அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பட்னாவிஸ் துணைமுதல்வராகப் பதவியேற்பார் - பா.ஜ.க.வின் அடுத்த அதிரடி 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அந்திமழையில் வெளிவந்த கலாப்ரியாவின் 'நினைவின் தாழ்வாரங்கள்'க்கு சுஜாதா உரைநடை விருது 2010

Posted : செவ்வாய்க்கிழமை,   ஏப்ரல்   27 , 2010  21:22:20 IST

உயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து அறிவித்த சுஜாதா விருதுகள் முடிவு வெளியாகியுள்ளது.

அந்திமழையில் தொடராக வெளிவந்து மிகபெரிய அளவில் வாசகர்களின் பாராட்டையும் கவனத்தையும் பெற்ற கலாப்ரியாவின் 'நினைவின் தாழ்வாரங்கள்' சந்தியா பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டது.கலாப்ரியாவின் 'நினைவின் தாழ்வாரங்கள்'சுஜாதா உரைநடை விருது 2010 யை பெற்றுள்ளது.

சுஜாதா 2010 விருது விபரங்கள் :

சுஜாதா உரைநடை விருது: கலாப்ரியா

நூல்: நினைவின் தாழ்வாரங்கள்

தேர்வு: பிரபஞ்சன்

( நினைவின் தாழ்வாரங்கள் தொடரைப் படிக்க

,'நினைவின் தாழ்வாரங்கள்' தொகுப்பு பற்றி.. )

சுஜாதா சிறுகதை விருது: ஜெயந்தன்

நூல்: நிராயுதபாணியின் ஆயுதங்கள்

தேர்வு: இந்திரா பார்த்தசாரதி

சுஜாதா நாவல் விருது : ம.காமுத்துரை

நூல்: மில்

தேர்வு: வாஸந்தி

சுஜாதா கவிதை விருது: ரமேஷ் பிரேதன்

நூல்: காந்தியை கொன்றது தவறுதான்

தேர்வு: ஞானக்கூத்தன்

சுஜாதா சிற்றிதழ் விருது: Dr.G.சிவராமன்

சிற்றிதழ்: பூவுலகு

தேர்வு: திலீப் குமார்


சுஜாதா இணைய விருது :லேகா

வலைப்பதிவு: யாழிசை www.yalisai.blogspot.com

தேர்வு : எஸ். ராமகிருஷ்ணன்


விருது பெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் அந்திமழையின் வாழ்த்துக்கள்.

***

விருது பற்றி உயிர்மை வெளியிட்டுள்ள அறிவிப்பு..

சுஜாதா விருதுகள் 2010உயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து சுஜாதா பெயரில் ஆறு விருதுகளை கடந்த பிப்ரவரி 27 அவரது இரண்டாவது நினைவு தினத்தன்று அறிவித்தன. சுஜாதா பெயரில் சிறுகதை, கவிதை, நாவல், உரைநடை, சிற்றிதழ், இணையம் ஆகிய ஆறு பிரிவுகளில் அறிவிக்கப்பட்ட இந்த விருதுகளுக்கு நடுவர்களாக முறையே இந்திராபார்த்தசாரதி, ஞானக்கூத்தன், வாஸந்தி, பிரபஞ்சன், திலீப்குமார், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் செயல்பட இணக்கம் தெரிவித்தனர். ஒவ்வொரு பிரிவிலும் மார்ச் 31ஆம் தேதிவரை கிடைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் நடுவர்களுக்கு அனுப்பப்பட்டன. நடுவர்கள் அவற்றை ஆராய்ந்து கீழ்க்கண்ட இறுதி முடிவை அறிவித்தனர்.

சுஜாதா உரைநடை விருது: கலாப்ரியா

நூல்: நினைவின் தாழ்வாரங்கள்

தேர்வு: பிரபஞ்சன்


தமிழின் முக்கிய நவீன கவிகளில் ஒருவரான கலாப்ரியாவின் தன் வரலாறு போன்ற கட்டுரைகள் அடங்கிய ‘நினைவின் தாழ்வாரங்கள்’ எனும் பெயரிய புத்தகம், அண்மைக் காலக் கட்டுரை நூல்களில் சிறந்ததாகத் தயக்கமின்றிச் சொல்லும் விதத்தில் அமைந்திருக்கிறது.

கவிஞர் கலாப்ரியா, தன் முதல் வசன முயற்சியாகிய இத் தொகுப்பில் பாரிய வெற்றியை அடைந்திருக்கிறார். ஒரு அந்தரங்கமான நண்பனுடன் அல்லது சினேகிதியிடம் சௌகரியமான இடத்தில் இருந்துகொண்டு, பதற்றம் இல்லாத மனநிலையில் பகிர்ந்துகொண்ட உரையாடல் தொனியில் கட்டுரைகள் அமைந்து அவைகளின் மெய்ம்மைத் தன்மையில் ஒளிர்ந்து, தம் பூச்சற்ற வெளிப்பாட்டில் வாசகர்களைப் பேரன்போடு தழுவிக் கொள்கின்றன. அன்பின் ஈரம் படரும் தமிழ் வசனம் கலாப்ரியாவுடையது.

கலாப்ரியா என்கிற கவி ஆளுமையை உருவாக்கும் சின்னச் சின்ன நிகழ்ச்சிகள் ஒரு ஆவணம் போல இந்த நூலில் பதிவாகி இருக்கிறது. அண்ணா காலமான அறுபதுகளின் தொடக்கம் முதலாகத் தமிழ் அரசியல், சினிமா என்று விரியும் தமிழ்ச் சமூகத்தின் ஜீவனுள்ள மனித வரலாறாக ‘நினைவின் தாழ்வாரங்கள்’ இருக்கிறது. தமிழ் வாழ்க்கையை, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் ஒளிப்படமாக, தமிழ்ப் பொதுவாழ்வில் ஒரு உள்ளார்ந்த மாறுதல் நடந்தேறிய ஒரு காலத்தின் மனசாட்சியுடன் கூடிய ஆவணமாகவும் இந்தப் புத்தகம் சிறப்பு பெறுகிறது.

சுஜாதா சிறுகதை விருது: ஜெயந்தன்

நூல்: நிராயுதபாணியின் ஆயுதங்கள்

தேர்வு: இந்திரா பார்த்தசாரதி

வெளியீடு: வம்சிசிறுகதை, நாடகம் ஆகிய துறைகளில் தமது முத்திரையைப் பதிய வைத்த முக்கியமான எழுத்தாளர்களில் ஜெயந்தன் குறிப்பிடத்தக்கவர். எழுபதுகளில் அவர் ‘கணையாழியில்’ எழுதிய கதைகள் அவரை ஒரு வித்தியாசமான எழுத்தாளராக அடையாளம் காட்டின. பிறகு அவர் வெகுஜனப் பத்திரிகைகளிலும் தமக்கே உரித்தான பார்வையுடன், சமரசம் ஏதும் செய்து கொள்ளாமல் எழுதியிருக்கிறார்.

இத்தொகுப்பிலுள்ள கதைகள் ஒவ்வொன்றும் இவை ஜெயந்தனால்தான் எழுதப்பட்டிருக்க முடியும் என்ற ஓர் இன்றியமையாத தர்க்கத்துடன் உருப் பெற்றிருக்கின்றன. சமூக அவலங்கள் அவர் மனத்தைச் சுடுகின்றன. அந்தக் கோபத்தில் வடிவம் பெறும் கதைகள் ரஸபாவம் சிறிதும் குறையாமல், ஒரு நல்ல பண்பாளரின் சீற்றமாக வெளிப்படுகின்றன என்பதுதான் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

நகர்ப்புறக் கொடுமைகளை ஜெயகாந்தனுக்கு இணையாக இக்கதைகளில் புலப்படுத்தியிருக்கிறார் ஜெயந்தன். அவர் நடையில் சுலபமான நகைமுரணும் அங்கதமும் இழைந்தோடுகின்றன. பாலுணர்வுக் கதைகளில் கொஞ்சம் கூட விரஸம் தட்டாமல் இவரால் எழுத முடிகிறது. உளவியல் அணுகு முறையும், அழகியல் பார்வையும் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும். இவ்வகையில், இவரை ஒரு மரபியல்வாதி என்றும் சொல்லலாம்.

சுஜாதா விருது பெற ‘ நிராயுதபாணியின் ஆயுதங்கள்’ என்ற ஜெயந்தனின் சிறுகதைத் தொகுப்பு முற்றிலும் தகுதியானது.சுஜாதா கவிதை விருது: ரமேஷ் பிரேதன்

நூல்: காந்தியை கொன்றது தவறுதான்

தேர்வு: ஞானக்கூத்தன்

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்‘காந்தியைக் கொன்றது தவறுதான்’ என்ற ரமேஷ் பிரதேனின் கவிதைத் தொகுப்பு அதிவிநோதமான அனுபவத்தை தருகிறது. மறுக்கவும் எதிர்க்கவும் நிராகரிக்கவும் கூறும் கவிதைகளைக் கொண்டு வாசகனின் வேடிக்கை பார்க்கும் மனசை வேறுவிதமாகச் செயல்படச் செய்கிறார் ரமேஷ் பிரதேன். தோற்றம், வாழ்க்கை மற்றும் மரணம் இவற்றின் எல்லைகளின் மீது தானும் வரைவதால் வரும் அனுபவத்தை இவர் கவிதைகள் தருகின்றன. இவருடைய கவிதைச் சுவரில் நின்ற நிலையில் சிதம்பரம் ராமலிங்கமும் இருப்பார், சாராயம் நிரப்பப்பட்ட தம்ளர்களையே நாடி வரும் பெண் பல்லிகளும் இருக்கும். காந்தி-கொலை-தவறு என்றால் காரியத்திற்குப் பலி காரியம், அதைப் பற்றிய தீர்ப்பு என்று அமைகிறது தொகுப்பின் பெயர். பழத்தைப் பார்க்க விதை சிறிதாக, ஆனால் வெளியே விளம்பரமாகத் தெரியும் ஒரு பழத்தை நினைவூட்டும் அமைப்பைக் கொண்டுள்ளது இத்தொகுப்பு. ரமேஷ் பிரேதனின் கவிதையில் கடல், தன் அலையை வீசுகிறது. அவர் கவிதை ஒன்று Ôநீந்தி அடைய முடியாத தூரத்தில் நீ உனது கப்பலை நிறுத்தி வைக்கிறாய்’ என்கிறது. ரமேஷ் பிரேதனின் கவிதை அப்படிப்பட்டதுதான். ஒரு பொருள் உயிர்த்திருக்கிறது என்பதற்கு அடையாளம் அது ஏதாவது செய்துகொண்டிருக்க வேண்டும். இவர் கவிதையில் அப்படி ஒரு சலனம் உண்டு.

அவதானிப்பிற்குரிய விஷயம், தெளிவான நடை நவிற்சியின் சல்லாபம் முதலியவை இத்தொகுப்புக் கவிதைகளில் சிறப்படைகின்றன.

இத்தொகுப்பு நவீன கவிதையை ஒருகட்டத்தில் விளக்குவதோடு சலனம் உடையதாகவும் ஆக்குவதை உணர முடிகிறது.சுஜாதா நாவல் விருது : ம.காமுத்துரை

நூல்: மில்

தேர்வு: வாஸந்தி

வெளியீடு: உதயகண்ணன்வாசிக்க ஆரம்பித்த உடனேயே நம்மைக் கவர்வது மிக இயல்பான வட்டார வழக்குடன் கூடிய உறுத்தலற்ற நடை. கிராமச் சூழலும் எளிய மக்களும், அவர்களது சின்ன சந்தோஷங்களும் பெரிய ஏமாற்றங்களும், சோர்வும் உற்சாகமும், காதலும் குரோதமும், இணக்கமும் பிணக்கும், வெகு சரளமாக கதைப்பின்னலில் பிசிறு தட்டாமல் தெளிவான நதி ஓட்டம் போல வெளிப்படுவது, இந்த நாவலின் தனிச் சிறப்பு.

நாவல் அதிகபட்சமாக வட்டார வழக்குச் சொல் நடையிலேயே நகர்வது தனியான கவர்ச்சி. அது வெறும் அலங்காரமாக நின்றுவிடாமல் மிக சுவாரஸ்யமான, தொய்வில்லாத சம்பாஷணைகள் மூலம் நாவலுக்கு அடர்த்தி அளிக்கிறது.

தமிழ்நாட்டுக் கிராமங்களில் நாம் காணும் யதார்த்தமான பாத்திரப் படைப்புகள். ஒரு கதாபாத்திரம் கூட செயற்கை என்று சொல்லமுடியாத லாவகத்துடன் ஆசிரியர் வடிவமைத்திருக்கிறார்.

ஒரு நல்ல கதைசொல்லி என்பதன் அடையாளமாக ஆசிரியர் எட்ட நின்று கதை பின்னுகிறார். இடைச்செரூகலாக நுழையும் சேதியின் தொனியில் கோபமில்லை, ஆங்காரமில்லை, உணர்ச்சிப்பெருக்கு இல்லை. ஊடுபாவாக இருப்பது மனித நேயமும் கரிசனமும். விவேகமும் நகைச்சுவை உணர்வும். சோதனைகளுக்கு நடுவில் மனிதனை நிமிர்த்தும் ஆச்சர்யத்தை இந்த நாவல் காட்டுகிறது.சுஜாதா சிற்றிதழ் விருது: Dr.G.சிவராமன்

சிற்றிதழ்: பூவுலகு

தேர்வு: திலீப் குமார்‘பூவுலகு’ சுற்றுச்சூழல் இதழ் மதிப்பு மிக்க லட்சியங்களோடு சிறப்பான தரத்தில் வெளிவருவது மிகுந்த ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. முன்எப்போதையும் விட சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளும் அம்சங்களும் நமது வாழ்வில் இன்றியமையாத பகுதிகளாகிவிட்டன. இவை குறித்த ஒரு சரியான விழிப்புணர்வை நாம் பெற்றிருக்கவேண்டியது அவசியம் மட்டுமல்ல; நமது கடமையும் கூட.

தொண்ணூறுகளுக்குப் பின், தமிழ் இலக்கிய சிற்றிதழ்கள் சமூகவியல், பொருளாதாரம், தத்துவம், நுண்கலைகள் என தங்கள் எல்லைகளை விரித்துக்கொண்டிருந்தாலும், சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளை அவற்றால் ஓரளவுக்கே கவனப்படுத்த முடிந்துள்ளது. "பூவுலகு" இதழை நடத்தும் Òபூவுலகின் நண்பர்கள்" குழுவினர் தமிழ் சிற்றிதழ்களோடும் முற்போக்கு இயக்கங்களோடும் நீண்ட தொடர்புடையவர்கள். 25 ஆண்டுகளுக்கு முன்பே சுற்றுச்சூழல் குறித்த கட்டுரைகளும் நூல்களும் தமிழில் வெளியாக முன்னோடிகளாகச் செயல்பட்டவர்கள்.

கடந்த சில ஆண்டுகளாக, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகள் பல தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றின் விளைவுகளும் பயன்களும் ஒரு பத்திரிகையின் ஒருங்கிணைப்பில் மேலும் துலக்கம் பெற வாய்ப்புள்ளது. இத்தகைய ஒரு முக்கிய தேவையை "பூவுலகு" இதழ் நிறைவு செய்கிறது. அதோடு தொடர்புடையவர்கள் இக்காரியத்தைச் செய்வதற்கான முழுத் தகுதியுடையவர்களாகவும் இருக்கிறார்கள். "பூவுலகு" இதழின் தொனி, உள்ளடக்கம், வடிவமைப்பு ஆகிய எல்லா அம்சங்களிலும் அவர்களின் நீண்ட அனுபவமும் முதிர்ச்சியும் வெளிப்படுகின்றன.

எல்லாவற்றுக்கும் மேல், ஒரு கால் நூற்றாண்டாக, ஆழ்ந்த பொறுப்புணர்வோடும், விரிவான அக்கறைகளோடும் இயங்கி வரும் இவர்களது பணி மகத்தானது.சுஜாதா இணைய விருது :லேகா

வலைப்பதிவு: யாழிசை www.yalisai.blogspot.com

தேர்வு : எஸ். ராமகிருஷ்ணன்தமிழில் இன்று ஆயிரக்கணக்கில் வலைப்பக்கங்களும் இணையத் தளங்களும் உள்ளன. பெரும்பான்மை தமிழ் எழுத்தாளர்கள் இணையத்தில் நேரடியாக எழுதுகிறார்கள். இணையம் முக்கியமான வெளிப்பாடு வடிவமாகி விட்டது.

உலக சினிமா, நவீன தமிழ் இலக்கியம், மொழிபெயர்ப்பு இலக்கியம், பயணம் என்று விரிந்த ஈடுபாடும் தேர்ந்த ரசனையும் கொண்ட லேகா தான் படித்த, பார்த்த, பயணம் செய்த அனுபவங்களை மிக அழகாக, நுட்பமாகப் பதிவு செய்கிறார்.

நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் உள்ள இவரது வலைப்பக்கத்தில் வாசிப்பு அனுபவம் சார்ந்த மிக நல்ல கட்டுரைகள் காணக்கிடைக்கின்றன.

அத்தோடு தனக்கு விருப்பமான எழுத்தாளர்களின் இணையத்தளங்களையும் சிபாரிசு செய்கிறார்.

நல்ல எழுத்தாளர்களை அறிமுகம் செய்வதே தனது பிரதான வேலை என்பது போல செயல்படுபவர் லேகா. இவரைப் போல வாசிப்பின் மீது இவ்வளவு ஈடுபாடு கொண்ட ஒருவரை இன்றைய சூழலில் காண்பது அபூர்வமாகவே உள்ளது.

கணிப்பொறி துறையில் வேலை செய்தபடியே எழுத்தில் இவர் காட்டும் அக்கறை பாராட்டிற்குரியது.

தனது கட்டுரைகளுக்குப் பொருத்தமாக அவர் தேர்வு செய்யும் ஓவியம் மற்றும் புகைப்படங்களும் அவரது வலைப்பக்கத்தின் வடிவமைப்பும் மிகச் சிறப்பாக உள்ளன.

எதையும் சுவாரஸ்யமாகவும் ரசித்தும் எழுதும் எழுத்து இவருடையது. அதற்காகவே இந்த விருதை அவருக்கு சிபாரிசு செய்கிறேன்.

விருது வழங்கும் நிகழ்ச்சி மே௩ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. சுஜாதாவின் பெயரால் முதன்முதலாக வழங்கப்படும் இவ்விருதுகள் ஒவ்வொரு பிரிவிலும் தலா 10,000ரூபாய் பரிசு தொகையும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட இருக்கின்றன.

சுஜாதாவின் பிறந்த தினத்தில் வழங்கப்படும் இவ்விருதுகள் அவர் தன் வாழ்நாள் எல்லாம் இலக்கியம், இதழியல். இணையம் சார்ந்து காட்டிய பரந்துப்பட்ட அக்கறைகளை பிரதிபலிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த விருதுக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் எங்களது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...