அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 32- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   24 , 2020  19:20:36 IST

 

பாமரத்தனம் என்றால் என்ன? கிராமியச் சூழலில் வளர்கிற சூழ்ச்சியற்ற மனம் என்று சொல்லலாம். அதாவது வாழ்வதற்காக எதையும் குறுக்கு சால் ஓட்டாமல் யதார்த்தமாக வாழ்வை எதிர்கொள்வது. மனதில் பட்டதை எதிர்விளைவு அறியாமல் பேசுவது என்றும் கொள்ளலாம்.

 

அப்படிதான் பாமரத்தனம் என்கிற சொல் நமக்குத் தெரிவிக்கிறது. இது சமயோசிதமாக வாழ்கிற மனிதர்களால் எள்ளி நகையாடும் பாமரச்சொல்தான்.

 

எவ்வாறானாலும் நினைத்துக் கொள்ளட்டும். ஆனால் அந்த பாமரத்தனத்திற்கு ஒரு தெளிவும், மகிழ்வும் படிமமாக படிந்து நிறைந்து காணப்படுகிறது. இதை இந்த நேரத்தில் ஏன் சொல்லத் தோன்றியது என்றால் கோயம்புத்தூருக்கு காதலர் தினத்துக்கு முதல் நாள் மாலை சந்தித்த ஆளுமையால் தான். வேறு யார் பாமரன் தான். சமூக சிந்தனை மேம்பட நக்கீரன் தைரியத்தோடு சொற்களை கையாள்கிற பேராசிரியர் பாமரன் தான்.

 

இவரோடு சில தோழமைகளுடன் காலம் கைவிரித்து அசைத்து அழகியலானது என்று தான் சொல்லத் தோன்றுகிறது. இந்த பாமரன் 1984-இல் எழுதத் துவங்கி இன்றுவரை பேசுபொருளாக மாறுகிற விருட்சம். பாமரன் எனில் யாவும் அறிந்த பாமரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

 

தலைநகரத்தில் பாமரன் வாழும் சூழல் இருந்திருந்தால் அளவுக்கதிகமான புகழும் அதிக புழுதியும் தார்ச் சாலைகளினூடே படிந்திருக்கும். நல்லவேளை தப்பிப் பிழைத்து தன்னிலை இழக்காது தலைமையாய் தன்னையே உயர்த்தி வாழ இயல்கிறது.

 

அழகிய மாடி.. இயற்கை சூழ் மரங்களும், பார்த்துப் பேசுகிற கிளைகளும் இலைகளும். நான்கைந்து நாற்காலிகள், டீப்பாய் தேநீரும், நொறுக்குத் தீனியும் சூழலை மாற்றுகிறது.

 

உள்ளே இயக்குநர் மணிவண்ணன் படித்து நாள்தோறும் குறித்து வைத்த குறிப்போடு திகழ்கிற நூலகத்தைத் கண்டு குதூகலிக்கும் சூழல். பாமரன் என்னென்னவோ அவரைப் பற்றிச் சொல்கிறார்.

 

எனக்கு இயக்குநர் மணிவண்ணனை,  டிசைனர் பாண்டியன் ஆர்.ஏ புரம் அடுக்குமாடியின் வீட்டில், தாடிநிறை இளைஞனாக கை குலுக்கியது மனதில் படிகிறது.

 

உபால்டுக்குப் பிறகு டிசைனர் பாண்டியன் தான் இயக்கு்நர் பாரதிராஜாவுக்கு. கதையை குறியீடாக டிசைனில் சொல்வதில் பாண்டியனுக்கு தனித்திறன் உண்டு.

 

பாண்டியன் மதுரைக்காரர். அட என்னங்க வாகை சந்திரசேகரின் அண்ணன். பாண்டியனுக்கு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்கிற படால் படால் எண்ணத் தெறிப்பு. மணிவண்ணனுக்கு சொல்லவா வேண்டும். மார்க்சியம் அறிந்த மண்ணின் மைந்தன். கோவைக் குசும்பும் மதுரை வீச்சும் நட்பானதில் என்ன ஆச்சரியம்.

 

மாநிலக் கல்லூரியில் படித்துவிட்டு பரீக்ஷா டிராமாவில் சின்ன வேடங்களில் தலைகாண்பித்து எப்படியோ பாண்டியனுக்குப் பழக்கமாகிவிட்டேன். அந்த இடத்தில மணிவண்ணனும் நட்பு வளையத்தில் இணைந்தார். அப்போது அவர் பாரதிராஜாவுக்கு துணை இயக்குநர்.

பிறகு நான் தாய் வார இதழில் துணை ஆசிரியராகப் பணி செய்த காலத்தில்  பிடித்தமான இயக்குநர்கள், படைப்பாளர்கள், கவிஞர்கள் எனத் தேடித் தேடி சந்தித்து அவர்களைப் பற்றி எழுதி சமூகத்துக்கு வெளிச்சமிட்டுக் காட்டுவது தனது கடமை என்று சுற்றிக் கொண்டிருந்தேன்.

 

இதன் வழியாக சத்யராஜும் பழக்கமானார். பலமுறை அவருடைய பெரிய இருசக்கர வாகனத்தின் பின்னால் பயணித்திருக்கிறேன். சத்யராஜ் என்றால் அவர் பற்றிய நினைவுகள் தனிக் கதை. இங்கு வேண்டாம். பிறகு பேசுகிறேன்.

 

மணிவண்ணன் அப்போது சிவகுமார் வீட்டு பக்கத்துத் தெருவில் ஆபீஸ் போட்டிருந்தார். அடிக்கடி போவேன். அடிக்கடி என்றால் அட ஆபீஸ் முடிந்ததும் ஒன்று விஜயகாந்த் அலுவலகம் இல்லையென்றால் மணிவண்ணன்.

 

அப்போது கூடவே இடது, வலது கையாக கேமிராமேன் சபாபதியும் ஆர்ட் டைரக்டர் கலையும் தவறாமல் இருப்பார்கள்.

 

மணிவண்ணன் எதையும் அசால்ட்டாக கையாளுகிற இயக்குநர். அடிப்படையில் அவரை தைரியமாக எல்லாவற்றையும் எதிர்கொள்ள வைத்தது. மார்க்சியம். நிறைய மகத்தான மனிதத் தத்துவங்களை எளிதாகக் கைக்கொண்டவர்.

 

ஏழ்மையின் அடையாளங்களையும், புகழின் மேடு பள்ளங்களையும், உயர்வை எவ்வாறு எட்டிப்பிடிக்கிறது என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டவர் மணிவண்ணன். எப்போதும் புத்தகம் கையோடு இருப்பார். எதிர்வினைக் கேள்விகளாகவே எதையும் அணுகுவார்.

 

பாக்யராஜ் பாரதிராஜாவை விட்டுவிலகி தனியே இயக்கிய பின் அந்த இடத்தை மணிவண்ணன் நிரப்பினார்.

 

ஒருமுறை மவுண்ட் ரோடுக்கு அருகில் உள்ள (இப்போது இல்லை) சித்ரா தியேட்டர் என்று நினைக்கிறன். 'ஜோதி' என்ற மணிவண்ணன் இயக்கிய படம். ஆர்.எம்.வி சத்யஜோதி தியாகராஜன், நான், மணிவண்ணன் என ரிலீஸ் ஆனதும் படம் பார்க்கிறோம். அது அவ்வளவாக வெற்றி பெறவில்லை.

 

இதுதான் முதன்முதலில் மணிவண்ணன் இயக்கிய படம். இதற்குப் பிறகுதான் கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படம் இயக்கினார். நல்லவேளை முதல் படம் தாமதமாக இரண்டாவது படமான கோபுரங்கள் சாய்வதில்லை முதலில் ரிலீஸ் ஆனது. அது வெற்றி பெற்றது.

 

மணிவண்ணன் அப்போது சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது. "நாம என்னதான் முயற்சி செய்தாலும், காலம் வேறமாதிரி சில சமயம் முடிவைத் தருகிறது. அதுவும் நமக்கு நல்லதா போச்சு" என்று சொன்னது உண்மையும் கூட...

 

நூறாவது நாள் விஜயகாந்த், நளினி, சத்யராஜ் நடிக்க வெளிவந்தது. அப்போதும் சரி அதன்பின் 24 மணிநேரம் என்ற படம் எடுத்தார். அப்போதும் சரி நிறைய நேரங்கள் அவரோடு பயணிப்பேன்.

 

அப்போது ஜீவபாலன்தான் அசோசியேட் இயக்குநர். அவருடன் ராதாபாரதி, உதவி இயக்குனராக இருந்தார். ஜீவபாலன் வளையல் சத்தம் என்று பாலன் பிக்ச்சர்ஸ் படம் எடுக்க முரளியை வைத்து இயக்கினார். ராதாபாரதி அதிஷ்டக்காரர். 1990-இல் பிரசாந்தை வைத்து 'வைகாசி பொறந்தாச்சு' என்ற படத்தை எடுத்தார். அது சக்கைபோடு போட்டது.

 

இன்னும் சொல்லப்போனால் செல்வபாரதி. ஆர்.கே. செல்வமணி, சுந்தர்.சி. சிராஜ் போன்ற பலர் வெளிவர மணிவண்ணனின் உற்சாகமே காரணம். சரி விஷயத்திற்கு வருகிறேன். மணிவண்ணன், சபாபதி, கலை என்ற மூவர் கூட்டணி.

 

அதிகாலை மவுண்ட் ரோடு சென்ட்ரலுக்கு போகும் வழியில் ஒரு பெரிய பிரிட்ஜ் இருக்கிறேதே அதன் அருகில் ஒரு பெரிய சுடுகாடு இருக்கும். அதில் காலை நான்கரை மணிவரை படப்பிடிப்பு நடத்தி முடித்துவிட்டு, எல்லோரும் போனபிறகு அங்கேயே கொஞ்சம் மதுவுடன் உணவு உண்டுவிட்டு கலைந்து சென்றனர்.

 

அப்படி செய்வது தவறு என்று தெரியும். ஆனால் வேலை எதுவும் பாதிக்க விடாமல் பார்த்துக்கொள்வார்.

 

நம்பமாட்டீர்கள், அப்படி இருந்துவிட்டு அன்றுகாலை 7 மணி கால்ஷீட் படப்பிடிப்புக்கு குளித்துமுடித்துவிட்டு ஆறரை மணிக்கே வந்து தெம்பாக நின்று டைரக்ட் செய்கிறார் மணிவண்ணன்.

 

எல்லோரும் அசந்து அவஸ்தைப்பட தான் மட்டும் சுறுசுறுப்பாக வேலை செய்வார். தயாரிப்பாளருக்கு எந்த விதத்திலும் செலவு இழுத்துவிடாமல் படம் முடிப்பதில் கவனமாக இருப்பார்.

 

நான் அவரிடம் பார்த்த மிகப்பெரிய திறமை. வருகிற தயாரிப்பாளரை இல்லை என்று சொல்லாமல் ஒத்துக்கொண்டு அட்வான்ஸ் வாங்கிப்போட்டு சென்று கொண்டே இருப்பார்.

 

ஒருபடம் ஷூட்டிங். அதேசமயம் ஒரு பக்கம் பாடல் ரெக்கார்டிங். இன்னொரு பக்கம் மூன்று, நான்கு இடத்தில ஓட்டலில் ரூம்போட்டு உதவியாளர்கள் கதை டிஸ்கஷன் செய்துகொண்டிருப்பர். எதையாவது எழுதிக் கொண்டிருப்பார். எதாவது ஒரு லைன் சொல்லிவிட்டு சென்றுவிடுவார். பிறகு தன்மனதில் தோன்றும் திடமான கதைக் கரு வைத்து படமெடுக்க கிளம்பி விடுவார்.

 

இது அப்படி ஒன்றும் சாத்தியப்பட்ட காரியமல்ல. தயாரிப்பாளர்கள் என்ன டிஸ்கஷன் நடக்கிறது என்று வேவு பார்ப்பார்கள். எல்லாவற்றையும் சமாளித்து ஒன்லைன் ஆர்டர் கூட இல்லாமல், திடமான முடிவெடுத்து படப்பிடிப்பு இடம் சென்று யோசித்து படமெடுப்பார். ஆனால் அவரின் மனதில் ஒரு படம் ஓடும். அதிலேயே எடிட், ஆர்டர் செய்து கொள்வார்.

 

அவரை பின்பற்றி விடுவதும், வேலை செய்வதும் உதவியாளர்களுக்கு மிக கடினம். குழம்பி விடுவர். என்ன செய்கிறார் என்பது தெரிந்து கொள்வதற்குமுன் படம் முடிந்துவிடும். இதற்கு கதாசிரியர் கலைமணி ஒரு பக்கபலம். காட்சிகளை சுவாரஸ்யமாக எடுப்பார். சமயத்தில் பாட்டு என்பதை டான்ஸ் மாஸ்டரிடம் ஒப்படைத்துவிட்டு வேறு காரியம் பார்ப்பார். சண்டைக் காட்சிகள், பாடல்கள் அவருக்கு பெரிதாக உடன்பாடு இல்லாதவைகள். அதற்கு அவரைப் புரிந்துகொண்ட டான்ஸ் மாஸ்டர் பாபு.

 

ஒரேநாளில் அவர் நான்கைந்து படங்களில் வேலை செய்வதை நான் உடனிருந்து பார்த்திருக்கிறேன். எடிட்டர் கந்தசாமி அப்போது விஜயா வாஹினி ஸ்டுடியோ அரங்கில் எடிட் செய்து கொண்டிருப்பார். அவரின் சொந்த ஊர் அனகாபுத்தூர். நெசவு செய்யும் தொழில் சார்ந்தவர். மணிவண்ணன் அவரை தயாரிப்பாளராக்கி ஒரு படம் இயக்கித் தந்தார்.

 

மணிவண்ணனை சரியாக புரிந்துகொண்ட ஒரு நபர் உள்ளார் என்றால் அது நடிகர் சத்யராஜ் தான். சத்யராஜின் அறிவு, ஆற்றல், நுணுக்கம் என்பது அபாரம். அது மணிவண்ணனிடம் சரியாகப் பொருந்தி வந்ததும், கோயம்புத்தூர்காரப் பாசத்தின் நம்பிக்கையும் திரைப்படத்தை எங்கோ உச்சிக்கு கொண்டுபோய்விட்டன.

 

இன்னொரு சம்பவம் சொன்னால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இளமைக் காலங்கள் என்றொரு படம். இதில் மலையிலிருந்து ஒரு பொம்மை நூறு அடிகளுக்கு கீழே உள்ள இடத்தில விழும். இதை ஒளிப்பதிவாளர் சபாபதி ஃபாலோ செய்து படம் பிடித்து காண்பித்திருப்பார். அதற்கு ஏற்றார் போல் இளையராஜா பின்னணிக் கோர்வை சேர்ந்து பார்வையாளரை மிரட்டி இருப்பார். அந்தக் காலத்தில் இப்படி ஒரு ஷாட் இதற்குமுன்னர் எடுத்தது இல்லை என பார்வையாளர்கள் பரவசப்பட்டு சபாபதி புகழ் வெளிச்சத்திற்கு வந்தது.

 

சபாபதி அமைந்தகரையில் அப்போது அருண் ஓட்டல் எதிரே ஒரு குடிசை போன்ற வீடுகளுக்கிடையே தான் வாழ்ந்தார். அருண் ஹோட்டலின் கீழேதான் சாவி, திசைகள் போன்ற பத்திரிகை அலுவலகம் இருந்தது. ஓட்டலில் சமயத்தில் டிஸ்கொதே நடக்கும். இப்போது அருண் ஓட்டல் ஸ்கைவாக்காக மாறிவிட்டது.

 

 

அருண் ஓட்டலை ஒட்டிய சாலைதான் நெல்சன் மாணிக்க சாலை. அந்த சாலையை ஒட்டி ஒரு பெரிய ஆறு ஓடும். இந்த சாலையில்தான் தினத்தூது நாளிதழ், தாய் வாரஇதழ், அண்ணா நாளிதழ், இதற்கு முன் சந்தில்தான் ஜேப்பியார் நடத்திய மூக்குத்தி பத்திரிகை இருந்தது. இதைத்தாண்டிய இடதுபுறம் இப்போது பிரிட்ஜ் தொடங்கும் இடத்தின் அருகில் நடிகர் சோபன்பாபு வீடு இருந்தது. இப்போது சின்னத்திரை நடிகராக உள்ள அமரசிகாமணி அப்போது கவிஞராக அந்த பகுதியில் வாடகை வீட்டிலிருந்தார்.

 

இதான் சிக்கல். பழைய கதையை பேச ஆரம்பித்தால் செயின்லிங்க் போல் போய்க்கொண்டே இருக்கும். ஒரு சம்பவம், கலைமணி கதாசிரியர் தனக்கொரு படம் இயக்கித்தர வேண்டுமென்று மணிவண்ணனிடம் கேட்கிறார். அவரும் சரி என்கிறார். முரளி, கன்னடத்து தாரா நடிக்க ரெடி. கோபிசெட்டிபாளையம் லொக்கேஷனுக்கு கிளம்பியாச்சு.

 

பாடல்கள் வேணும். கலைமணி இளையராஜா இருந்தால்தான் வேலைக்கு ஆகும் என்று முடிவோடு போனால் இளையராஜா படுபிசி. கம்போசிங் டேட்டே வாங்கமுடியவில்லை. மணிவண்ணன் என்றதும் இளையராஜா யோசிக்கிறார். வசனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கிற இயக்குனர் என்று அவருக்கு ஒரு புரிதல்.

 

கலைமணி யோசித்தார். என்ன செய்யலாம். இளையராஜா பாட்டு போட்டு தராவிட்டால் என்ன? இளையராஜா தான் தனது படத்துக்கு பாடல்கள் என முடிவெடுத்து ஒரு யுக்தியை சிலமணி நேரத்தில் பயன்படுத்துகிறார்.

 

யார் யாரெல்லாம் இளையராஜா பாட்டு ரெக்கார்டு செய்து படமெடுக்காமல் விட்டு விட்டார்களோ, அந்த நொடிந்த தயாரிப்பாளர்களிடம் பாட்டை வாங்குவது என முடிவெடுத்து அங்கொன்று, இங்கொன்று என ஐந்தாறு பாடல்களை ரைட்ஸ் வாங்கி அந்த பாடலுக்கு ஏற்றவாறு ஒரு அவுட்லைன் செய்து படமெடுத்து வெற்றி கண்டது தான் 'இங்கேயும் ஒரு கங்கை'. இது 1983-இல் நடந்தது.

 

கூட இருந்த சிலருக்காக, சுப்பையா போன்ற நண்பர்களை தயாரிப்பாளராக்கி படமெடுத்தது தான் 'அன்பின் முகவரி'.

 

முதல் வசந்தம் கதை ரொம்ப சுவாரஸ்யமான செய்தி. முதல் வசந்தத்தில் சத்யராஜ் வில்லன். பாண்டியன் ஹீரோ. படமெடுத்து வெளிவரும் சூழலில் பாண்டியனின் மார்க்கெட் டல். என்ன செய்வது. கலைமணி தனது யுத்தியால் வில்லனை ஹீரோவாக மாற்றுகிற கிளைமாக்ஸ் காட்சியாக மாற்றி சத்யராஜின் மேல் நம்பிக்கை வைத்து மாற்றி படமெடுத்து வெளியிட - அட சக்கை போடு போட்டது.

 

இதிலிருந்து என்ன தெரிகிறது தெரியுமா? திரைப்படத்தில் பேனா பிடித்து எழுதுகிற கதாசிரியன் நினைத்தால் எதையும் வெற்றிகொள்ள முடியும் என்பதுதான்.

 

திட்டமிடாமல் செல்வது போல் தெரியும். ஆனால் சூழலுக்கேற்றபடி தன்னை வளைத்துக் கொண்டு சாதுர்யமாக படமெடுத்து வெற்றிகாண்கிற புத்திசாலித்தனத்திற்கு ஒரு பெயர் உண்டென்றால் அது மணிவண்ணன் என்று உறுதியாகச் சொல்லலாம்.

 

அவர் பிரபல நடிகர்களை வைத்து படமெடுக்காமல் வளர்ந்து வருகிற நடிகர்கள், அல்லது தான் வளர்த்துவிட்ட எண்ணிய நடிகர்களை வைத்தே படமெடுத்து வெற்றி கண்டார்.

 

எந்த உதவியாளரையும் நம்பி படப்பிடிப்புக்குச் செல்லமாட்டார். தான் அவ்வப்போது நினைப்பதை செய்தால்போதும் என்று மட்டும்தான் எண்ணுவார். அது சரியா, தவறா என்பது வேறு விஷயம். சினிமா என்பது இப்படித்தானா என்பதும் வேறு விஷயம்.

 

ஆனால், ஒரு தனி மனிதன் ஐம்பது படங்களுக்கு அந்த திறமையை வெளிப்படுத்தி வெற்றியோடு திகழ்ந்தார் என்பது ஆச்சரியமான உண்மை.

 

இயக்கத்திற்குப் பிறகு ஏராளமான படங்களில் நக்கலும், நையாண்டியுமாக நடித்தார் என்பது அவரின் திறனை நாம் அறியலாம். கமல், ரஜினி என உச்சம் தொட்டு தன்னை இழக்காதவர்.

 

பிறகு அரசியல்களத்தில் தனது கொள்கைக்கு ஏற்றவாறு வைகோ, சீமான் என்றும் திராவிடக் கொள்கைகளோடும் உடன்பட்டும், வேறுபட்டும் கடந்தார் என்பது நிஜம்.

 

தன்னை எப்போதும் வெகுஜன நண்பனாக எண்ணிக்கொண்டது தான் அவரின் உயிர்ப்புத் தன்மையின் கலை வெளிப்பாடு. அவரின் மனைவியின் எளிமை உறவும், அவரோடு பயணப்பட்ட சக கலைஞர்களும் அவரின் பண்பை அறிவர்.

 

நான் அறிந்தவராய் அவருக்குப் பிடித்தமான படம், 'இனி ஒரு சுதந்திரம்' என்கிற படம்தான். அதில் நடிகர் சிவகுமார் காந்தியவாதியாக நடித்திருப்பார். சுதந்திர திருநாட்டில் சுதந்திரம் என்ன பாடுபடுகிறது என்பதை நாசுக்காக அல்ல நேரடியாகவே காண்பித்திருப்பார்.

 

ஏனோ அந்தப்படம் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தோல்வி படமானது. அதற்குப் பின் தான் நையாண்டி பாணியை கடைபிடித்து சத்யராஜை வைத்து ஏகப்பட்ட அரசியல் படங்களை எடுத்து வெற்றிகண்டார்.

 

அவரது எண்ணமெல்லாம், "இரவில் வாங்கிய சுதந்திரம் இன்னும் விடியவில்லை" என்பதுதான்.

 

(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் வாரம் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...