அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

'பன்முகம்' - சிற்றிதழ் அறிமுகம் 9

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   12 , 2006  12:01:29 IST

"1996 ஆம் ஆண்டு அது நிகழ்ந்தது. அமெரிக்காவிலிருக்கும் ஜான்
ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில் ஜாக்ஸ்டெரிடா என்பவர் உரையாற்றியபோது அது நடந்தது. நிர்-நிர்மாணம் (De-Construction) என்ற வார்த்தையை முதன் முதலாக அவர் உச்சரித்தபோது ஒரு அதிசயம் போல் அது நேர்ந்தது. யாருமே சற்றும் எதிர்பாராத வகையில் டெரிடா என்ற அந்த இளம் பேராசிரியர் அதுவரை அறியப்பட்டிருந்த மேற்கத்திய தத்துவ கலை இலக்கிய வரலாற்றை தலைகீழாகக் கொட்டி கவிழ்த்த போது பார்வையாளர்கள் தங்கள் கால்களுக்குக் கீழே இருந்த தரை நழுவியதை உணர்ந்தார்கள். அன்று முதல் பின்நவீனத்துவம் என்ற பூதம் உலகத்தை பிடித்தாட்ட வந்திருக்கிறது என்பதையும் உணர்ந்தார்கள்"1930 ஆம் ஆண்டில் பிரான்சின் ஆதிக்கத்துக்குட்பட்ட அல்ஜீரியாவில் யூதப் பெற்றோருக்குப் பிறந்து உலக பின் நவீனத்துவச் சிந்தனையாளர் வரிசையில் தவிர்க்க முடியாத பெயராக நிலைத்துவிட்ட 'டெரிடா'வைப் பற்றிய மேற்கண்ட பதிவு 'டெரிடா'வின் மறைவையொட்டி 'பன்முகம் அக்டோபர்-டிசம்பர் 2004' இதழில் பதிவாகியுள்ளது.

இப்படி பின் நவீனத்துவம் சார்ந்த அதன் அனைத்துலக நிகழ்வுகளையும் தமிழ் வாசகர்களுக்குத் தரும் நோக்குடன் வெளிவந்து கொண்டிருக்கிறது 'பன்முகம்' கலை இலக்கியக் கோட்பாட்டுக் காலாண்டிதழ். இதன் ஆசிரியர் எம்.ஜி.சுரேஷ். பதிப்பாளர் ஆர். ரவிச்சந்திரன். முதல் இதழ் 2001ஆம் ஆண்டு செப்டம்பர்-நவம்பர் இதழாக வெளிவந்தது. இதுவரை 16 இதழ்கள் வெளிவந்துள்ளன. பின் நவீனத்துவம் சார்ந்த படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டாலும், முன்னோர்களின் படைப்புகளை நிராகரிக்காமல் நவீன படைப்புகளையும் ஒருங்கே வெளியிட்டு வருகிறது பன்முகம். அவ்வப்போது சில முக்கியமான சிறப்பிதழ்களையும் வெளியிட்டு வருகிறது.

ஏழாவது இதழ்(ஏப்ரல்-ஜூன் 2003) க.நா.சு. நினைவு சிறப்பிதழாக வெளிவந்தது. பிறகு சிறுகதைச் சிறப்பிதழ் (ஜூலை-செப்டம்பர் 2003), ஜெம் ஜாய்ஸ் சிறப்பிதழ் (ஜூலை-செப்டம்பர் 2004), எட்கர் ஆலன்போ சிறப்பிதழ் (ஜனவரி-மார்ச் 2005) எனத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

நவீன இலக்கியத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் ரமேஷ்:பிரேம், யுவன் சந்திரசேகர், மாலதி மைத்ரி,பாவண்ணன், லதா ராமகிருஷ்ணன் போன்றோர் தொடர்ந்து பன்முகத்தில் எழுதி வருகின்றனர்."பரிசோதனை முயற்சிப் பிரதிகளை வெளியிடுவது பன்முகத்தின் முக்கிய அம்சமாகும்" என்கிறார், எம்.ஜி.சுரேஷ். டாடாயிசம், சர்ரியலிசம், கியூபிசம் போன்ற இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய எம்.ஜி. சுரேஷின் தொடர் முக்கியமானதாகும்.

"கோட்பாடுகள் (இசங்கள்) தமிழில் ஒதுக்கப்படுகிறது. இலக்கியத்திற்குத் தொடர்பு இல்லாதது என்று ஒதுக்கிவிடும் பொறுப்பற்ற தன்மை தமிழில் உள்ளது. உண்மையான இலக்கியம் என்பது கோட்பாடுகளை மீறி நிற்பது என நினைக்கிறார்கள். கோட்பாடு பற்றிய உணர்வு வேண்டும் என்பதால் இத்தொடரை எழுதினேன்" என்கிறார் எம்.ஜி.சுரேஷ்.

சிறந்த மொழிபெயர்ப்புக் கதைகளையும் கவிதைகளையும் வெளியிட்டு வருகிறது பன்முகம்.'பின் நவீனத்துவக் கவிதைகள் (Post modern poetry), 'மீ பிரதிக் கவிதைகள்' (Hyper text) போன்ற புதிய வகைமை கவிதைகளையும் அறிமுகம் செய்து வருகிறது 'பன்முகம்'.
'சிஸிபஸ்' போன்ற சர்ச்சைக்குரிய கதையும் வெளிவந்துள்ளது. பன்முகத்தின் பதிப்பாளர் ரவிச்சந்திரன் 'புதுப்புனல்' என்ற பதிப்பகம் நடத்தி வருகிறார்.
பிரேம்: ரமேஷின் குறுநாவலான 'கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள்', ரிஷியின் 'என் உனக்கு' கவிதைத் தொகுப்பையும், ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் பெண்ணிய நாவலான 'நாளைய மனிதர்கள்', கோவை ஞானியின் 'மார்க்ஸியத்திற்கு அழிவில்லை' போன்றவை புதுப்புனலின் முக்கிய வெளியீடுகளாகும். அத்துடன் எம்.ஜி. சுரேஷின் சமீபகால அனைத்து நாவல்களையும் வெளியிட்டு வருகிறது புதுப்புனல்.

ஆசிரியர் எம்.ஜி. சுரேஷைப் பற்றி....

எம்.ஜி. சுரேஷ் பின் நவீனத்துவ எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர். நாவல், சிறுகதை, கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார். அரசு சுகாதாரத் துறையில் பணியாற்றி வந்த இவர், விருப்ப ஓய்வு பெற்று முழுநேர இலக்கியவாதியாக இயங்கி வருகிறார். இவரது 'இரண்டாவது உலகைத் தேடி' என்கிற சிறுகதைத் தொகுப்பு 1981-இல் வெளிவந்தது.

1984-இல் 'தாஜ்மஹாலுக்குள் சில எலும்புக் கூடுகள்' எனும் நாவலும், 1985-இல் 'கான்கிரீட் வானம்' என்கிற நாவலும் 1998-இல் 'கனவுலகவாசியின் நனவு குறிப்புகள்' எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளன. இவை நான்கும் நவீனத்துவ படைப்புகளாகும்.

'அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்' (1999), 'அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும்'(2000), 'சிலந்தி' (2001), 'யுரேகா என்றொரு நகரம்'(2002), '37'(2003), ஆகிய ஐந்து பின்நவீனத்துவ நாவல்களும் 'பின்நவீனத்துவம் என்றால் என்ன?'(2004) என்கிற நூலும் தொடர்ந்து வெளிவந்துள்ளன.

இனி அவருடன்....

பின் நவீனத்துவத்திற்கென்று இதழ் தொடங்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?


"பின் நவீனத்துவத்திற்கென்று அ. மார்க்ஸ், ரவிக்குமார் நடத்திய 'நிறப்பிரிகை', நாகர்ஜூனாவின் 'வித்தியாசம்', சாருநிவேதிதாவின் 'சிதைவு', பிரேம்: ரமேஷின் 'கிரணம்' முதலிய இதழ்கள் வெளிவந்தன. ஒரு கட்டத்திற்குப் பிறகு அவை நின்று போயின. கல்குதிரை, நிகழ் போன்ற இதழ்களில் பின்நவீனத்துவம் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. தொடர்ந்து பின்நவீனத்துவத்திற்கான விவாதத்தளம் வேண்டும் என்பதால் பன்முகத்தைத் தொடங்கினேன். பின்நவீனத்துவம் குறித்து பேச வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டாலும் நேரடியாக பின் நவீனத்துவ இதழாக அறிவிக்காமல் 'கலை இலக்கியக் கோட்பாட்டு இதழ்' என்றுதான் முதலில் ஆரம்பித்தேன்.

ஏனென்றால் பின்நவீனத்துவம் குறித்து ஒரு தவறான புரிதல் தமிழ்ச் சூழலில் நிலவியது. குடும்பத் தகர்ப்பு, ஒழுக்க விழுமியங்கள் மீது அதிர்ச்சி மதிப்பீடு என பின்நவீனத்துவம் புரிந்து கொள்ளப்பட்டதால் முன் தீர்மானத்துடன் நிராகரித்துவிடுவார்கள் என்பதால் இப்படிச் செய்தேன். நாளடைவில்தான் பின்நவீனத்துவ இதழாக அறியப்பட்டது".

இதழ் நடத்துவம் அனுபவம் எப்படி இருக்கிறது?

முன்பு எனக்கு பல இலக்கியவாதிகள் நண்பர்களாக இருந்தார்கள். இந்த இதழை ஆரம்பித்தப் பிறகு அவர்களெல்லாம் எதிரிகளாகிவிட்டார்கள். நான் ¾னியாக இருந்தபோது பல நண்பர்கள் இருந்தார்கள்.

இப்போது என்னை 'Post modernist' குழுவில் ஒதுக்கிவிட்டார்கள். இது தவிர்க்க முடியாதது. இதை நான் எதிர்மறையாகப் பார்க்கவில்லை என்கிறார் எம்.ஜி. சுரேஷ்.

புதிய கோட்பாடுகள் குறித்து அறிது கொள்ள விரும்புபவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டிய இதழாக பன்முகம் வெளிவந்து கொண்டிருக்கிறது.

தனி இதழ் ரூ25/
ஆண்டுச் சந்தா ரூ 100/
வெளிநாடுகளுக்கு ஆண்டுச் சந்தா ரூ 400/

படைப்புகள் மற்றும் சந்தா அனுப்ப வேண்டிய முகவரி:

புதுப்புனல்
5/1, பழனி ஆண்டவர் கோயில் தெரு,
முதல் மாடி, அயனாவரம்,
சென்னை- 600 023.

மின்னஞ்சல்:panmugam@yahoo.com

- மு. யாழினிவசந்தி

வாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது.


கல்வெட்டு பேசுகிறது
நவீன விருட்சம்
நிழல்
முகம்
உயிர்மை
புதுவிசை
கவிதாசரண்
கூட்டாஞ்சோறு


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...