மதுரை திருமாறன்
இளங்கோ
ஏ.எல். நாராயணன்
கே.எஸ். கோபாலகிருஷ்ணன்
இப்படி வசனங்களால் திரைப்படத்தில் அறியப்பட்டவர்கள் வரிசையில் சொற்களில் சிலம்பாட்டம் நடத்தி பார்ப்பவர்களை வியக்க வைத்தவர், எண்பதுகளில் துவங்கி இன்றுவரை பேசுபொருளாய் மாறியிருப்பவர் சாட்சாத் விசு அவர்கள்தான்.
பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, கண்ணதாசன், பஞ்சு அருணாசலம் அதற்குப்பின் ஆர். செல்வராஜ், கலைமணி இவர்களெல்லாம் என்னாச்சு என்று கேட்டுவிடாதீர்கள். இவர்கள் வேறுவகை சமூக வசனகர்த்தாக்கள்.
நடுத்தர குடும்பங்களில் உள்ள உறவு - உணர்வுச் சிக்கல்களை அநாயசமாக தனது குரல்மொழி, வசன உச்சரிப்பு மூலம் தானே நடித்து, இயக்கி வெற்றி கண்டதில் இவருக்குத் தனித்த இடம் உண்டு.
சொல்லவே வேண்டாம். ஏ.வி.எம்.மில் ஒரு சின்ன வீடு கட்டி இதில் சிக்கனமாய் படமெடுத்துக் கொடுங்கள் என்று ஏ.வி.எம் சரவணன் அவர்கள் சொல்ல "சம்சாரம் அது மின்சாரம்" என்று ஒரு குட்டிப் படம் எடுத்து வெளியிட, அது என்னடாவென்றால் வெள்ளிவிழா காணும் வரை ஓடி வசூலை அள்ளிக் குவித்தது.
அப்போது திரையுலகத்தில் கம்பீரமாக எழுந்து நின்றார் விசு. பிரபலமான நடிகர்களிடம் சென்று காத்துக்கிடைக்காமல் தனக்கேற்ற வளரும் நடிகர்களை பயன்படுத்திக் கொண்டு மணல் கயிறு, குடும்பம் ஒரு கதம்பம், திருமதி ஒரு வெகுமதி, டெளரி கல்யாணம், சிகாமணி ரமாமணி, மீண்டும் சாவித்திரி, அவள் சுமங்கலிதான், பட்டுக்கோட்டை பெரியப்பா என்று தனது ஆளுமையை விரிவுபடுத்திக் காண்பித்தார்.
இடையில் கதைவசனம் என்றும் சாதித்தார். நெற்றிக்கண், தில்லுமுல்லு என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் களமாடினார். எல்லாம் குடும்ப ரீதியான சிக்கல்களும், சவால்களும்தான். அவர் தனது வாழ்வை வெளிப்படுத்திக் காட்டினார் என்று எண்ணுகிறேன்.
1945. ஜூலை 1-ஆம் தேதி பிறந்த விசு, 2020 மார்ச் 2020-இல் கிட்டத்தட்ட 75 வயது வரை உச்சாணிப் புகழில் தான் வாழ்ந்தார் என சொல்லலாம். 78 படங்களில் நடிப்பும் வசனம். இயக்கமாக மாறி மாறி பணியாற்றியது அவரை இளமையாகவே வைத்திருந்தது.
"சம்சாரம் அது மின்சாரம்" படப்பிடிப்பு நடக்கும்போது தாய் வார இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஓரமாக நிற்பேன். தோளில் சின்ன துண்டை போட்டுகொண்டு கங்காணியின் துடிப்பு போல் வசனங்களை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்தபடி இருப்பார். அதிகமாக நான் அப்போது பேசியது இல்லை.
பிறகு பல சமயங்களில் பாலசந்தர் உடன் பார்த்திருக்கிறேன். அவரிடம் அதிகம் நாடகப் பாணி இருக்கும். எல்லா கதாபாத்திரங்களிலும் விசு தெரிவார். அது பலவீனம் என்று கருதினாலும் அதுதான் விசுவின் பலம்.
"சின்னமாப்ளே" தயாரிப்பாளர் டி. சிவா. பிரபுவை வைத்து படமெடுக்க முடிவு செய்தபோது சந்தான பாரதியிடம், ஒரு கேரக்டர் பலமாக இருக்கும் அதற்கு விசுதான் சரியாக இருக்கும் என்று நான் வாதிடுவதற்கு அவர் எந்தப் படத்தில் நடித்தாலும் சவால்விட்டு சமாளிப்பார் என்ற தனித்துவம்தான்.
எனது நாற்பதாண்டு கால நண்பர் உதயராம். அவர் உரத்த சிந்தனை என்ற அமைப்பை தொடர்ந்து சிறப்பாக நடத்தி வருபவர்.
அவர் 'உதயம்' என்று கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். அதை தாய் வார இதழில் வெளியிட்டு பாராட்டினோம். தேடித் தேடி படைப்பாளர்களை கண்டுபிடித்து அறிமுகம் செய்து எழுதுவது என்பது தனி மகிழ்வு.
அந்த உதயம் ராம் தான் விசுவுக்கு முதுகெலும்பாக 'அரட்டை அரங்கம்' நிகழ்வுக்கு செயல்பட்டார். இதை விசு அவர்களே இரண்டு மாதத்துக்கு முன்பு சந்திக்கும்போது வெளிப்படுத்தினார்.
அது அல்ல செய்தி. உதயம் ராம் சென்ற ஆண்டு 'பாரதி உலா' என்று 40 இடங்களில் பள்ளி, கல்லூரிகளில் பாரதியின் நினைவாக மாணவர்களிடமும், இளைய சமுதாயத்தினரிடமும் அறிமுகம் செய்யும் பொருட்டு நிகழ்ச்சிகள் நடத்தினர்.

அப்படி அவர் நடத்திய பல நிகழ்வுகளில் நான் பங்கு பெற்றேன். குறிப்பாக திருச்சி ஜமால் முகமது கல்லூரி, கிறித்துவக் கல்லூரி இரண்டிலும் நான் பேசினேன். விசு அவர்களும் கலந்துகொண்டு பேசினார்கள்.
மேடையில் நான் அவரைப் பற்றி குறிப்பிட்டுப் பேசினாலும் அவர் என்னைப்பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. மனதில் சங்கடம் சத்தம் போட்டுக்கொண்டிருந்தது. அன்று மாலை அவரை அறையில் சந்தித்தபோது 'சொல்லாற்றல் உள்ளவன் நீ' என்று பாராட்டினார்.
அதோடு மட்டுமல்ல நட்பாய் வெளியே அழைத்துக் கொண்டுபோய் உணவளித்து சகஜமாகப் பேசினார். கறார் விசுவா இது? ஒரு துள்ளலுடன் கூடிய வாலிபன் அவரிடம் எப்போதும் குடிகொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.
ஒப்புக்குப் பேசாமல், முகஸ்துதி செய்யாமல் ஏசுநாதர் தனது தேவாலயங்களில் புறாக்களை விற்கிறவர் மேல் சாட்டையை சொடுக்கி இந்த இடத்தை விற்பனைக்கூடமாக மாற்றாதீர்கள் என்பது போன்ற விமர்சனப் பேச்சு விசுவின் தனித்துவ அடையாளம்.
அவரிடம் பாரதம், கலாச்சாரம், பண்பாடு இந்து நேசம் இருந்ததை உணர முடிந்தது. பாரதியை வெகுவாக நேசித்த விசு, பட்டிமன்ற நடுவராக வந்திருந்தால் நிச்சயம் சாலமன் பாப்பையாவை தோற்கடித்திருப்பார் என்றுதான் எண்ணுகிறேன்.
அதனால் பாப்பையாவை குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. ஆளுமையில் மதுரை தனிரகம். கிருஷ்ணா அவரோடு துணைக்கு நின்ற சமயம். சென்னை நிறைவு விழாவில் நெருங்கி மறுபடியும் உணவருந்தினோம். தயிர்சாதம் கொஞ்சம் எடுத்துக்கொண்டார்.
வாதம் - விவாதம் இரண்டும் அவரின் இதயத்துடிப்பு போலவே. நான் பார்த்தேன். அவரால் எதிர்வினை ஆற்றாமல் இருக்க இயலாது. முதன்மைத்துவம் என்பதும் அவரின் தனிப்பண்பு.
மயிலாப்பூரிலிருந்து துரைப்பாக்கம் செல்லும் வழியில் என்னையும் காரில் ஏற்றிக்கொண்டு சென்றார். பயணம். உடன் அவரின் மனைவி. நீண்ட வருட நண்பர் கார் ஓட்டுநர். "விசு. நீ பேசுறது சரியில்லடா..." என்று கண்டித்துப் பேசுகிறார். அதற்கு விளக்கம் சொல்கிறார் விசு.
ஆனால் நண்பர் 'அதெல்லாம் சும்மா பேச்சு, எல்லாத்துக்கும் ஆமாம் சாமி போட முடியாது" என்கிறார்.
அப்போது தெரிந்தது விசுவின் சூட்சுமம். நடைமுறை வாழ்க்கையில் எதிர் துருவங்களை உள்வாங்கிக்கொண்டு அதற்கும் சவால்விட்டு பதிலை சேகரித்துக் கொள்கிற பக்குவம் விசுவுக்கு இயல்பாகவே இருக்கிறது. மலையாள வாடையோடு பேசிய நண்பனை இறங்குவதற்குமுன் அறிமுகம் செய்தார். "இவன் பால்ய நண்பன்" என்று. விசு நட்புக்கு அடங்கிப் போவதை நேரில் கண்டது எனக்கு ஆச்சரியம்தான்.
“ வையத் தலைமை கொள்” என்ற பாரதியின் வாசகத்தை பலரும் நாட்டின் அரசு ஆள்வது என்கிற தொனியில் பேசினார். நான் மறுத்தேன்- “ முப்பதுகோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை” என்றும், தனியொரு மனிதனுக்கு உணவிலை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்” என்று சொன்ன பாரதி ஒருநாளும் ஆளுமை, அரசு என்று எழுதியிருக்க மாட்டார்.
வையம் என்றால் உலகம் தலைமை எனில் முதன்மை- கொள் எனில் எண்ணுக. ” அதாவது உலகம் உய்ய வேண்டிய பண்புகளை முதன்மையாக எண்ணி செயல் படுக” என்றுதான் சொல்லியிருப்பார் என்று பேசினேன்.
விசு அவர்கள் அந்த சொற்களின் மேல் தர்க்கம் செய்யாமல் வழிமொழிந்து பாராட்டினார். அந்த திறந்த மனம் அவரது பயணத்தின்போது கிடைத்தது.
சில ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் சங்க நிகழ்வில் பேசியதுண்டு. “ அறக்கட்டளையில் பணமிருக்கிறது. அதை சரியாகச் செலவு செய்ய வேண்டும். ஊதாரியாக செய்து விடக் கூடாது. இதைச் சொன்னால் பகை வருகிறது என்று பேசிக்கொண்டு வந்தார்.
எனக்கு அதில் உள்ள விஷயங்கள் தெரியாது. ஆனால் அவர் நேர்மையாக இருக்க வலியுறுத்துகிறார். அதற்காக எந்த எதிர்ப்பையும் சமாளிக்கத் தயாராகிறார் என்பதை உணர்ந்து கொண்டேன்.
உலகெங்கும் சாதி, மதம் குறித்துப் பேசுவது போல்தான் இவருக்கும் தனித்த அபிலாஷை இருந்திருக்கும். அது சரியா தவறா என்பது வேறு விஷயம். ஆனால் உலகில் இதுபோன்ற போக்கு அதிகரித்திருப்பதை மறுக்க முடியாது.
என்னவோ தெரியவில்லை திடீரென்று ஒரு நாள் “ எனக்கு நீ கமல்ஹாசன் கிட்ட இருந்தது பிடிக்கலை.. வேற ஒண்ணும் இல்லை” என்று சொன்னார். நான் எந்தப் பிசகும் நேர்ந்துவிடாமல் கடந்து விட்டேன். காரணம் அவர்களுக்குள் என்ன நிகழந்தது என்று தெரியாது அல்லவா?
என்னுடைய திருமண வாட்ஸ் அப்பில் செய்தி சொன்னேன். பழைய படமும் அனுப்பினே. பதிலுக்கு அவர் வாட்ஸ் அப்பில் பேசி முதல் அனுப்பினார். கரகரத்த குரலில்- கனத்துக் கொண்டு. “ வணக்கம் ராசி அழகப்பன் அவர்களே உங்க போட்டோவ உங்களுக்கே ஏன் திருப்பி அனுப்பினேன்னு பாத்திங்களா? அந்த பழைய போட்டோவ மட்டும் கட் பண்ணி அனுப்பினேன். எனக்குத் தெரிஞ்ச ‘ செல்வித்தை’ அவ்வளவுதான்!.
Any how – பழைய போட்டோவுல மாற்றங்கள் நிறைய இருந்தாலும் மாற்றங்கள் நிறைய இருந்தாலும் இன்னும் ராசி அழகப்பன் முகம் மட்டும் மாறலை. இன்று திருமண நாளைக் கொண்டாடுகிறீர்கள். திருமண நாள், காணும் பொங்கல் நாளும்கூட.. நல்லபடியாக எங்கியாவது போயிட்டு நல்லபடியா கழிச்சுட்டு நல்லபடியாய் இன்னிக்கு வாழ்க்கைய கழிங்க. இன்னிக்கு மட்டுமல்ல. நீங்களும் உங்க மனைவியும், மக்களும் சுகமாக, இதமாக, வளமாக , நலமாக , திடமாக, அன்பாக எல்லாம்வல்ல இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்.
என்னடா இது பெரியார்தாசன்னு சொல்லிகிட்டிருக்கேன். இறைவன்கிறானேன்னு நினைக்காதிங்க. நீங்க பெரியார்தாசனாக இருந்தாலும், நான் இறைதாசனாக இருந்தாலும் இருவரும் பெரியார், ராஜாஜியைப் போல் இருப்போம். நன்றி. வணக்கம்” என்று பேசி அனுப்பிய குரல் ஒலி இப்போதும் நான் போட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதை எவ்வளவும் நுணுக்கமாக விசுவால் பேச முடிகிறது என்பதை நாம் மதிக்கத்தான் வேண்டும். விசுவிடம் நேரம், கடமை , நறுக்கென்ற பேச்சு, நேர்மை , ஈடுபாடு இவற்றையெல்லாம் நாம் முன்பே பழகியிருந்தால் அதிகம் கிடைத்திருக்கும். என்பது பலரின் கருத்து- எனக்கு அதில் உடன்பாடு உண்டு.
மூன்று பெண் பிள்ளைகள், இனிய தோழியாக மனைவி என்கிற பெண்ணுலகத்தில் தாயுமானவனாக விசு விஸ்வரூபம் எடுத்தார் என்பதுதான் அவர் படைப்பின் அடிப்படை.
மதுராந்தகத்தைத் தாண்டி புறப்பட்ட திரை ஆளுமை- உலகின் எல்லா திசைகளிலும் பரந்துபட்டு அலைகளை உருவாக்கியதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
நடிப்பு, கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு பாடல் என அனைத்து துறையிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி தனக்கென்று ஒரு இடத்தை திரையில் தக்கவைத்துக் கொண்டார்.
” விசு அவர்களே மூன்றெழுத்து மந்திரம் வென்ற தேசத்தில் ஈரெழுத்து வெற்றியாளராக வந்தவர் நீங்கள். ஆமாம் திரையுலகின் உறவு சூழ் இல்லங்களுக்கு நீரே நெற்றிக்கண்!"
(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் வாரம் தோறும் வெளியாகும்)