![]() |
நெய்தல் விருதுகள்Posted : ஞாயிற்றுக்கிழமை, ஜுலை 25 , 2010 03:26:37 IST
இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது
அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாகத் தமிழ்ச் சூழலின் தரத்தை மேம்படுத்துவது பற்றிப் பேசியும் எழுதியும் வந்தவர் சுந்தர ராமசாமி. அவர் நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு விருதளிக்க நெய்தல் இலக்கிய அமைப்பு முடிவுசெய்து, 2007ஆம் ஆண்டு கண்மணி குணசேகரனுக்கும் 2008ஆம் ஆண்டு பிரான்சிஸ் கிருபாவுக்கும் 2009ஆம் ஆண்டு எஸ். செந்தில்குமாருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இலக்கியத்தின் ஏதேனும் ஒரு வகைமையிலோ ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளிலோ முக்கியமான பங்களித்துவரும் இளம் படைப்பாளி ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இவ்வாண்டிலிருந்து ‘படைப்பு’ என்பது விமர்சனம், ஆய்வு, பதிப்புப்பணிகளையும் உள்ளடக்கியதாகக் கருதப்படும். நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் இவ்விருதுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள். படைப்புத் துறையில் தொடர்ந்து தீவிரமாக இயங்கிவருபவர்களாக அவர்கள் இருப்பதும் அவசியம். விருதில் பாராட்டுப் பத்திரமும் பத்தாயிரம் ரூபாயும் அடங்கும். நடுவர் குழு: சுரேஷ்குமார இந்திரஜித், பெருமாள்முருகன், அரவிந்தன். முதல் கவிதைத் தொகுப்புக்கான ராஜமார்த்தாண்டன் விருது நவீனத் தமிழ்க் கவிதை பற்றிய பார்வை என்றவுடன் நினைவுக்குவரும் பெயர் அ. ராஜமார்த்தாண்டன். நாற்பது ஆண்டுக் காலமாகத் தமிழ்க் கவிதை பற்றிப் பேசியும் எழுதியும் வந்தவர். கவிதையுடன் நீடித்த உறவுகொண்டிருந்தவர். கவிதையின் போக்குகளையும் அழகியலையும் வரலாற்று அடிப்படையில் மதிப்பிட்டதோடு, புதிய திறமைகளையும் அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தியவர். ஈழக் கவிதையின் மேல் தனிக் கவனம் செலுத்திய ராஜமார்த்தாண்டன் தன்னளவில் கவிஞராகவும் இருந்தவர். அவரது நினைவைப் போற்றும் வகையில் இந்த ஆண்டிலிருந்து முதல் கவிதைத் தொகுப்புக்கான ராஜமார்த்தாண்டன் விருதையும் நெய்தல் வழங்கவுள்ளது. 2009 முதல் ஒவ்வொரு ஆண்டிலும் வெளிவரும் கவிதைத் தொகுப்புகளிலிருந்து ஒரு கவிஞரின் முதல் தொகுப்பு விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும். விருதில், பாராட்டுப் பத்திரமும் ஐந்தாயிரம் ரூபாயும் அடங்கும். நடுவர் குழு: சுகுமாரன், க. மோகனரங்கன், கவிதா முரளிதரன். ! இந்த விருதுகளுக்குத் தகுதியான படைப்பாளிகளைப் / தொகுப்புகளைப் பரிந்துரைக்குமாறு தமிழ்ப்படைப்பாளிகளையும் வாசகர்களையும் நெய்தல் கேட்டுக்கொள்கிறது. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பரிந்துரைகளைச் செய்யலாம். பரிந்துரைப்போர் தங்கள் பரிந்துரைக்கான காரணங்களைச் சுருக்கமாகக் குறிப்பிடலாம். 2010 ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பரிந்துரைகளை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். புத்தகங்களை அனுப்ப வேண்டாம். நூல் பதிப்பு விபரங்களை அனுப்பி உதவுக. 2010 அக்டோபர் மாதம் நடைபெறும் பொதுநிகழ்ச்சி ஒன்றில் விருதுகள் வழங்கப்படும். தொடர்புக்கு: நெய்தல் கிருஷ்ணன் சரவணா இல்லம் 51, ஈத்தாமொழிச் சாலை கோட்டாறு, நாகர்கோவில் 629 002 கைப்பேசி: 94431 53314
|
|