அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ராஜபக்சே போர்க்குற்றவாளிதான் - ஏப்ரலில் ஜெ, ஐநா அப்படி சொல்லவில்லை- இன்று ஜெ.

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   09 , 2011  23:01:21 IST

இலங்கை நாட்டிற்கு பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து விடுதலை கிடைத்துவிட்டாலும் அங்கு வாழும் தமிழர்கள், தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட்டனர். இதனையடுத்து, தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் அடக்குமுறைகளை எதிர்த்தும் “சுயாட்சி அந்தஸ்து”, “தனி ஈழம்” உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகள் 1980-களில் இருந்து தொடர்ந்து குரல் எழுப்பி போராடியதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும், தமிழக மக்களும், இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும், அவர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் மிகுந்த விருப்பம் கொண்டிருந்தார்கள். இது மட்டுமல்லாமல், அவர்களுக்கு தங்களுடைய தார்மீக ஆதரவினையும் அளித்தனர்.

இந்தச் சூழ்நிலையில், தமிழீழம் என்ற போர்வையில் தீவிரவாதம் தலைதூக்க ஆரம்பித்து இதன் காரணமாக தமிழ்ச் சகோதரர்களே படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் எல்லாம், நடந்தேறின. இதன் உச்சகட்டமாக இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் வகையில், முன்னாள் பாரதப் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அவர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 1991 ஆம் ஆண்டு தமிழ் மண்ணில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது இருந்த அனுதாபம் கடுமையான எதிர்ப்பாக மாறிவிட்டது.

1992-ஆம் ஆண்டு நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த போது என்னுடைய வற்புறுத்தலின் பேரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை 1967 ஆம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தடை செய்து, அந்தத் தடை உத்தரவு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், முன்னாள் பாரதப் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி கொலையில் முதல் குற்றவாளி பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சார்ந்த எவரையும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி 2002-ஆம் ஆண்டு இந்தச் சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை அரசின் அதிபராக திரு. மஹிந்தா ராஜபக்ஷே பொறுப்பேற்றுக் கொண்டார். 2006-ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழகத்திலும் துரதிர்ஷ்டவசமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மைனாரிட்டி தி.மு.க. அரசிற்கு திரு. மு. கருணாநிதி தலைமை வகித்தார். மத்தியிலும் தி.மு.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி 2004-முதல் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில், இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் போர்வையில் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளை இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட ஆரம்பித்தது.

2008-ஆம் ஆண்டு துவக்கத்தில் இலங்கை ராணுவத்தினர் 100 பேருக்கு அரியானா மாநிலத்தில் இந்திய ராணுவம் ரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்ததாகவும்; இலங்கை ராணுவத்தினருக்கு அதிநவீன ரேடார் கருவிகள் உட்பட பல்வேறு வகையான ஆயுதங்களை இந்திய அரசு வழங்கியதாகவும்; இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் இலங்கை சென்று வந்ததாகவும் அப்போது ஊடகங்களில் செய்திகள் வந்தன. அப்போது முதலமைச்சராக இருந்த திரு. கருணாநிதிக்கு இவை அனைத்தும் நன்கு தெரிந்திருக்கும்.

இந்தியாவிடமிருந்து தனக்குத் தேவையான ராணுவ உதவிகளைப் பெற்றுக் கொண்ட இலங்கை ராணுவம் 2008-ஆம் ஆண்டு இறுதியிலும், 2009-ஆம் ஆண்டு துவக்கத்திலும், இலங்கைத் தமிழர்களை கடுமையாக தாக்க ஆரம்பித்தது. இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இலங்கை அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. வலியுறுத்த வேண்டும் என்றும்; இதற்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செவி சாய்க்கவில்லையெனில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவினை தி.மு.க. விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் நான் பல முறை வற்புறுத்தினேன். ஆனால், அப்போது மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சராக இருந்த கருணாநிதியோ, அதைச் செய்யவில்லை. மாறாக, “அனைத்துக் கட்சிக் கூட்டம்”, “சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம்”; “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்”, “மனிதச் சங்கிலி போராட்டம்” “பிரதமருக்கு தந்தி”; “நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்ற அறிவிப்பு”; “ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக் கொண்டது”; “இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு” என பல்வேறு வகையான நாடகங்கள் தான் முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதியால் நடத்தப்பட்டன.

இவற்றின் உச்சகட்டமாக, காலை சிற்றுண்டியை வீட்டில் முடித்துவிட்டு தலைமைச் செயலகம் செல்லும் வழியில் திடீரென்று “போர் நிறுத்தம் ஏற்படும் வரை உண்ணாவிரதம்” என்று அறிவித்து கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார் முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதி. மதிய உணவு வேளை வந்தவுடன் நண்பகல் 12 மணி அளவில் “விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை இலங்கை அரசு முடித்துக் கொண்டுவிட்டது” என்ற செய்தியை ஊடகங்களுக்கு அறிவித்துவிட்டு தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு விட்டார். இதன் மூலம் “உண்ணாவிரதம்” என்னும் அறப் போராட்டத்தை கேலிக் கூத்தாக்கிவிட்டார் முன்னாள் முதலமைச்சர்.

“போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது” என்ற முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதியின் பேச்சைக் கேட்டு பாதுகாப்பாக பதுங்குக் குழிகளில் பதுங்கியிருந்த லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் வெளி வந்தனர். இவ்வாறு வெளிவந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் கொத்து கொத்தாக இடைவிடாது குண்டுகளை வீசி அவர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் இலங்கை ராணுவ முகாம்களில் கம்பிகளால் ஆன வேலிகளுக்கு பின்னால் அடைத்து வைக்கப்பட்டதாகவும்; முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண்கள் இலங்கை ராணுவப் படையினரின் கண் முன்னேயே பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்கக் கூடிய நிலைமைக்கும், குளிக்கக் கூடிய நிலைமைக்கும் ஆளாக்கப்பட்டதாகவும்; தமிழர்கள் குடியிருந்த பகுதிகளில் எல்லாம் சிங்களர்கள் குடியேறி இருப்பதாகவும் செய்திகள் வந்தன. ஆனால், கனிமொழி உட்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் இலங்கை சென்று இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் சிரித்துப் பேசி; விருந்துண்டு; பரிசுப் பொருட்களை பெற்று சென்னை திரும்பிய நாடாளுமன்றக் குழுவோ, “இலங்கைத் தமிழர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள்” என்று ஒரு உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டது. உண்மை நிலை என்னவென்றால், போரினால் இடம் பெயர்ந்த தமிழர்கள் மறுவாழ்வு பெறாமல் இன்னமும் அவதிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

“போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது” என்ற உண்மைக்கு மாறான தகவலைக் கூறி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்துவிட்டார் முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதி. "தமிழினப் பாதுகாவலர்" என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டு “தமிழினப் படுகொலை”-க்கு துணை போயிருப்பதை பார்க்கும் போது “உறவு போல் இருந்து குளவி போல் கொட்டுவது” என்னும் பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.

இவற்றை எல்லாம் நான் இங்கே சுட்டிக் காட்டுவதற்குக் காரணம் முன்னாள் முதலமைச்சரை குற்றம் சாட்ட வேண்டும்; முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. அப்பாவி இலங்கைத் தமிழர்கள் உயிர் இழப்பதற்கு முந்தைய அரசு காரணமாக அமைந்துவிட்டதே என்ற ஆற்றாமையால் தான் இவற்றை நான் இங்கே குறிப்பிடுகிறேன்.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசின் சுயநலப் போக்கு மற்றும் கையாலாகாத்தனம் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை ராணுவத்தின் குண்டு மழைக்கு பலியாகி இருக்கிறார்கள்; குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதி மற்றும் மருத்துவமனைகள் மீதெல்லாம் இலங்கை ராணுவம் குண்டுமழை பொழிந்து இருக்கிறது; மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடைவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்தி இருக்கிறது; உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக ஏராளமான தமிழர்கள் மரணமடைந்துள்ளனர்; மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன.
இந்தக் காரணங்களுக்காகத்தான் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இங்கே பேசிய மாண்புமிகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் திரு. சௌந்தரராஜன் அவர்கள், பொருளாதாரத் தடையைக் கொண்டு வர வேண்டுமென்ற வரிகளை விலக்கிக் கொண்டால் என்ன என்ற ஒரு கருத்தை இங்கே தெரிவித்தார். இதனால் அப்பாவித் தமிழ் மக்களும் பாதிக்கப்படுவார்களே என்ற ஒரு கருத்தைச் சொன்னார். இப்போதே இலங்கை அரசு யாருக்கும் பணியவில்லை. அங்கே வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களர்களோடு அனைத்து உரிமைகளையும், குடியுரிமைகளையும் வழங்க வேண்டுமென்று இந்தியா சொன்னாலும், யார் சொன்னாலும், அவர்கள் அதை மதிக்கவில்லை. அதனால், அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது, அவர்களை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரே வழி பொருளாதாரத் தடைகள்தான். இதுவொரு தற்காலிகமான ஒரு முறைதான். இந்திய அரசும், இன்னும் சில நாடுகளும் இணைந்து, இலங்கை அரசின்மீது ஒரு பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்தால், குறுகிய காலத்திற்குள்ளேயே நாம் சொல்வதை இலங்கை அரசு கேட்டுத்தான் ஆக வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்படும். வேறு வழியில்லை என்பதற்காகத்தான் இதைச் சேர்த்திருக்கிறோம்.

இந்தத் தீர்மானத்தின்மீது இங்கே கருத்துத் தெரிவித்து பேசிய இன்னும் சில மாண்புமிகு உறுப்பினர்கள் பேசுகின்றபோது, ஐ.நா. சபை ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளி என்று அறிவித்து விட்டதாக இங்கே தெரிவித்தார்கள். அப்படியில்லை. ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் திரு. பான் கீ மூன் அவர்கள் ஒரு குழுவை அமைத்து, அவர்கள் அங்கே நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களைப் பற்றி ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று தெரிவித்தார். அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில், இப்படிப்பட்ட போர்க் குற்றங்களெல்லாம் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது; அங்கே வாழ்கின்ற தமிழ் மக்கள் மீது இத்தகைய குற்றங்களெல்லாம், கொடுமைகளெல்லாம் நிகழ்த்தப்பட்டன என்பதையெல்லாம் தெரிவித்துவிட்டு, இதனை இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்களே தவிர, இதை உறுதியும் செய்யவில்லை – ராஜபக்ஷேவோ, மற்றவர்களோ போர்க் குற்றவாளிகள் என்று ஐ.நா. சபை அறிவிக்கவும் இல்லை. அதனால்தான் இந்தத் தீர்மானத்தில் இந்திய அரசு போர்க் குற்றம் புரிந்தவர்களை, போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த வேண்டும், இதற்கு ஐ.நா. சபையை வலியுறுத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம்.

எனவே, மனிதாபிமானமற்ற முறையில் ஈவு இரக்கமின்றி பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும்; இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழு மறுவாழ்வு அளித்து, அவர்கள் வசித்த இடங்களிலேயே அவர்களை மீண்டும் குடியமர்த்தி; சிங்களர்களுக்கு உரிய அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்கும் வரையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி, அரசு சார்பில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தினை இந்த மாமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று ஜெயலலிதா பேசினார்.


***


முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை பற்றி ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், ராஜபக்ஷே மற்றும் அவருடைய சகாக்களின் போர்க் குற்றங்களை விசாரிக்கும் வகையில், அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த உடனடி நடவடிக்கைகளை தனது பங்கிற்கு இந்திய அரசு எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கை விவரம்:
இலங்கையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என்பதைத் தான் அண்மையில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட கோரச் சம்பவம் நினைவூட்டுகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடூர மனப்பான்மைக்கு உண்மையிலேயே ஆதாரம் தேவை என்றால், இலங்கை அதிகாரிகளின் சித்ரவதையால் அழுகிய நிலையில் சிதைந்து கிடந்த மீனவர்களின் சடலங்களே சாட்சி. இந்தியாவைச் சேர்ந்த தமிழர்கள் மீதே இது போன்ற கொடூரத் தாக்குதலை இலங்கை அரசு நடத்தியிருக்கும் நிலையில், யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அனைத்து விதமான மனித உரிமை மீறல் குற்றங்களுக்கும் ஆளாகி உள்ள இலங்கை அரசின் அடக்குமுறைக்கு அடிபணிந்து, இலங்கைத் தீவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி தமிழர்களின் நிலைமை என்ன என்பதை கற்பனை செய்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது!

இலங்கை ராணுவத்திற்கும், LTTE-க்கும் இடையேயான போர் உச்சகட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, 27.4.2009 அன்று அருவருக்கத்தக்க கபட நாடகத்தை நடத்தினார் கருணாநிதி. தன்னுடைய காலை உணவை முடித்துவிட்டு, இலங்கை போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி விட்டதாக அறிவித்தார் கருணாநிதி. உண்ணாவிரதம் தொடங்கிய மூன்று மணி நேரத்திற்குள், தமிழர்களுக்கு எதிரான ஆயுதத் தாக்குதலை இலங்கை நிறுத்திக் கொண்டுவிட்டதாக தம்மிடம் இலங்கை அரசு தெரிவித்தது என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார். உடனே கருணாநிதி மதிய உணவிற்காக வீடு திரும்பிவிட்டார்.

ஓர் தமிழ் இளைஞரை துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பு, அவரை நிர்வாணமாக்கி, கண்களை மூடி, கை, கால்களைக் கட்டி, காலால் எட்டி உதைத்து இலங்கை ராணுவத்தினர் பேரானந்தம் அடைந்த காட்சியை 25.8.2009 அன்று 40 வினாடிகளுக்கு பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஒளிபரப்பி உலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த இளைஞரின் பிணம், இதே போன்று ஒன்பது சடலங்கள் இருந்த இடத்திற்கு உருட்டிவிடப்பட்டது. இந்தக் கொடூர காட்சிகளை பல இந்திய தொலைக்காட்சி சேனல்களும் ஒளிபரப்பின.

இந்த கொடுஞ் செயலுக்கு எதிராக சர்வதேச அளவில் கூக்குரல் எழுப்பப்பட்டதோடு மட்டுமல்லாமல், இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்ஷே சர்வதேச நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, போர்க் குற்றத்திற்காக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இந்திய அரசோ, தமிழக அரசோ இது குறித்து எதிர்ப்பையோ அல்லது வருத்தத்தையோ கூட தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாறாக, இலங்கை அதிபருடன் விருந்துண்டு மகிழ்வதற்காக, 2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், தன்னுடைய மகள் கனிமொழி உள்பட தி.முக., காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தார் கருணாநிதி. பரிசுப் பொருட்களுடன் திரும்பிய நாடாளுமன்றக் குழுவினர் இலங்கையில் எல்லாமே நன்றாக இருக்கிறது என்றும், அங்குள்ள தமிழர்கள் குறைபட்டுக் கொள்ளும் அளவுக்கு புகார் ஒன்றுமில்லை என்றும் தெரிவித்தனர்.

என்னதான் கருணாநிதி நற்சான்றிதழ் கொடுத்தாலும், அங்குள்ள தமிழர்களின் நெஞ்சை உருக்கும் நிலையைக் கண்டு மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு நாடுகளைச் சேர்ந்த அரசுகள், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை பொங்கி எழுந்தன. தற்போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அனுப்பிய குழுவின் அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இருந்து ஒரு சில பகுதிகளை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “ஐ.நா. குழுவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படின், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டம் ஆகியவற்றிற்கு எதிரான ஆபத்து விளைவிக்கக் கூடிய அத்துமீறல்களை இலங்கை அரசாங்கம் நிகழ்த்தியுள்ளது வெட்ட வெளிச்சமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் சில குற்றங்கள் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகும். 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19-ஆம் தேதிக்கும் இடையே, வன்னி பகுதிக்கு முன்னேறிய இலங்கை ராணுவம், மிகப் பெரிய அளவில் பரவலாக குண்டு மழை பொழிந்து அப்பாவி தமிழர்கள் மாண்டு போவதற்கு காரணமாக இருந்தது. இதன் மூலம் வன்னி பகுதி மக்களுக்கு பலவிதமான தொந்தரவுகளை இலங்கை ராணுவம் கொடுத்தது. கிட்டத்தட்ட 3,30,000 அப்பாவி தமிழர்கள் குண்டு மழை பொழிவிலிருந்து தப்பிக்க முடியாத அளவுக்கு மிகக் குறுகிய பகுதிக்குள் சிக்கிக் கொண்டனர். ஊடகங்கள் மற்றும் போர் விமர்சகர்களை பயமுறுத்தும் வகையிலும், அவர்களுக்கு வாய்ப்பூட்டு போடும் வகையிலும், வெள்ளை வாகனங்களில் மக்களை கடத்துவது, மறைத்து வைப்பது உட்பட பல்வேறு அச்சுறுத்தும் நடவடிக்கைகளை இலங்கை அரசு கையாண்டது.

“குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பொதுமக்கள் வாழும் தொடர்ச்சியான மூன்று இடங்களில் இலங்கை அரசு மிகப் பெரிய அளவில் குண்டு மழை பொழிந்திருக்கிறது ... மருத்துவமனைகள் குறிவைத்து தொடர்ந்து தாக்கப்பட்டு இருக்கின்றன. வன்னிப் பகுதியில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் பீரங்கிகளால் தாக்கப்பட்டு இருக்கின்றன. மருத்துவமனைகள் இருக்கும் பகுதிகள் என்று இலங்கை அரசாங்கத்திற்கு நன்கு தெரிந்திருந்தும் சில மருத்துவமனைகள் மீண்டும், மீண்டும் தாக்கப்பட்டிருக்கின்றன. போர் பகுதியில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் செய்யக் கூடிய உதவிகளான மருத்துவ உதவி, உணவு ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் தடுத்து அவர்களை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கி இருக்கிறது. இதன் மூலம் போர் பகுதியில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையை இலங்கை அரசு வேண்டுமென்றே குறைத்து மதிப்பீடு செய்தது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே வரை, மனித வர்க்கத்தின் படுகொலை நடந்த இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அனாமதேயமாக செத்து மடிந்தனர்."

ஐக்கிய நாடுகள் சபை குழுவின் அறிக்கை மிகத் தெளிவாக உள்ளது. இலங்கை அரசாங்கத்தின் போர்க் குற்றங்களை பட்டியலிட்டதோடு மட்டுமல்லாமல், இலங்கை போர் முடிவிற்கு வந்துவிட்டது என்று கூறி 27.4.2009 அன்று தனது மூன்று மணி நேர உண்ணாவிரத கபட நாடகத்தை கருணாநிதி முடித்துக் கொண்டதற்குப் பிறகும்,
2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி வரை இனப் படுகொலைகள் நடந்துள்ளன என்று தெளிவாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது!

இதன் மூலம் தமிழினப் பாதுகாவலர் என்று தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதியின் வேஷம் கலைக்கப்பட்டு இருக்கிறது. தமிழர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட, மனித குல வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிக மோசமான இனப் படுகொலைக்கு ஆதரவாகவும், உடந்தையாகவும், தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்த தமிழினத் துரோகி கருணாநிதி பகிரங்கமாக பொது மன்னிப்பு கோர வேண்டும் என்று தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ராஜபக்ஷே மற்றும் அவருடைய சகாக்களின் போர்க் குற்றங்களை விசாரிக்கும் வகையில், அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த உடனடி நடவடிக்கைகளை தனது பங்கிற்கு இந்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையெனில், அண்மையில் தமிழக வாக்காளர்கள் முன்பு இலங்கை குறித்து சோனியா காந்தி தெரிவித்த கருத்துகள் வாய்மையற்றவை என்றாகிவிடும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலையை நடத்தியது இந்திய அரசு தான் என்று அடிக்கடி கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டு உண்மை என்று நம்புவதற்கு வழி வகுக்கும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...