வேற்று முகம்
அறிந்திராத ஊருக்குள் வரும் யாத்ரீகனைப்போல்
என் ஜனன மண்ணில் நுழைய நேர்ந்துவிட்டது
அடைந்ததும் இங்குதான்
வாழ்வின் சூதாட்டத்தில் அனைத்தையும்
இழந்ததும் இங்குதான்
வணக்கங்களுக்கும் கைகூப்புகளுக்குமிடையில்
கழிந்த காலம்
இன்று
நிராகரிப்பின் முகம் காட்டுகிறது
நிகழை ஊடுருவி ஊடுருவி நீந்துகின்றன
ஞாபக மீன்குஞ்சுகள்
பறவைகளற்று வாடும் மரம் போல் என்வீடு
கிராமத்து நாடகக்காரனின்
ஒப்பனையைப்போல என் கடை
குழந்தைமை காலங்களில் களித்த திண்ணைகள்
வியாபார விளக்குகளில் மறைந்துவிட்டது
பால்யம் புரண்ட தெருவிலிருந்து
சம்பங்கி வாசத்துடன் கன்னிமை ததும்பும் முலைகள்
யுவனக்காதல்கள் பாரிய சோகத்தோடு
உலவிக் கொண்டிருக்கின்றன
திறக்க இயலாத மௌனத்தைப் போர்த்திய
முருகன் சந்நிதியில்
சுடரின் தவிப்பு
மாடப்புறாக்கள் அமர்வதும் பறப்பதுவுமாய்
போக்குகாட்டுகிறது
ஓருபிடி கருணையற்று கழிந்த நாட்களின் சுமையை
இப் பசுந் தாவர வெளியில் இறக்க வந்தேன்
நட்„த்திரங்கள் மினுங்கும் இக்கோவிலின் வாசலில்கூட
கருணையில்லை
கடைசியில்
கடவுள்களும் இரக்கமற்றுப் போன பின்பு
யாரிடம் சொல்லி நான் பிராத்திக்க..
********************
சீம்பாவில் அருந்திய நஞ்சு
குளத்து நீரில் சிதறிய தைலம்
«ணை மாறிய சீராடல்
ஒட்டுச் செடியில் கசப்பின் கலப்பு
ஒளி வந்த வேளை - பாலை
புனிதம் காக்கும் பூதம்
நூதன சிலிர்ப்பில் தவிப்பு
இலச்சினை கேட்கும் வினோத ரசமஞ்சரி
சித்தமென காலடியில்
திருவுளம் இரங்கா தேவி
தொடர்பறுந்த இவ் வரிகளிக்கிடையே
உலவும் கவிதையே நான்
சித்திக்காத பாரிஜாதம்
அன்றும் மழைதான்
பேயாட்டம் போடும் மரங்களின் நடுவே
சிக்குண்டிருந்த அன்பை
மெல்ல அள்ளி எடுத்து வந்து பத்திரப்படுத்தினேன்
நம்பகத்தின் துளிரை
ஸ்பரிசித்துப் பகிர்ந்து கொண்ட
நம் விரல்களே முதல் சாட்சி
சீதளம் தளும்பும் ஆரண்ய விழி வழியே
ஆயிரமாயிரம் கதைகள் சொல்வாய்
நிலவும் கவிந்து கேட்க வரும்
கடல் வழி நடப்போம்
உற்சாகம் நண்டுகளாகி
கரையெங்கும் ஓடி விளையாடும்
காற்றெங்கும்
சிரிப்பை நிறைப்பாய்
சுமை பழகிய தோளணைத்து
பனி பொழியும் இதழ் குவித்து
சில்லிட வைப்பாய்
பெயர் தெரியா காட்டுப் பூ போல் பூத்து
வாசம் கொட்டித் திகைக்க வைத்தாய்
அமிர்தவர் þனி...
இன்று கட்டுரை இருட்டில்
வழி தவறிய குழந்தையாய்
ஓடி ஓடி கதறுகிறதடி
என் ப்ரியங்கள்
நம்பிக்கை
துர்வாடை வீசும் வார்த்தைகள் அவனுடையதல்ல
என்றுதான் நம்பியிருந்தேன்
மதனநீர் சுரந்து நாறிய இரவுகளை
ஜவ்வாதிட்டு மறைத்தவனென்றும்
யுத்த தர்மம் அறிந்திராத அவன் மறைத்து வைத்திருந்த
அம்பறாதூணில் விதவித ஆயதங்கள் உண்டென்றும்
வெட்டித் தள்ளிய உறுப்புகளை
பதப்படுத்திப் பாதுகாத்து
பார்த்துப் பார்த்து பரவசப் படுபவனென்றும்
சொற்களில் பீதியை கலப்பதும்
குலை நடுங்க வைப்பதும்
அவனது அன்றாட விளையாட்டுகள் என்றும்
நான் அறிந்திருக்கவில்லை
மாதவிடாய்காரியின்
எரிச்சல் நிறைந்த கோபங்களாய் உதிர்ந்ததெல்லாம்
வெற்றுத் தந்திரங்கள் என்றறிந்த போது
மன்னிப்பும் நிறமிழந்திருந்தது
சப்தங்களற்ற அதிகாலையில்
அன்பின் குறுவளால் குத்தப்பட்டவனின்
மனைவி சொன்ன ஒப்பாரியை மட்டும் கேட்டிராவிட்டால்
அவன் குறித்த பிராதுகள் எதையும் நான்
நம்பியிருக்கமாட்டேன்
மூட்டத்தில் மேலெழும்பும் ஞாபகங்கள்
இமைக்கும் கண்களில் கனவும் நனவும்
திறக்கப்படாத கதவொன்று திறந்து அதிர்கிறது
குரல் வழி வழியும் கானத்தில்
வனம் முழுக்க உதிர்கிறது
அடுக்கடுக்கான பிருகாக்கள்
சங்கதிகளில் கரைகிறாய்
பட்டு வயிறைத் தடவியபடி
படபடக்கும் தாவணியாகிறேன்
பூஞ்சை ரோமம் படர்ந்த
வெள்ளைக் கெண்டைக் கால்களில்
பச்சைக் கோடுகள்
மேலுதட்டுக் கருப்பு மருவில்
நாக்கு நுனிபட்ட எச்சில் கறைகள்
கிறங்கும் கண்கள் திறந்து
உறங்கும் பூனையின் வயிறென நலுங்கும் மார்பில்
ஏறிப்புரளும்
எந்தப் பயணத்திலோ தவறவிட்டவளை
இந்தப் பயணத்தில் மீட்டெடுக்கிறேன்
பால்ய பிராயத்தை யவனத்தால் நிரப்பியவள்
இன்று எங்கிருந்து திரும்ப வந்தாள்
கேட்ட கதை மறந்து
நடந்த கதை நினைத்து
குரல் வழித் தடுமாறி
நினைவுகளில் விழுந்தெழுந்து தொடர்கிறேன்
நம் வீடும் தெருவும்
ஊரும் பள்ளியும் தோப்பும் கொல்லையும்
மாடிப்படி யிருட்டும் பத்தாயத்து உட்புறமும்
புகை கவியப் புதையடி பாங்கி
- ரவிசுப்ரமணியன்
கோயில்கள் கொண்ட நகரமான கும்பகோணத்தில் பிறந்த ரவிசுப்ரமணியன் தமிழின் முன்னணி கவிஞர்களில் ஒருவர். இவரது கவிதைகளில் சமூக எதார்த்தமும், தனிமனித துயரின் வலியும் இசைலயமான வார்த்தைகளில் காணக் கிடைக்கும். எதையும் நேரிடையாக விவரிக்கும் ரவியின் கவிதைகள் பூடகமாகவும் பேசக் கூடியவை. 'ஒப்பனை முகங்கள்', 'காலாத்த இடைவெளியில்' என்ற கவிதைத் தொகுப்புகள் இவருடைய கவி ஆளுமைக்கு வலு சேர்ப்பவை. பல்வேறு காட்சித் தகவல் நாடகங்களில் பணியாற்றிய இவர், தற்போது 'பெண்' என்ற தொலைக்காட்சித் தொடருக்கு வசனம் எழுதுகிறார்.
முகவரி :
ரவிசுப்ரமணியன்
12/13, பீட்டர்ஸ் காலனி,
ராயப்பேட்டை,
சென்னை - 14.
தொ.பேசி : 044 28545937
தொடர்ந்து பல கவிஞர்களின் கÅ¢¨¾கள் வலம் வர இருக்கின்றன.
கவிதைத் திருவிழா பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com
என்ற முகவரிக்கு அனுப்பவும்.
பிற கவிதைத் திருவிழா கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க...
கவிஞர் சுகுமாரன்
கீதாஞ்சலி பிரியதர்ஷனி
தேன்மொழி.எஸ்
தேவதேவன்
ம.திலகபாமா
கோ.வசந்தகுமாரன்
மதியழகன் சுப்பையா
முத்துமகரந்தன்
அழகுநிலா
அரிக்கண்ணன்
அய்யப்ப மாதவன்
அன்பாதவன்
ஜே.கே.73