அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பேரறிவாளன் வழக்கு... மாநில சுயாட்சி தீர்ப்பு!

Posted : வியாழக்கிழமை,   மே   19 , 2022  14:31:05 IST


Andhimazhai Image
பேரறிவாளனுக்கு, நேற்று முழுவிடுதலை அளிக்கப்பட்டுவிட்டது... கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறைவிடுப்பிலும் பின்னர் பிணையிலும் இருந்துவந்த நிலையில் இது நடந்தேறியிருக்கிறது.   
 
பிரதமர் பதவி வேட்பாளரான இராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டு, 36 ஆண்டுகள் சிறைத் தண்டனையில் கழித்திருக்கிறார், அறிவு என்கிற பேரறிவாளன். 
 
சராசரி வாழ்க்கையில் அரை ஆயுள் காலத்தை சிறையிலேயே கழிக்கவேண்டியதாகிவிட்டது, அவருடைய துன்பியல் நேர்வு. 
 
அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளின் ஆட்சிகளைத் தாண்டி, நீதித்துறையில் பேரறிவாளனின் வழக்கு நீண்ட காலமாக இருந்துவந்தது. இதே வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவர், வாழ்நாள் தண்டனை பெற்ற மற்ற மூவர் தொடர்பாக, இவ்வளவு விவகாரம் இருந்ததில்லை. 
 
பேரறிவாளனின் விவகாரத்தில் மட்டும்தான் மாறிமாறி கோரிக்கை மனுக்கள், வழக்குகள், உத்தரவுகள், தீர்ப்புகள், மேல்முறையீடுகள் என காலம் அவரை நெட்டித் தள்ளிக்கொண்டே வந்தது. அதுவுமேகூட அவருக்கு விடுதலையைப் பெற உதவியிருக்கிறது என்றும் சொல்லமுடியும். 
 
நீதிமன்றங்களில் திரும்பத்திரும்பக் குறிப்பிடப்படுவது, தமிழ்நாட்டு அமைச்சரவை 2018ஆம் ஆண்டு ஒன்பதாவது மாதம் 9ஆம் தேதி எடுத்த முடிவு. அது: பேரறிவாளனை விடுதலை செய்யவேண்டும் எனும் கோரிக்கையைப் பரிசீலித்து ஒப்புதல் அளித்ததில் ஆளுநரும் ஒப்பேற்பு வழங்கவேண்டும். 
 
அரசுக்கும் தகவல்தராமல் இழுத்தடித்த ஆளுநர்கள் தரப்பு, நீதிமன்றத்துக்கும் சரிவர பதில் அளிக்காமல் அதேபாணியைக் காட்டியது. ஆம், 2017 அக்டோபர் மாதம் பதவியேற்ற பன்வாரிலால் புரோகித்தும் அவரையடுத்து வந்த ஆர்.என்.இரவியுமே இந்தக் காலகட்டத்து தமிழ்நாட்டு ஆளுநர்கள். 
 
நீதிமன்றத்தின் மேல்முறையீடுகளின்போது பன்வாரிலாலின் காலத்தில் அசராமல் பதிலளிக்கத் தாமதம் செய்ததை, உச்சநீதிமன்றத் தீர்ப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது. 
 
2020 பிப்ரவரி 11ஆம் தேதி உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞருக்கு இதுகுறித்து விளக்கம் கேட்டது; அதையடுத்து, பேரறிவாளன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறைவிடுப்புக்காக மனுபோட்டபோது, அமைச்சரவையின் முடிவு பற்றி ஆளுநர் முடிவு ஏதும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது; அதற்கான காரணமாக, இராஜீவ் வழக்கு தொடர்புடைய பன்னோக்கு விசாரணை முகமை- எம்டிஎம்ஏ-வின் இறுதி அறிக்கை வரவில்லை என்றும் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து, அடுத்த வாரம் சிபிஐ தாக்கல்செய்த மனுவில், ஆளுநரிடமிருந்து அப்படியொரு கடிதமே தங்களுக்கு வரவில்லை என்று குறிப்பிடப்பட்டது; அத்துடன், ஆளுநர் அரசமைப்புச் சட்டத்தின் 161ஆம் பிரிவின்படி தானே இதில் முடிவெடுக்கலாம் என்றும் தெளிவாகக் கூறியது. 
 
இவற்றையெல்லாம் வரிசையாக தீர்ப்பில் விவரித்துள்ள நீதிபதிகள் நாகேசுவரராவ், கவாய், போபண்ணா ஆகியோர் அமர்வு, அடுத்தபடியாக கடந்த ஆண்டு ஜனவரி 21ஆம் தேதியன்று ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரும் ஆளுநர் இதில் முடிவெடுப்பார் என்று தெரிவித்ததையும் குறிப்பிட்டுள்ளனர். 
 
அதையடுத்து, பிப்ரவரி 4ஆம் தேதியன்று மைய உள்துறை அமைச்சகத்தின் துணைச்செயலாளர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில், குடியரசுத்தலைவரே இந்த விவகாரத்தில் முடிவெடுக்கவேண்டுமென ஆளுநர் ஜனவரி 25ஆம் தேதியன்று முடிவெடுத்துள்ளார் என்று தெரிவித்தார். 
 
பேரறிவாளனின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ஆளுநராக இருப்பவர் 161ஆம் பிரிவின்படி, மாநில அமைச்சரவையின் முடிவைப் பற்றி முடிவெடுக்கும் தன் அதிகாரத்தை குடியரசுத்தலைவருக்கு கைமாற்றிவிட முடியாது; அரசமைப்புச் சட்டத்தில் அதற்கான இடம் இல்லை என அழுத்தமாக வாதிட்டார். 
 
தமிழ்நாட்டு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் இராகேசு துவிவேதியோ, அரசமைப்புச் சட்டத்தின் 161- 163 பிரிவுகள் பற்றி உச்சநீதிமன்றத்தின் ஒன்றுக்கும் மேற்பட்ட அமர்வுகள் ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டன; மாநில அமைச்சரவையின் பரிந்துரையை குடியரசுத்தலைவருக்கு அனுப்பும் ஆளுநரின் முடிவுக்கு அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை; இப்படியான செய்கைகள் மாநில சுயாட்சியை அடிப்படையாகக் கொண்ட இந்த நாட்டின் அரசமைப்புச்சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும் என்று அழுத்தமாக வாதாடினார். 
 
மைய அரசின் பதிலை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. 
 
இந்திய அரசு எதிர் மாருராம் எனும் பிரபல வழக்கில், ஏற்கெனவே உச்சநீதிமன்றம் 161ஆம்
பிரிவைப் பற்றிக் குறிப்பிட்டதை, நாகேசுவரராவ் தலைமையிலான மூன்று நீதிபதிகளும் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆளுநர் என்பவர் அரசாங்கத்தின் முறைப்படியான தலைவர்; முழுமையான செயலாக்க அதிகாரம் அவருக்கு உண்டு, ஆனால் அதில் ஒரே நிபந்தனை மாநில அமைச்சரவை இல்லாதபோதும், அமைச்சரவையின் ஆலோசனையின்படியும்தான் அவருடைய முடிவும் இருக்கமுடியும். ஆளுநராக இருகக்க்கூடியவரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பைத் தாண்டியதாகும் என்றும் அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
பஞ்சாப் அரசு எதிர் சம்சேர் சிங் எனும் வழக்கிலும், 161ஆம் பிரிவின்படி ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவையின் சுருக்கமான வெளிப்பாட்டாளரே எனக் குறிப்பிடப்பட்டதையும் நேற்றைய தீர்ப்பில் கூறியுள்ளனர். 
 
இவ்வளவு தெளிவாக அரசமைப்புச்சட்டத்தைப் பற்றி உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியபோதும், தமிழ்நாட்டு ஆளுநர் தரப்பில், மாநில அமைச்சரவையின் முடிவை இரண்டரை ஆண்டுகள் கிடப்பில் போட்டுவைத்தது மிக அதிக தாமதம் என்று மூன்று நீதிபதிகள் அமர்வு தீவிரமாக எடுத்துக்கொண்டது. 
 
இந்த நிலையில், அரசமைப்புச்சட்டப்படி கைதி ஒருவருக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகள் மறுக்கப்படும் நிலையில், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட நீதிமன்றம் அரசமைப்புச்சட்டம் 142ஆம் பிரிவின்படி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்கிறது என்று நேற்றைய தீர்ப்பில் கூறியுள்ளனர். 
 
இதில், ஆளுநர் தன்னுடைய முடிவை எடுப்பதற்கான கால வரம்பையும் உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கலாம் என்பது பல தரப்பினரின் ஆதங்கம். 
 
பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் ஆளுநர்களின் செயற்பாடுகள் சர்ச்சைக்கு உள்ளாகிவரும் நிலையில், மாநில அமைச்சரவையின் முடிவுகளை மீறிய அதிகாரம் கொண்டவர் அல்ல என இந்தத் தீர்ப்பு கூறியிருப்பதை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். அவரும் கூறியுள்ளதைப்போல, மாநில அரசுகளுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரம் பற்றி தெளிவுபடுத்தியுள்ள மிக முக்கியமான தீர்ப்பு இது என்றே சொல்லவேண்டும். 
 
மாநிலங்களின் அதிகாரம் தொடர்பாக அதிகமாக வரவேற்கப்படும் தீர்ப்புகளில் இதுவும் ஒன்றாக ஆகியுள்ளது. இன்னும் பல வழக்குகளில் இந்தத் தீர்ப்புரை முக்கியமான இடத்தைப் பிடிக்கக்கூடும்.  
 
- இர. இரா. தமிழ்க்கனல்   
 

English Summary
SC verdict on Perarivalan appeal also for states' constitutional power

 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...