![]() |
கைது செய்யப்பட்டுவிட்டதாலேயே,ஆ.ராசா குற்றவாளியாகிவிடமாட்டார்:திமுக பொதுக்குழுPosted : வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 04 , 2011 02:43:57 IST
'ஒருவர் கைது செய்யப்பட்டுவிட்ட காரணத்தாலேயே, அவர் குற்றவாளியாகிவிடமாட்டார் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆ.ராசா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இந்த பிரச்சனையை பொறுத்தவரை திமுக ஒரு திறந்த புத்தகமாக உள்ளது' என்று திமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியது.
சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த திமுக பொதுக் குழு திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி தலைமையில் இன்று காலை கூடியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி மற்றும் ஆற்க்காடு வீராசாமி, துரைமுருகன், பரிதி இளம்வழுதி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சற்குணபாண்டியன், அமைப்புச் செயலாளர்கள் கல்யாண சுந்தரம், டிகேஎஸ் இளங்கோவன் மற்றும் திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட 2 ஆயிரம் பேர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. அண்மையில் திமுகவில் இணைந்த அதிமுக எம்.எல்.ஏ சேகர்பாபு இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். பொதுக்குழு கூட்டம் துவங்கியவுடன் அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. பின்னர் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு பிரச்சனையில் தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கை ஒன்றையே சான்றாக வைத்துக்கொண்டு ஆ.ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், கைது செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் பாராளுமன்றத்தை நடத்தவிடமாட்டோம் என்று கூறி, ஜனநாயக கடமையை நிறைவேற்ற மறுத்து வரும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி, நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கியது ஜனநாயக விரோத நடவடிக்கை. ஒருவர் கைது செய்யப்பட்டுவிட்ட காரணத்தாலேயே, அவர் குற்றவாளியாகிவிடமாட்டார் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆ.ராசா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இந்த பிரச்சனையை பொறுத்தவரை திமுக ஒரு திறந்த புத்தகமாக உள்ளது. இந்த பிரச்சனையை பெரிதுபடுத்தி, எப்படியாவது திமுக மீது களங்கம் சுமத்த நினைக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகளையும் பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. இன்று திமுக பொதுக்குழுவில் ஆ.ராசாவின் கட்சி பதவி பறிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை ஆதரித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அரசியல் நோக்கர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இன்று மாலை சைதாப்பேட்டையில் பிரமாண்டமான முறையில் பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது.இந்தக் கூட்டத்தில் பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தொண்டர்களிடம் விளக்கப்படுகிறது.
|
|