ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதியளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது ஆர்.எஸ்.எஸ். தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஏற்கனவே அணிவகுப்புக்கு அனுமதியளித்த உத்தரவை மாற்றியமைத்து, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் நடத்த உத்தரவிட்டது தவறு என்பதால், இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணைகு உகந்ததுதான் என வாதிட்டது.
பி.எப்.ஐ அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை காரணம் காட்டி, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என எந்த ஆதாரங்களும் இல்லாமல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அதே காலகட்டத்தில் பிற அமைப்புகள் 500 இடங்களில் போராட்டம் நடத்த அனுமதியளித்தது பாரபட்சமானது என்றும் எடுத்துரைத்தது. மேலும், ஒருபுறம் அமைதி பூங்கா எனக் கூறிவிட்டு, இன்னொரு புறம் சட்டம் ஒழுங்கு பிரச்னை என அனுமதி மறுப்பதாகவும், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தியது.
இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தெரிவித்த காவல் துறை தரப்பில் வாதிட்ட அரசு வழக்கறிஞர், " சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமைதான் எனவும், அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அடங்கும் எனவும் தெரிவித்தார். மேலும் வாதாடிய அவர், 500 இடங்களில் போராட்டங்களுக்கு தான் அனுமதியளிக்கப்பட்டதே தவிர அணிவகுப்புக்கு அல்ல எனவும், வால்பாறை தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் ஊர்வலத்துக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை தொடர்ந்தும், பி.எப்.ஐ. தடைக்கு பின்னும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் பாதுகாப்புக்காக 50 ஆயிரம் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கவே அரசு முயற்சித்ததாகவும், உளவுத்துறை அறிக்கை அடிப்படையில் காவல் துறையினர் செயல்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளார். எல்லா மத நம்பிக்கையையும் பாதுகாத்து, தமிழ்நாடு அமைதி பூங்காவாக நீடிக்கவே அரசு விரும்புவதாகவும், அணிவகுப்புக்கு அனுமதி கோரி முறையாக விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள், தனிப்பட்ட முறையில் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிப்பர் என்றும் தெளிவுபடுத்தினார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆர்.எஸ்.எஸ். தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.