![]() |
குமுதம் வார இதழ் பிரச்னை பற்றி முதல்வர் கருணாநிதிPosted : செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 27 , 2010 06:59:25 IST
குமுதம் வார இதழ் பிரச்னை பற்றி முதல்வர் கருணாநிதி
இன்று சட்டப்பேரவையில் குமுதம் பிரச்னை தொடர்பாக ஞானசேகரன் எம்எல்ஏ., கேள்வி எழுப்பிய போது அவருக்கு பதில் அளித்த முதல்வர் கருணாநிதி,'குமுதம் பத்திரிகையின் உரிமையாளர் ஜவகர் பழனியப்பனுக்கும் அவர் பொறுப்பை ஒப்படைத்தவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் வரதராஜன் என்பவரைக் கைது செய்துள்ளனர். பத்திரிகையாளர்களுக்கு நீதி தேடித் தருவதில் திமுக என்றைக்கும் முனைப்பாக இருந்துள்ளது. பத்திரிகை ஆசிரியர் பொறுப்பில் இருந்தவர் ஒருவர், நிர்வாகத்தில் இருந்தவர் ஒருவர் என்பதைக் கேள்விபட்டவுடன், வரதராஜனை ரிமாண்ட் செய்ய வற்புறுத்த வேண்டாம் என்று எடுத்துக்கூறி, அவர் உடனடியாக சில நிபந்தனைகளுடன் வெளியிலே அனுப்பப்பட்டிருக்கிறார். வழக்கு விவரம் என்னவென்று நமக்கு தெரியாது. சில நண்பர்கள் இதில் ஒரு சமாதான முயற்சியை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஒரு பிரபல வாரப் பத்திரிகைக்கு தற்போது தடங்கல் ஏற்பட்டுள்ளது. அதன் வளர்ச்சியில் ஒரு முட்டுக்கட்டை ஏற்படக்கூடாது என்ற நிலையில் இச்சம்பவம் அமைந்துவிடக் கூடாது என்பதில் நான் மிகவும் அக்கறையாக உள்ளேன். ஏற்கெனவே இதுபோன்ற சம்பவங்கள் சில பத்திரிகைகளுக்கு ஏற்பட்டபோது, நானே தலையிட்டு அல்லது அதிகாரிகளை அனுப்பி அவர்களிடையே ஒரு சமரச உடன்பாட்டை ஏற்படுத்தி பத்திரிகை வீழ்ந்து விடாமல் பார்த்துக் கொண்ட வரலாறு திமுகவுக்கு உண்டு. அந்த வகையில், குமுதம் பத்திரிகையும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்கிற ஆசை உடையவன் நான். குமுதம் விவகாரத்தில் நல்ல முடிவு ஏற்பட ஒரு குழு அமைத்தாவது முயற்சிகளை மேற்கொள்வோம்' என்று கூறியுள்ளார்.
|
|