???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி வன்முறை: 27 பேர் பலி; தொடரும் பதற்றம் 0 உழைப்பவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்: முதலமைச்சர் 0 தமிழக சட்டப்பேரவை மார்ச் 9-ந்தேதி மீண்டும் கூடுகிறது 0 இரும்பு கரம் கொண்டு அடக்கி இருக்க வேண்டும்: டெல்லி வன்முறை பற்றி ரஜினி 0 சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே: இம்ரான்கான் 0 ’பாரத் மாதா கி ஜெய்’ சொல்பவர்கள் மட்டும் இந்தியாவில் இருக்கலாம்: ஹிமாச்சல பிரதேச முதலமைச்சர் 0 வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்தில் இந்து பெண்ணுக்கு வளைகாப்பு! 0 சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் கைது! 0 ஆர்.எஸ்.பாரதி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்! 0 CAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் 0 டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் 0 டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி! 0  "பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்": கமல் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் 0 டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 7 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   26 , 2019  03:10:24 IST


Andhimazhai Image

பாலு மகேந்திரா என்றதும் அவரின் கருப்புக் கண்ணாடியும் தொப்பியும் தான் நமக்கு நினைவு வரும். பாலு மகேந்திரா தமிழ் திரைப்பட உலகிற்கு அப்படி என்ன சாதித்து விட்டார் என்று யாராவது கேட்டால், அவர் வரவில்லை என்று சொன்னால் தமிழ் படங்களில் எதார்த்தமும் அருமையான காட்சிகளும் உணர்வுரீதியான இயல்பான நடிப்பும் நாம் காணாமலே போய்விட்ட நிலைக்கு தள்ளப்பட்டு இருப்போம் .

 

அழகியல் ரசனைக்கு விதையாய் இருந்தவர்தான் பாலுமகேந்திரா .

 

இவர் எங்கிருந்து வந்தார் என்பது ஒரு கேள்விக்குறி?

 

மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற இடத்தில் பிறந்தார் .

 

இவர் தந்தையார் ஒரு பேராசிரியர் .அவரின் மகன் பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன் . பின்னாடிதான் பாலு மகேந்திரா என்று தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் .

 

அவர் ஸ்ரீலங்கா பள்ளியில் படித்தபோது கிராமங்களில் எல்லா இடங்களிலும் சென்று அவர் மனித  உணர்வுகளை படித்துக் கொண்டார்.

 

வாழ்வின் அடித்தளமான  மனிதநேயப் படிப்பினை அவர் அங்கே கற்றுக் கொண்டார் .

 

பிறகு அவர் சிங்கள நாடக அமைப்பில் சேர்ந்து சிறிது காலம் பயிற்சி எடுத்துக் கொண்டார்.

 

அந்த சமயம் பைசைக்கிள் தீவ்ஸ் , பேட்டில் ஷிப்  பொட்டம் கின் ,த  பிரிட்ஜ் ஆஃப் த ரிவர் குவாய் ,டேவிட் லீன் படங்கள் இவையெல்லாம் தான் சினிமாவுக்கு வருவதற்கு அவருக்கு தூண்டுகோலாக ஆர்வமாகவும் இருந்தது .

 

  சினிமா ஆசை உள்ளே புகுந்து விட்டால் அவ்வளவு தான் ஊரில் யாரும் இருக்க முடியாது .அதே நிலைதான் பாலு மகேந்திராவுக்கு நிகழ்ந்தது .

 

ஸ்ரீலங்காவில் இருந்து கிளம்பி நேரடியாக இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். பூனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு  மாணவராக சேர்ந்து விட்டார்.

 

அங்கு தான் உலக சினிமாக்கள் பிரெஞ்சு திரைப்படங்கள், ஈரானிய படங்கள், மேற்கத்திய படங்கள் என பலவிதமான படங்களை பார்த்து தனக்கான படங்கள் எது என்பதை அங்கேயே முடிவெடுத்தார்.

 

அவருடைய படங்கள் எல்லாம்பிறகு சிறந்த படங்களாக வர இதுவே காரணம்.

 

 உலக சினிமாக்களை அவர் உள்வாங்கிக் கொண்டார். வெறியோடுவந்தார் ஆறு தேசிய விருதுகளை பெற்றார் .அதெல்லாம் தெரிந்த விஷயம் .

 

நான் அவரைச் சந்தித்தது தாய் வார இதழில்  துணை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது. சாலிகிராமத்தில் வீட்டிற்குச் சென்று பார்த்தேன். காலிங்பெல் இல்லை. காவலாளி இல்லை. சிறிது நேரம் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தேன் .

 

சரி ஆனது ஆகட்டும் என்று உச்ச ஸதாயியில்  டைரக்டர் சார் என்று கூப்பிட்டேன். நோ ரெஸ்பான்ஸ். மறுபடியும் அதே கூக்குரல்.

 

ஒரு பெண்மணி வந்தார். அகிலா. அவரின் மனைவி.  அமைதியாக ‘வரச்சொன்னாரா?' என்று கேட்டார்.

 

ஆமாம் இல்லை என பாலச்சந்தர் பாணியில் தலை ஆட்டினேன். சாரி என கதவை சாத்தப் போனார்.

 

நான் எழுத்தாளர் என்று பதறினேன்.

 

உள்ளிருந்து வாங்க என்றார் பாலுமகேந்திரா .

 

 

 

மாடியில் முற்றிலும் மூங்கில் காடு போல் இருக்கும். அழகாக இயற்கை சார்ந்து அறை.

 

மண்ணால் செய்த சிறு பொம்மைகள் அங்கங்கே இருந்தது.

 

முகத்தில் மகிழ்ச்சி இல்லை.

 

கனத்த அடர் சோகம் நான்கு சுவர்களிலும்   ஒட்டிக் கொண்டு இருந்தது.

 

அது நடிகை ஷோபா மரணம் அடைந்த நேரம்.

 

ஷோபா தற்கொலை பாலு மகேந்திரா மேல் பழி விழுந்திருந்தது.

 

கோர்ட்டில் கேஸ் நடந்து கொண்டிருந்தது.

 

நிமிர்ந்து பார்த்தார்.

 

ராசி என்றார்,

 

சார் நீங்க கலைஞன். சூழ்நிலை தான் உங்களுக்கு எதிரி. வலம்புரி ஜான் சார் அனுப்பினார். நாங்க உங்களுக்கு சட்ட உதவி செய்ய தயாராக இருக்கோம் என்றேன்.

 

விழிகள்  பனிக்க மனம் விட்டு பேசினார்.

 

பலமுறை நான் அவரை பேட்டி கண்டு பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளேன்.

 

என் கவிதைகளை அவர் பலமுறை பாராட்டி உள்ளார்.

 

தான் விரும்புகிற கலை வாழ்வில் தனக்கு எதிரான சறுக்கல் வரும்போது தான் தனக்கு யார் நண்பர்களாக துணை நிற்கிறார்கள் என்பது புரிய வரும்.

 

வலம்புரி ஜான் அடுத்த நாள் சந்திக்க ஏற்பாடு.

 

சந்தித்தார்.

 

பக்க பலமாக நின்றது தாய்.

 

சோதனையிலிருந்து மீண்டார் .

 

மிகப்பெரிய கலைஞன். ஏன் இப்படி தன்வாழ்வில் மூன்று பெண்களோடு சம்மந்தப்பட்டார்?

 

அவரிடம் கேட்டேன்.

 

நிகழ்த்திக் கொண்டதல்ல. நிகழ்ந்தது என்றார்.

 

தேடிப் போனதல்ல. தேடி வந்தது.

 

 அதற்கு காரணம் உண்டு .

 

அப்போதிருந்த படைப்பாளர்கள் யாவரும் மென்மையானவர்கள் இல்லை.

 

பெண்மையை மதித்தும், அக்கறையுடன் நேசித்தும் நம்பிக்கையோடும் உயிர்த்தன்மை  உடனும்  நிஜக் கலைஞனாக வாழ்ந்தார் என்பதால்தான் அவரோடு பிரியமாக வாழ விரும்பினர்.

 

அது சமூகத்தில் சரியா தவறா என்பது வேறு விஷயம். அதற்குள் சென்று நியாயம் பேசுவது எனக்கு உடன்பாடில்லை.

 

அவரை சந்திப்பது என்றால் ரொம்ப கடினம். அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு போய் பார்க்க முடியாது. ஏனென்றால் அவரிடம் போன் தொடர்பு இல்லை.  போன் கனெக்‌ஷன் வைத்துக் கொள்ளவே இல்லை .அது ஒரு சிரமமான கஷ்டமான தொந்தரவான விஷயம் என்றே அவர் சொல்லிக் கொண்டிருந்தார் .

 

பிறகு எப்படி போய் பார்ப்பது? நேராக காலையில் வீட்டுக்கு சென்று விடுவோம் ..

 

மாடி மேலே போய் பேசுவோம் .

 

பாலுமகேந்திரா இயக்குநரின் சிறப்பு  என்ன என்று சொன்னால் தன்னிடம் வரும் மாணவர்களை முதலில் படித்திருக்கிறாயா என்று கேட்பார் .

 

என்ன புத்தகம் படித்தாய்?.

 

ஜெயகாந்தன்

 

புதுமைப்பித்தன்

 

கண்ணதாசன்

 

ராஜம் கிருஷ்ணன்

 

சரி… என்னபடைப்புகளை  படித்தாய் என்று கேட்பார் .

 

படிக்கவில்லை என்று சொன்னால் புத்தகங்களைக் கொடுத்து படிக்க வைத்து உணவு தந்து அதிலிருந்து என்ன கற்றுக்கொண்டாய் எழுது என்று சொல்லி ஒரு குருகுல ஆசானாக மாறி விடுவார். அங்கு படித்தவர்கள்தான் அறிவுமதி பாலா வெற்றிமாறன் ராம் சீனுராமசாமி பாடலாசிரியர் முத்துக்குமார் போன்ற ஆளுமைகள்.

அதனால் தான் அவர்களின் திரைப்படங்கள் எல்லாம் வித்தியாசமானதாகவும் அதே சமயத்தில் இயற்கை சார்ந்தும் உணர்வோடும் இருப்பதற்கு காரணம். பாலுமகேந்திரா அவர்களுக்கு ஊட்டிய இலக்கிய ரசனையும் திரையில் ரசிகனை எவ்வாறு மேம்படுத்திக் கொண்டு உயர்த்துவது என்கிற நுண்மையான கலை நுட்பமும் தான்.

 

6 தேசிய விருதுகள் . அதில் வீடு ,வண்ண வண்ண பூக்கள் இரண்டும் சிறந்த படங்களுக்கு. வீடு, மூன்றாம் பிறை இரண்டும் சிறந்த இயக்கத்துக்கு. மூன்றாம் பிறை கோகிலா சிறந்த ஒளிப்பதிவுக்கு.

 

நான் கேட்டேன், வாய்ப்பு எப்படி கிடைத்தது சினிமாவில் ?

 

சிரித்தபடி நழுவினார்.

 

விடாது கருப்பாய் தொடர்ந்தேன்.

 

நெல்லு என்ற படத்தில் கேமிராமேனாக ராமு கரியத் வாய்ப்பு தந்தார். கேமிரா மேன் அல்ல அந்த சொல் ஒப்புதல் இல்லை. ஒளி இயக்குனர் இது தான் சரி. நான் அந்தப் படத்தில் எனது பங்கை சிறப்பாக செய்தேன். ஆனால் படம் வெளிவர 3 வருடங்கள் ஆகிவிட்டது. அதற்குள் நான் மாயா , பனி முடக்கு 2 படங்களை முடித்து விட்டேன். மாயா முதலில் ரிலீஸ் ஆனது. பி என் மேனன் படம் பனி முடக்கு பிறகு ரிலீஸ் ஆனது. 3 ஆவது முதல் படம் நெல்லு ரிலீஸ் ஆனது.

 

அது சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரளா அரசு விருது பெற்று தந்தது.

 

அதன் பிறகு ஒரு கட்டத்தில் மகேந்திரன் இயக்கத்தில் முள்ளும் மலரும். பலரும் திரும்பி பார்த்தனர். அதற்கு கமலுடன் கோகிலாவில் பணியாற்றியது கை கொடுத்தது என்றார்.

 

 பேரலல் பிலிம்’ என்று சொல்கிற ஒரு இடத்தை நிரப்ப வேண்டும் என்று கருதினார் .

 

அதற்காகத்தான் முயற்சியும் செய்தார். ரஜினிகாந்தை ’உன் கண்ணில் நீர் வழிந்தால்’ என்ற படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக இருந்தவரை ஒரு கதையில் நடிக்க வைத்தார்.

 

 கமலஹாசனை ஒரு நகைச்சுவை பாத்திரத்தில் கொண்ட ஒரு படத்தை நடிக்க வைத்தார். சதி லீலாவதி . அந்த படம் உங்களுக்கெல்லாம் தெரியும் கோவை சரளாவும் கமல்ஹாசனும் கொங்கு பாஷையில் பேசி தமிழகத்தையே அதிர வைத்தது .

 

இப்படியாக அவர் ஒரு புறம் பேரலல் பிலிம் செய்து கொண்டிருந்தாலும் நல்ல படங்களை செய்ய வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.

 

இந்த இடத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும் .என்னுடைய வண்ணத்துப்பூச்சி திரைப்பட இசை வெளியீட்டு விழாவுக்கு அவர் வந்து என்னை வாழ்த்தினார் .

 

ஏன் வந்தார் ? எங்கிருந்து வந்தார்? என்று நீங்கள் கேட்கலாம்

 

 நான்  சென்னையில்  ஃபிலிம் சேம்பரி ல் விழா நடத்துகிற போது அவர் செங்கல்பட்டில் இருந்தார் .என் படம் இசை வெளியீட்டு விழா கேள்விப்பட்டு நான் முறையாக தெரிவிக்காத போதிலும் ஒரு கால் டாக்ஸி எடுத்துக் கொண்டு வந்து விழா மேடையேறி  மைக் பிடித்து, “இந்த இயக்குனர்  அழைக்கவில்லை. இவரின் படைப்புகளையும் கவிதைகளையும் நான் படித்து இருக்கிறேன்  எனக்கு நெருங்கிய நண்பரும் கூட. நான் ஏன் அழைக்காமல் வந்தேன் என்று சொன்னால் தமிழ் திரைப்பட உலகத்தில் சிறுவர்களுக்கான திரைப்படங்கள் என்று ஒன்று இல்லாமலே இருக்கிறது. அப்படி சிறுவர்கள் நடித்தால் அது பெரியவர்களுக்கு காதல் செய்யவும் நகைச்சுவையாகவும் இருக்கவும் சிறுவர்களை பயன்படுத்துகிறார்கள் தமிழ் திரையுலகில் சிறுவர்களுக்கான படம் என்பதே இல்லாமல் இருக்கிறது.

 

இச்சமயத்தில் ராசி அழகப்பனை நான் பாராட்டாமல் விட்டால் பிழை ஆகிவிடும் என்பதற்காகவே வாழ்த்துகிறேன்.  இந்த படம் சிறப்பாக வரவேண்டும்,’’ என்று வாழ்த்தினார் இந்தப் பெருந்தன்மை யாருக்கு வரும்? அதுதான் பாலுமகேந்திரா. அவர் பனித்துளியாகவும் இருப்பார். உயரே பறக்க பறவையாகவும் இருப்பார். வானத்தில் மின்னிடும் வானவில் ஆகவும் இருப்பார். ஆனால் எந்த சமயத்திலும் தன்னுடைய மனிதாபிமானத்தை விட்டுக்கொடுக்காமல் கலை ரசனையை இழக்காமல் இந்த மண்ணுக்கும் தமிழுக்கும் சேவை செய்வதை மட்டுமே தன்னுடைய எண்ணமாக கொண்டிருந்தார். அதனால்தான் அவருடைய சீடர்களாக வருகிற இயக்குனர்கள் எல்லாம் தமிழ் திரைப்படத்தில் தனித்துவமான முத்திரை பதிக்கிறார்கள்.

 

வீடு,  சந்தியா ராகம் போன்ற படங்களை அவரே தயாரித்து ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

 

நீங்கள் கேட்டவை, என் இனிய பொன் நிலாவே போன்ற படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. ஆனால் அவருக்கு கை கொடுத்த படங்கள் எது என்று சொன்னால் அவர் மனம் விரும்பி செய்த அழியாத கோலங்கள், சங்கராபரணம்(ஒளிப்பதிவு), மனஊரி பாண்டவரிலு(ஒளிப்பதிவு) போன்ற படங்களும் தான்.

 

சசி குமார் 2013 ல் தலைமுறைகள் என்ற படத்தை நடித்து இயக்க வாய்ப்பு அளித்தார்.

 

சிறந்த சிறுகதைகளை சின்னத்திரையில் கொண்டுவந்து சேர்த்தார் .

 

நடிகர்கள் பலரை அவர் உருவாக்கினார்l. இன்னும் சொல்லப்போனால் அவரின் தாக்கம் தமிழ் ஸ்டுடியோ அருண் மூலமாக பாலுமகேந்திரா விருது என்று ஒன்று அளிக்கப்பட்டு வருகிறது.

 

இன்னொரு புறம் பார்த்தால் அஜயன் பாலா பாலுமகேந்திரா லைப்ரரி உருவாக்கி தமிழ் திரையில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறார். திருநாவுக்கரசு அவர்கள் நிழல் என்ற அமைப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்.

 

மக்களுக்கும்   திரைப்படத்திற்கும் ஆன இடைவெளி அதிகமாக இருக்கிறது என்பதை உணர்ந்து நான் தாய் வார இதழில் பணியாற்றிய போது திரைக் கலைஞர்களை மக்கள் முன்பும் கல்லூரி மாணவ மாணவிகளின் முன்பும் உரையாட செய்த நிகழ்வு இன்னும் பசுமையாக இருக்கிறது. அதில் காயிதே மில்லத் கல்லூரியில் பாலுமகேந்திரா அவர்கள் மாணவர்களுடன் என்னுடைய அறிமுகத்தோடு உரையாடினார்.

 

பாலுமகேந்திரா அவர்களின் வாழ்க்கையும் அவருடைய படைப்பு சார்ந்த உலகத்தையும் பார்த்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. உள்ளும் புறமுமாக வெளிப்படைத் தன்மை வாய்ந்த மிகச் சிறந்த திரை ஆளுமை மிக்க கலைஞர் தான் பாலுமகேந்திரா. பாலுமகேந்திராவின் வழித்தோன்றல்கள் நிறைய வரவேண்டும் என்பது என்னுடைய பெருவிருப்பம் .

 

(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் வெளியாகும்)

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...