுத்தம்?
அங்கிருந்து நீங்கள் தொடங்குவீர்களா?
அல்லது
நீங்களும் மேஜைமேல்
குப்புறக்கிடத்திப் போனால்
அடுத்தவர் எங்கிருந்து தொடங்குவார்?
ஒரு புத்தகம்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு புத்தகமாவது
எவ்வளவு இயல்பானது.
**** **** **** ****
பரோல்
அவ்வப்போது
பரோலில் வெளிவந்து
உன்னோடு காதல் செய்வதில்
குற்றமுணர்கிறேன் பெண்ணே!
எனவே
என்னை நீ இழந்துபோவதில்
எனக்குப் பெருந்துக்கமில்லை.
நான்
பற்றியிழுத்துத் துய்த்த உன் இதழ்கள்
விரகத்தின் குளிரால் வெடிக்கக்கூடும்
உன் முடிச்சுருளில்
பரவசமாய் இடறி நகர்ந்த என் விரல்கள்
வெப்பமற்று உறையக்கூடும்
நான்
திளைக்கத் திளைக்கக் கவ்விய
உன் கனிந்த மார்புகளின் உள்ளொடுங்கிய காம்புகள்
என் ஈரநாவுக்குள் விறைத்து நிமிரும்
திவ்விய நொடிகள் இனி இல்லாது போகும்
உன்
நாபிச் சுழலில் வட்டமிட்டு இறங்கி
உன்னில் கரையும் மாயச் சுழற்சி ஓய்ந்துபோகும்
விரியத் திறந்து வரவேற்கும்
மென்மயிர்க் கருஞ்சுடரில்
படர்ந்த முத்தங்கள் உதிரக்கூடும்
எனினும்
நாம் பரஸ்பரம் பகிர்ந்து
ஒருவருக்கொருவராய் நிறைந்த
காலத்தின் நினைவுக்காய்
உன் பாதங்களில்
என் இரு துளிக்கண்ணீர்
எப்போதும் நீ
கருணை விளைக்கக் காத்திருக்கும் பக்குவ வயல்
இப்போது நான்
வாக்குறுதியின் பிழையில் சிறைப்பட்ட மலட்டு மேகம்
அடிக்கடி பரோல்
அனுமதிக்கப்படுவதில்லை பெண்ணே!
என்னை நீ இழந்துபோவதில்
எனக்குப் பெருந்துக்கமில்லை,
ஏனெனில்
என்னை நான் கடந்துகொண்டிருக்கிறேன்.
***** ***** *****
கர்த்தரிடம் நோவா செய்துகொண்ட விண்ணப்பம்#
''வானத்தின் கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க
நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்;பூமியிலுள்ள
யாவும் மாண்டுபோம்.''
- ஆதியாகமம்: அதிகாரம் 6 - வசனம் 17
முதலாம் அதிகாரம்
இராப்பகல் ஓயாத நாற்பதுநாள் மழைக்கு
ஏழு நாள் முன்பு
கர்த்தரிடம் நோவா
பின்வருமாறு விண்ணப்பித்துக்கொண்டான்:
கர்த்தரே,
உமது கட்டளைப்படியே
எல்லாம் செய்தாயிற்று
கொப்பேர் மரத்தால் பேழை உண்டாக்கினேன்
நீளம் முந்நூறு முழம்
அகலம் ஐம்பது முழம்
உயரம் முப்பது முழம்
உமது உத்தரவுப்படியே
பேழைக்குள் அறைகளை உண்டுபண்ணினேன்
உள்ளும் புறம்புமாகக் கீல் பூசினேன்
மேல் தட்டுக்கு ஒரு முழம் தாழ்த்தி
ஜன்னலை உண்டுபண்ணினேன்
கதவை அதன் பக்கத்தில் வைத்தேன்
கீழ் அறைகளையும்
இரண்டாம் மூன்றாம் தட்டுகளின் அறைகளையும் பண்ணினேன்
உம்மோடு செய்த
உடன்படிக்கைப்படியே
மாம்சமான ஜீவன்களில்
வகை ஒன்றுக்கு ஆண்பெண் ஒவ்வொரு ஜோடாய்ப்
பேழைக்குள் சேர்த்தேன்.
ஆகாயத்துப் பறவைகள்
ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடு
சுத்தமான மிருகங்கள்
ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடு
சுத்தமல்லாத மிருகங்கள்
ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடு
ஊரும் பிராணிகள்
ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடு
நீந்தும் மச்சங்கள்
ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடு
உமது ஆணைப்படியே
நானும் என் மனைவியும்
என் குமாரரும் குமாரரின் மனைவிகளும்
பேழைக்குள் பிரவேசிக்கச் சித்தமாக இருக்கிறோம்
வகை ஒன்றுக்கு ஒரு ஜோடென்பதில்
உமது வகைக்கு இணையைச் சொல்ல
மறந்தீர் என்பதால்
நீர் கட்டளையிடாத ஒன்றையும்
பேழைக்குள் சேர்த்திருக்கிறேன் கர்த்தரே,
மாம்சமான ஜீவனாக
உமக்கும் ஒரு ஸ்திரீ ரூபம்
நீர் புருஷனாக மட்டுமே
இனிமேலும் இராதீர்.
இரண்டாம் அதிகாரம்
ஜலம் பெருவெள்ளமாகி
பூமியின்மேல் மிகவும் பெருகிற்று
ஜலத்தின்மேல் இன்னும் மிதந்துகொண்டிருக்கிறது
பேழை.
***** ***** *****
சான்றுகள் #
ஒரு காக்கை
தன் எச்சத்தைக்
கொத்தி விழுங்குவதில்லை
இன்னொரு காக்கையும்
மற்றொரு காக்கைக்கு எச்சத்தைக்
கொத்தி ஊட்டியதில்லை.
காக்கைமட்டுமல்ல
குருவி,கழுகு
எந்தப் பறவையும்
ஒரு பன்றி
தன் விட்டையை
நக்கிப் புசிப்பதில்லை
இன்னொரு பன்றி
மற்றொரு பன்றியை விட்டையைப்
புசிக்கச் செய்ததில்லை.
பன்றிமட்டுமல்ல,
கழுதை,நாய்
எந்த விலங்கும்
நானும்
என் மலத்தைத் தின்பதில்லை
உன்னைத்தான் தின்னவைக்கிறேன்
நான்,நீ,நாம்
ஒவ்வொருவரும்.
பறவைகள் விலங்குகளை விடவும்
மேலானவர்கள் நாமென்பதற்கான
அதிகப்படியான சான்றுகள்
அன்றாடம் உருவாகிக்கொண்டிருக்கின்றன.
***** ***** *****
( # 'நோவா' & 'சான்றுகள்' கவிதை¸û ²ü¸É§Å À¢ÃÍÃÁ¡É¨Å )
"கவிதையெழுத்தில் ஏறத்தாழ இருபத்தைந்து வருடங்களைக் கடந்த பின்னும் இந்த வடிவத்தின் மீதுள்ள ஈர்ப்பு தேய்ந்துவிடாமல் நீடிப்பது ஆச்சரியம் தருகிறது. கூடவே, அனுபவம் கவிதையாவதன் பின்னணிச் சவால்கள் தீவிரமுற்று நெருக்கடிக்குள் திணÈச் செய்வதும் தொடர்கிறது. 'இது கவிதை' என்று தீர்மானிக்கவியலாத உள்-அலைச்சல்களும் 'இது கவிதைக்குரிய அனுபவம்' என்று கணிக்க முடியதாத பதற்றமும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இந்த அலைச்சலும் பதற்றமும்தான் வேறுவேறு எல்லைகளில் கவிதையைப் பயின்று பார்க்கும் சுதந்திரத்தையும் தருகிறது"
என்று தனது கவிதை அனுபவம் பற்றி கூறும் சுகுமாரன் கோவையில் பிறந்தவர் (11/6/1957).
விற்பனை பிரதிநிதி,மொழி பெயர்ப்பாளர், பத்திரிக்கையாளர் , தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் என்று பல்வேறு பணிகளில் செயல்பட்ட சுகுமாரனின் மனதில் எப்போது கவிதை நீரோடை ஓடிக்கொண்டிருக்கிறது.
சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி பட்டம் பெற்ற சுகுமாரனுக்கு
கÅ¢¨¾ தவிர சினிமா மீதும் தீராத காதல் உண்டு. அடூர் கோபாலகிருஷ்ணனின் சினிமா பற்றிய புத்த¸மொன்றை (சினிமா «ÛÀÅõ) தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
சுகுமாரனÐ புத்தகங்கள்
கவிதைத் தொகுப்புகள்
கோடைக்காலக் குறிப்புகள்(1985)
பயணியின் சங்கீதங்கள் (1991)
சிலைகளின் காலம்(2000)
வாழ்நிலம் (2002)
மொழிபெயர்ப்புகள்
மார்க்சிய அழகியல் - ஒரு முன்னுரை (விமர்சனம் 1985)
வெட்டவெளி வார்த்தைகள் (கன்னட வசன கவிதைகள் 2000)
இது தான் என் பெயர் (சக்கரியாவின் மலையாள நாவல் 2001)
கவிதைகள் தி¨ºகள் (உலகக் கவிதைகள் 2001)
பாப்லோ நெருதா கவிதைகள் (100 கவிதைகளின் மொழிபெயர்ப்பு)
திசைகளும் தடங்களும் (கட்டுரைத் தொகுதி)
சினிமா «ÛÀÅõ (2006)
கவிஞர் சுகுமாரன் பற்றி இணையத்தில் மேலும் படிக்க...
விஸ்லவா சிம்ப்போர்ஸ்கா - -
சுகுமாரனின் "கவிதையின் திசைகள்" நூலிலிருந்து.
சுகுமாரன் கவிதை பற்றி பாபு
நெரூதா அனுபவம் - சுகுமாரன்
சுகுமாரன் ÀüÈ¢ À¢.§¸.º¢ÅÌÁ¡÷
காதல் கவிதைகள்-3 சுகுமாரன்
தொடர்ந்து பல கவிஞர்களின் கÅ¢¨¾கள் வலம் வர இருக்கின்றன.
கவிதைத் திருவிழா பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com
என்ற முகவரிக்கு அனுப்பவும்.
பிற கவிதைத் திருவிழா கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க...
கீதாஞ்சலி பிரியதர்ஷனி
தேன்மொழி.எஸ்
தேவதேவன்
ம.திலகபாமா
கோ.வசந்தகுமாரன்
மதியழகன் சுப்பையா
முத்துமகரந்தன்
ரவிசுப்ரமணியன்
அழகுநிலா
அரிக்கண்ணன்
அய்யப்ப மாதவன்
அன்பாதவன்
ஜே.கே.73