???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இலங்கை தேர்தல் : வாக்களிப்பு நிறைவு! 0 15 தொகுதிகளிலும் பா.ஜ.க.வை தோற்கடிப்பதே எங்கள் குறிக்கோள்: குமாரசாமி 0 இலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது 0 மாணவி ஃபாத்திமாவின் மரணம் தற்கொலை அல்ல: மு.க. ஸ்டாலின் 0 சங்கத்தமிழன் திரைப்படம் வெளியாகாத பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது: விஜய் சேதுபதி 0 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் கூட்டணி அரசை அமைப்போம்: சரத் பவார் 0 உள்ளாட்சித் தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் சந்திக்கத் தயார்: மு.க.ஸ்டாலின் 0 விரைவில் ஒரே நாடு; ஒரே ஊதிய நாள் திட்டம்: மத்திய அமைச்சர் 0 பள்ளிகளில் ஒவ்வொரு பாடவேளை முடிவிலும் 10 நிமிடம் ‘தண்ணீர்’ இடைவேளை: செங்கோட்டையன் 0 சென்னை ஐஐடி மாணவி தற்கொலை: திமுக மாணவரணி போராட்டம் 0 ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு 0 ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்; துணை நிலை ஆளுநர் தகவல் 0 மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாடகி சுசித்ரா! 0 நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு 0 சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி – 8: இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   02 , 2019  07:26:43 IST


Andhimazhai Image
எண்பதுகளைத் தாண்டிய  சில வருடங்களில் சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் கவிராஜன் கதை என்ற  புத்தக வெளியீட்டு விழா..அதை எழுதியது யார் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை..வைரமுத்துதான் அதன் ஆசிரியர்.
 
அந்த வெளியீட்டு  விழாவின்போது கவிப்பேரரசு வைரமுத்து திரைப்பாடல்கள் எழுதி முன்னேறிக் கொண்டிருந்த நேரம். இலக்கிய ஆளுமைகள், திரைக்கலைஞர்கள், பொதுமக்கள் என்று எல்லோரும் திரளாக வந்திருந்தனர். குறிப்பாக ஒளவை நடராசன், எஸ். பி. முத்துராமன் ஆகியோர் விழாவில் முக்கியமாக இடம் பெற்றிருந்தனர்.
 
மகாகவி பாரதியாரைப் பற்றி புதுக் கவிதையில் சாவி இதழில் வெளிவந்தது என்பது அதன் தனிச் சிறப்பு. மரபு சார்ந்தவர்கள் இதை விமர்சித்துப் பேசியதும் உண்டு. பாரதியாரே வசன கவிதை என்று எழுதி புரட்சி செய்தவர்தான். அதனால் அவர் வாழ்க்கை  வரலாறு வைரமுத்து புதுக்கவிதையில் எழுதியது ஒன்றும் பெரிய தவறல்ல..
 
விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது. நான் பல்வேறு ஆளுமைகளைச் சந்திப்பதும், பேசுவதும், நண்பர்களோடு தேனீர் அருந்தச் செல்வதுமாக விழா நேரம் செலவாயிற்று.
 
விழா முடிந்த தருவாயில் டைரக்டர்  எஸ்.பி.முத்துராமன் அருகே வந்து ஆச்சரியமாகக் கேட்டார்.
 
‘’உன் பெயரைச் சொல்லி வைரமுத்து நன்றி சொன்னார்.. அது எதற்கு ?
 
 ஆமாம் எதற்கு?
 
வெளிவந்த புத்தகத்தில் பெயர் இருக்கிறதா என்று பார்த்தேன். பெயரில்லை.
 
பின் எதற்கு மேடையில் நன்றி சொன்னார்?
 
அன்று எஸ். பி. முத்துராமன் அவர்களுக்கு என்னால் விளக்கம் சொல்ல முடியவில்லை.. ஆனால் இன்று சொல்வதில் தவறு ஒன்றுமில்லை..
 
‘’சார்..பாலசந்தர் கமல்ஹாசன் அவர்களை ஹீரோவாகப் போட்டு பாரதியார் வாழ்க்கையை படமெடுப்பதாக அறிவித்தார்.
 
அந்தப் படத்திற்கு வைரமுத்துதான் திரை கதை வசனம் என்று முடிவாயிற்று..
 
அப்படி ஆன கையோடு என்னை அதற்கு உதவ வேண்டுமென்று வைரமுத்து கேட்டார்.
 
நான் மாநிலக்கல்லூரியில் பி.ஏ தமிழ் படித்துவிட்டு வெளிவந்த நேரம். படிக்கும்போதே ஜெயபாரதி இயக்குநரிடம் ‘தேநீர்’ படத்திற்கு உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் இருந்தது.
 
அதுமட்டுமல்ல சோவியத் கலாச்சார மையத்தில் கவியரங்கம் முதல் இலக்கிய நிகழ்வுகளில் அவரோடு கலந்து கொண்ட அனுபவம் உண்டு. அறிவுமதி, பழநிபாரதி, அப்போதைய நிகழ்வுகளில் பங்கேற்றவர்களில் முக்கியமானவர்கள்.
 
எனவே திரைக்கதை அமைப்பை தொகுக்கும் பொறுப்பை எனக்களித்தார் வைரமுத்து. அதை நான் சில மாதங்கள் பல்வேறு நூலகங்கள், அறிஞர்களிடம் கருத்து கேட்டு திரைக் கதை சுவாரசியம் குன்றாத காட்சிகளைத் தொகுத்தேன்.
 
அப்போது வைரமுத்து, பொன்மணி தம்பதியர் டிரஸ்டுபுரம் 5 வது தெருவில் தாமரைப்பூ போட்ட வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார்கள். நான் சைதாப்பேட்டை எம். சி. ராஜா மாணவர் விடுதியில் நண்பர்களுடன் தங்கியிருந்தேன்.
 
விடியற்காலை நான்கு மணிக்கு குளித்து முடித்துவிட்டு இரயில்வே டிராக் ஓரம் நடந்து கோடம்பாக்கம் அடைந்து ஐந்து ஐந்தரை மணிக்கு வீட்டு காலிங் பெல் அழுத்துவேன். பொன்மணி அவர்கள் சிரித்த முகத்தோடு வரவேற்பார். அதன்பின் எழுதுவதை தொடங்குவேன்.
 
இப்படி தொகுத்து முடித்த பின் ஏனோ பாரதியார் படம் எடுப்பது தடைபட்டது. பிறகு சிறிது காலம் அவர் பாடல் எழுதுவதற்கு உதவியாக பணியாற்றினேன்.  பாடல் சொல்லச் சொல்ல எழுதுவதும், பின் எழுதியதை  படியெடுத்து அழகாகத் தருவதும்தான் வேலை! கண்ணதாசனுக்கு பஞ்சு அருணாசலம். இராம.  கண்ணப்பன் இருந்தது போல்.
 
பிறகு சில காலம் கழிந்து ‘தாய்’ வார இதழில் துணையாசிரியராக சேர்ந்துவிட்டேன்.
 
பாரதியார் படத்திற்கு தொகுத்த வாழ்க்கை வரலாற்றை பின்னால் அதை வீணாக்காமல் சாவி வார இதழில் தொடராக ‘கவிராஜன் கதை’ என்று புதுக் கவிதையில் எழுதினார்.
 
 
கவிராஜன் கதை நூலில் எனது பெயர் விடுபட்டது அறிந்து மேடையில் அவர் என்னை உயர்த்திப் பேசி நிவர்த்தி செய்தது உண்மையிலேயே அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. கவிப்பேரரசு உழைப்பையும் மனித நேயத்தையும் உணர்ந்தவர் என்பதை நானறிவேன். வைரமுத்து நேரத்தை கணித்து வாழ்கிற மிகப் பெரிய கலைஞன் என்பதையும் திட்டம் தீட்டி அதை சரிவர அரங்கேற்றி வெற்றி பெறுவதில் முனைப்பானவர். தமிழ் மீதும் தமிழர் நலன் மீதும் பெரும் அக்கறை கொண்டவர்.
 
வெண்மை உடையில் அவர் வெளிவரும்போது ஒரு கம்பீரம் தானாகவே அவரை ஒட்டிக்கொள்ளும். சொற்களை தேர்வு செய்து சட்டைபோட்டு நாகரீகமாக நடைபோடச் செய்வார்.
 
ஒரு சம்பவம் இப்போது நினைவுக்கு வருகிறது. பாடல் எழுதுகிற சமயத்தில் ஒருநாள் வடுகப்பட்டியில்  அவருடைய தாத்தா இறந்த செய்தி வருகிறது. பேசிக் கொண்டே ரயில் நிலையம் சென்ற என்னை  ரயில் புறப்படும்போது நீயும் வா என்று உடன் ஏற்றிக்கொண்டார்.
 
‘’டிக்கெட் எடுக்கவில்லையே?’’ என்றேன். செங்கல்பட்டில் எடுத்துக்கொள்ளலாம் ’ என்றார். சங்கடத்தோடு பயணித்தேன். செங்கல்பட்டு  இரயில்வே ஸ்டேஷன் வர..டிக்கெட் எடுத்துக்கொண்டு ரயில் ஏறப் போகும்போது வந்தது கஷ்ட காலம். டிக்கட் செங்கிங் அதிகாரி கவனமாய்  பார்த்து பிடித்துக் கொண்டார்.
 
‘நான் வைரமுத்து சாரோடு வந்தேன். அவசரத்தில் டிக்கெட் எடுக்க முடியவில்லை. அதனால் இங்கே எடுத்தேன்’ என்று விளக்கினேன். அவர் விடவில்லை. ’இந்தக் கதை இங்கே விடாதே அப்பனே’.. ’யார் வைரமுத்து காட்டு?’ என்றார்.
 
நான் அழைக்கப் போக இரயில் கிளம்பியது. வைரமுத்து சன்னலோரம்-செக்கிங்கோடு நான் சிக்கிக்கொண்ட  காட்சியை பார்த்தபடி  சென்று கொண்டிருந்தார்.
 
விதி வலியது. வைரமுத்துவின் தாத்தா மரணச் செய்தி என்னை செங்கல்பட்டில் சிக்க வைத்து விட்டது.
 
என்ன செய்வது. அப்போது கையில்  ’தேன்மழை’ பத்திரிக்கையில் நான் எழுதிய  கவிதையைக் காண்பித்து. ‘’சார் நான் கவிஞன்.. கவிஞன் பொய் சொல்லமாட்டான்’ என்று தமிழை துணைக்கு அழைத்தேன்’’.
 
’நீ அவரோடு  வந்தாயென்றால் ஏன் அவர் பார்த்துக்கொண்டு போகிறார்’ என்று கேட்டார்.
 
”இந்த சம்பவத்தை  எதிர்பார்த்திருக்க மாட்டார்’ என்று சமாதானம் சொன்னேன்.
 
அன்று நான் தவித்து பரிசோதகருடன் பேசிய வார்த்தைகள் கிட்டதட்ட ‘பராசக்தி’ படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கோர்ட்டில் பேசிய வசனங்களுக்கு  ஒப்பாகும்.
 
ஒருவாறு மனமிறங்கி அடுத்த ரெயிலில் ஏற்றி வைத்தார் அவர். கூடுதலாக  எனக்கு  ஒரு தேனீரையும் தந்தார். நன்றி மறப்பது நன்றன்று. அதனால் இதையும் சொல்லி விட்டேன்.
 
ஒரு மாதிரித் தட்டுத் தடுமாறி வடுகப்பட்டி  சேர்ந்தேன். வைரமுத்துவின் வடுங்கபட்டி  கள்ளங்கபடமற்ற வயல், வாய்க்கால் கொண்ட உழைக்கும் மனிதர்களைக் கொண்டிருந்தது.
 
நான் போன போது வைரமுத்து அவரின் ஆசிரியர் வீட்டிலிருந்தார். சந்தித்தேன்.
 
என்னை நிமிர்ந்து பார்த்தார் . அதில் ''பலே.. சாமர்த்தியகாரன்'' என்பதான வசனம் வழிந்தது.
 
டிக்கெட் வாங்கிய பணத்தின்  மீதியை நான் எடுத்துத்தர அதை அவரும் பெற்றுக் கொண்டார்’’
 
ஆனால் என்மனம் ஏங்கிக் கெஞ்சியது. ‘’எப்படி வந்தாய்’ என்று  ஒரு வார்த்தை கேட்பாரென்று..!
 
இன்று யோசிக்கும்போது பயணத்தில் கவிஞரின் சங்கடமும் எனக்கு ஏற்பட்ட ஒரு நெருக்கடியும் காலத்தின் குறியீடு என்று கருதலாம். அது பல செய்திகளை நமக்குச் சொல்கிறது. சூழல்கள் தான் ஒரு சம்பவத்தை உருவாக்கி வேடிக்கை பார்க்கிறது என்று கருதலாம். இந்த சம்பவத்தை நான் அவ்வாறுதான் எடுத்துக்கொண்டு பயணிக்கிறேன்.
 
நான் அவரோடு இருந்தபோது ஒரு சமயம். அது  ஏ.வி. எம் படம் இயக்குநர் ராம நாராயணன். விஜய்காந்த் ஹீரோ. ஏவி எம் சரவணன் அறை அருகில் பாட்டுக்கான கம்போசிங்… ‘சிவப்பு மல்லி’ – படம்.
 
‘எரிமலை எப்படிப் பொறுக்கும்-நம் நெருப்புக்கு  இன்னுமா உறக்கம்?’
 
இரத்த சாட்டை  எடுத்தால்-கையை 
 
நெரிக்கும் விலங்கு தெறிக்கும்.
 
நாம் கண்ணீர்விற்கும் சாதி-இனி
 
அழுதால் வராது நீதி?””
 
இது புரட்சிகரமான படமாக வெளிவந்து விஜயகாந்த், சந்திரசேகருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது.
 
இதை எழுதிவிட்டு வெளியே வந்தபோது ஏ.வி.எம் சரவணன் சார் வைரமுத்துவை அழைத்து , ‘பாரதியார் பாடல்கள் உரிமையை மக்களுக்காக பொது உரிமையாக்கப்போகிறோம். எல். பி. ரெக்கார்டு வெளியிட உள்ளோம். அதற்கு வாசகம்  வேண்டும்’ என்று கேட்டார்.
 
சற்றும் தயங்காமல், ‘காற்றுள்ளவரை ஏவி மெய்யப்பன் புகழும், பாரதியார் புகழும் நிலைத்திருக்கும்’ என்று  சொன்னார்.
 
எனக்கு வியப்பாகத் தோன்றியது. சொற்களை சுகாதாரமாகவும், சட்டை போட்டும் அனுப்புகிற யுக்தி எவ்வாறு வைரமுத்துவுக்கு  வாய்த்தது என்று?
 
ஆனால் இந்த நிகழ்வுக்குப் பின். . பல இலக்கிய நண்பர்கள் வைரமுத்துவை  விமர்சனம் செய்தனர்.
 
கவிதை எழுதுகிறபோது,
 
சினிமாவை –
 
தீக்குச்சிக்கு
 
தின்னக் கொடுப்போம்’
 
என்று எழுதிவிட்டு அதே சினிமாவில் வைரமுத்து எழுத ஆரம்பித்து விட்டாரே என்று?
 
அப்போது சொல்ல இயலவில்லை. ஆனால் இப்போது சொல்கிறேன்.
 
இளைய வயதில் நிகழும் சமூக கோபங்கள்-பின் வாழ்வு தரும் காயங்கள், சந்தர்ப்பங்கள்... அந்த சமூகத்தில் துணிந்து பயணித்து நேர்மறையாய் ஏதேனும் சாதித்துக் காண்பிக்க வேண்டும் என்று செயலாற்றுவதில் என்ன பிழை?
 
மகாத்மா ஆவதற்கு முன் காந்தி பணம் வாங்கிக்கொண்டு வாதாடுகிற  வழக்கறிஞர்தானே?
 
சில மாதங்கள்  வைரமுத்து  அவர்களோடு பயணித்த அனுபவம் வாழ்வின் இலக்கியமான நாட்கள்.
 
பல சம்பவங்கள், பல புரிதல்கள். பல ஆண்டுகளுக்குபின் நாகேஸ்வரராவ் பூங்காவில் மீண்டும் வைரமுத்து சந்திப்பு.
 
அந்தப் பூங்காவில் மூங்கில் நாற்காலியில் அமர்ந்து ஒரு பெரிய மரத்தின் கீழே பாடல் எழுதுவது அவர் வழக்கம்.
 
நான் சிங்கப்பூர் தொலைக்காட்சிக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தேன். என்னை பார்த்து இப்படியாகச் சொன்னார் ‘’நீ சிறந்த உழைப்பாளன். ஆனால் சரியான முதலாளியைத் தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை” என்றார்.
 
இருக்கலாம். அவரின் அனுபவம் விரிவானது.
 
பிறிதொரு திருமண விழாவில் ‘‘ உனக்கு அறிவு விசாலமாயிருக்கிறது” என்றார்.
 
மிகுந்த ஒரு நிகழ்வு கவிப்பேரரசு வைரமுத்துவை உயர்த்திக் காண்பித்தது.
 
கடலூரில் ஒரு திடீர் மரணம். எமது குடும்பத்தில் துணைவியாரின் தங்கையின் மாமனார் திரு நடராஜன் அவர்கள். அவர் கடலூரில் காவல்துறை அதிகாரியாக பணி செய்து மிகவும் புகழ்பெற்றவர்.
 
அவரின் இழப்பு எங்களை நிலைகுலைய வைத்தது .
 
அந்த மரணத்திற்குப் பின் ஒவ்வொரு நாளும் ஒரு திருமறை என்ற ஒரு பாடலை போட்டு எல்லோரும் பயபக்தி உடன் நின்று வணங்கி விட்டுத்தான் அடுத்த செயலைச் செய்வது வழக்கமாக இருந்தது .
 
இது கிட்டத்தட்ட ஒரு பதினாறு நாட்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது .
 
வாழ்வின் படிகளையும் உணர்வுகளையும் அதனுடைய நுட்பத்தையும் அந்த பாடல் எனக்கு சொல்லித் தந்தது .
 
 
வாழ்க்கையில் கொண்டு வந்ததும் ஒன்றுமில்லை கொண்டு போகப் போவதும் ஒன்றுமில்லை என்கிற நிலையற்ற வாழ்வில் நாம் பயணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற ஒரு மனித உளவியலை அந்த பாடல் காண்பித்தது. பிற்பாடுதான் அது திருமறை அல்ல கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழ் மறை என்று அறிந்து கொண்டேன் .
 
ஜனனம் என்று ஒன்று மரணம் ஒன்று இருக்கும் என்ன கொண்டு வந்தோம் என்கிற அந்த அருமையான பாடல் எல்லோருடைய இல்லத்திலும் புகுந்து கொண்டது .
 
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தமிழ் குடும்பங்களில் ஒரு அவசியமான பகுத்தறிவு  சித்தர் போன்று அங்கம் வகிக்க துவங்கி விட்டார்.
 
அந்த பாடல் இப்படித்தான் துவங்குகிறது: ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க  சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க .
 
எனது ‘கை குலுக்கிக் கொள்ளும் காதல்’ முதல் நூலுக்கு அணிந்துரை வழங்கினார்.
 
வைரமுத்து அவர்கள் எனது நூலுக்கு அணிந்துரை எழுதியது இங்கே குறிப்பிடத்தக்கது .
 
இந்த நூலில் காதலைவிட சோகமும் கோபமும் தான் கைகுலுக்கி கொள்கின்றன.
 
முலாம்  பூசாத உணர்ச்சிகள்  முரசு அடிக்கின்றன.
 
வலிந்து திணிக்காத தெளிந்த சிந்தனை கள் வரிசையில் நிற்கின்றது .
 
எப்போதுமே வெற்றி பெறும் ஒரு கலைக்குப் பின்னால் அதைப் போன்ற பிம்பங்கள் நிறைய பிரசவிக்கப்படும்.
 
இது ஒரு உலகளாவிய உண்மை .
 
அதுபோல் புதுக்கவிதை எனும் ஒரு படைப்புக் கலை தான் வெற்றி பெற்றதனால் தனது பிம்பங்களை நிறைய சந்தித்துக் கொண்டிருக்கிறது .
 
பிம்பங்கள் உருவத்தின் நட்டம் அல்ல .
 
இவர் கவிதைகளில் பிம்பங்களை விட நிஜங்கள் நிறைய  .
 
இது வெற்றி பெறும் .
 
பெற்றால் நமக்கு நல்லது .
 
என்று குறிப்பிட்டு இருக்கிறார் .
 
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் கவிதைகளில் ஆகட்டும் திரைப்பட பாடல்கள் ஆகட்டும் சிறுகதைகள் ஆகட்டும் அவர் உயர்வு சேர்த்தவர் என்பது மறுக்கமுடியாத உண்மை .
 
காலம் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை நினைவு வைத்துக் கொண்டு போற்றும் என்பதே தமிழுக்கு சிறப்பு.
 
நான் அவரிடம் உதவியாளராக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் எப்போதும் எவருக்கும் அவ்வாறாக இருக்க இயலாது என்பது எனது தனிப்பட்டகுணம்.
 
கானகத்தில் உயர்ந்து நிற்கும் மரமாக இருப்பதைவிட குட்டையாக இருக்கும் துளசியாக இருப்பதை மேல் என்று நினைப்பவன் நான்.
 
கவிப்பேரரசு வைரமுத்துவின் வீச்சு வளர்ச்சி, தட்ப வெப்பம் யாவும் அவரின் தனிப்பட்ட அயரா உழைப்பே.
 
அவரின் மேல் விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவரின் வாழ்வும், எழுத்தும், தமிழ் உலகின் தனித்த வானம்.
 
இன்று ‘தமிழாற்றுப்படை நாயகன் – அன்று தமிழுக்காக அர்ப்பணிக்க உழைக்க வந்த வடுகப்பட்டி வைரம். வைரமுத்து என்கிற மிகப்பெரிய கவிஞர் தமிழ் கிடைத்த கொடை என்று கருதலாம் .அவருடைய செயல்களும் நாள்தோறும் அவர் தன்னை காலத்திற்கு ஒப்படைத்துக் கொள்ளும் விதமும் பல இளம் கவிஞர்கள் வரவேற்று பின்பற்ற தக்கவை.

 

(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் வெளியாகும்)

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...