![]() |
ரணிலும் பதவிவிலக சஜித் பிரேமதாசா அழுத்தம்Posted : சனிக்கிழமை, ஜுலை 09 , 2022 17:34:46 IST
இலங்கையில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் பதவிவிலக வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
இன்று மதியம் கொழும்புவில் உள்ள அரசுத்தலைவர் மாளிகை, அரசுத்தலைவர் செயலகத்தை ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு ஆக்கிரமித்துள்ளனர். இந்த அசாதாரணமான நிலையை அடுத்து என்ன செய்வது என ஆலோசனைநடத்துவதற்காக மாலை 4 மணிக்கு அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் சபாநாயகர் அபேவர்த்தன பேசினார்.
முன்னதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டுவதாகவும் தகவல் வெளியாகியிருந்தன. இதையொட்டி சஜித் வெளியிட்ட அறிக்கையில், நாட்டு மக்கள் இராஜபக்சேக்களை வீட்டுக்கு அனுப்புவதற்காக போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்; அதற்கு எதிராக இராஜபக்சேக்களுக்கு உடந்தையாகவே ரணில் பிரதமர் ஆக்கப்பட்டார்; அவர் நடத்தும் எந்த ஆலோசனைக் கூட்டத்திலும் தங்கள் கட்சி பங்கேற்காது என்று தெரிவித்துள்ளார்.
ஆட்சியைக் காப்பாற்றும் வாயிற்காவலர்கள் நடத்தும் கூட்டத்தால் எந்தப் பயனும் இல்லை; வீண் பேச்சு பேசாமல் பிரதமரும் அரசுத்தலைவரும் பதவிவிலக வேண்டும் என்றும் சஜித் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, திடீர் நலக்குறைவு காரணமாக மதியவாக்கில் சஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
English Summary
Sajith calls for resignation of Lanka pres, PM
|
|