???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மத்திய வேளாண் சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தானிலும் மசோதா 0 கமலுடன் நடித்த காட்சிகளை நீக்கியதால் அழுதேன் : நவாசுதீன் சித்திக் 0 ’தீபாவளிக்கு 25,000 டன் வெங்காயம் இறக்குமதி’ – பியூஷ் கோயல் 0 ’தமிழ் இன உரிமைகளை காத்திட உறுதி கொள்வோம்’ – வைகோ 0 ’டாஸ் ஜெயித்திருந்தால் பவுலிங் எடுத்திருப்போம்’ – கே.எல்.ராகுல் 0 சகாயம் ஐ.ஏ.எஸ் விருப்ப ஓய்வு! 0 அதிமுக ஆட்சியின் வேதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: மு.க.ஸ்டாலின் கடிதம் 0 இன்றுடன் முடிகிறது நான்காம் கட்ட ஊரடங்கு 0 35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பறிமுதல் 0 25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்குள் வந்து சேரும்: மத்திய அமைச்சர் 0 எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை: கடம்பூர் ராஜூ 0 தமிழகத்தில் நவம்பர் 18ம் தேதிக்கு முன் மருத்துவக் கலந்தாய்வு 0 சி.எஸ்.கே ரசிகர்களின் வேதனை! 0 ஆளுநர் தாமதத்தால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை: முதலமைச்சர் பழனிசாமி 0 மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ல் சபரிமலை திறப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டாப் டென் - தமிழ் புத்தகங்கள் 2009

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   05 , 2010  12:21:12 IST

கவிஞர், எழுத்தாளர் தமிழ்நதி தேர்ந்த வாசகரும் கூட. 2009 இல் வாசித்து மகிழ்ந்த நூல்கள் பற்றி ’அந்திமழை’ வாசகர்களுக்கு அவர் எழுதும் குறிப்புகள் இங்கே.

அரளிவனம் -
உமாமகேஸ்வரி: (சிறுகதைத் தொகுப்பு- எனி இந்தியன்)


பெண் தனிமையிலிருந்து பெருகும் வார்த்தைகளால் எழுதப்பட்ட கதைகள். சுவருக்குள் சுருக்கப்பட்ட வாழ்வின் மீதான கசப்புணர்வைச் சொல்லிச் செல்லும் அதேவேளையில், தனக்கு வழங்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி விரித்த கனவுப்பாதையில் நடந்துசெல்கின்றன இவரது சொற்கள். இவரது உரைநடை பல இடங்களில் கவிதை.

என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்!-
யூமா. வாசுகி: (கவிதைகள்-நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)


முறைப்பாடுகளும் கசடுகளும் அற்ற ஆனால் புறவுலகின் மலினங்களால் நலிந்துபோன நல்லிதயமொன்றின் வெளிப்பாட்டை இத்தொகுப்பில் படிக்கமுடிகிறது. அவருடைய வார்த்தையில் சொல்வதானால்,‘காண்பதன் மீதெல்லாம் பூக்கள் தூவும் பார்வை’. தொகுப்பு முழுவதிலும் குழந்தைகளின் பாதங்கள் பதிந்திருக்கின்றன. குழந்தைகளின் உலகத்தின் மீது விழுந்த கவிஞனின் பார்வை அதைக் கவிதைகளாகப் பெயர்த்திருக்கிறது.

உண்மை கலந்த நாட்குறிப்புகள்
அ.முத்துலிங்கம் (புனைவு-அபுனைவு - உயிர்மை)


‘மிக அருமையான கதைசொல்லி’யான அ.முத்துலிங்கத்தின் இத்தொகுப்பும், கையிலெடுத்துப் படித்து முடிக்கும்வரை கீழே வைத்துவிடமுடியாதளவு வசீகர நடையோடிருந்தது. அவர் எழுத்தில் இடைச்சரடென இழையோடியிருக்கும் நகைச்சுவையை இத்தொகுப்பிலும் காணமுடிந்தது. புனைவா அபுனைவா எனப் பிரித்தறிய முடியாது மயக்கும் மொழியாளுமை கொண்ட அ.முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’அண்மையில் படித்தவற்றுள் சுவாரசியமானது.

இழந்த பின்னும் இருக்கும் உலகம்
சுகுமாரன்: (கட்டுரைத்தொகுப்பு - உயிர்மை)


கவிஞர் சுகுமாரனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பை கொழும்பு-வவுனியா இரயில் பயணத்தின்போது வாசித்து முடித்தேன். இரயிலின் வேகத்தில் கடந்தோடிய அழகிய வெளியை முற்றிலுமாக மறுத்து புத்தக வரிகளில் ஆழ்ந்து அமிழ்ந்து கிடந்தது அதுவே முதற்தடவை. இலக்கியம் குறிப்பாகக் கவிதை தொடர்பான சிறந்த கட்டுரைகளைக் கொண்டமைந்த இத்தொகுப்பு எழுத்து, நினைவு, மறுவாசிப்பு, அஞ்சலி, பார்வை என வசதிக்காக வகைமைப்படுத்தப்பட்டிருக்கிறது. நோவென்று சொல்லவியலாத விசித்திரமான நோவைப்போன்ற நுட்பமான துயரம் அவருடைய தன்னனுபவக் கட்டுரைகளில் விரவிக்கிடந்தது.

நளிர்
நாகார்ஜூனன்: (கட்டுரைத்தொகுப்பு - ஆழி பதிப்பகம்)


தமிழில் இயங்கிவரும் மிகச் சில அறிவுஜீவிகளுள் ஒருவராகிய (எனது கணிப்பில்) நாகார்ஜூனனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு, தமிழ்வெளியைக் கடந்து விரிவது. ‘அறிவியல் எழுத்து’அன்றேல் ‘எழுத்தின் அறிவியல்’என்று கூறத்தக்க பரந்த தளங்களில் அவரது பார்வை விசாலித்திருக்கிறது. நாகார்ஜூனனின் இணையத்தளங்களில் வெளியாகிய கட்டுரைகள், நேர்காணல்கள், மதிப்புரைகள் எனப் பன்முகவெளிப்பாடாக இத்;தொகுப்பு அமைந்துவிட்டிருக்கிறது. அறிவின் தேடலை நோக்கிச் செலுத்தக்கூடிய நூல் இது.

உறுமீன்களற்ற நதி
இசை: (கவிதைகள்-காலச்சுவடு)


இசையின் கவிதைகள் பாசாங்கற்றவை. மேலும் பாசாங்கினைச் சாடுபவை. சின்னச் சின்ன எள்ளல் மூலம் வாசிப்பின் முடிவில் நம் முகங்களை இறுகச் செய்யக்கூடிய பெரிய பெரிய விடயங்களைப் பேசுகிறவை. சாதாரண வார்த்தைகளின் வழி கவித்துவத்தின் அசாதாரணத்திற்கு இட்டுச்செல்லும் நல்ல கவிதைகளை ‘உறுமீன்களற்ற நதி’யில் கண்டேன்.

சிமொன் தெ பொவார்
நாகரத்தினம் கிருஷ்ணா: (எனி இந்தியன் பதிப்பகம்)


பெண்களுடைய இரண்டாந்தர வாழ்நிலை பற்றி கோட்பாட்டு ரீதியாக எடுத்துச்சொன்னவரும் ‘இரண்டாம் பாலினம்’என்ற மிக முக்கியமான நூலை எழுதியவருமாகிய சிமொன் தெ பொவாரைக் குறித்து இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. தாய், மனைவி என்ற நிலைகள் குடும்பம் என்ற அமைப்பினுள் எவ்வாறு பெண்ணைக் கட்டுப்படுத்துவனவாக இருக்கின்றன என்பதைக் குறித்து சிமொன் பேசியிருக்கிறார். அவருடைய நேர்காணலையும் உள்ளடக்கிய இந்நூல், பெண்விடுதலை தொடர்பான சிந்தனைகளை உள்ளடக்கி வெளிவந்த (தமிழில்) முக்கியமான நூல்களுள் ஒன்றாகும்.

முள்
முத்துமீனாள் (ஆழி)


சமூகத்திலுள்ள ஏனையோர் அருவருப்பாகப் பார்த்து ஒதுக்கக்கூடிய வகையில் உருவத்தைச் சிதைத்துவிடும் கொடியநோயான தொழுநோயிலிருந்து மீண்டுவந்த ஒரு பெண்ணின் தன்வரலாற்று நூல் இது. எளிய வார்த்தைகள் எவ்விதம் இரத்தமும் சதையுமாக உருமாறுகின்றன என்று வியக்கும்படியானதொரு நடை. சமூகப்பார்வை, தன்னம்பிக்கையோடு எதையும் வெளிப்படையாகப் பேசும் நேர்மை அவருடைய எழுத்துக்களில் வெளிப்பட்டிருந்தது.

காவலன் காவான் எனின்
நாஞ்சில் நாடன் (கட்டுரைத்தொகுப்பு-தமிழினி)


அறச்சீற்றத்தை எள்ளலோடு வெளிப்படுத்தும் நாஞ்சில் நாடனின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. ‘காவலன் தான் காவாமல் மக்களின் முதுகில் சுமத்தும்’பெருஞ்சுமைகளை எழுதிவருபவர்களில் முக்கியமானவர் நாஞ்சில் நாடன். இலக்கிய அரசியலை விடுத்து ‘அரசியல் இலக்கியம்’படைக்கவேண்டிய காலம் என்றவகையில் இக்கட்டுரைத் தொகுப்பு முதன்மைபெறுகிறது.

அதே இரவு அதே வரிகள்
எஸ்.ராமகிருஷ்ணன் (மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், கதைகள் - உயிர்மை)


உலக இலக்கியத்தின் சாளரங்கள் பலவற்றைத் திறந்துகாட்டுவதாக அமைந்த மொழிபெயர்ப்புத் தொகுப்பென்று எஸ்.ராமகிருஷ்ணனின் ‘அதே இரவு அதே வரிகள்’ஐச் சொல்லலாம். பெயர்களை மட்டும் வைத்துக்கொண்டு வெற்று டம்பம் அடிப்பவர்களுக்கு உண்மையில் இத்தொகுப்புநூல் உண்மையில் - உண்மையின் திறவுகோலாக இருக்கமுடியும். கதைகள், நோபல் பரிசு உரைகள், கட்டுரைகள், நினைவுக்குறிப்பு, நேர்காணல் வகைமைப்படுத்தப்பட்டுள்ள இத்தொகுப்பானது, படைப்பாளிகள் தமது ஆன்மாவின் அடியாழத்திலிருந்து உதிர்க்கும் வார்த்தைகளால் முக்கியம் பெறுகிறது.

- தமிழ்நதி


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...