அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

காவிரி பிரச்சனை:கருணாநிதியின் துரோகங்கள்..- ஜெ.

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   02 , 2010  22:56:11 IST

கடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் காவிரி நதிநீரைப் பெற கருணாநிதி என்ன நடவடிக்கை எடுத்தார்? ஏதாவது கேட்டால் கடிதங்கள் எழுதியதற்கான புள்ளி விவரங்களை தருகிறார். இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இனிமேல், இது போன்ற அறிக்கைகள் எழுதுவதில் நேரத்தை செலவிடாமல் காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,'காவிரி நதிநீர் ஆணையத்தை நான் பல் இல்லாத ஆணையம் என்று 2002 ஆம் ஆண்டு கூறியதாகவும், தற்போது இதன் மீது மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளவரைப் போல பேசுவதாகவும் கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார்.

2002ஆம் ஆண்டு அல்ல, 1998ஆம் ஆண்டு இந்த காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப் பெற்றதிலிருந்தே இது அதிகாரமற்ற ஆணையம் என்று தான் நான் குறிப்பிட்டு வருகிறேன். 1998ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை ஒரே நிலையைத் தான் நான் கடைபிடித்து வருகிறேன்.

தமிழகத்தின் உரிமையை பெறும் வகையில் அதிகாரிகளைக் கொண்ட அதிகாரமுள்ள காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு. காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு 1970 ஆம் ஆண்டு முதன் முதலாக கடிதம் எழுதியதாக கூறி இருக்கிறார் கருணாநிதி.

இதே கருணாநிதி தான், கர்நாடக அரசு ஹேமாவதி அணையைக் கட்டிக் கொள்வதில் தமிழக அரசுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை” என்று 6.3.1970 அன்று பேரவையில் பேசி இருக்கிறார் என்பது வரலாறு. இது கருணாநிதியின் முதல் துரோகம். இதனைத் தொடர்ந்து, காவேரி நதியின் உபநதிகளாகிய கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, சொர்ணவதி ஆகியவற்றில் பல்வேறு கட்டுமானப் பணிகளை மத்திய நீர் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலும், மத்திய திட்டக் குழுவின் ஒப்புதல் இல்லாமலும், தன்னிச்சையாக கர்நாடகம் துவக்கியது. கர்நாடக அரசின் இந்த அத்துமீறல்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்தவர் தான் கருணாநிதி. இது கருணாநிதியின் இரண்டாவது துரோகம்.

காவிரிப் பிரச்சினை குறித்து பேரவையில் 8.7.1971 அன்று தீர்மானம் நிறைவேற்றியதாக கூறி இருக்கிறார் கருணாநிதி. ஆனால் இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், 4.8.1971 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 131 ன் கீழ் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பேரவை மற்றும் மேலவைக்கு தெரிவிக்காமலேயே தெரிவிக்காமலேயே தனக்குள்ள அரசியல் நெருக்கடி காரணமாக திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டார் கருணாநிதி! இது கருணாநிதியின் மூன்றாவது துரோகம்.

18.2.1892 ஆம் ஆண்டு மெட்ராஸ் பிரசிடென்சி மற்றும் மைசூர் சமஸ்தானம் ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் தான் காவேரி தொடர்பான முதல் ஒப்பந்தம் ஆகும். 1924 ஆம் ஆண்டு இரண்டாவது ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த இரண்டாவது ஒப்பந்தம் 50 ஆண்டு காலம் நடைமுறையில் இருக்கும் என்றும், மறு ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்படுத்திக் கொள்வது என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தம் 1974 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியவர் கருணாநிதி! இது கருணாநிதியின் நான்காவது துரோகம்.

அடுத்தபடியாக, நான் முதல்வராக இருந்த போது நடுவர் மன்றத் தீர்ப்பினை நிறைவேற்ற முயற்சி எடுக்கவில்லை என்று கருணாநிதி என் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நிராகரிக்கும் வகையில் கர்நாடக அரசு அவசரச் சட்டம் இயற்றிய போது, அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதன் விளைவாக நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு 10.12.1991 அன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது எனது ஆட்சிக் காலத்தில் தான். காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று மத்திய அரசும், கர்நாடக அரசும் வலியுறுத்தப்பட்டது எனது ஆட்சிக் காலத்தில் தான்.

இது தவிர, அதிகாரமுள்ள காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கையை பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு புறக்கணித்த போது, அந்த அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அதிமுக விலக்கிக் கொண்டது.

காவிரிப் பிரச்சினைக்காக, எனது ஆட்சிக் காலத்தில் 2002 ஆம் ஆண்டு அனைத்துக் கட்சித் தலைவர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவையும் அழைத்துக் கொண்டு போய் பிரதமரைச் சந்தித்தோம்.

கடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் காவிரி நதிநீரைப் பெற கருணாநிதி என்ன நடவடிக்கை எடுத்தார்? ஏதாவது கேட்டால் கடிதங்கள் எழுதியதற்கான புள்ளி விவரங்களை தருகிறார். இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது? காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்காக மத்திய அரசை வலியுறுத்தவோ அல்லது கர்நாடக அரசை வலியுறுத்தவோ கருணாநிதிக்கு துணிச்சல் இருக்கிறதா?

இனிமேல், இது போன்ற அறிக்கைகள் எழுதுவதில் நேரத்தை செலவிடாமல் காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக மக்களின் சார்பில் கருணாநிதியை வலியுறுத்தி கேட்டுக் கொள்க்றேன்' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...