![]() |
'சே மீண்டும் வென்று இருக்கிறார்..' - சுஜாதா விருது விழாPosted : வியாழக்கிழமை, மே 06 , 2010 08:58:09 IST
கர்ணனுக்கு கவச குண்டலம் மாதிரி சுஜாதா எப்போதும் புத்தகங்களுடனே இருப்பார்.அவர் இருந்த வரை படுக்கை முழுவதும்
புத்தகமாக நிறைந்து கிடக்கும் .அவர் மறைந்த பிறகு நானும் இரவு முழுவதும் படுக்கை நிறைய புத்தகங்களுடன் வாசித்து தூங்கிவிடுகிறேன்.என்று சுஜாதா அறக்கட்டளையும் உயிர்மையும் இணைந்து சுஜாதா பிறந்த நாள் அன்று (3.5.10)நடத்திய சுஜாதா நினைவு விருதுகள் வழங்கும் விழாவில் ஒப்பனைகளற்ற இயல்பான மொழியில் சுஜாதாவுடனான வாழ்வனுபவத்தை நெகிழ்ச்சியாக குறிப்பிட்டார் திருமதி சுஜாதா ரங்கராஜன் . இது வரை எந்த விருதுகளையும் பெற்றிடாத எழுத்தாளர் பெயரில் விருதுகள் வழங்கபடுவது Irony என்று இந்திரா பார்த்தசாரதியும் சாரு நிவேதிதாவும் குறிப்பிட்டனர் . 70 களில் சென்னை -பெங்களூர் விமான பயணத்தில் சுஜாதாவிடம் தன்னுடைய " சந்தியா ராகம் " திரைகதையை படிக்க கொடுத்த போது அதை படித்து விட்டு " இந்த கதையை எந்த வித மாற்றமும் இல்லாமல் அப்படியே எடு பாலு " என்று அவர் சொன்னதை குறிப்பிட்டார் பாலுமகேந்திரா. தன்னுடைய 40 ஆண்டுகால திரை வாழ்க்கையில் எந்த வித சமரசமும் இல்லாமல் எடுத்த திருப்தியான படைப்பு " வீடு " மற்றும் " சந்தியா ராகம் " படங்கள் அதன் பிறகு திருப்தியான விஷயம் மீடியா டிரீம்ஸ்க்காக இயக்கிய குறும்படங்கள் என்றவர் இதுவரை 13 சுஜாதாவின் சிறுகதைகளை "கதை நேரத்தில் " படமாக்கியிருப்பதாக கூறினார்."சுஜாதா சினிமாவின் பால் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் .சினிமாவுக்கான திரைக்கதை மற்றும் வசனத்தில் அவருடைய பங்களிப்பு அனைவரும் அறிந்ததே.ஆனால் சுஜாதா விருதுகளில் சினிமா சம்பந்தபட்ட விருது ஏதுமில்லை.அடுத்தவருடம் சிறந்த திரைக்கதைக்கான விருது ஒன்றை விருதுபட்டியலில் சேர்க்கவேண்டும். " என்ற கோரிக்கையுடன் பாலுமகேந்திரா அமர்ந்தார். வாஸந்தி மற்றும் தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன் சுஜாதாவுடனான அறிமுகம் மற்றும் அவருடைய பன்முகத்தன்மையை சிலாகித்தனர். வழக்கம் போல் சாருவின் பேச்சில் புயலடித்தது ,எலைட் குரூப் எனப்படும் சமூகத்தில் உயர் மட்டத்தில் உள்ள டாக்டர்கள் , பேராசிரியர்கள் , தொழிலதிபர்கள் , மற்றும் அரசியல்வாதிகளுக்கு இலக்கிய பரிச்சயம் என்பது சுத்தமாக இல்லை.அதனால் விருதுகள் தகுதியானவர்களுக்கு கிடைப்பதில்லை என்றவர் அரசு விருதுகளையும் , மற்ற மாநில நாட்டு மக்களோடு ஒப்பிடுகையில் நாம் கலைஞர்களை எப்படி மதிக்கிறோம் ,கொண்டாடுகிறோம் என்பதையும் தாகூர் - பாரதி , முகம்மது தர்வீஷ் - மனுஷ்யபுத்ரன் உதாரணத்தோடு ஒரு விளாசு விளாசினார். சுஜாதாவின் கேள்வி பதில்கள் சூரியனுக்கு கீழே உள்ள அணைத்து விஷயங்களையும் விவாதித்ததை குறிப்பிட்ட ரா.பார்த்திபன் விருது வழங்கும் மனுஷ்யபுத்ரனின் கவிதையில் தனக்கு பிடித்த " மனமுறிவு " கவிதையை பாராட்டி அமர்ந்தார். சார்த்தரின் கவிதை வரிகளோடு உரையை துவங்கிய தமிழச்சி தங்கபாண்டியன் சேகுவாரா பற்றி சொன்ன தகவல் சுவாரஸ்யமானது . கியூபா நாட்டு மருத்துவர்கள் லத்தீன் ,அமெரிக்க நாடுகள் முழுவதும் மருத்துவ சேவை புரிய வேண்டும் என்பது சே வின் விருப்பம். அதே போல் கியூபா அரசும் ஒவ்வொரு ஆண்டும் இந்த சேவையை தொடர்ந்து செய்து வருகிறது.பொலிவியாவில் உள்ள ஒரு வயதான பெரியவருக்கு கண் புரை நீக்கும் அறுவை சிகிச்சை செய்தது அவர்களுடைய பணிகளில் வழக்கமான ஒன்று , அனால் சிகிச்சை முடிந்த பின்னர் அந்த பெரியவரின் மகன் பொலிவிய நாளிதளில் கியூப அரசுக்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதத்தில் தெரிய வரும் தகவல் அந்த பெரியவர் சே வை சுட்டு கொன்ற மரியோ டெரான் என்ற முன்னாள் இராணுவ வீரர். இதை பற்றி கியூபாவின் அரசியல் இதழான க்ரன்ம ல் " சே மீண்டும் வென்று இருக்கிறார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் . என்ற சம்பவத்தை சொல்லி புரட்சியாளர்கள் , சாதனையாளர்கள் , கலைஞர்கள் விருதுகளில் வாழ்வதில்லை .தங்களுடைய கருத்துக்கள் படைப்புகள் மூலமாக வாழ்கிறார்கள் என்றார். அரங்கத்தை மொத்தமும் சிரிப்பலையாக மாற்றினார் பேராசிரியர் கு.ஞான சம்பந்தன் .நகைச்சுவை கலந்து சுஜாதாவின் வரலாற்று பிரஞ்சையையும் , எழுத்து நேர்மையையும் எடுத்து சொன்னார். இந்திரா பார்த்தசாரதியின் " நாடக விருது " சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பாலு மகேந்திராவின் சினிமா திரைக்கதை விருது " கோரிக்கையும் சுஜாதா என்ற ஆளுமையின் பன்முகத்தன்மைக்கு சிறந்த உதாரணங்கள். விருதுகளை பெற்றுக்கொண்ட எழுத்தாளர் மற்றும் கவிஞர்கள் சுஜாதாவுடனான அனுபவத்தையோ , சுஜாதா விருதில் ஏன் கலந்து கொண்டோம் என்ற அனுபவத்தையோ பேசவிடாமல் விருது வழங்கிய பிரபலங்கள் மட்டும் பேசியது விழாவின் Irony.
|
|