கடவுளுக்காகத் திறந்த வாசலில்
சட்டென நுழைகிறது காற்று
கடவுளுக்காக விரித்த பாயில்
வந்து படுக்கிறது நாய்
கடவுளுக்காகப் பாடும் பாடல்
நமது செவிக்கே திரும்புகிறது
வேலியேதுமற்ற
கடவுளின் தோட்டத்து மண்ணில்
என் பாதச் சுவடு.
வெளியெங்கும் நிறைந்த
எம் மக்களின் மூச்சுக் காற்று
சுவாசத்தைச் சூடேற்றுகிறது
அவர்களது தசையை என் விரல்
என்னில் வருடிப் பார்க்கிறது
நமக்குத் தெரியும்
இந்த இலை உதிரும்
அந்த இலையும் இந்த
எல்லா மரங்களும்
நடப்பதை நம்மிடமிருந்தும்
பறப்பதை பறவைகளிடமிருந்தும்
குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள்
பிறகு அவர்களைப் பார்க்க
முடிவதேயில்லை.
ஏதமறியாது நதியின் போக்கில்
ஊருண்டோடி நேற்று இன்றாய்
மழுங்கிக் கரையும் கூழாங்கல்லென
நிசப்தமாய் நீளும் உனதின் எனதின்
உறவைப் புரியாது மனக்குகையில் நிரம்பி
மூச்சுத் திணற வைக்கிறது வெண்மேகம்.
கோடி யுகங்கள் கடந்து
படைப்பின் புரியாத இரகசியம்
வெற்றிடத்திலுமாய் நிறைந்து கிடக்க
ஆல இலைகள் பழுத்துக் கொட்ட
புத்தர் சிலை வெடிப்பில்
இது யானை நடந்த வீதியென்று
யாருக்குத் தெரியப் போகிறது
நாய்கள் ஓடியொளிய பூனை பதுங்க
வானத்துக்கும் பூமிக்கும் நடுவே
மேகங்களைக் கடந்து வீதி வழியே
ஆது சென்றது நம்மைத் தவிர
யாருக்குத் தெரியப்போகிறது
மாய வித்தைக்காரன்
நம் கண்ணெதிரே ஒவ்வொன்றாக
மறைய வைக்கிறான்
எங்கே என்று கேட்கச் சொல்லி
புருவம் உயர்த்துகிறான்
நாம் கேட்கிறோம்
எங்கே? எல்லாமும் எங்கே?
அகலத் திறந்த ஆகாயத்தில்
சுற்றுப் பாதை விலகாத
மணல்மேட்டில்
குரைத்துக் குரைத்துச் சாகிறது
வெறிநாய்.
நீல வெளிர் வானில்
வெண்புகைத் தடம் நீள
அதோ மறைகிறது அதிவேக
விமானம்
நீள் தடம் மெல்லக் கறைய
எதுவும் எஞ்சவில்லை
மீண்டுமாய்.
- அழகுநிலா
காரைக்காலில் ஒரு பள்ளிக் கூட ஆசிரியையாகப் பணியாற்றும் அழகுநிலா, பலூன்காரன் வராத தெரு, தேவதையின் காலம், ஆகாயத்தின் மக்கள் என்ற மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். வாழ்க்கைத் துணையாக அழகுநிலாவை கைத்தலம் பற்றிய சுரே‰ , அன்பும் மனிதமும் ததும்பும் மருத்துவர். "இளைய தலைமுறை பெண் கவிஞர்களில் வித்தியாசமானவர் அழகுநிலா, காரணம் இன்று எழுதும் பெண் கவிஞர்களிலிருந்து பல கோணங்களில் வேறுபடுகிறார்" என்கிறார் பிரம்மராஜன். "இவரது கவிதைகளைப் படிக்கிறபோது நம்மைப் பார்ப்பதற்கே நமக்கு ஒரு தொலை நோக்கிக் கருவி வேண்டும் போல இருக்கிறது" என்று சொல்கிறார் பழநிபாரதி.
முகவரி :
அழகுநிலா
38/1, மூன்றாவது குறுக்குத் தெரு,
எஸ்.ஏ.நகர், காமராஜர் சாலை,
காரைக்கால் - 609 602.
போன் : 04368 225134
தொடர்ந்து பல கவிஞர்களின் கÅ¢¨¾கள் வலம் வர இருக்கின்றன.
கவிதைத் திருவிழா பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com
என்ற முகவரிக்கு அனுப்பவும்.
பிற கவிதைத் திருவிழா கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க...
கவிஞர் சுகுமாரன்
கீதாஞ்சலி பிரியதர்ஷனி
தேன்மொழி.எஸ்
தேவதேவன்
ம.திலகபாமா
கோ.வசந்தகுமாரன்
மதியழகன் சுப்பையா
முத்துமகரந்தன்
ரவிசுப்ரமணியன்
அரிக்கண்ணன்
அய்யப்ப மாதவன்
அன்பாதவன்
ஜே.கே.73