???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுக தலைமையகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம் 0 பாஜக சதியால் கைது: நாஞ்சில் சம்பத் 0 தினகரன் கைது பின்னணியில் பாஜக இல்லை: தமிழிசை 0 லஞ்சப் புகார்: நள்ளிரவில் தினகரன் கைது 0 மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது: நீதிமன்றம் 0 புத்திசாலித்தான கேரக்டர் கொடுங்கள்: ஜோதிகா 0 நக்ஸல் தாக்குதல்: 4 தமிழக சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி 0 திருவாரூரில் மு.க.ஸ்டாலின் கைது 0 சுகேஷை எனக்குத் தெரியும்: தினகரன் ஒப்புதல் 0 புலன் மயக்கம் – 36 - தனிப்பாட்டு ராஜா - ஆத்மார்த்தி எழுதும் தொடர் 0 ஜுலை மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் 0 நான்கரை லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் 0 விவசாயிகளுக்காக தமிழகத்தில் முழு அடைப்பு 0 ஓபிஎஸ்ஸுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு 0 ஸ்மார்ட் ரேசன் கார்டு: ஒரு மணிநேரத்தில் விண்ணப்பிக்கலாம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழ் சினிமாவும் சிரமங்களும் - சந்தானபாரதி

Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   29 , 2005  14:56:05 IST

சினிமாவின் சகல அம்சங்களையும் கமர்சியல் வெற்றியே நிர்ணயிக்கிறது. பெருமளவில் பணம் புழங்கும் இத்துறையில் மாற்றங்கள் கொண்டு வருவது எளிதல்ல.

குழு முயற்சியாக இருக்கும் சினிமாவில் ஒரு தனி மனிதன் (பொருளாதார பலமில்லாதவன்) பெரிய மாற்றத்தை கொண்டு வருவது சுலபமல்ல. வெளியுலகத்திற்கு புரிய வைக்க முடியாத நடைமுறை சிக்கல்கள் இங்கு அதிகம். `சார் கெளதமி கால்ஷீட் கொடுத்திட்டாங்க கதை பிடிச்சிருந்தா டேட்ஸ் அட்ஜஸ்ட் பண்ணி தாரேன்னு விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். ஹிட் ஆகிற பூஜை போட்டிரலாம் என்று முன் ஏற்பாட்டோடு தயாரிப்பாளர் வரும்போது அதற்கு ஏற்ற மாதிரிதான் கதை பண்ண வேண்டும். சிலரிடம் வித்தியாசமான கதையைச் சொன்னால் கதை நல்லாத்தான் இருக்கு ஆனா ஓடுமா? ஏற்கனவே நேரம் நல்லா இல்ல வீணா ஏன் ரிஸ்க். எதுக்கும் வேற கதை சொல்லுங்களேன்' என்று கூறுவார்கள். இது மின்னல் வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் திரையுலகில் அன்றாடம் நடக்கும் காட்சிகள். இயக்குநர் (அ) கதை வசனகர்த்தா சொல்லும் வித்தியாசமான கதையை தயாரிப்பாளர் ஏற்று பின் நடிகர் நடிகை ஒத்துக்கொள்ள வேண்டும். இந்த எல்லையை மீறி வெளிவரும் புதுமையான படைப்புகள் மிகக் குறைவு.

லட்சக் கணக்கில் பணத்தை முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் குறுகிய காலத்தில் நிறைய லாபம் சம்பாதிக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். அவர்கள் பெரிய அளவில் ரிஸ்க் எடுக்க தயாரில்லை.
தமிழ் சினிமாவில் யதார்த்தம் மிகவும் குறைவு என்ற குற்றச்சாட்டு எப்போதும் இருந்து வரும் ஒன்று. சினிமாவில் வரும் பாடல் காட்சிகள் பல வேளைகளில் தேவையற்றதாகத் தோன்றினாலும், தவிர்க்க முடியாத ஒன்று. இருபத்தி ஐந்து காட்சிகளில் சொல்ல வேண்டிய ஒரு விஷயத்தை ஒரு பாடல் காட்சியின் மூலம் அழுத்தமாக கூறிவிடலாம். என்னுடைய படங்களில் பொருத்தமான இடங்களில் இயல்பாக இருக்கிற மாதிரி பாடல் காட்சிகளை அமைக்கிறேன். (நான் இயக்கிய `கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்ற படத்தில் பாடல்களே கிடையாது)

சுதந்திரமாக இயங்க விரும்பும் இயக்குநர்களின் எல்லைக்குள் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், நடிகர்கள் அடிக்கடி குறுக்கிடுகிறார்கள் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. ஆனால் உண்மையான நிலவரம் வேறு மாதிரியானது.

ஒரு கதையை கேட்ட உடனேவோ, அல்லது பாதி படத்தில் ரஷ்ஷை, போட்டு பார்த்தோ இது ஓடும் அல்லது ஓடாது என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால் சில விஷயங்கள் (மயிற்கூச்செறியும் சண்டைக்காட்சிகள், கிளுகிளுப்பான காதல் காட்சிகள், வித்தியாசமான டான்ஸ் sequence, சென்டிமென்ட் காட்சிகள்...) இருந்தால் படம் தப்பித்துக்கொள்ளும் என்ற கருத்து அனேகரிடம் உள்ளது. ஏராளமான பணத்தை முதலீடு செய்யும் தயாரிப்பாளர் இயக்குநரின் திறமை மேல் சந்தேகப்படும்போது மேலே குறிப்பிட்ட விஷயங்களில் சிலவற்றை படத்தில் சேர்க்க சொல்வார்.
நடிகரின் குறுக்கீடும் ஏதோ ஒரு வடிவில் வரும். உதாரணமாக `சார், கடைசி இரண்டு படத்தில் ஒரு மாதிரி பழைய சட்டை வேஷ்டி உடுத்திற கேரக்டராக எனக்கு கொடுத்திட்டாங்க. அத பார்த்திட்டு ரசிகர்கள் வேறு மாதிரி பீல் பண்ணுறாங்க. இந்த படத்திலேயாவது கொஞ்சம் நல்ல சட்டை பேண்ட் போட்டுட்டு வர்ற மாதிரி வழி பண்ணுங்க' என்று ஒரு குமாஸ்தா வேடத்தில் சாதாரண உடயணிந்து நடிக்க வேண்டிய கதாநாயகன் சொல்லும் போது பல வேளைகளில் இயக்குநரும் தலையாட்ட வேண்டியிருக்கிறது. நடிகரின் இந்த மாதிரியான குறுக்கீடுகள் உள்நோக்கம் அற்றது என்றாலும் கதாபாத்திரத்தின் இயல்பைக் கெடுத்து விடுகிறது.

இன்னும் பல வேளைகளில் விஷயம் தெரிந்த தயாரிப்பாளரோ நடிகரோ அல்லது வேறு தொழில் நுட்ப கலைஞரோ ஏதேனும் கருத்து சொன்னால் இயக்குநர் அதற்கு செவி சாய்க்க வேண்டும். யோசனை கூறும் யாவரும் படத்தினோட நன்மையைக் கருதி கூறுவதால், நல்ல விஷயங்களை குறுக்கீடுகள் என்று கருதாமல் ஏற்றுக்கொள்ளலாம். சினிமா ஒரு தனிமனித கலையல்ல, கூட்டு முயற்சி இதில் மற்றவரை புரிந்து கொண்டு அவர் கருத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவமில்லாதவரால் நிலைத்திருப்பது கடினம்.
பழைய படங்களில் பாசம், சோகம், வீரம் என்று எதைக் காட்டினாலும் கொஞ்சம் அதிகப்படுத்தி காண்பிப்பார்கள். ஆனால் சமீபகால படங்களில் பல விஷயங்கள் இயல்பாக சித்தரிக்கப்படுகிறது. முன்பிருந்ததைவிட தொழில் நுட்பத்திலும் கதை சொல்லும் பாணியிலும் தமிழ் சினிமா நிறைய முன்னேறியுள்ளது. ஆனால் கதையில் அவ்வளவு புதுமையில்லை. நமது சமூக அமைப்பு மாறாததும் இதற்கு முக்கிய காரணம்.

எவ்வளவுதான் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும் இதையும் மீறி நல்ல படங்கள் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. தனக்கென்று சில கோட்பாடுகளை வகுத்துக் கொண்டு அதிகம் சமரசம் செய்யாமல் தொடர்ந்து படம் பண்ணிக்கொண்டிருப்பவர்களும் இங்கே இருக்கிறார்கள். தமிழ் திரையுலகின் இன்றைய நிலைக்கு இங்கிருப்பவர்கள் தான் காரணம். வித்தியாசமான முயற்சிகள், இந்த துறையில் மட்டுமல்ல. எந்த துறையில் எடுத்தாலும் முதலில் வரவேற்பு இருக்காது. ஆனால் குறிக்கோளில் தொடர்ந்து உறுதியாக இருந்தால் புதிய எல்லைகளைத் தொடலாம்.


சந்திப்பு : ந.இளங்கோவன்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...