???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்து்றை போலீசார் சோதனை: சார் பதிவாளர்கள் கைது 0 தினகரனைத் தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்: ராஜேந்திர பாலாஜி 0 தமிழகத்தில் அடுத்த இருநாட்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 25 காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் 0 இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நல்லுறவுடன் செயல்பட வேண்டும்: சீனா அறிவுரை! 0 இடைத்தேர்தல்: இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது! 0 அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்ததுள்ளது: ஸ்டாலின் 0 டெண்டர் முறைகேடு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளிக்க இறுதி கெடு 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 0 ஜம்மு காஷ்மீரில் சட்ட மேலவை கலைப்பு! 0 பிரதமர் மோடி பொதுத்துறை நிறுவனங்களை பாழ்படுத்துகிறார்: ராகுல் கடும் தாக்கு! 0 அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி! 0 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எப்படி சாத்தியம்? மன்மோகன்சிங் 0 நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவருக்கு ஜாமின்! 0 சென்னையில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சந்திரசேகர கம்பார - நாட்டார் கதைகளை முன்வைத்த நாடகக்காரர் - பாவண்ணன்

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   03 , 2011  20:29:01 IST

எண்பதுகளின் இறுதியில் நான் வடகன்னடப்பகுதிகளில் சில மாதங்கள் வேலை செய்தேன். ஹூப்ளியிலிருந்து பெல்காம்வரைக்கும் தொலைபேசி கேபிள் இணைப்புக்கான பொருத்தமான பாதையைத் தேர்ந்தெடுக்கும் வேலை எனக்குத் தரப்பட்டிருந்தது. வழிநெடுக பல கிராமங்கள். பகல்முழுதும் அலைந்துவிட்டு இரவில் எங்காவது தொலைபேசி நிலையம் இருக்கிற ஊரில் தங்குவேன். தமிழகக் கிராமங்களில் திரையரங்கங்கள் இருப்பதுபோல, கர்நாடகக் கிராமங்களில் நாடகங்களுக்கென கீற்றுக்கொட்டகைகள் உண்டு. தினமும் அங்கே நாடகங்கள் நடைபெறும். இரவு உணவை முடித்துவிட்டு நான் நாடகம் பார்க்கச் சென்றுவிடுவேன். அப்போது அப்படி ஒரு பழக்கம். அந்நாட்களில் நான் பார்த்த பல நாடகங்களில் ஒன்று சங்யா பால்யா. அன்று இரவு முழுக்க என்னைத் தூங்கவிடாமல் அடித்த நாடகம் அது. அதன் பாடல்கள். வசனங்கள். காட்சிகள். எல்லாமே மனத்தில் மீண்டும் மீண்டும் காட்சிகளாக மிதந்துவந்தன. நட்புக்கு இலக்கணமாகச் சொல்லத்தக்க இரு நண்பர்களிடையே நிகழும் உறவுமோதல்கள்தான் நாடகத்தின் மையம். ஒரு நண்பனின் பாலியல் இச்சை, இன்னொரு நண்பனை நெருக்கடியில் தள்ளிவிடுகிறது. இறுதியில் உதவும் போர்வையில் துரோகமிழைக்கிறான் நண்பன். அன்புக்கும் துரோகத்துக்கும் இடையே ஊடாடும் நட்பு ஒரு பக்கம். கணவனுக்கும் காதலுக்கும் இடையே ஊடாடும் மனைவி இன்னொரு பக்கம். இப்படி வலுவான முரண்களோடு அந்த நாடகம் மனத்தைக் கொள்ளை கொண்டது. ஒரு பெரிய நாவலைப் படித்ததுபோன்ற அனுபவம். யாராவது உள்ளூர்க்காரர்தான் அந்த நாடகத்தை எழுதியிருக்கவேண்டும் என்றுதான் நான் நினைத்திருந்தேன். பிறகுதான் அந்த நாடகத்தை எழுதியவர் சந்திரசேகர கம்பார் என்று தெரிந்துகொண்டேன். அவரும் வடகன்னடப் பகுதியைச் சேர்ந்தவர். படித்துப் பட்டம்பெற்ற பிறகு பெங்களூரில் வேலை செய்கிறார் என்று பேசிக்கொண்டார்கள். சங்க்யா பால்யா ஏற்கனவே மக்களிடையே பாட்டுவடிவில் புழங்கிவரும் ஒரு நாட்டுப்புறக்கதை. பைலாட்டா எனப்படும் பாடல்வகையைச் சேர்ந்த கதை. கம்பார் அதற்கு வலிவான ஒரு நாடகப் பின்புலத்தை அமைத்துக்கொடுத்தார். இன்றுவரையில் இந்த நாடகம் ஆயிரம் முறைக்கும் மேல் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இப்படித்தான் கம்பாரின் பெயரை நான் முதன்முதலாகத் தெரிந்துகொண்டேன். பெங்களூருக்குத் திரும்பிய பிறகு கம்பாருடைய இன்னும் சில நாடகங்களையும் பார்க்க நேர்ந்தது. ஜோகுமாரசாமி, சிரிசம்பிகெ, சிங்காரவ்வா, புஷ்பராணி. அடுத்தடுத்து பார்க்க நேர்ந்த இந்த நாடகங்கள் வழியாக அவரைப்பற்றிய ஒரு உயர்வான சித்திரமே என் மனத்தில் எழுந்தது. நாட்டுப்புறக்கதைகளிலிருந்தும் பாடல்களிலிருந்தும் தம் படைப்புகளுக்கான கருக்களைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து, மேடைக்குப் பொருத்தமான வகையில் அவற்றைப் பயன்படுத்துவதில் வல்லவராக இருந்தார் கம்பார். அவ்வகையில் கிரீஷ் கார்னாட், கம்பார் இருவருமே மிகமுக்கியமானவர்கள். மேடை நாடகமாகக் காட்சிப்படுத்தப்படும்போது, அது நாட்டுப்புறக்கதையின் சாயலைக் கொண்டிருந்தாலும் வேறொரு கோணத்தில் நவீன வாழ்வியலின் சிக்கலையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. இவ்வகையில் அவருடைய நாடகங்களுக்கு தாமாகவே ஒரு சமகாலத்தன்மை படிந்திருந்ததைப் பார்த்தேன்.

நாட்டார் கதைகளைப் பொருத்தமான வகையில் நாடகங்களுக்கான கருக்களாக மாற்றியமைத்ததன்வழியாக நாட்டாரியலின் மீது கல்வியாளர்களின் கவனம் பதிவதற்கு வழிவகுத்தவர்களில் கம்பாரின் பங்கும் முக்கியமானது. கடந்த நாற்பது ஆண்டுகளில் அவர் 22 நாடகங்களை எழுதியுள்ளார். கன்னட நாடக உலக வளர்ச்சியில் கம்பாரின் பங்கு மகத்தானது. நாட்டாரியலில் அவர் ஆற்றிய பணிகளில் முக்கியமானது இரண்டு பெரும் பகுதிகளாக அவர் உருவாக்கிய அகராதிகள். நாட்டாரியல் படிக்கவரும் மாணவர்களுக்கு இந்த அகராதிகள் நல்ல கையேடுகளாக விளங்குகின்றன.

தம் நாடகங்களில் சிலவற்றைத் திரைப்படங்களாக இயக்கவும் செய்தார் கம்பார். அதில் முக்கியமானது காடுகுதிரெ. எவ்வித முன்னனுபவமும் இல்லாமல் அவர் இயக்கிய இப்படம் மிகச்சிறந்த முறையில் வெளிவந்து, அந்த ஆண்டின் சிறந்த படமெனத் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசியவிருதையும் பெற்றது. கரிமயி, சங்கீதா என மேலும் இரண்டு திரைப்படங்களையும் அவர் இயக்கினார். அவர் மூன்று நாவல்களையும் எழுதியுள்ளார். ஷிகார் சூர்யா என்னும் அவருடைய நாவல் குறிப்பிடத்தக்க முயற்சி. படைப்பாக்க முயற்சிகளில் அவர் கவிதைத்துறையிலும் ஈடுபட்டிருக்கிறார். எட்டுத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. அவை படிக்கத்தக்கவை என்பதைவிட, காதால் கேட்கத்தக்கவை என்றே சொல்வேன். நாட்டார் பாடல்களின் சாரமே அவருக்குள் இறங்கியிருப்பதால், அவர் எதைச் செய்தாலும் அந்தச் சாயல் விழாமல் செய்ய இயன்றதில்லை என்றே தோன்றுகிறது. கவிதையிலும் அதே சாயல். சொற்களை மடக்கிமடக்கி, வாக்கியங்களை நீட்டி, அந்த ராகத்தையே ஓர் அழகியலாக்கி முன்வைப்பவை. எழுத்துவடிவின் நேர்த்திக்கும் கவித்துவத்துக்கும் அங்கே இடமில்லை என்றே சொல்லவேண்டும்.

நாடகத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக ஏற்கனவே சங்கீத நாடக அகாதமியின் விருதும் காளிதாஸ் சம்மான் விருதும் கபீர் சம்மான் விருதும் கிட்டியுள்ளன. கர்நாடக அரசு பம்ப விருதை அளித்து அவரைக் கெளரவித்துள்ளது. கன்னட மொழிக்கென ஒரு பல்கலைக்கழகத்தைத் தொடங்குவதற்கு கர்நாடக அரசு முனைந்தபோது, அதன் முதல் துணைவேந்தராக நியமிப்பதற்கு கம்பாரைத் தேர்ந்தெடுத்தது. முதல் மூன்றாண்டுகளில் அவர் ஆற்றிய சேவை மீண்டும் தொடரவேண்டும் என்பதற்காக இரண்டாவது முறையாகவும் அவர் துணைவேந்தராகத் தொடரும்படி கர்நாடக அரசு கேட்டுக்கொண்டது. அவர் துணைவேந்தராக இருந்தபோது பல்கலைக்கழகம் பல முக்கிய தொகைநூல்களை உருவாக்கி வெளியிட்டது. பல முக்கியமான நாட்டார் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. நாடகம், நாட்டாரியல், கல்வித்துறை என பல தளங்களில் உண்மையான ஈடுபாட்டோடு உழைத்தவர் சந்திரசேகர கம்பார். அவரை ஞானபீட விருதின் வழியாக பெருமைப்படுத்தியிருக்கிறது காலம்.

தமிழில் அவருடைய இரண்டு படைப்புகள் மட்டுமே மொழியாக்கம் பெற்றுள்ளன. அவருடைய சிரிசம்பிகை என்னும் நாடகம் திருசம்பிகை என்கிற பெயரில் (மொழிபெயர்ப்பு- தி.சு.சதாசிவம்) வெளிவந்துள்ளது. ஜோகுமாரசாமி (மொழிபெயர்ப்பு- நரசிம்மன்) என்னும் நாடகம் அதே பெயரில் வெளிவந்துள்ளது. அவை போதிய கவனம் பெறாமலேயே போய்விட்டன.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...