அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தேவதேவன் - கவிதைத் திருவிழா 11

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   13 , 2006  09:19:03 IST

ஆற்றோரப் பாறைகளின்மேல்

ஆற்றோரப் பாறைகளின்மேல்
அமர்ந்திருக்கும்
இக் கல் மண்டபங்கள்தாம்
எத்தனை அழகு!
எத்தனை எளிமை!
எத்தனை உறுதி!
எத்தனை தூய்மை!

பூஜை வேண்டாமல்
விக்ரகங்கள் வேண்டாமல்
குழந்தைகள் துளைத்து
கும்மாளாமிட்டுக் கொண்டிருக்கும்
இந்த ஆற்றினைப் பார்த்துக்கொண்டேயிருப்பதற்கோ
அமர்ந்துவிட்டன இக் கல் மண்டபங்கள்
இங்கே நிரந்தரமாய்?

சுற்றுச் சுவர்களில்லாத
அதன் உள்வெளிகளில்
'உள்ளொன்றும் புறமொன்றுமி'னால்
உருவாகும் துயரேதுமின்றிச்
சுழன்று கொண்டிருக்கும் சக்கரத்தினைக்
கண்டு நின்றனரோ புத்தர்?

***** ***** *****

காவல் நிலையம்

விலங்கோடு விலங்காய்க்
குடிகொண்டிருக்கும் வன்முறை
எங்கிருந்து வந்ததென்று
யாருக்காவது தெரியுமா?
தெரியும்.

கையிலகப்பட்ட கைதிமீது
காவலன் ஒருவனிடன்
கண்மண் தெரியாமல் வெளிப்படும்
வன்முறை
எங்கிருந்து வந்ததென்று
யாருக்காவது தெரியுமா?
தெரியும்:
பல்லாண்டுகளாய்
இப் புவியெங்கும்
அன்பு வழுவி
அறம்பிழைத்த காவல்தெய்வத்தின்
மனச் சிதைவிலிருந்து கிளம்பியது.
பார்வையற்ற விழிக்குழிகளிலிருந்து
பீரிட்டுக் கொட்டும் எரிமலைக் குழம்பு.

***** ***** *****

கண்டதும் விண்டதும்

மலையுச்சியேறியவன்
தான் கண்டு கொண்டதை
ஒரு கோயிலென வடித்துவிட்டுக்
கீழிறங்கினான்.

கோயில் சென்றவன்
உதட்டு பிதுக்கலுடன்
கைவிரித்தபடி
கீழிறங்கினான்.

கீழே
ஒரு புல்
அய்யோ,அது
காற்றிலா அப்படித் துடிதுடிக்கிறது?
ஒளியிலா அப்படி மினுமினுக்கிறது?

அங்கே
தலைப்பாகையும்
அரையாடையுமாய்ச்
சுள்ளி விறகு சேகரித்துச்
செல்லும் ஒரு மனிதனை
காதலுடன் கவலையுடனும்
கண்டு கொண்டமையோ அது?

விண்டுரைக்க முடியாத
மெய்மையின் சொற்கள் தாமோ
இந்த மவுனப் பிரமாண்டமும்
பேரியற்கையும்
இந்த மனிதனும்?


***** ***** *****

தாய்வீடு

பாதுகாப்பையே தேடுபவர்கள்
பாதுகாப்பை அடைவதேயில்லை.
பொருளையே தேடுபவர்கள்
அன்பை அடைவதேயில்லை.
இன்பத்தையே விழைபவர்கள்
நிறைவை அடைவதேயில்லை.
ராணுவத்திற்கும் கோரிக்கைகளுக்கும்
பெருஞ்செலவுபுரியும் உலகிலன்றோ
நாம் வாழ்கிறோம்.

நல்லாசனமிட்டபடி
கையில் சீப்புடன்
தன் மகள் சகுந்தலாவின்
தலை ஆய்ந்துகொண்டிருக்கிறாள்
அம்மா.
சிக்கலில்லாத கூந்தலில்
வெகு அமைதியுடன் இழைகிறது சீப்பு.

தாங்கொணாத
ஒரு துயர்க் கதைக்குப் பின்தான்
திடமான ஒரு முடிவுடன்
பேராற்றங்கரையின்
தருநிழல்மீதமர்ந்திருக்கும்
தாய்வீடு திரும்பிவிட்டிருக்கிறாள் சகுந்தலா.


***** ***** *****

தீராப் பெருந் துயர்களின்

முளை எட்டிப் பார்க்கும்
விஷ வித்துக்களையா
கண்டு கொண்டாள் ,சாந்தா,

வேகம் பொறி பரக்க
விளையாட்டுத் திடல் அதிர
ஒருவரை ஒருவர்
முந்தி வந்து கொண்டிருக்கும்
தத்தம் பிள்ளைகளை
அணி மனிதர்களை
ஊக்குவித்துக்கொண்டிருக்கும்
உற்சாக ஆரவாரத்திற்கு நடுவே?

- தேவதேவன்


"தேவதேவன் கவிதைகளில் மொழிரூபம் கொள்வது உணர்ச்சி மயமான அனுபவங்களின் படைப்புலகம். இங்கு உணர்ச்சிகளின் உத்வேகமே அறிவுத்தளத்துடன் முரண்படுபவற்றைக்கூட சமனப்படுத்துகிறது , அனுபவங்களின் மூலங்களைக் கொண்டு சிருஷ்டிக்கப்படும் புதிய பொருளின் படைப்பும் உருவாகிறது . கூறப்படும் விஷயத்தில் செவ்வியல் பண்பும் , சொல்லப்படும் விதத்தில் நவீன புனைவின் குணமும் இணைந்துகொள்கின்றன.தேவதேவனின் தனித்துவத்திற்கு சொல்லாமல் சொல்லும் இடைவெளி நிறைந்த தன்மையும் பலபரிணாமங்களில் விரியும் குறியீட்டுத் தன்மையும் காரணமாகும் " என்று காலப்ரதீப் சுப்ரமணியன் தேவதேவன் கவிதைகளைப் பற்றி குறிப்பிடுகிறார்.('பூமியை உதறி எழுந்தமேகங்கள் ' கவிதைத் தொகுப்பின் முன்னுரை)

தூத்துக்குடியில் ஆசிரியராக பணியாற்றும் தேவதேவன் 05/05/1948 அன்று பிறந்தவர். (இயற்பெயர் : பிச்சுமணி கைவல்யம்)

இது வரை வெளிவந்த அவரது தொகுப்புகள்

குளித்துக் கரையேறாத கோபியர்கள் (1976)

மின்னற்பொழுதே தூரம் (1981)

மாற்றப்படாத வீடு (1984)

பூமியை உதறியெழுந்த மேகங்கள் (1990)

நுழைவாயிலேயே நின்றுவிட்ட கோலம் (1991)

சின்னஞ்சிறிய சோகம் (1992)

நட்சத்திர மீன் (1994)

அந்தரத்திலே ஓர் இருக்கை (1995)

நார்சிºஸ் வனம் (1996)

புல்வெளியில் ஒரு கல் (1998)

விண்ணளவு பூமி (2000)

விரும்பியதெல்லாம் (2002)

விடிந்தும் விடியாப் பொழுது (2003)

தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு ( தமிழினி வெளியீடு )

தேவதேவனைப் பற்றி இணையத்தில் மேலும் படிக்க...

தேவதேவன் பற்றி பி.கே.சிவகுமார்

தேவதேவன் பற்றி மரவண்டு கணேஷ்

தேவதேவனின் படைப்பு

தேவதேவனின் கவிதைகள் சில

பாஸ்டன் பாலாவின் வலைப்பூவில் தேவதேவன்


தொடர்ந்து பல கவிஞர்களின் கÅ¢¨¾கள் வலம் வர இருக்கின்றன.

கவிதைத் திருவிழா பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com
என்ற முகவரிக்கு அனுப்பவும்.


பிற கவிதைத் திருவிழா கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க...

கவிஞர் சுகுமாரன்
கீதாஞ்சலி பிரியதர்ஷனி
தேன்மொழி.எஸ்
ம.திலகபாமா
கோ.வசந்தகுமாரன்
மதியழகன் சுப்பையா
முத்துமகரந்தன்
ரவிசுப்ரமணியன்
அழகுநிலா
அரிக்கண்ணன்
அய்யப்ப மாதவன்
அன்பாதவன்
ஜே.கே.73


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...