அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஆசிரியர் தலையில் தீ வைத்த அழகிரி.

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   23 , 2010  05:04:38 IST

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சியின் பொதுச்செயலாலர் வே. ஆனைமுத்து தொகுத்துள்ள, பெரியார் சிந்தனைகள் இரண்டாம் தொகுதி புத்தகங்களை, பெரியார் ஈ.வெ.ரா. நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் நேற்று வெளியிடப்பட்டது. அறிவாலயம் கலைஞர் அரங்கில் ஞாயிறு மாலையில் புத்தகங்களை வெளியிட்டு திமுக தலைவர் கருணாநிதி பேசும்போது அவர் வசனம் எழுதிய 'மணமகள்' திரைப்படத்தில் ஆசிரியர் தலையில் அழகிரி தீ வைக்கும் காட்சி பற்றிய கலகலப்பான தகவலை கலைஞர் தெரிவித்தார்

திராவிட இயக்கம் இன்று நேற்றல்ல என்றைக்கு நீதிக்கட்சி என்ற பெயரிலே தொண்டாற்ற, மக்கள் பணியாற்ற, பார்ப்பனர் அல்லாத மக்களுடைய உரிமைகளுக்காக போராட முன்வந்ததோ அன்று முதல் இன்று வரை இந்த இயக்கத்தை வீழ்த்தி விட வேண்டும், இந்த இயக்கத்தை தலையெடுக்க ஒட்டாமல் ஆக்கிவிட வேண்டும் என்று கூடவே குழி பறிக்கின்ற காரியங்கள் பல நடை பெற்றாலும் கூட, அனைத்தையும் மீறி இன்றைக்கு திராவிட இயக்கத்தினுடைய தாக்கம், தமிழகத்தில் - தமிழகத்தைத் தாண்டி தென்னகப்பகுதிகளில் - தென்னகத்தைத் தாண்டி வட இந்திய பூமியில் - அதையும் தாண்டி உலகத்தில் கொடிகட்டிப் பறக்கின்ற காலத்தில் நாம் வாழ்வது தந்தை பெரியாருடைய எண்ணங்களை, அறிஞர் அண்ணா அவர்களுடைய கருத்துக்களை செயலாக்க, அவைகளுக்கு வடிவம் கொடுக்க என்பதை மறந்து விடாமல் இன்றைக்கும் தொண்டாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

அவற்றில் ஒரு பெரும் தொண்டாக தன்னுடைய உடல்நலத்தைப் பற்றியெல்லாம் கூட கவலைப்படாமல், தன்னுடைய வயதைப் பற்றிக் கவலைப்படாமல், இன்றைக்கு யாரும் செய்யாத ஓரிருவர் மாத்திரம்தான் செய்யக்கூடிய, ஓரிரு பதிப்பகங்களிலே மாத்திரம் வெளியிடக்கூடிய ஒரு காரியத்தை நம்முடைய ஆனைமுத்து அவர்கள் செய்து கொண்டிருப்பது பெரியாருக்கு அல்ல, தமிழ்ச் சமுதாயத்திற்கு ஆற்றுகின்ற அருந்தொண்டு என்பதை நான் இங்கே எடுத்துக் காட்ட கடமைப்பட்டிருக்கின்றேன்.

இந்த புத்தகத்தினுடைய முதல் பதிப்பை திருச்சியிலே சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு நான் வெளியிட்ட நிகழ்ச்சியை ஆனைமுத்து அவர்களும் மற்ற நண்பர்களும் இங்கே குறிப்பிட்டார்கள். என்னுடைய அருமை நண்பர் மறைந்த அன்பில் தர்மலிங்கம் தலைமையில் அந்த விழா நடைபெற்று அந்த புத்தகம் வெளியிடப்பட்டதும், என்.வி.என். அவர்களைப் போன்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மிக முக்கியமான நண்பர்கள் அந்த விழாவிலே கலந்து கொண்டதும் எனக்கு இப்போதும் பசுமையான நினைவுகளாக இருக்கின்றன.

நான் எந்த குடும்பத்தை மறந்தாலும் ஈரோட்டுக் குடும்பத்தை மறக்க இயலாது, இன்றைக்கு வந்தவுடனே நம்முடைய ஆனைமுத்து அவர்கள் இங்கே பேசிக் கொண்டிருந்தார்கள். யார் யார் இங்கே வந்திருக்கின்றார்கள் என்பதைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் அவரிடத் திலே கேட்டேன். ஈரோட்டிலிருந்து இன்னன்னார் வந்திருக்கிறார்களா என்றெல்லாம் கேட்டேன். அவர் வந்திருக்கிறார்கள் என்று சொல்லி மேடையில் அவர்கள் புத்தகம் வாங்க வந்த போது எனக்கு அவர்களை அறிமுகப்படுத்தினார். அறிமுகப்படுத்த வேண்டிய தேவையில்லை, நானும் அந்தக் குடும்பங்களும் ஈரோடு மாநகரத்தில் 1945 ஆம் ஆண்டிலேயே ஒன்று கலந்து தந்தை பெரியாருடைய இல்லத்திலேயே ஓடிவிளையாடி அவர்களுடைய வீட்டிலே உணவருந்தி இயக்கத்தை வளர்த்தவர்கள். அப்படிப்பட்ட பெரிய குடும்பம் - தந்தை பெரியார் அவர்களுடைய பகுத்தறிவுக் குடும்பம். இன்றைக்கும் அந்தக் குடும்பம் தமிழகத்தில் பரவி படர்ந்து பகுத்தறிவை போதித்துக் கொண்டிருக் கின்ற குடும்பமாகத் திகழ்வதைக் காணுகிற நேரத்திலே நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

இதையெல்லாம் கட்டுக்கோப்பாக இன்றைக்கு என்னை இந்த மேடைக்கு அழைத்து, இந்த கூட்டத்திற்கு வரச்செய்து அவர்களைக் காணுகின்ற வாய்ப்பையும் எனக்கு அளித்த நம்முடைய பெரியவர் ஆனைமுத்து அவர்களுக்கு நான் என்னுடைய நன்றியை, வணக்கத்தை, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கின்றேன்.

நம்முடைய ஆனைமுத்து அவர்கள் தந்தை பெரியாருடைய போதனைகளை, கருத்துக்களை அவர் வழங்கிய அறிவுரைகளையெல்லாம் இன்றைக்குத் தொகுத்து நூலாக வழங்கியிருக்கின்றார். அவைகள் இன்றைக்கு வழங்கப் பட்டிருக்கின்ற இந்த 20 பதிப்புகள் மாத்திரம்தானா என்றால் இல்லை. ஒரு பெட்டியிலே வைத்து அந்த நூல்களை இங்கே அளித்தார்கள். இன்னும் பெரியாருடைய கருத்துக்களை, எண்ணங்களை திரட்டி அவைகளெல்லாம் புத்தகங்களாக வைத்து என்னிடத்திலே நீங்கள் வழங்க வேண்டு மென்றால், நிச்சயமாகச் சொல்லுகிறேன் ஒரு பெட்டி போதாது, ஒரு பீரோவிலே வைத்துத்தான் அவைகளை என்னிடத்திலே வழங்க முடியும். (பலத்த கைதட்டல்)

அந்த அளவிற்கு கருத்துக்களை, அந்த அளவிற்கு பகுத்தறிவு உரைகளை, அந்த அளவிற்கு லட்சிய சிந்தனைகளை உள்ளடக்கிய நூல்கள் தந்தை பெரியாருடைய நூல்கள், பெரியாருடைய கருத்துக்கள். அவரை விட்டால் வேறு வழியில்லை நமக்கு. நான் பெரியார் என்று சொல்லுவது தனிப்பட்ட ஒரு தலைவரை அல்ல, அவர் ஒரு இயக்கம். அவர் ஒரு சகாப்தம். அவர் வகுத்த நெறி இன்று மாத்திரமல்ல, என்றென்றும் தமிழர்களுக்கு, திராவிடர்களுக்கு பயன்படக்கூடிய, திராவிடர்களை ஒன்றுபடுத்தக் கூடிய, திராவிடர்களை அடையாளம் காட்டக் கூடிய நெறி, அவர் வகுத்த நெறியாகும்.

அவர் 50 ஆண்டு காலத்திற்கு முன்பே பகுத்தறிவு விதையை தொடங்கினார் என்றாலும், அது எப்படி யெல்லாம் எந்தெந்த நிலையில் எல்லாம் பரவிற்று என்பதற்கு ஒரு உதாரணம், ஒரு சான்று சொல்ல விரும்புகிறேன். இன்று காலையில் நான் தொலைக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். “மறக்க முடியுமா”? என்ற தலைப்பில் கலைவாணருடைய வரலாற்றை, குறும்பட மாக காட்சியாக்கிக் காட்டினார்கள். அதிலே 50 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய `மணமகள்’ படத்தில் கலைவாணர் நடித்திருக் கிறார். அந்தக் காட்சி சில துண்டுக்காட்சிகளாக அதிலே வெளியிடப்பட்டது.

அந்த ‘மணமகள்’ படத்தில் கலைவாணர் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியராக வருகிறார். அவரிடத்திலே படிக்கின்ற மாணவர்கள் எல்லாம் சின்னஞ்சிறு வயது மாணவர்கள். அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவர்களை கூப்பிட்டு, ஆசிரியராக இருக்கின்ற கலைவாணர், உனக்கு என்ன வேண்டும்? என்ன வேண்டும்? என்று கேட்கிறபோது, ஒரு பையன் எப்போதுமே பள்ளிக்கூடத்தில் துறுதுறுப்பாக, பரபரப்பாக கொஞ்சம் முரட்டுத்தனமாக இருக்கக்கூடிய பையன். அப்போதே அந்தப் பையனுக்கு நான் அழகிரி என்று பெயர் வைத்திருக்கிறேன். அது எனக்கு மறந்துபோய் விட்டது. இன்றைக்கு கலைவாணருடைய அந்த படத்தை பார்த்தபோதுதான் ஓகோ அப்போதே பெயர் வைத்தோமா? என்று எண்ணிக்கொண்டேன்.

என்ன காட்சி என்றால் எவ்வளவு அற்புதமாக நம்முடைய கருத்துக்களை கலைஞர்கள், கலைவாணர் கள், கலைவிற்பன்னர்கள், தந்தை பெரியாருடைய கருத்துக்களை, எண்ணங்களை எவ்வளவு அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக் கிறார் என்பதற்கு அது ஒரு சான்று. அந்த அழகிரி என்ற பையன் கேட்பான், ‘நான் என்ன செய்ய?’ என்று. அப்போது ஆத்திரத்தில் இருப்பார் ஆசிரியர். அந்த ஆத்திரத்திலே சொல்லுவார் தீயை வை என்று. `தீ’யை வை என்று சொன்னதும், அந்த பையன் கேட்பான் எங்கே வைப்பது? என்று. `என் தலையிலே வை’ என்பார் ஆசிரியர். (சிரிப்பு - கைதட்டல்) ஆத்திரத்தில், கோபத்திலே என் தலையிலே வை என்று கலைவாணர் சொல்லுவார்.

அவன் அதை நம்பி அவர் தலையிலே ஒரு சூடத்தை வைத்து நெருப்புக்குச்சியை கிழித்து வைத்து விட்டுப் போய்விடுவான். அது அவருக்கு தெரியாது. ஏனென்றால் தலைப்பாகை கட்டியிருக்கிறார். வாத்தியார் அல்லவா? அந்த காலத்து வாத்தியார். தலைப்பாகையில் அது எரிந்து கொண்டிருக்கிறது. அந்த நேரம் ஒரு பையன் உள்ளே வருகிறான். `அய்யா, வாத்தியார்அய்யா’ என்று சொல்லிக்கொண்டே வருகிறான், வாத்தியார் தலையில் நெருப்பு எரிகிறது. `அய்யோ’ என்று ஓடிப்போய் விடுவான்.

இவருக்கு ஒன்றும்புரிய வில்லை. வருகிற பையன்கள் எல்லாம் தன்னைப்பார்த்து ஓடிவிடுகிறான்களே ஏன் ஓடுகிறார்கள் என்கிறபோது மதுரம் அம்மாள் அங்கு வருகிறார். அவர் பார்த்துவிட்டு ‘என்ன இது அக்கிரமம்?’ என்கிறார். ஏன் எல்லோரும் சொல்லு கிறார்கள், நீயும் சொல்கிறாயே என்ன என்று கேட்கிறார் கலைவாணர். தலையிலே தீ எரிகிறது என்று சொல்லு கிறார் மதுரம் அம்மாள். ‘ஓ அப்படியா? நான் பண்ணின முட்டாள் தனத்தால்தான் வந்தது’ என்பார்.

அப்போது என்ன? என்று மதுரம் அம்மாள் கேட்பார். அந்த பையன் அழகிரி, தீயை எங்கே வைப்பது? என்று கேட்டான். நான் என் தலையிலே வையடா, போடா என்று சொன்னேன். அவன் என் தலையிலே தீயை வைத்துவிட்டு போய் விட்டான். அதுதான் பிள்ளைகளிடம் பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையாக பேசவேண்டும் என்பது. எல்லாவற்றையும் எல்லாரிடமும் பேசிவிடக்கூடாது. யார் யாரிடம் என்னென்ன பேச வேண்டும் என்று இருக்கிறது. அது வாத்தியாராக இருந்த எனக்கே தெரிய வில்லை, என்று காட்டுகிற அளவிற்கு இந்த நிகழ்ச்சி அமைந்துவிட்டது என்று சொல்வார்.

இதைச் சொல்வதற்குக் காரணம், கலைவாணர் போன்றவர்கள் அத்தகைய கருத்துக்களை அன்றைக்கே சொல்வதற்கு காரணமாக இருந்தவர் தந்தை பெரியார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது (பலத்த கைதட்டல்).

இப்படி சிந்தனைக்கு விருந்தாக, ஏன்? எதற்காக? என்கின்ற கேள்விகளை எழுப்புகின்ற நிலைக்கு ஆளாக்கக்கூடிய வகையில் அந்தக் காலத்திலேயே 50 ஆண்டுகளுக்கு முன்பே கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் இப்படியொரு காட்சியை அமைத்திருந்தார் என்றால் அது பெரியாருடைய தாக்கம் தான்.

அதுமாத்திரமல்ல, அந்த படத்தை அடுத்து இன்னொரு படம், “பணம்” என்கிற படம். அந்தப் படத்தில் தி.மு.க. என்ற வாசகம் அமைந்த ஒரு பாடலை பாடுகிறார். அதை சென்சாரில் வெட்டி விடுகிறார்கள்.

“தி.மு.க. என்றால் திராவிட முன்னேற்றக் கழகம். நீங்கள் இப்படி அப்பட்டமாக அரசியலை சொல்லக்கூடாது’’ என்று சென்சாரில் வெட்டி விடுகிறார்கள். அதற்கு கலைவாணர் என்ன செய்கிறார் என்றால், ‘திருக்குறள் முன்னேற்றக் கழகம்’ என்பதன் சுருக்கம் தான் தி.மு.க. என்கிறார். திருக்குறள் முன்னேற்றக் கழகம் என்று சொல்லி, நான் திராவிட முன்னேற்றக்கழகம் என்று சொல்லவில்லை, திருக்குறள் முன்னேற்றக் கழகம் என்றுதான் சொன்னேன் என்று சொல்லுகிறார். அப்படி அவர் சொல்லுவது மாத்திரமல்ல, எதற்கும் அஞ்சாத பகுத்தறிவுப் பெரியார், வள்ளுவப் பெரியார் என்று முடிப்பார்.

பெரியார் என்று சொல்லுகின்றபோது சென்சார் கத்திரி நீளுகிறது - உடனே வள்ளுவர்பெரியார் என்று சொல்லி முடிப்பார் (பலத்த கைதட்டல்). அண்ணன் மார்களுக்கு ஒரு தம்பியைப்போல என்றுசொல்ல வந்தவர், தம்பிகளுக்கு ஒரு அண்ணாபோல என்று அண்ணா பெயரைச் சொல்லிவிட்டு சமத்துவப்பெரியார் என்று பெரியார் பெயரையும் சொல்லிவிட்டு, 50 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற புரட்சியைச் சொல்லுகிறேன் என்று சொன்னவர்.

இப்படி அப்போதெல்லாம் சென்சார் கத்திரிக்கோல் வெட்டுவதற்கு தயாராக இருந்தது. இன்றைக்கு அந்தப் பாட்டைப் போட்டால் படம் ஓடும் என்று சொல்லுகின்ற அளவிற்கு நிலைமை முற்றியிருக்கிறது என்றால், நாமெல்லாம் ஆளாளுக்கும், ஒவ்வொருவரும் நம்முடைய பங்கைச்செலுத்தி பகுத்தறிவை வளர்த்திருக் கிறோம் என்று பொருள்.

அப்படி வளர்க்கப்பட்ட பகுத்தறிவுத்தான் இன்றைக்கு நம்முடைய அருமை நண்பர், பெரியவர் ஆனைமுத்து அவர்களால் 20 புத்தகங்களாக ஆக்கப்பட்டு இங்கே வெளியிடப் பட்டிருக்கிறது. அதைப் பற்றி இங்கே சொன்னார்கள், எவ்வளவு கஷ்டப்பட்டார், எவ்வளவு சிரமப்பட்டார் என்று. அவர் தன்னைப்போலவே என்னையும் கருதிக் கொண்டு, உரக்க பேசினார்; அது உங்கள் காதுகளிலும் விழுந்திருக்கும், அப்போது நான் சொன்னேன் என் காதிலே விழுகிறது; மெதுவாக பேசுங்கள் என்று. அவருடைய வயதிற்கு என்னுடைய வயதும் அப்படித் தான் இருக்கும் என்று கருதுகிறார். ஆனால் இல்லை, நான் திடமாகத்தான் இருக்கிறேன் .

முதுகில் ஏற்பட்ட ஆப்பரேஷன் காரணமாக நான் இந்த வண்டியிலே வரவேண்டியிருக்கிறதே அல்லாமல், வேறு எந்த விதமான உபாதையும் எனக்கு இல்லை. ஆனைமுத்து ஆப்பரேஷன் செய்துக் கொண்டார் என்று சொன்னார்கள். எங்கே சதை இருந்தது? எந்த இடத்திலே எடுத்தார்கள்? என்று தெரியவில்லை. ஆனால் இவ்வளவு எலும்பும் தோலுமாக இருக்கின்ற ஒரு மனிதர் எவ்வளவு இரும்பு நெஞ்சம் படைத்தவராக இருந்து, தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளை, கருத்துக் களை நாட்டிலே பரப்ப வேண்டும் என்பதிலே அயராது முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்த்து நான் வியக்கிறேன்.

இந்தத் தளர்ந்த வயதிலே அவருக்கு ஏற்பட்டிருக் கின்ற இந்த உத்வேகமும், உணர்ச்சியும் எல்லோருக்கும் ஏற்பட வேண்டும் என்றுநான் வேண்டுகிறேன். இதை இயற்கை நிறைவேற்றித்தரும் என்று நான் நம்புகிறேன். அப்படிப்பட்ட ஆனைமுத்து அவர்கள் இன்று எடுத்திருக்கின்ற முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட இயக்கம் வலுவான இயக்கம். அந்த இயக்கத்திலே எந்த ஒரு சிறு பிளவு ஏற்பட்டாலும் அப்படி ஏற்பட்ட அந்தப் பிளவு, அந்த இயக்கத்தை மேலும் வளர்ப்பதற்கு இதுவரையிலே பயன் பட்டிருக்கிறதே அல்லாமல் வேறல்ல. திராவிடர் கழகத்திலே இருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்தது. ஆனைமுத்துகூட சொன்னார், நான் கண்டபடி உங்களை திட்டியிருக்கிறேன் என்றெல்லாம் சொன்னார். திட்டும்போதெல்லாம் பொறுத்துக் கொண்ட காரணத்தால்தான் இன்றைக்கு வாழ்த்து கிறீர்கள். பாராட்டுகிறீர்கள். நாங்கள், `வாழ்க வசவாளர்கள்’ என்று சொன்னபோது நீங்கள் எங்களை திட்டிக் கொண்டிருந்தீர்கள். இப்போது நீங்களே வாழ்க என்று சொல்கிறீர்கள். நான் அண்ணா சொன்ன அந்தக் கருத்து எப்படி வெற்றி பெற்றது என்பதை எண்ணிப்பார்க்கிறேன்.

திராவிட இயக்கத்தில் இன்றைக்கு நம்முடைய ஆனைமுத்து இந்த புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார் என்றால், இதைப்போலவே நம்முடைய திராவிடர் கழகத் தலைவர்கி.வீரமணி அவர்களும் ஒரு புத்தகத்தை வெளியிடுகிறார். அவர் எத்தனையோ புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். இப்படி இந்தப் பாசறைகள் பல இருந்தாலும்கூட, அண்ணா சொன்னதைப் போல் இவைகள் எல்லாம் இரட்டை குழல் துப்பாக்கிகளாக இருந்து குறி தவறாமல் யாரை வீழ்த்தவேண்டுமோ அவர்களை வீழ்த்தி, யார் கொடியை உயர்த்த வேண்டுமோ, அந்தக் கொடியை உயர்த்துவதற்கு இந்த இயக்கம் என்றைக்கும் தயங்காது. என்றைக்கும் இந்த இயக்கம் துவளாது. துவண்டு போகாது என்ற உறுதியை நான் பெறுவதற்குக் காரணமே, இதே நிகழ்ச்சி 35 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியிலே நடைபெற்றபோது இதிலே பாதிக்கூட்டம்கூட அந்த அரங்கில் இல்லை. இன்றைக்கு இந்த மன்றம் நிரம்பி வழிகின்ற அளவிற்கு நீங்கள் குழுமியிருக்கின்றீர்கள் என்றால் இது தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துக்கு ஒவ்வொரு நாளும் தமிழகத்திலே கிடைக்கின்ற ஆதரவு, மேலும் மேலும் பெருகிக் கொணடிருக்கிறது என்பதற்கு அடையாளம். அதற்கு துணை நிற்கின்ற பெரியவர் ஆனைமுத்து போன்றவர்களை நான் வாழ்த்துகின்றேன் என்று கருணாநிதி பேசினார்.இன்று வெளியிடபடும் பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் என்ற 20 தொகுதி புத்தக வெளியீடு போன்று தி.க. தலைவர் வீரமணி அவர்களும் பெரியார் சிந்தனைகளை பல தொகுதிகளாக வெளியிடலாம் ஆனால் நம்முடைய நோக்கம் பெரியார் கருத்துகளை மக்களிடம் பரவலாக சென்று சேர்ப்பதே முதன்மையாக இருக்க வேண்டும் என்று கலைஞர் கருணா நிதி கருத்து தெரிவித்தார் . முன்னதாக விழாவில் தலைமை தாங்கிய பெரியார் - நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் தோழர் வே. ஆணைமுத்து பேசும் போது " இன்று மகிழ்ச்சி கடலில் திழைக்கிறேன் பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் முதல் பதிப்பினை 1.7.1974 ல் திருச்சி சிந்தனையாளன் கழகத்தினால் அப்பொழுது கலைஞர் கையினால் வெளியிடப்பட்டது., 35 ஆண்டுகளுக்கு பிறகு விரிவாக்கம் செய்யபட்டு 20 தொகுதிகளை இன்று இப்பொழுதைய முதல்வரான கலைஞர் கையால் வெளியிட படுகிறது.

கலைஞரே முதல்வராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் அழைப்போம் எங்களுக்கு பெரியாரின் சிந்தனைகளை வெளியிட வேறு யார் இருக்கிறார்கள் என்று நெகிழ்ந்தார்.மேலும் கருத்து வேறுபாடு எங்களுக்குள் உண்டு ஆனால் அதையும் தாண்டி மீறியது எங்களது நட்பு . 1957 ல் குறள் முரசு பத்திரிக்கையில் தி.மு.க மற்றும் அண்ணா அவர்களை கடுமையாக விமர்சித்து எழுதியவன் நான் , அதை பிரசுரித்தவர் அப்பொழுது திருச்சி தி.மு.க நகராட்சி மன்ற தலைவர் நாக சுந்தரம் , எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் நட்பு இருந்ததால் தான் இது நடந்தது " என்று சொன்னவர் திராவிட இயக்க தலைவர்களின் வரலாறு துணை பாடமாக வைக்க பட வேண்டும். மற்றும் பெரியாரின் சிந்தனைகள் எல்லா நூலகம் மற்றும் பள்ளிகளில் வைத்து அவருடைய சிந்தனைகளை பரப்ப செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் முடித்தார்.

மார்ச். 21 இரவும் பகலும் சமமான சமத்துவ நாளில் உயர்ந்தவன் , தாழ்ந்தவன் இல்லாத சமத்துவ சமுதாயம் அமைய பாடுபட்ட பெரியாரின் சிந்தனைகள் நூல் , சமத்துவ புரம் அமைத்து பெரியாரின் சிந்தனைகளுக்கு ஈடு கொடுத்த , கலைஞரின் கையால் வெளியிடபடுவது நூலுக்கான சிறப்பு என்று சூளூர் பாவேந்தர் பேரவையின் புலவர் ந.கெளதமன் தெரிவித்தார்.

பெரியார் சிந்தனைகள் முதல் பதிப்பை ரூபாய் 150 கொடுத்து பெற்று கொண்ட தற்போதைய அரசு திட்டகுழு துணை தலைவர் மு. நாக நாதன் அவர்கள் தோழர் ஆணைமுத்து அவர்களின் சுருக்கமாக பேசும்படியான வேண்டு கோளை மீறி சற்று அதிகமான நேரம் எடுத்து கொண்டு " தமிழகத்தின் இன மீழ்ச்சி வரலாறு பெரியார் வரலாற்றோடு பிரித்தறிய முடியாதது, அப்படிபட்ட பெரியாரின் வரலாறு முழுமையாக எழுதபட வேண்டும்.அமர்த்தியா சென் புத்தகம் ஒன்றில் உலக செம்மொழிகளில் கடவுள் மறுப்பை அதிகமாக கொண்ட மொழிகள் பாலி, மற்றும் சமஸ்கிருதம் என்று எழுதி இருந்தார். திராவிட இயக்க வரலாறு அவரிடம் படிக்க கிடைத்திருந்தால் தமிழ் போன்று வேறு எந்த மொழிகளிலும் கடவுள் மறுப்பு கொள்கைகள் தீவிரமாக இல்லை என்று சொல்லி இருப்பார்.ஆனால் அத்தகைய முழு திராவிட இயக்க வரலாற்று தொகுப்புகளை பல மொழிகளில் சென்று சேர்க்காதது நம்முடைய பிழை அதை உடனடியாக செய்ய வேண்டும் என்றார்.மேலும் பெண்ணுரிமை, விதவைகள் மறுமணம். போன்ற பெரியாரின் புரட்சிகரமான சிந்தனைகள் எல்லோரிடமும் சென்று சேர்க்கபட வேண்டும்.

விழாவில் மேலும் பெரியார் நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையின் அறங்காவலர் கா.முகிலன் பேசுகையில் " பெரியார் சிந்தனைகள் முதற்பதிப்பு 1.7.1974 ல் திருச்சி சிந்தனையாளன் கழகத்தினரால் வெளியிட்டபோது 60000 ரூபாய் 24 சதவிகித வட்டிக்கு வாங்கி வெளியிட்டு அந்த கடனை கழிக்க 10 ஆண்டுகள் தேவைபட்டது , ஆனால் இந்த இரண்டாம் பதிப்பு வெளியிட்டபோது முன்பதிவு என்ற முறையில் சுமார் 2000 பேருக்கு மேல் பணம் கட்டி அந்த மாதிரி சிரமமில்லாமல் செய்து விட்டனர்." என்றார்

மேலும் துரை கலையரசு, சென்னை பல்கலைகழக துணை வேந்தர் பொற்கோ , சோம.இராஜேந்திரன், மருத்துவர் பழனியப்பன் , கு.ம சுப்பிரமணியன் , ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...