![]() |
''கவிதை எனது மதம்; மதமற்றவனின் மதம்''Posted : சனிக்கிழமை, அக்டோபர் 08 , 2011 04:21:31 IST
இந்த நாளிதழ்ச் செய்தி பரவசத்தைத் தந்தது. நோபெல் இலக்கியப்
பரிசுக்குக்குரியவரைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதிபட்டியலில் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. அது உண்மையாகுமானால் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர் ஒருவர் மீண்டும் நோபெல் இலக்கியப் பரிசைப் பெறுகிறார்; தாகூருக்குப் பின்னர் இந்திய இலக்கியம் உலக அரங்கில் கவன ஈர்ப்புக்குள்ளாகும் என்பதெல்லாம் இலக்கிய ஆர்வம் சார்ந்த விவரங்கள். தனிப்பட்ட முறையில் நோபெல் பரிசு பெற்ற ஒருவர் என்னைப் பெயர் சொல்லி அழைக்கும், நான் 'சச்சி மாஷ்'என்று அழைக்கும் நெருக்கத்தைச் சொல்லி மகிழலாம். நான் தானாக்கும் அவருடைய கவிதையையும் கட்டுரையையும் விமர்சன நூலையும் முதன்முதலாகத் தமிழில் மொழிபெயர்த்தவன் என்று டமாரமடித்துக் கொள்ளலாம். மாஷுக்கு ( மாஸ்டருக்கு) விருதுகளும் பரிசுகளும் புதிதல்ல. சாகித்திய அக்காதெமி, ஞானபீடம் இரண்டையும்தவிர மாநில அளவிலும் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலுமாக அவர் பெற்றிருக்கும் பரிசுகளின் பட்டியலை அச்சிட்டால் பத்துப் பக்கம் வரும். சில ஆண்டு களுக்கு முன் வயலார் விருது பெற்றபோது அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுத ஆரம்பித்தேன். அதை வெளியிடவிருந்த பத்திரிகையின் குறிப்பிட்ட இதழ் அச்சுக்குப் போகும் முன்புகட்டுரையை முடிக்க முடியாமல் பாதியிலேயே நிறுத்தினேன். பின்பும் தொடரவில்லை. அந்தக் கட்டுரை இங்கே. @ ''கவிதை எனது மதம்; மதமற்றவனின் மதம்'' @ மலையாள இலக்கிய உலகில் வழங்கப்பட்டு வருவனவற்றில் வயலார் விருதுக்கு நட்சத்திர மதிப்பு உண்டு.கவிஞராகவும் திரைப்படப் பாடலாசியராகவும் பிரசித்தி பெற்றிருந்த வயலார் ராமவர்மாவின் நினைவைப் போற்றும்வகையில் உருவாக்கப்பட்ட விருது இது. மலையாளியின் பொது மனநிலையில் கற்பனாவாதம் சார்ந்த ஆறுதலையும் ஏக்கங்களையும் படரவிட்ட வயலாரின் பெயரால் அமைந்த விருதுக்கு இந்த ஆண்டு தகுதிபெற்றிருப்பவர் சமகால வாழ்வின் கோபங்களையும் அமைதியின்மையையும் கவிதைப்பொருட்களாகக் கொள்ளும் சச்சிதானந்தன் என்பது ஒரு முரண் நகைச்சுவை. 'அப்படியல்ல, முன் தலைமுறையைச் சேர்ந்த ஒரு கவிஞரின் பெயரால் வழங்கப்படும் விருது என்பதுதான் இதை மதிப்புக்கு உரியதாக்குகிறது' என்கிறார் சச்சிதானந்தன். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மலையாளக் கவிதையில் தொடர்ந்தும் தீவிரமாகவும் இயங்கி வருபவர் சச்சிதானந்தன்.நவீன மலையாள கவிதையில் எண்ணிக்கையில் அதிகம் எழுதியிருப்பவரும் அவராகத்தான் இருக்கக்கூடும்.அறுபதுகளின் மையப் பகுதியில் மாணவப் பருவத்தில் எழுதி வெளியிட்ட 'ஐந்து சூரியன்' முதல் வயலார் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சமீபத்திய தொகுதியான 'சாட்சியங்கள்' வரை பல் தொகுப்புகளாகப் பரந்து கிடக்கிறது அவரது கவிதை உலகம். விரிவானது மட்டுமல்ல. அநேகக் கிளைவழிகளும் மனக் காட்சிகளும் கொண்டதும் கூட. 'ஆதுனிகத' என்று அழைக்கப்படும் நவீனத்துவ காலப் பகுதிக்குச் சற்று முன்னர் கவிதையாக்கத்தில் ஈடுபடத் தொடங்கிய சச்சிதானந்தன் இன்றளவும் கவிதையில் நிகழ்ந்து வரும் மாற்றங்களைப் பின் தொடர்பவராகவும் சில சந்தர்ப்பங்களில் மாற்றங்களைத் தொடங்கி வைப்பவராகவும் இருக்கிறார்.நவீனர்.எனினும் மரபைப் புறக்கணிக்காதவர். மலையாளத்தின் ஆதி கவியான எழுத்தச்சன் முதல் இன்று எழுதிக்கொண்டிருக்கும் இளங்கவிஞரான பவித்திரன் தீக்குனிவரையிலான கவிஞர்களின் உணர்வுநிலைகளை சச்சிதானந்தனின் கவிமனதால் அடையாளம் காண முடிகிறது.அந்தந்த காலப் பகுதியில் கவிதையிலும் சமூகத்திலும் தனி வாழ்க்கையிலும் நிகழும் நுட்பமான சலனங்களுக்கு ஏற்ப சச்சிதானந்தனின் கவிதையும் உருமாறுகிறது. இதை அவரது பலவீனமாகக் கருதி விமர்சிப்பவர்களும் உண்டு. கவிதையைத் தனது முதன்மையான சாதனமாகக் கையாளும் படைப்பாளி இதிலிருந்து விடுபடுவதும் அசாத்தியம். நிகழ்காலச் சலனங்களுக்கிசைய மாற்றம் பெறும் கவிதைகள் உருவாகும் மனப்போக்குக் கொண்டவரெனினும் சச்சிதானந்தனின் கவிதைகளில் அடிப்படையான ஒரு தொடர்ச்சியைக் காணமுடியும். மானுட இருப்பின் சிக்கல்கள்தாம் அவரது கவிதையின் ஆதாரம். மனிதனின் இருப்பு,மனிதர்கள் தம்மில் கொள்ளும் உறவின் இயல்புகள், மனிதனுக்கும் இயற்கைக்குமான பந்தம், காலத்தோடு மனிதன் கொள்ளும் இயைபு,வரலாற்றில் அவன் வகிக்கும் பாத்திரம் - இவை அனைத்தும் திரண்ட ஒரு தளத்தில்தான் அவரது கவிதைகள் இயங்குகின்றன.இந்தத் திரட்சியை தனது கவிதையின் ஆன்மீகம் என்று அவர் குறிப்பிட்டதுண்டு. சச்சிதானந்தன் கவிதைகளின் இயங்குதளம் விசாலமானது.புராணம்,நாட்டார் வழக்கு, காவியங்கள்,மேற்கத்திய கிழக்கத்திய இலக்கியங்கள் போன்ற எழுத்திலக்கியத்தின் கூறுகள். இதிகாச பாத்திரங்கள் முதல் அரசியல் கலாச்சார ஆளுமைகள் வழியாக நண்பர்கள் வரையும் பைத்தியம் முற்றி மரித்துப்போன பாட்டி முதல் மனைவி வழியாக மகள்வரையுமான திரளான மனிதர்கள். கேரளக் கிராமத்திலிருந்து தொடங்கி உலகின் பல்வேறு நாடு நகரங்களின் நிலக்காட்சிகள்.வெவ்வேறு பருவ நிலைகள்.வெவ்வேறு காலங்கள்.வெவ்வேறு மனநிலைகள்.வெவ்வேறு வடிவங்கள் என்று அகன்று கொண்டிருக்கும் தளம் அவருடையது.மலையாளக் கவிதையில் சச்சிதானந்தன் அளவு வித்தியாசம் காட்டியிருப்பவர்கள் அநேகமாக இல்லை. மலையாளியின் கவிதை ரசனையில் புதிய உணர்வுநிலையை உருவாக்கியதில் சச்சிதானந்தனுக்குக் கணிசமான பங்கு உண்டு.சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையின் கற்பனாவாதத்திலும் ஜி.சங்கரக் குரூப்பின் ஆன்மீக வேட்கையிலும் நிறைவு கண்டிருந்த கவிதையை அறுபதுகளின் மையப்பகுதியில் அறிமுகமான நவீனத்துவம் வேறு திசைகளுக்கு அழைத்துச் சென்றது.அறிஞரும் பத்திரிகைத் துறையில் விற்பன்னருமான என்.வி.கிருஷ்ணவாரியர் புதிய போக்கின் தெறிப்புகளைத் தமது கவிதைகளில் வெளிப்படுத்தினார். தொடர்ந்து என்.என்.கக்காடு,அய்யப்பப் பணிக்கர்,ஆற்றூர் ரவிவர்மா போன்ற கவிஞர்கள் கவிதையில் புதிய தொனியை கேட்கச் செய்தனர்.மேற்கத்திய நவீனத்துவத்தின் சாயல் தென்பட்டாலும் கவிதைக்கு இது பயனுள்ளதாக அமைந்தது. சிற்றோடை அகன்ற நதியாக மாறியது போல.இந்தக் கவிதையோட்டத்தில் புதிய நீர்ப்பெருக்கைச் சேர்த்தவராகச் சச்சிதானந்தனைக் குறிப்பிடவேண்டும். - கவிஞர் சுகுமாரன்
|
|