மதுரை ஆதீனம் தன்னை பற்றி பேச்சு இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் எனவும் நாத்திகர்களுக்கும் ஆத்திகர்களுக்கும் சேர்ந்த அரசு தமிழக அரசு எனவும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை, துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் மழைநீர் வடிகால்வாய் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் துவக்கி வைத்கார். உடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இருந்தார். இதனை தொடர்ந்து தயாநிதிமாறன் எம்பி, செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம், பிரதமரை மேடையில் வைத்து தமிழக முதல்வர் அரசியல் நாடகம் நடத்தினார் என அண்ணாமலை கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, அண்ணாமலை நடிகர் தானே. அவர் நடிப்பார். அதற்கு நான் என்ன செய்வது? என பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், இரண்டு முறை பிரதமரை நேரில் சந்தித்து தமிழகத்துக்கான கோரிக்கைகளை முதல்வர் கூறினார். ஆனால் நடவடிக்கைகள் இல்லை. எனவே மக்களின் முன்னிலையில் எடுத்து உரைத்தார். அப்போதாவது பிரதமர் காதில் விழுந்து நடவடிக்கை எடுக்கட்டும்.
எங்கள் முதல்வர் என்ன கேட்டார்? தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 10 சதவீதத்தில் ஒரு சத வீதம் தான் கிடைக்கிறது. அதை எடுத்து கூறினார். பிரதமரிடம் இதை கேட்காமல் வேறு எதை கேட்பது? வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என அண்ணாமலை பேசுகிறார். பெட்ரோல் விலை உயர்ந்து போது எங்கு போனார் அண்ணாமலை? திமுக ஆட்சிக்கு வந்த உடன் பெட்ரோல் விலை குறைத்தோம், பால்.விலை குறைத்தோம். முதல்வர் கேட்டது தமிழகத்தில் உள்ள பாஜகவினருக்கும் சேர்த்து தான் என தெரிவித்தார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மதுரை ஆதீனம் தன்னை பற்றி பேச்சு இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். உயிருக்கு ஆபத்து என கூறி பல நாட்கள் ஆகியது. ஆனால் சிறு பிரச்னை கூட ஏற்படவில்லை. நாத்திகர்களுக்கும் ஆத்திகர்களுக்கும் சேர்ந்த அரசு தான் தமிழக அரசு.
மதுரை ஆதினம் பிரதமரை சந்திப்பது தனிப்பட்ட சுதந்திரம். அதில் திமுக கருத்து கூறாது. அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கும் அரசு தமிழக அரசு. ஜிஎஸ்டி வரி பாக்கி குறித்தும் தமிழகத்துக்கான கோரிக்கைகள் குறித்தும் இரண்டு முறை பிரதமரை முதல்வர் சந்தித்துள்ளார். மக்களுக்கான கோரிக்கைகளை கேட்க இதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி முதல்வர் கேட்டார். மத்திய அரசிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்க முடியும் என பேசினர்.