சும்மா சொல்ல வேண்டாம், சமூக ஊடகத்தில் யாராவது ஏமாற்றுவதற்காகப் பரப்பிய தகவலாக இருக்கும் என உங்கள் மனது நினைக்கக்கூடும். பாதி உண்மை சமூக ஊடகங்களிலும் இது பரவலாகி இருக்கிறது; அதைப்போலவே தகவலும் உண்மைதான்! பரப்பிவிட்டது, ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர்!!
2009ஆம் ஆண்டு தொகுதி ஆட்சிப்பணி அதிகாரியான அவனிஷ் சரண், கடந்த 14ஆம் தேதி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவலை, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பிடித்தமானது எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மறுபகிர்வு செய்திருக்கின்றனர். இணையத்தில் அது இன்னும் தீப்பரவல் ஆகியபடி இருக்கிறது.
நிற்க...
கமல் நடிப்பில் வெளியான ’சகலகலா வல்லவன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற கட்ட வண்டி பாட்டு என்றால் எண்பதுகளின் இளைஞர்களுக்கு அவ்வளவு உற்சாகம் பொங்கும், அப்போது! வாலி எழுதி, மலேசிய வாசுதேவன் பாடிய அந்தப் பாடலின் முன்பகுதியில் கட்டவண்டியைப் பற்றி பெருமைகளை அடுக்கி நாயகன் கமல் நாயகி அம்பிகாவை வம்புக்கு இழுப்பார்.
அதில் கமல் பாடுவதாக வரும் கட்டை வண்டியின் சிறப்புகளுக்கு, மேலும் ஒரு சிறப்பைச் சேர்த்திருக்கிறார்கள், மகாராஷ்டிர மாநில பொறியியல் மாணவர்கள்.
இரட்டைச் சக்கரங்களைக் கொண்ட மாட்டு வண்டிக்கு மூன்றாவதாக ஒரு சக்கரத்தைப் பொருத்தி புதிய ஒரு வடிவமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள், அவர்கள்.
சாங்லி மாவட்டம், இஸ்லாம்பூரில் உள்ள இராஜாராம்பாப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் தானியங்கிப் பொறியியல் பட்டம் கடைசி ஆண்டு படிப்பவர்கள், சௌரவ் போஸ்லே, ஆகாஸ் கதம், நிகில் திபிலே, ஆகாஷ் கெய்க்வாட், ஓம்கார் மிராஜ்கர் ஆகியோர். இவர்கள் தங்களுடைய ஆண்டு இறுதி திட்டப்பணியாக இதைச் செய்திருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு சிவாஜி பல்கலைக்கழகத்தின் 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் கிடைத்திருக்கிறது.
அப்படி அவர்கள் கண்டுபிடிப்பில் என்னதான் பிரமாதம்...?
மகாராஷ்டிரத்தின் மேற்குப் பகுதியில் அதிக அளவில் கரும்பு விவசாயம் செய்யப்படுவது, தெரிந்ததே! அறுவடையாகும் கரும்புகளை ஏற்றிச்செல்வதற்கு இன்னமும் மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தும் விவசாயிகள் கணிசமான அளவில் இருக்கின்றனர். இவ்வளவுதான் அளவு என யாரும் கணக்கிட்டு வண்டியில் கரும்பை ஏற்றுவதில்லை. மாடு தாங்கும் அளவுக்கு பாரத்தை ஏற்றுவது வழக்கம்.
பாரம் ஏறஏற அதைத் தாங்கிக்கொள்ள முடியாத மாடுகள் இடையில் நகரமுடியாமல் நிற்பதை ஊர்ப்புறங்களில் சாதாரணமாகப் பார்க்கமுடியும். இப்படி அங்கும் சுமைதாங்க முடியாத மாடுகள் நுகத்தடியைக் கழற்றிவிட்டு அந்த இடத்திலேயே படுத்துவிடுவதும் சில இடங்களில் மாடுகளின் கால்கள் உடைந்துவிடுவதும்கூட உண்டு.
இந்த சூழலைப் பார்த்து வளர்ந்த இஸ்லாம்பூர் பொறியியல் மாணவர்கள் ஐந்து பேரும், மாட்டு வண்டியின் முன்பக்கமாக ஒரு சக்கரத்தைப் பொருத்தினால் மாடுகளின் சுமை குறையும் என முடிவுக்கு வந்தனர். அவர்கள் அப்படிச் செய்து சோதித்துப் பார்த்ததில் அது உறுதியும் ஆனது.
பொதுவாக, மாட்டு வண்டிகளின் முன்பக்கம் இரண்டு பக்கமும் மாடுகளின் கழுத்தில் பக்கவாட்டுக் கட்டை இருக்கும். வண்டி ஓடாதபோது அந்தக் கட்டையின் மையத்தில் உள்ள தாங்கிக்கட்டை வண்டியின் மொத்த எடையையும் சமன்படுத்தும்படியாக தரையில் ஊன்றி இருக்கும். அந்த ஊன்றுகட்டைக்குப் பதிலாகத்தான் மாணவர்கள் மூன்றாம் சக்கரத்தைப் பொருத்தியிருக்கின்றனர்.
அசப்பில் பார்த்தால், விமானத்திற்கு முன்னால் இருக்கும் சக்கரத்தைப் போலவும் இருக்கும்!
இந்த முன்சக்கர அமைப்பு, வண்டியை ஓட்டும்போது மாடுகளின் கழுத்தில் மொத்த பாரமும் அழுத்திக்கொண்டிருப்பதைக் குறைக்கும். அதாவது மாடுகளுக்கு உள்ள சுமையின் அளவை இந்த மூன்றாம் சக்கரம் பகிர்ந்துகொள்ளும்.
அத்துடன், இந்த சக்கரத்துக்கும் மாட்டுக் கழுத்துக் கட்டைக்கும் இடையே ஹைட்ராலிக் எனப்படும் நீர்ம அழுத்தப் பொறியமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாடுகளின் உயரத்துக்கு ஏற்ப சக்கரத்தின் உயரத்தை ஏற்றவோ இறக்கவோ முடியும். கரும்புகளை ஏற்றும்போதும் இறக்கும்போதும் இந்த சாதனம் கூடுதலாகப் பயனளிக்கிறது என்கின்றனர்.
இப்போதைக்கு இந்த முயற்சியை இராஜாராம் பாப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வெள்ளோட்டமாக சோதித்துப் பார்த்துள்ளனர். தொடக்கத்திலேயே விவசாயிகள் தரப்பில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
வரும் கரும்பு அறுவடைக் காலத்தில் இதை விரிவான அளவில் பயன்படுத்தவும் முடிவுசெய்துள்ளனர், மாணவர்கள். கையோடு இதற்கு காப்புரிமை வாங்கவும் அவர்கள் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள்!
அருமை!