???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் 0 தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு 0 மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின 0 விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை 0 மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் 0 அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா? வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் 0 வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது! 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி-4 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   05 , 2019  11:47:50 IST


Andhimazhai Image

 

புதிய புதிய புத்தகங்களோடும், அதை எழுதும் ஆசிரியர்களோடும் சந்தித்து அவர்களின் ஆளுமைகளை அறிந்து கொள்வதில் அதிக நாட்டம் எனக்கு எப்போதும் உண்டு.

கட்டிளம் காலைப் பொழுதில் கண்விழித்து நட்புப் பாதையில் பயணிக்கும் போது ஒரு அன்பழைப்பு வந்தது. ஒரு கவியரங்கத்தில் அவரை சந்தித்தேன்.

எண்பதுகளின் துவக்கத்தில் அவர் என்னை அரவணைத்து பேசிய சொற்கள் காலம் கடந்தும் பசுமையாகவே இருக்கிறது. எதனால் அவர் அழைத்தார்? அவர் ஒரு  மாணவர் பேச்சுப் போட்டி நடுவராகப் போன போது எனது கவிதை வரிகளை உச்சரித்த ஒரு மாணவரின் சொற்களால்தான்.

கவிதையின் தலைப்பு அரிசி..

கவிதை இதோ!

’’ஆடை கழற்றிய
நெல்.
ஓ...அதனால்தான்
குடிசைக்கு வர
கூச்சப்படுகிறதோ!?’’

’’அரிசி உண்ணாத  கிராமத்து மனித நிலையை உருவகமாய் நன்றாக சொல்லியுள்ளாய்’’ என்று தட்டிக் கொடுத்தார்.

‘’யாருப்பா இவர்-என்று நிமிர்ந்து பார்க்கும்போது தெரிகிறது.-வானம்பாடிக் கவிக் கூட்டத்தில் மரபுசார் நிலையிலிருந்து புதுக்கவிதை தோட்டத்துக்கு வந்து உயர்ந்த  பூவாய் மாறியவர் இவர் என்று!.

பார்வைக்கு  செக்கச்சிவந்த முகம். வெடுக் கென்று பேசாத பேச்சு, காளிமுத்து, பா. செயப்பிரகாசம், இன்குலாப்போடு மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்த நண்பர்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்று சிறையில் கால்விலங்கோடு காலம் கழித்த தமிழ் மொழிப் போராளி.. உத்தம பாளையம் ஹாஜி கருத்த இராவுத்தர் கல்லூரியில் விரிவுரையாளர். அதற்கும் மேலாக புரட்சித் தலைவர் எம்.ஜி ஆரால் திரைப்படத் துறையில் அறிமுகம் செய்யப்பட்ட பாடலாசிரியர்.

வேறென்ன சொல்ல- உவமைக் கவிஞர் சுரதாவைப் போல் சொற்களில் சூட்சுமம் வைத்து கவிதை புனைவதில் வல்லவர்.

அவர்தான் கருப்பு மலர்கள் தந்த நா.காமராசன்.

அவரைச் சந்தித்த பிறகு நணபர்களிடம் சிலாகித்துப் பேசி மகிழ்ந்தேன்.

சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட மனித மனங்களைப் படம் பிடித்துக் காட்டிய அவரின் கருப்பு மலர்கள் காலம் தாண்டி காற்றில் பயணிக்க வல்லவை.

பாலியல் தொழிலாளியை இப்படி எழுதினார்,

’’நாங்கள்
 நிர்வாணத்தை
விற்கிறோம்
ஆடையை வாங்க’’.

திருநங்கைகளைப் பற்றி அவரின் பார்வை பாருங்கள்.

’’சந்திப் பிழைகள்போல
நாங்கள் சந்ததிப் பிழைகள்’’

இவரின் ’கருப்பு மலர்கள்’ இளங்கலை தமிழிலக்கிய மாணவர்களுக்கு பாடத்திட்டமாக அமைந்தது.

படிமச் சொற்களில் கவிதை எழுதுவது இவரது தனிச்சிறப்பு..

நா. காமராசன் தனித்த அடையாளம் கொண்ட கவிஞர்.

எவரிடமும் நின்று கைகட்டி காரியம் சாதித்துக் கொள்ளத் தெரியாதவர். எம்.ஜி ஆர் பாடல் எழுத வாய்ப்பு தந்தார்.

‘’கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் காதலனை வரவழையுங்கள்’’

என்று எழுதினார்.

பல்லாண்டு வாழ்க படத்தில் ‘’போய் வா நதி அலையே – ஏழை
பூமிக்கு நீர் கொண்டு வா !’’

ஊருக்கு உழைப்பவனில் ’’ இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்’’ என்றெழுதி பல படங்களில் நல்ல புகழைப்பெற்றார்.

அதெல்லாம் சரிதான். கவிஞனுக்கு காசு சேர்க்கத்  தெரியாதல்லவா?

நான் பல சமயங்களில் அவர் வீட்டுக்கு சென்றிருக்கிறேன். நான் தாய் வார இதழில் உள்ளபோது அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.

அவரின் மனைவி லோகமணி மிகவும் பாசத்துக்குரியவர், அன்பு வார்த்தைகளால் நிரம்பிய மனதுக்குச் சொந்தக்காரர்.

எண்பத்து மூன்றுக்குப்பின் உள்ள கதையை சொல்கிறேன். முப்பதுக்கும் மேற்பட்ட  படங்களில் பாடல் எழுதியவர். காட்டுக் குதிரை, கரு, சூர்ய காந்தி, கல்லறை தோட்டம், டைரி, கைதி, கிறுக்கல்கள், தாஜ்மஹாலும் ரொட்டித்துண்டும். சஹாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்… இவ்வாறு நூல்களென 30க்கும் மேல் எழுதியவர்.

1942 தேனி மாவட்டம் போ, மீனாட்சிபுரம் கிராமம், நாச்சிமுத்து, லட்சுமிக்கு பிறந்த பிள்ளைக்கு காசு சேர்க்கத் தெரியவில்லையே!

எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த நேரம். இவர் கஷ்டத்தில் மதுவெல்லாம் அருந்துகிறார்.

ணமில்லாது புகழ் மட்டும் இருக்கும் கலைஞனுக்குத்தான் தெரியும். அது நிகழ்கால மரணமென்று.

அந்தச் சூழலில் அவர் மனம் போன போக்கில் அ.தி.மு.கவின் கோபத்துக்கு ஆளான சமயம்.

அவர் கவிதைகளை, பேட்டியை வாங்கி ‘தாய்’ வார இதழில் வெளியிடச் செய்தேன். ஏனெனில் தாயை முதலில் வாசிப்பவர்  எம்.ஜி.ஆர். அப்படி மறுபடியும் நினைவு கூற வாய்ப்பிருக்குமல்லவா என யோசித்து செய்த காரியம்தான்.

அதன்பிறகு உடனடிப் பலனில்லை. மறுபடியும் எதிர் நிலைத் கொள்கையில் பயணப்பட்டார் நா.காமராசன்.

கவிஞன் எதற்கும் கட்டுப்படாதவன் அல்லவா!  ஒரு நாள் நான் அவருக்கு சுட்டிக் காட்டினேன். எம்.ஜி.ஆர் அவரை சந்தித்தால் போதும் நிலைமை மாறும் என்றேன்.

’’அவருக்குத் தெரிய வேண்டாமா? எதற்கு நான் போய் பார்க்க’’ என்று நா தழுதழுத்தார்.

 “பரவாயில்லை நீங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு போக வேண்டாம். சத்யா ஸ்டுடியோவுக்கும் போக வேண்டாம். கோட்டைக்குப் போங்கள். பார்ப்பார்,” என்று சொன்னேன்.

கோட்டைக்குப் போனார். நா.காமராசன். நின்றிருந்தார். முதல்வராக எம்ஜிஆர் கார் கடந்து சென்றது. அழைப்பும் இல்லை. பார்க்கவும் இயலவில்லை. நொந்து போனார். எதற்கும் அடுத்த நாள் செல்லுங்கள் பார்க்க வாய்ப்பிருக்குமென்று சமாதானம் செய்து அனுப்பினால்- அன்றும் அதே காட்சி..

’’அட போங்கப்பா ‘’ என்று சலித்துக்கொண்ட போது- ஒரு தகவல். ‘’கதர் கிராம வாரிய துணைத் தலைவராக நா.காமராசன் செயல்படுவார்’’ என தமிழக அரசு அறிக்கை வந்தது. 

நா.காமராசன் மீண்டும் அனைவராலும் நிமிர்ந்து பார்க்கும்படியான ஆளுமை ஆனார். அவர் பதவி ஏற்றபோது, எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்து பத்திரிக்கையாளர் கூட்டம் ஒரு ஓட்டலில் நடத்த ஒருங்கிணைத்ததும் நான்தான்.

அவர் முதல் கையெழுத்து பதவி ஏற்று போட்டதும் - தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் எம்.ஜி.ஆர் வாழ்த்து கூறினார் தொலைபேசியில் ‘’நா.கா.. கையெழுத்து பார்த்துப் போடு..கையெழுத்துக்குள்ள நிறைய சக்தி இருக்கு’’ என்று பொருளாதாரச் சூட்சுமத்தை சுட்டிக் காட்டினார் எம்.ஜி.ஆர்.

நா. காமராசன் மீண்டும் பயணித்தார். அதிமுகவின் இலக்கிய அணிக்கு தலைமை தாங்கினார். 1991-இல் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றம் உறுப்பினர் ஆனார்.

கலைமாமணி, பாரதிதாசன் விருது, சிறந்த பாடலாசிரியர் விருது என பெற்றார். தைப்பாவை,  திலீபன் நலமாய் வளர்ந்தனர்.

உவமை, படிமம் கொண்டு சொற்களில் புதிய வார்த்தை உலகத்தை உருவாக்கத் தவறவில்லை நா.காமராசன்.

மார்க்சியம் தெரியாமல் எப்படி ஒருவன் கவிஞனாக முடியும் என்று கேள்வி கேட்டு ........

 மதுவுண்ட காலத்தில்… இதை குறைத்துக் கொள்ளக் கூடாதா’ என்று கேட்டபோது – ”கண்ணதாசன் நிறுத்தினாரா? கவிஞன் அப்படித்தான்பா! ‘’ என்றார்.

அது உண்மையோ, பொய்யோ யானறியேன். ஆனால் அந்த மதுவைப் பற்றி ரசித்து இப்படி எழுதியதாய் சொன்னார்.

‘’மதுவே
ராஜ திராவகமே!
மகா கவிகளின்
தாய்ப் பாலே!’’

இப்படி எழுத - உச்சரிக்க சொற்களை மகுடம் சூட்டத் தெரிந்த வித்தகன்தான் நா.காமராசன்.

கவிப் பேரரசு வைரமுத்து நா.காமராசனின் சொற்களின் நண்பர்.

மொழி பெயர்ப்பு துறையில் இருவரும் பணியாற்றியது ஒரு ஒற்றுமை.

வைரமுத்து நா. காமராசன் அவர்களை இவ்விதமாக அடையாளப் படுத்தினார்.

‘’தன் கைகளில் இரத்தம் கசியக் கசிய பழைய முட் பாதைகளில் முன்னேறி முதலில் புதுக்கவிதை உலகுக்கு ஒரு புதுப்பாதை அமைத்தவன் நா.காமராசன் என்பதை மூர்ச்சை அடைந்தவன்கூட மறந்துவிடக் கூடாது’’.

உண்மையிலேயே  அவர் கவிதைத் தலைமையில் பாடும்போது புதிய சொற்களுக்கு உற்சாகம் வந்து துள்ளிக் குதிக்கும். அவ்வாறு அவர் தலைமையில் கவியரங்கில் நான் சில முறை பங்கு பெற்று கவிதை அரங்கேற்றியுள்ளேன் என்பது மகிழ்வானது.

தன்னை எப்போதும் தானிருப்பதாக வெளிப்படுத்திக் கொண்டாலொழிய தன்னிருப்பை தக்க வைத்துக் கொள்ள இயலாது.

ஆனால் அப்படி ஒரு அவசியம் தனக்குத் தேவையில்லை என்று தள்ளி நின்று சமூகத்தில் வாழ்ந்தவர்தான் நா.காமராசன்.

இளையராஜா இசையில் காதல் தோல்வியைப் பற்றி பாடல் எழுதியிருப்பார்.

’’கானலுக்குள் மீன் பிடித்தேன்
காகிதத்தில் தேன் வடித்தேன்’’.

பாடல்களில் கவிப்படிமத்தை முதலில் சுரதாபோல் பயன்படுத்திய ஆளுமைக் கவிஞர் நா.காமராசன்.

அவர் தனது 75வது வயதில் 2017- மேமாதம் 24ல் மறைந்தார்.

முக்கால் நூற்றாண்டைக் கடந்து விட்ட அவரின் பழக்கம்- ஒரு மெல்லிய பூவின் உரசல் போன்றது.

‘’உதடுகளில் உந்தன் பெயர் ஒட்டிக் கொண்டது அதை உச்சரிக்கும்போது மனம்தித்திக்கின்றது’’ -தங்கரங்கன்’ படத்திற்கு ஒரு பாடல் எழுதியிருப்பார்.

அதே வரிகள் தான்- தமிழ் கவிதை ரசனை உலகில் நா.காமராசன் பெயரைச் சொல்லி நினைவு கூர்ந்து மகிழ்கிறார்கள்.

அப்படி மகிழும் மலர் கூட்டத்தில் நான் ஒரு வண்ணத்துப்பூச்சி!

 

(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் வெளியாகும்)

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...