ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அரசியல் அதிகாரம் பெற விரும்பினால் எதையெல்லாம் எதிர்கொள்ள நேரிடும், எதையெல்லாம் இழக்க நேரிடும் என்பது தான் ‘சாணி காயிதம்’ திரைப்படம்.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ’சாணி காயிதம்’.
கடற்கரையோர கிராமம் ஒன்றில் மனைவி, மகள் என ஓர் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் மாரி (கண்ணன் ரவி). அவருடைய மனைவி பொன்னி (கீர்த்தி சுரேஷ்) காவலராக பணியாற்றுகிறார். ஆதிக்க சாதியினர் நடத்தும் ரைஸ்மில்லில் வேலைப் பார்க்கும் மாரி, பஞ்சாயத்துத் தேர்தலில் முதியவர் ஒருவரை நிற்க வைப்பதற்கு முயற்சி செய்கிறார். இதை விரும்பாத ஆதிக்க சாதியினர் மாரியை ரைஸ்மில்லின் கழிவறையை சுத்தம் செய்ய சொல்கிறார்கள். இது முரண்பாடாக வளர, ரைஸ்மில்லின் முதலாளியும் அவரின் கூட்டாளிகளும் சேர்ந்து பொன்னியை பாலியல் வன்கொடுமை செய்கின்றனர். அதே சூட்டோடு மாரியையும் அவரின் மகளையும் உயிரோடு வீட்டில் வைத்து எரித்துவிடுகின்றனர்.
இவ்வளவு வலிகளையும் வேதனைகளையும் சந்திக்கும் கீர்த்தி சுரேஷ், தன்னைப்போலவே இழப்புகளை சந்தித்திருக்கும் தன்னுடைய அண்ணனான செல்வராகவனுடன் (சங்கையா) சேர்ந்து சாதிய ஆணாதிக்க திமிர் கொண்ட ஆண்களை எப்படிப் பழிதீர்க்கிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தின் முதல் காட்சியே இது வழக்கமான தமிழ் சினிமா இல்லை என்பதை உணர்த்தி விடுகிறது. படத்தின் முதல் பாதி முழுவதும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருப்பதும், பிற்பாதி புனைவாக எடுக்கப்பட்டிருப்பதுமே படத்திற்கான ப்ளஸ், மைனஸ்.
கதை, கதை நிகழும் இடம், கதாபாத்திர தேர்வு, இசை, ஒளிப்பதிவு, வசனம் என அனைத்திலும் இயக்குநர் அருண் மாதேஷ்வரன் தனித்து நிற்கிறார். படத்தின் முதல் பாதியில் ஏற்படும் தொய்வையும், இரண்டாம் பாதியின் வன்முறை காட்சிகளையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
கீர்த்தி சுரேஷ், செல்வராகவன், கண்ணன் ரவி, ரைஸ்மில் முதலாளியாகவும் அவரின் கூட்டாளிகளாகவும் வருபவர்களின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. அனைவரும் மிக யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.
யாமினி யக்னமூர்த்தியின் ஒளிப்பதிவு ரம்மியத்தையும் கொடூரத்தையும் அப்படியே பார்வையாளர்களுக்கு கடத்துகிறது. நாகூரான் ராமச்சந்திரனின் படத்தொகுப்பும், திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகளும் படத்திற்கு எப்படி பெரும் பலமோ, அதுபோலவே சாம் சிஎஸ்ஸின் பின்னணி இசையும்.
படம் முழுவதும் வன்முறை தான் என்றாலும், அதில் பொன்னியின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை என்பது இந்த சமூகத்தில் நிகழ்வது. ஆதிக்க சாதிகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை என்பது இயக்குநரின் லட்சிய உலகில் நிகழ்வது. இதை வேறுபடுத்திப் பார்த்தால் படம் பேசும் அரசியலைப் புரிந்துகொள்ளலாம்.
தா.பிரகாஷ்