???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0  74வது சுதந்திர தினம்: குடியரசுத் தலைவர் வாழ்த்து  0 இ-பாஸ் முறையை முழுமையாக அகற்ற வேண்டும்: ஸ்டாலின்  0 நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி  0 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க சி.பி.ஐ. மனு 0 ஆளுநர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் 0 தமிழகத்தில் ஒரேநாளில் 5,890 பேருக்கு கொரோனா 0 தமிழகம்: 5,835 பேருக்கு புதிதாக கொரோனா; 119 பேர் பலி 0 கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்: கு.க. செல்வம் 0 உடுமலை சங்கர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு 0 நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது: தேசிய தேர்வு முகமை 0 ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே: ஓ.பி.எஸ் அறிவுரை 0 மக்களுக்கு புரியும் மாநில மொழிகளில் EIA 2020 வரைவை வெளியிடுங்கள்: பார்வதி 0 1947லிருந்து நாடு காணாத சரிவு காணலாம்: இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி 0 எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர்: ஆர்.பி.உதயகுமார் 0 ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்தல்ல: ஜெயக்குமார்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எந்தக் காலத்திலும் கவிதை கோரி நிற்பது - கவிதையின் கால் தடங்கள்-5

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   11 , 2013  12:12:04 IST


“இன்றைய கவிதை சிக்கல்கள் நிரம்பியது. வாழ்க்கையை வியாக்கியானம் செய்யும் கோட்பாடுகளின் மறைவு; மனித இருப்புக்குப் பொருள் சேர்க்கும் கருத்தாடல்களின் மீதான நம்பிக்கையின்மை; முன்பு செப்பனிட்டு வைத்திருந்த பாதைகளில் நடக்க விதிக்கப்படும் தடைகள்; மேலோட்டமான படைப்பாக்க மல்யுத்தங்கள் - எல்லாம் வாழ்க்கையையும் அதன் உடன் நிகழ்வாகக் கவிதையையும் சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கின்றன. அந்த சிக்கலின் மையத்தைப் பேசுகிற ஒன்றாக இன்று கவிதை ஆகியிருக்கிறது. எல்லாக் காலத்திலும் கவிதை கோரி நின்றது அதைத்தான். இப்போது வேண்டி நிற்பதும் அதைத்தான். முன்னர் எதைச் சொல்வது என்பது கவிதையின் சிக்கலாக இருந்தது. இன்றைய கவிதையில் எதையும் சொல்லலாம். ஆனால் சிக்கல், எப்படிச் சொல்வது என்பதில்தான்.”

# சுகுமாரன்

O
அபுதாபியில் வார விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையில், நான்கைந்து நண்பர்கள் ஒரு தேநீர்க் கடையில் சந்திப்பதை வழக்கமாய் வைத்திருக்கிறோம். அத்தனை பேரும் பொறியாளர்கள்.

வாரத்தின் மற்ற நாட்கள் மேலேற்றி வைக்கும் அழுத்தங்களை உதறி சற்றே இளைப்பாற ஒரு சந்திப்பு.  

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெறும் சந்திப்பில் எல்லாம் அலசப்படும்.

அவ்வப்போது கவிதைகளும்.

கவிதைத் தொகுப்பு வெளியிடுவதற்கான விதை, முதலில் ஊன்றப்பட்டது இந்த சந்திப்பொன்றில்தான்.

நண்பர்களில் ஒருவர் பெயர் பீட்டர் பிரசாத். இவரைக் குறிப்பிட்டு சொல்ல காரணம், சில இலக்கியவாதிகளோடான இவரது பரிச்சயம்.

சமயவேல் இவரது நண்பர். இவரது திருமண விழாவில் பங்கேற்றவர் கோணங்கி. கல்குதிரை இரண்டாவது இதழில், இவரது பங்கும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. கோவில்பட்டியில் பணி நிமித்தம் தங்கியிருக்கையில் அடிக்கடி சந்தித்து உரையாடியது தேவதச்சன் அவர்களுடன்.

அப்போது ஒரு சமயம், தேவதச்சன் சொன்னதாக, அவர் அடிக்கடி நினைவு கூறும் ஒரு வாசகம்:

"கலைக்கு உள்ள விஷேசம் என்னன்னா, அது எதைத் தொட்டாலும் அதை (Formless) ஆக மாற்றி விடும்."

O

ஒரு மின்பொறியாளனாக, எனக்குப் பிடித்த தேவதச்சன் அவர்களின் கவிதை இது:

ஒளி

கவிதை எழுதுவது
என்பது
ஒரு
குண்டு பல்பை
ஹோல்டரில் மாட்டுவது போல் இருக்கிறது
முழுமையானதின்
அமைதியை ஏந்தி
பல்ப்
ஒளி வீசத் தொடங்குகிறது
ஒரு மெல்லிய இழை
நிசப்தத்தில்
எவ்வளவு
நீல
நன் கணம்

O
தேவதச்சன் கவிதைகள்


01
அன்பின் பதட்டம்

நாற்பது வயதில் நீ நுழையும் போது, உன்
ஓப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன
சட்டையை தொளதொளவென்றோ
இறுக்கமாகவோ போடுகிறாய்
தலைமுடியை நீளமாகவோ
குறுகவோ தரிக்கிறாய்
உன்னிடமிருந்து பறந்து சென்ற
இருபது வயது என்னும் மயில்
உன்
மகளின் தோள் மீது
தோகை விரித்தாடுவதை
தொலைவிலிருந்து பார்க்கிறாய்
காலியான கிளைகளில்
மெல்ல நிரம்புகின்றன,
அஸ்தமனங்கள்,
சூரியோதயங்கள் மற்றும்
அன்பின் பதட்டம்.

O

02
இன்னொரு பக்கம்

தன் கழுத்தை விட உயரமான சைக்கிளைப்
பிடித்தபடி லாவகமாய் நிற்கிறாள் சிறுமி.
கேரியரில் அவள் புத்தகப்பை விழுந்து
விடுவது போல் இருக்கிறது.
மூன்றாவது பீரியட் டெஸ்டுக்கு அவள் உதடுகள்
சூத்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தன.
அவள் கண்ணுக்கு அடங்காமல்,
கனரக வாகனங்கள் அவளைக்
கடந்து சென்றன.
வேகமாய்த் தாண்டிச் செல்லும் பஸ்ஸில் -
இன்னொரு பகலில் - போய்க்
கொண்டிருக்கும் குண்டுப்பெண்
சிறுமியின் ஷூ லேஸ்
அவிழ்ந்திருப்பதைப் பார்த்தாள்
கை அசைத்தாள்.
சிறுமிக்குக் கொஞ்சம் புரிந்தது.
கொஞ்சம் புரியவில்லை.

O
03
என் நூற்றாண்டு

துணியால் வாயைப் பொத்தி அழுதபடி
ஒரு பெண் சாலையில் நடந்து போகிறாள்
    என் பஸ் நகர்ந்து விட்டது.
படிவங்களை நிரப்பத் தெரியாமல் ஒரு முதியவர்
மருத்துவமனையில் திகைத்து நிற்கிறார்
    என் வரிசை நகர்ந்து விட்டது.
தண்டவாளத்தில் ஒரு இளைஞன் அடிபட்டு
தண்ணீர் தண்ணீர் என்று
கையசைத்துக் கொண்டிருக்கிறான்
    என் டிரெயின் நகர்ந்து விட்டது
எவ்வளவு நேரம்தான் நான் இல்லாமல் இருப்பது
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்
இருபத்தொன்றாம் நூற்றாண்டு எவ்வளவு நேரமோ
அவ்வளவு நேரம்.

O
04
மாயம்

நீ
தெரிந்து கொள்ள வேண்டாம்
உனக்காக
நான்
எனக்குப் பிடித்த
காபியிலிருந்து தேநீருக்கு மாறியது.
தெரிந்து விட்டால்
காபி
எனக்குப் பிடிக்காத
தேநீராகவும்
இருக்கும்
மாயம் எனக்கு
மறைந்து போகும்.

O
05
என் வீடு

மொட்டை மாடியிலிருந்து
விருட்டென்று எழுந்து பறந்து செல்கிறது காகம்.
அது விட்டுச் சென்ற
என் வீட்டில்
குக்கர் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

O

06
நிசப்தம் நிசப்தம்
அவ்வளவு நிசப்தம்
காதருகில் முதல் நரை.

O

07

காற்று ஒருபோதும் ஆடாத மரத்தைப் பார்த்ததில்லை
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன
வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக் கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை.

O

08

கண்ணகி
சிலையை அகற்றுகிறார்கள்
தேர்ந்த பொறியாளர்கள்.
உயர்நுட்ப எந்திரங்கள்.
அவசரமான அரசாணை.
அரவமில்லாமல் நடக்கவேண்டும்
சிலையை ஏந்தி
வேலை முடிந்தது
ஓசையில்லாமல்.
வண்டி நகர்ந்தது.
கேட்கத் தொடங்கியது
சிலம்பின் சப்தம்.

O

09

துணி துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்.

O
 
10

காற்றில் வாழ்வைப் போல்
வினோத நடனங்கள் புரியும்
இலைகளைப் பார்த்திருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும்
இலையைப் பிடிக்கும்போது
நடனம் மட்டும் எங்கோ
ஒளிந்து கொள்கிறது.

O


தேவதச்சன் கவிதைத் தொகுப்புகள்:

1. கடைசி டினோசார் (2004 வரை எழுதிய 137 கவிதைகள் அடங்கிய தொகுப்பு) - உயிர்மை வெளியீடு.
2. யாருமற்ற நிழல் - உயிர்மை வெளியீடு
3.இரண்டு சூரியன் - உயிர்மை வெளியீடு.
4. ஹேம்ஸ் எனும் காற்று - உயிர்மை வெளியீடு.    

****
  

(நடப்போம்)
 
அறிமுகக் குறிப்பு:
செல்வராஜ் ஜெகதீசன் 1969 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தற்சமயம் பணிநிமித்தம் (மின்பொறியாளர்) அபுதாபியில் (ஐக்கிய அரபு குடியரசு) வசித்து வருகிறார்.

"அந்தரங்கம்" (2008), "இன்னபிறவும்" (2009), “ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்” (2010) & நான்காவது சிங்கம் (2012) ஆகிய கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன.

****

கவிதையின் கால்தடங்கள் தொடர் ஒவ்வொரு வாரமும் திங்கள் தோறும் அந்திமழையில் வெளிவரும்.

 

கவிதையின் கால்தடங்கள் -1

கவிதையின் கால்தடங்கள் -2

கவிதையின் காலதடங்கள் -3

கவிதையின் காலதடங்கள் -4


 


English Summary
selvaraj jegadesan 5

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...