அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பட்னாவிஸ் துணைமுதல்வர் - பா.ஜ.க.வின் அடுத்த அதிரடி 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஒரு பவுத்த மேலாதிக்கமுள்ள சிங்களனுக்கு காந்தி சிலை பரிசு

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   15 , 2010  22:25:02 IST

சென்னையில் நடைபெற்ற கார்ட்டூனிஸ்ட் 'பாலாவின் ஈழம் - ஆன்மாவின் மரணம்' என்ற கார்ட்டூன் தொகுப்பின் அறிமுகம் மற்றும் விமர்சனக் கூட்டத்தில் (11.6.2010) பங்கேற்று பேசிய சிறப்புரையாளார்களின் உரைகள்.


தமிழருவி மணியன் :


நான் இப்போது பொதுக்கூட்டங்களில் பேசுவதில்லை.பேசுவதால் எந்தப் பயனும் இல்லை என்பது என் நாற்பது ஆண்டு கால பேச்சின் அனுபவம்.ஈழத்தில் நடக்கும் பிரச்சனை பற்றியும் இன்னல்கள் பற்றியும் பேசிக்கொண்டே இருப்பதில் எந்த பயனும் இல்லை. அவற்றை முறையாக ஆவணப்படுத்த வேண்டும்.ஆவணப்படுத்துவதை அருள் எழிலன் கவிதை வடிவில் செய்தார் .பாலா கார்ட்டூன் வடிவத்தில் செய்கிறார். இன்றைக்கு இந்த கேலிச் சித்திரங்கள் முழுமையாக ஒரு புத்தக வடிவில் வந்துள்ளது.இதற்கு பாலாவிற்கு என் பாராட்டுகளை எந்த அளவிற்கு வழங்குவேனோ அந்த அளவிற்கு இதனை வெளியிட்ட குமுதம் பத்திரிகைக்கும் வழங்குவேன் .

மேலும் நான் காங்கிரஸ்காரனாய் இருந்தேன் என்று சொல்வதற்கு அருவருப்பாய் இருக்கிறது.இன்று காங்கிரஸ் கிடையாது. நான் இருந்தது காங்கிரஸ் என்னும் இயக்கம் . இன்று இருப்பது காங்கிரஸ் என்ற கம்பெனி . என்னை காங்கிரஸ்காரன் என்று அடையாளப்படுத்துவதை விட்டு விடுங்கள் . நான் தமிழன். அடிப்படையில் இன உணர்வும் மொழி உணர்வும் கொண்டவன். தமிழ்ச் சாதியில் இருப்பதற்கு நான் அவமானப்படுகிறேன்.முதலில் மொழி , பின் அந்த மொழியின் இனம். அதன் பின் தான் இந்தியாவை பற்றி சிந்திக்க வேண்டும்.இந்தியா என்பது ஒரு நாடு கிடையாது.பல மொழிகள் , பண்பாடு எல்லாம் சேர்ந்த ஒரு அமைப்பு இந்தியா. ஒரு நாடு ஒரு மதம் என்று வாழ்பவர்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள். அவர்களுக்கு ஒரு நாடு இந்தியா, ஒரு மதம் இந்து, ஒரு மொழி இந்தி, அதே போல் தான் சிங்களமும். ஒரு நாடு சிங்கள பூமி , ஒரு மொழி சிங்களம் , ஒரு மதம் பவுத்தம் .

தமிழன் என்றுமே ஒன்றுபட்டு நின்றதில்லை. இந்தியாவுக்கு ராஜபக்க்ஷே வருவது திடீர் அறிவிப்பில்லை.அது எல்லோருக்கும் தெரியும் . தமிழ் நாட்டில் தமிழைச் சொல்லி தமிழ் இனத்தை சொல்லி எத்தனை கட்சிகள் வயிறு வளர்க்கின்றன. இத்தனை அரசியல் கட்சிகளும் மாநாடு நடத்தினால் எவ்வளவு கூட்டத்தை சேர்ப்பார்கள். யாரும் தமிழனாக இல்லையே ? கட்சிக் காரனாக தானே இருந்தார்கள். சீமான் பக்கம் 100 பேர், கிருட்டிணசாமி பக்கம் 50 பேர் , திருமாவளவன் பக்கம் 200 பேர் , வைகோ மற்றும் நெடுமாறன் பக்கம் 1000பேர் , இப்படி இதிலும் குழுவாகப் பிரிந்து தானே இருக்கிறான் தமிழன் .இதில் கூட ஒன்றுபட வில்லை என்றால் வேறு எதில் ஒன்று சேர போகிறீர்கள் . உங்களை சரியாக புரிந்து வைத்துள்ள அரசியல்வாதி இந்த தமிழ் நாட்டில் உண்டு என்றால் அவர் கருணாநிதியே. ஒன்றும் நடக்காது என்று அவருக்கு தெரியும்.
நான் தெளிவாக இருக்கிறேன். நான் சத்தியமாக சொல்கிறேன் தமிழ் ஈழம் கண்டிப்பாக கிடைக்கும்.இந்தியாவின் உதவி இல்லாமலேயே கிடைக்கும் .தமிழ் நாட்டில் உள்ள தமிழனின் உதவி இல்லமலேயே கிடைக்கும்.அதற்கு இலங்கையில் நடந்தது ஒரு இனப்படுகொலை (Genocide) என்று நிருபிக்க வேண்டும். அதுதான் மிக முக்கியமானது.

செக்கஸ்லோவியாவில் செக் என்பது ஒரு இனம், ஸ்லோவாக் என்பது ஒரு இனம், இவ்விரண்டு இனங்களும் ஒன்றாக இருந்தது, பிரிய வேண்டும் என்று கருதினார்கள் .நாடாளுமன்றத்தை கூட்டினார்கள்.வாக்கெடுப்பை நடத்தினார்கள் . இரண்டும் பிரிந்து செக் ஒரு குடியரசு, ஸ்லோவக் ஒரு குடியரசு என்று பிரிந்தது . ஒரு துளி ரத்தமும் சிந்தாமல் இரண்டு இனங்களும் விருப்பபட்டு பிரிவதற்கு உலக நாடுகள் துணை நின்றன.எனவே நாம் எல்லாவற்றையும் ஆவணப்படுத்த வேண்டும்.உலக நாடுகளின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

தமிழ் நாட்டில் மானமுள்ள ஆட்சி நடக்கும் என்றால் தமிழ் இனம் சார்ந்த ஆட்சி நடக்கும் என்றால் சட்டமன்றத்தில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை (Genocide) என்று நிறைவேற்றி இருக்க வேண்டும்.கருணாநிதி ஒன்றும் போர்க் கொடி தூக்க வேண்டாம். கருணாநிதிக்கு மொழிப்பற்று , இனப்பற்று இல்லை என்று சொல்ல மாட்டேன் . தனது நாற்காலிக்கு பங்கம் வராதவரை அவருக்கு மொழிப்பற்று, இனப்பற்று உண்டு. 1980 களில் நாடாளுமன்றத்தில் இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது இது ஒரு இனப்படுகொலை என்று சொன்னார். அவர் சொன்ன அந்த வாசகத்தை இன்று சோனியா சொல்வதாக இல்லை. சொல்ல வைக்கிற ஆளுமை தமிழ் நாட்டின் முதலமைச்சருக்கு இல்லை. இவர்களை அச்சுறுத்தும் சக்தியாக தமிழன் இல்லை.

ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர், செய்தியாளர் அத்தனை பேரும் இனம் சார்ந்து, மொழி சார்ந்து சமூக நலன் சார்ந்தும் சிந்தித்து செய்திகளை வெளியிட வேண்டும்.அப்படி செய்தால் கூட அந்த ஊடகத்தின் உரிமையாளரை மீறி நீங்கள் ஒன்றும் பெரிதாக செய்து விட முடியாது என்று எனக்கு தெரியும்.அதில் அற்புதமாக தனது கேலி சித்திரங்களை கொடுத்த பாலா என்கிற தனி மனித உணர்வின் வெளிப்பாடு இன்று வெளிவந்ததை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

மாலதி மைத்ரி (கவிஞர்)
நான் எனது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதில் ஆறுதல் அடைகிறேன். இப்படி ஒரு இனப்படுகொலை நடந்து கொண்டு இருக்கும் போது எழுத்தாளர்கள் எப்படி விதவிதமாக எழுதி கொண்டு இருக்கிறார்கள் என்பது என் ஆச்சர்யம்., எழுத்தாளர்கள் மத்தியிலும் ஒற்றுமை இல்லை. ஒரு சிலர் புலிகளை விமர்சித்தும், ஒரு சிலர் நாட்டு பற்றை விமர்சித்தும்,ஒப்பாரி வைப்பதுபோல் பதிவு பண்ணிகொண்டு உள்ளனர்.எந்த ஒரு தேசிய இனத்திலும் இந்த நிலையை நான் கண்டதில்லை.இது மிகப்பெரிய அவமானம்.அதனுடைய வெளிப்பாடாகத்தான் " மாபலி விருந்து " என்ற கவிதையை எழுதினேன். அந்த வலியை நான் கொட்டி ஆக வேண்டும் அதனால் தான் இந்த கவிதையை எழுதினேன்.


மாபலி விருந்து அழைப்பு!


ஆன்றோரே சான்றோரே
பேரரறிஞர்களே மூதறிஞர்களே
கவிஞர்களே கலைஞர்களே
அரசு ஊழியர்களே
என் உயிரினும் உயிரான தமிழர்களே
நாம் சுவாசித்தது ஒரே காற்று
நாம் பேசியது ஒரே மொழி
நாம் நடத்தியது ஒரே பேரம்
நாம் விதித்தது ஒரே விலை
நாம் விற்றது ஒரே இனம்
காட்டிக்கொடுக்க நீண்டதும்
நம் ஒரே விரல்
நாம் செய்ததும் ஒரே துரோகம்
இம்மாபெரும் வரலாற்றை
நாம் சாதித்த ஓராண்டின் நிறைவைக்
கொண்டாடும்
விருந்துக்கு அழைக்கிறேன்
உலகே தமிழ் மண்ணில் திரளட்டும்
விரோதி வருடம்
சித்திரை ஐந்தாம் நாள்
வங்கக் கடல் தீவில்
சிங்கப் படைகள்
சில லட்சம் மக்களைக் கொன்றொழித்து
சீர்மிகு வரலாறு படைத்த
மாபலி நாளின்
மாண்பினைப் போற்றும் வகையில்
இச்சித்திரை மாதம்
பௌர்ணமி தினத்தில்
மனிதகுலமே கண்டிராத வகையில்
மாபெரும் விருந்து நடக்கிறது
அனைவரும் கலந்துகொண்டு
விருந்தினைச் சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்
அறுக்கப்பட்ட மென்முலைகள்போன்ற
இட்லியுடன் பிள்ளைக்கறி பிசைந்த
செவ்வரிசிச் சோறு
மதுவருந்தும் கவிஞர்களுக்கு மட்டும்
நுரை பொங்கும் செங்குருதியுடன்
மூளை வறுவல் வழங்கப்படும்
இதிலுள்ளவை தவிர்த்து
சிறப்புணவு தேவையெனில்
மூன்று தினங்களுக்கு முன்
எங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்தால்
தீவிலிருந்து
தனி விமானத்தில்
தருவித்துத் தர ஏதுவாக இருக்கும்
உலகச் சமூகமே வியந்து நிற்க
உலகத் தமிழர்கள் ஒன்றாய் நின்று
இப்பலி விருந்தைச் சிறப்பிக்கும்படி
கேட்டுக்கொள்கிறேன்.
இவ்விருந்தை வழங்குபவர்கள்
ஹைடு அண்ட் சீக் வேர்ல்டு விஷன்
ஹனி டியூ அண்ட் ஸ்பிரிங் பிரிவரிஸ்,
ஆன்ட்டி வார் அண்ட் பீஸ் ஹன்டர்ஸ்,
வேர்ல்டு நைட்ரோ கெமிக்கல்ஸ்,
இன்டர்நேஷனல் வார் கிரிமினல்ஸ் அசோஸியேஷன்.
குறிப்பு: தவிர்க்க இயலாத காரணத்தால் ஆங்கிலத்திலேயே அயல் நாட்டு நிறுவனங்களின் பெயர்கள் அச்சிடப்பட்டு உள்ளன. இதைப் பிழையாகக் கருதி தமிழ்ப் பற்றாளர்கள் விருந்துக்கு வராமல் இருந்துவிடக் கூடாது. இது எங்கள் அன்புக் கட்டளை!
மோசிக்கீரனார் பற்றி படித்திருக்கிறோம் , முரசு கட்டிலில் தூங்கினார் மன்னர் இருக்கிறார் என்ற பயமில்லாமல் , தான் ஒரு கலைஞன் என்ற மமதையில் என்று. இன்று அறிவுஜீவிகளின் நிலை மன்னருக்கு காலணி போட்டு விடச் சொன்னால் கூடப் போட்டு விடுவார்கள்.அந்த நிலையில் தான் இருக்கிறது.அதனால் தான் இந்த கவிதையை எழுதினேன்.

துரோபதி படுகொலைக்கு பலிசோறு கொடுப்பார்கள் , அதேபோல் ஒரு விருந்து போலதான் இன்று செம்மொழி மாநாடு நடக்க இருக்கிறது.பத்திரிகையாளர்களும் சரி, படைப்பாளிகளும் சரி , கொஞ்சம் இனப்பற்று , மொழிப்பற்று , உள்ளவர்களாய் இருக்க வேண்டும். அரசின் தவறுகளை நாம் தான் கோடிட்டு காட்ட வேண்டும். நாமே மவுனமாய் இருந்தால் மக்கள் மேலும் மேலும் கோழைகளாய் போய்விடுவார்கள் . அதனால் நாம் தான் அவர்களை எழுப்ப வேண்டும் , பாலா துணிந்து இந்த புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார் வாழ்த்துக்கள்.

அருள் எழிலன்.
பாலா என்னுடைய நண்பர் , பாலா கார்ட்டூன் போடுவார், நான் எழுதுவேன். பக்கத்தில் இருக்கும் இறையாண்மை உள்ள தேசம் என்று சொல்லப்படும் ஒரு தேசத்தில் எவ்வளவு இனப்படுகொலை, ஏன் இவ்வளவு மனிதப் பிணம், என்ன செய்தார்கள். அவர்கள் இது ஈழத்தில் மட்டும் இல்லை நேபாளம் , தண்டகாரண்யா , இராமேசுவரம், நாளைக்கு தமிழ்நாட்டிலும் செய்வீர்களா?


ஏன் என்றால் இங்கெல்லாம் பிரச்சனை இருக்கிறது.மீனவர்கள் அதிக காசுக்காக கடல் தாண்டுகிறார்கள் என்று இந்திய அரசாங்கமே சொல்கிறது. நான் தனி தமிழ் நாட்டை ஆதரிக்க வில்லை, ஆனால் தமிழ் இனத்தை ஆதரிக்கிறேன். இங்கு இந்தியா அமெரிக்காவின் அடிமையாக நடந்து கொள்கிறது. இந்த கொலைகள் ஈழத்தில் மட்டும் இல்லை, தண்டகாரண்யாவில் நடந்தாலும் வேறு எங்கு நடந்தாலும் நாங்கள் போராடுவோம்.தமிழர்கள் இந்த போராட்டத்தை நிறுத்த முடியுமா என்ற கேள்வி உள்ளது.
தமிழர்களால் நிறுத்த முடியும் , ஆனால் தமிழர்களுக்குள்ளே ஒற்றுமை இல்லை. ஈழம் கிடைக்கும் , இலங்கை இரண்டாக பிரிய வேண்டிய நாடு, எங்கள் உடம்பில் உயிர் உள்ளவரை ஆதரிப்போம் , அது புலிகளாக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி..

டக்லஸ் தேவானந்தா , ஜனநாயக நாடு என்று சொல்லும் நாட்டின் பிரதமருடன் உட்கார்ந்து விருந்து சாப்பிடுகிறான். காந்தி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறான், ஒரு பவுத்த மேலாதிக்கமுள்ள சிங்களனுக்கு நீங்கள் காந்தி சிலையை பரிசாக வழங்குகிறீர்கள்.

இலங்கையில் இந்திய ராணுவம் ஒரு அமைப்பை உருவாக்கியது .அது தமிழ் தேசிய ராணுவம்.அந்த அமைப்புக்கு குழந்தைகளை கடத்தி கொடுத்தது இரண்டு பேர் ஒன்று டக்லஸ் தேவானந்தா , இரண்டாவது வரதராஜ பெருமாள். கடைசி வரை இந்தியா இருவரையும் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது. அவன் சொல்கிறான் இந்தியா எங்களை மன்னித்து விட்டது என்று.

85 வயது பார்வதி அம்மாவை நாட்டிற்குள் வரவிடவில்லை, டக்ளஸ் தேவானந்தாவை டெல்லியில் அழைத்து விருந்து வைக்கிறார்கள்.
70000 பேரை போபாலில் கொன்று குவித்தவனை தனி விமானத்தில் தப்ப வைத்த நீங்கள் தமிழ் நாட்டில் மூன்று பேரை கொன்றவனை தனி விமானம் வைத்து அழைத்து விருந்து கொடுத்தீர்கள்.நீங்கள் யார்..?

பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்க்கும் பத்திரிகையாளர்களாகிய நாம் தான் தைரியமாக அரசின் குற்றத்தை எடுத்து கூறவேண்டும்..அதை தான் பாலா செய்தார்.


ஓவியர் வீர சந்தானம்.
பாலாவை முதலில் நான் வாழ்த்துகிறேன்.பெருமைப் படுகிறேன்.என் இனத்தை பற்றி துடித்த கலைஞர்களில் முதலில் உள்ளார் பாலா, நான்கூட பின்னுக்கு தள்ளபட்டேன்.இந்திரா அம்மா இலங்கை படுகொலைக்கு ஜெனோசைடு என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தினார் , இரண்டாவதாகப் பயன் படுத்தியவன் நான் தான்."Genocide of Lanka Tamils " என்ற ஒரு ஓவியக்கண்காட்சியை 1985ல் சென்னையில் நடத்தினேன்.அந்த மக்களுக்காக குரல் கொடுத்தேன்.அது ஒரு இனப்படுகொலை தான். இந்திய சுதந்திரத்திற்கு ஏராளமானவர்கள் போராடினார்கள் . மரணம் அடைந்தவர்கள் 40000 பேருக்கு உள்ளேதான்.ஒரு சுண்டைக்காய் நாடு இலங்கை, அதை விட மிளகு அளவு உள்ளது தமிழ் ஈழம் , 200000 பேரை கொன்று குவித்தான் அந்த ராஜபக்க்ஷே, ஒரு கொலைகாரன். அவனிடம் நம் பிரதமர் கைகுலுக்கி கொண்டு இருக்கிறார், இன்னொரு கொலைகாரன் டக்லஸ் தேவானந்தா, அவனுக்கு கை கொடுக்கிறார் நம் பிரதமர்,என் இனத்தை அழிப்பார்கள். என் தொப்புள் கொடியை அறுப்பார்கள், நான் இந்தியன் என்று சொல்ல வேண்டுமாம்.எப்படி சொல்வது . என் இனத்தை கொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கிறது.என் மக்கள் கொல்லபடுகிறார்கள் என்று என் தமிழ் நாட்டு தலைவனிடம் முறையிட்டோம். கவனிக்கவில்லை. பாலா இந்த புத்தகத்தில் கிழித்து இருக்கிறார். நம் மக்களை கொன்ற போது எல்லோரும் போய் நின்றோமே.நம் தலைவரிடம் . ஐயா காப்பாத்துங்க என்று சொல்லி . இந்திய வெளியுறவு கொள்கை தான் திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கை என்று ஒரே வரியில் சொல்லி முடித்து விட்டார்.ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவி செய்ய முடியாது.என்றார். என்ன நடிப்பெல்லாம் நடிக்க வேண்டுமோ அதெல்லாம் செய்தார். மழை விட்டது தூவானம்தான் என்று சொல்கிறார்.இலங்கை அரசின் தீர்மானம் எனக்கு திருப்தி அளிக்கிறது என்றார்.புலியை பெத்த வயறு மலேசியாவில் இருந்து வந்தது.மண்ணில் கால் வைக்க முடிய வில்லை. நாங்கள் என்ன பாவம் செய்தோம்.இந்த கொடுமைக்கு தீர்வு என்ன. ? ஊடகத்தில் உள்ளவர்கள் தான் இந்த குற்றங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.

முத்துகுமார் என்ற வீர மரணம் அடைந்த போராளிக்கு ஒரு மரியாதை இல்லை.ஒரு சிலை வைக்க முடியவில்லை இந்த தமிழ் நாட்டில்.. ஒவ்வொரு தமிழனும் பாலாவின் இந்த நூலை தன் பையில் வைத்து இருக்க வேண்டும்.பார்த்து பார்த்து வயிறு எரிய வேண்டும்.இந்த பாலாவின் புத்தகம் என்னுடன் இருக்கும் , இந்த புத்தகத்தை தூக்கினால் என் தமிழனை தூக்கி வருவதற்கு சமம்.


வழக்கறிஞர் சுந்தர்ராஜன் :

நான் ஒரு குற்ற உணர்வுடன் முன்னாள் பத்திரிகையாளனாய் பேச வந்துள்ளேன் . அந்த தமிழர்களுக்கு ஊடகவியலார்கள் செய்த துரோகம் மிகப்பெரிய துரோகம்.என்றே சொல்வேன். சேத்துபட்டில் நாய்கள் கண்காட்சியில் நான்கு நாய்கள் செத்த செய்தியை போட்டவர்கள். இந்த இனப்படுகொலையை பெரிது படுத்தவில்லை. பத்திரிகையாளர்கள் ஒரு சோம்பேறி என்று இங்கு நான் வேறு வழியின்றி பதிவு செய்கிறேன்.பெரும்பாலான பத்திரிகையாளரிடம் சமூக உணர்வு இல்லை. ஒரு செய்தியாளனை விட புகைப்படக் கலைஞனை விட அதிகமாக எடுத்துரைத்தவர் கார்ட்டூனிஸ்ட் பாலா...அவருக்கு கொடுக்கபட்ட சுதந்திரத்தை பயன் படுத்தி ஒரு தொகுப்பை வெளியிடும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.

பாமரன்.

1984 ல் தோழர் வீர சந்தானத்தின் ஓவிய புத்தகம்தான் நான் பார்த்த முதல் ஓவிய புத்தகம்.அதில் ஒரு ஓவியத்தில் தலைகள் கீழே பரத்தி போட்டிருக்கும். அதற்கு கீழ் ஈழ கவிதை ஒன்று " நானும் நீயும் மனிதன் என்று அவர்களுக்கு தெரியாது " என்னை மிகவும் பாதித்த ஓவியம் அந்த ஓவியம்.

குறிப்பாக ஈழத்திற்காகவே இந்த தொகுப்பு வந்தது போல் உள்ளது.இங்கு பேசிய ஒவ்வொருவரும் ஏன் கலைஞர் பண்ணவில்லை, ஏன் ராமதாஸ் பண்ணவில்லை, ஏன் அவர் பண்ணவில்லை, இவர் பண்ணவில்லை என்று கேள்வி எழுப்பினார்கள்.

நானும் 80 களில் இதே போல் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து கொண்டு இருந்தேன் , அந்த கம்பெனியின் பெயர் திராவிட முன்னேற்ற கழகம், அப்போது மன்னாரில் இருந்து வந்த 14 வயது சிறுவன் குட்டி என்பவனை கோவையில் பணியாற்ற அனுப்பி வைத்து இருந்தார்கள் ஈழப்புரட்சியாளர்கள். நான் கம்பெனியின் பக்திமான். அப்போது அந்த பையனின் பேச்சும் அணுகுமுறையும் வெறிப்பிடித்த கட்சிக்காரனாய் இருந்த என்னை மாற்றி உங்கள் முன்னாள் இப்படி பேச வைத்திருக்கிறது. காரணம் அந்த 14 வயது சிறுவன்.அவன் பேசுவான், ஏண்ணே, தலைவரை விட்டா யார்ண்ணே தமிழுக்கு இருக்கா...நம்ம தலைவர்தாண்ணே .. நானும் ஆமா குட்டி உனக்கு தெரியுது.. மத்தவங்களுக்கு தெரியவில்லையே . எல்லோரும் அந்த தொப்பி போட்டவருக்கே ஓட்டு போடுகிறார்கள். ஆனாலும் தமிழுக்காக தலைவர்தான் போராடுறார், நானும் இலங்கையில் இருந்து வந்தவனுக்கு புரிகிறதே என்று சந்தோசப்பட்டேன்.ஆனாலும் பெண் இனத்தை பற்றி தந்தை பெரியாருக்கு அப்புறம் கலைஞர் தானே பேசுறார் , ஆமாகுட்டி என்றேன். ஆனாலும் ஒரு வருத்தம்ணே...இந்த ஆனாலும்கிற வார்த்தைக்கு பின்னால் பெரிய புனை மொழி வைத்து இருக்கிறான் என்று தெரியாது. என்ன குட்டி சொல்ற என்றேன். தலைவரு என்ன இருந்தாலும் சுமங்கலி என்று ஒரு பத்திரிகை நடத்த கூடாதுன்னே என்றான். அவரு எங்கப்பா நடத்துறாரு...முரசொலி மாறன் எம்.பி அவர்களால் நடத்தபடுகிறது என்றேன். முரசொலி மாறன் தி.மு.க தானன்னே..என்றான். அதன் பின் நான் யோசித்து பார்த்தேன்.ஈழத்திற்கு போராட வேண்டும் என்றால் ஓட்டு பொறுக்கி கட்சி எந்த கட்சியிலும் இருக்க கூடாது என்று நினைத்தேன்.மண்டல் கமிஷன் தீர்மானம் வந்தால் வி.பி.சிங் பதவி காலி என்று தெரியும். ஆனால் அவர் கொண்டு வந்த போது நிறைய பேர் ஓட்டு போடுவார்கள் என்று எண்ணினேன் ஆனால் ஒருவரும் ஓட்டு போட வில்லை.ஒரே ஒரு மனிதன் தான் வி.பி.சிங் மண்டல் கமிஷனைப் புரிந்து கொண்டு அணி மாறி ஓட்டு போட்டார். அது அப்துல் அமீது . அதே போல் தமிழருவி மணியன் அவர்களை பார்க்கிறேன்.

நான் லண்டனில் இருக்கும் போது அங்குள்ள தமிழர்கள் என்னிடம் கேட்டார்கள் , கலைஞர் ஏன் இப்படி செய்து விட்டார், ராமதாஸ் ஏன் இப்படி செய்து விட்டார் என்று. அவர்களுக்கு நான் சொன்னது நீங்கள் மீண்டும் மீண்டும் தமிழக தலைவர்களை நம்பி கொண்டு இருந்தால் உங்கள் தேசிய தமிழின தலைவரை கொச்சை படுத்துகீறீர்கள் என்று அர்த்தம்.,முல்லைப் பெரியாறு பிரச்சனை தீர்க்காதவர்கள், காவிரி பிரச்சனையை தீர்க்காதவர்கள், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாச்சி என்பவர்கள், எப்படி ஈழத்தமிழர் விடுதலைக்கு கூட நிற்பார்கள் என்று நினைத்து பார்க்க வேண்டும்.

ஈழத்தமிழர் போராட்டம் நமக்கு எதை கற்று கொடுத்தது.தம்பி பாலா கார்ட்டூன் போட்டது ஒரு சில பேருக்கு கற்று கொடுத்தது.தோழர்கள் சொன்னார்கள் பிரிந்து கிடந்தவர்கள் ஒன்று சேர்ந்தால் காப்பாற்றி விட முடியாதா என்று, செய்ய மாட்டார்கள். 1987ல் ராஜீவ் காந்தி என்ற சுயநலவாதியும், ஜெயவர்த்தனே என்ற சுயநலவாதியும் ஒப்பந்தம் போட்டபோது கூட தமிழ் நாட்டில் ஒன்று கூடவில்லையே , இப்படி பல போர்கள் நடக்கும் போது கூட நமது தலைவர்கள் எவரும் ஒரு மேடையில் நிற்கவில்லை , ஆனால் அமைதிப் படை என்கிற பெயரில் அவர்கள் செய்த அத்தனை அட்டூழியங்களுக்கு நமது எதிரிகள் அத்தனை பேரும் ஒரே மேடையில் குரல் கொடுத்தார்கள் துக்ளக் சோ, கா.சுப்பு, ஜெயகாந்தன், கல்யாணசுந்தரம் இவர்கள் அததனை பேரும் தான்.இப்படி நம் தலைவர்களை நம்பி கொண்டே போவது நாம் நம் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு ஆக்க பூர்வமான வேலை செய்வதை தடுத்து கொண்டுதான் இருக்கும்.


கார்ட்டூனிஸ்ட் பாலா

ஒரு கவிதையில் இருந்து தொடங்குகிறேன். கடந்த வாரம் ஆனந்த விகடனில் வெளிவந்த கவிதை, என்னை போலவே மனசுடைந்த ஒருவர் எழுதியது , பெயர் முத்து ரூபா..

நித்தியானந்தாவும் என் மனைவியும்.
------------------------------------------
நித்தியானந்தாவை நித்தமும் படித்த
என் மனைவிக்கு
இன்று வரை தெரியாது.
முத்து குமார் என்ற ஒருவன் மறித்து போனது.
என்றாவது ஒரு நாள் கேட்பாள்
சொல்லி கொள்ளலாம்.
நம்மையெல்லாம் ஏமாற்றிவிட்டு போனவன்
அந்த நித்தியானந்தா..
நம் எல்லோராலும் ஏமாற்ற பட்டவன்
அந்த முத்து குமார்

இந்த கார்ட்டூன் புக்தகத்திற்கு முழு உத்வேகம் கொடுத்தது முத்துகுமார். இந்த கார்ட்டூன்களைப் பதிவு செய்ய குமுதத்தில் முழு சுதந்திரம் கொடுத்தார்கள். அந்த ஆசிரியர் குழுவுக்கும் , குமுதம் நிர்வாகத்திற்கும், நான் நன்றிக் கடன் பட்டு இருக்கிறேன்.அவர்கள் இல்லை என்றால் இந்த புத்தகம் வர வாய்ப்பே இல்லை.இந்த விழா விற்கு வருகை தந்த எல்ல நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி..


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...