???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று ஆலோசனை 0 விமானம், ரயில் நிலையங்களில் டாக்சி, ஆட்டோக்களுக்கு அனுமதி 0 5 வயது சிறுவன் தாயைக் காண தனி ஆளாக விமானப் பயணம்! 0 இந்தியா உள்பட கூடுதலாக 11 நாட்டு மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை 0 நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்கள் நடத்த ஏற்பாடு: வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா ஆலோசனை 0 கால்வாய் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 விமான போக்குவரத்து தொடங்கியது: முதல் நாளில் 630 விமானங்கள் ரத்து 0 தொழிலாளர் நல சட்டத்தில் சீர்திருத்தம் மட்டுமே செய்யப்படுகிறது: நிதி ஆயோக் துணைத்தலைவர் 0 தமிழகத்தில் 17,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு: மேலும் 805 பேர் பாதிப்பு 0 தமிழகம்-புதுவையில் ரம்ஜான் கொண்டாட்டம்: சமூக விலகலைக் கடைப்பிடித்து தொழுகை! 0 வைரஸ் எங்கள் ஆய்வுக்கூடத்தில் இருந்து கசிந்ததாக கூறுவது கட்டுக்கதை: உகான் வைராலஜி நிறுவனம் 0 தமிழகத்தில் இலவச மின்சார திட்டம் தொடரும் அமைச்சர் பி.தங்கமணி தகவல் 0 உலகில் அமைதி நிலவட்டும், அன்பு தழைக்கட்டும், மகிழ்ச்சி பெருகட்டும்: முதலமைச்சர் ரம்ஜான் வாழ்த்து! 0 ரத்து செய்யப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்கியது 0 ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மு.க.: சொலல்வல்லன் சோர்விலான்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   07 , 2018  06:45:51 IST


Andhimazhai Image

மு.க.: சொலல்வல்லன் சோர்விலான்! 

திருக்குவளை மு.கருணாநிதி, தி.மு.க. என்கிற கட்சியின் பெயரையே தனக்குள் அடக்கிக் கொண்டவர். கரகரப்பான இவரது குரல், கடந்த 65 ஆண்டுகளாகத் தமிழகத்தில் கம்பீரமாக முழங்கி வருகிறது. அரசியல், சினிமா, இலக்கியம் என்கிற மூன்று வெவ்வேறு துறைகளில் இவரைப்போல முத்திரை பதித்த தலைவர் வேறு யாரும் இல்லை.இந்த மூன்று துறைகளில் இவரது வருகை புயலைப்போன்று அமைந்தது.

மு.கருணாநிதி, தேர்தல் களம் இறங்கிய 1957 -ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஐம்பதுஆண்டுகளாக வெற்றி பெற்று , சட்டமன்ற வரலாற்றிலும் சாதனைப் படைத்திருக்கிறார். அதற்காக ’பொன்விழா’ எடுத் திருக்கிறது தமிழக சட்டமன்றம். அண்ணா இறந்தபின் திமுகவின் தலைவராக அவர் 1969-ல் பதவியேற்று ஐம்பதாவது ஆண்டு இப்போது தொடங்கி இருக்கிறது! இன்னொரு பொன்விழா காணும் வாய்ப்பு!

சற்றுப்பின்னோக்கிப்பார்த்தால், தி.மு.கழகம் ஆரம்பித்தபோது , அதன் ஐம்பெரும் தலைவர்களில் கலைஞர் கருணாநிதி ஒருவர் அல்ல என்பார்கள்.இருக்கலாம் . நாவலர் நெடுஞ்செழியன், அன்பழகன் போன்ற கட்சித்தலைவர்களை தன் ஊருக்குப் பேச அழைக்க இவர் நடையாக அலைந்தார். இருக்கலாம். ஆனால், அறிஞர் அண்ணாவிற்குப் பின், தமிழக முதலமைச்சராக இவர்தான் பதவியேற்றார். ஐம்பெரும் தலைவர் பட்டியலிலிருந்தவர்கள்...அன்பழகனும், மதியழகனும், நாவலரும் இவருடைய தலைமையின் கீழ் பணிபுரிய நேர்ந்தது!

வேகம், வெற்றி மீது குறி... இதுதான் கருணாநிதி.

தனது திராவிட நாடு இதழுக்கு ,’இளமைப்பலி’ என்கிற கட்டுரையை எழுதி அனுப்பியவரை , திருவாரூருக்கு வந்தபோது, அறிஞர் அண்ணா சந்திக்க விரும்பினார். கருணாநிதியை அழைத்து வந்து அவர் முன் நிறுத்தினார்கள். கருணாநிதிக்கு அப்போது வயது 15. திகைத்தார் அண்ணா. ‘படிப்பில் கவனம் செலுத்து’ என்றார் அண்ணா.

ஆனால் கருணாநிதி பள்ளி , கல்லூரி படிக்கட்டுகளில் அதிகம் ஏறவில்லை. எதிலும் அவர் காட்டிய வேகத்துக்கு, அன்றைய கல்வி அமைப்பு ஈடுகொடுக்காது ’ஆமைத்தன’ மெத்தனம் காட்டியது காரணமாக இருக்கலாம். உண்மையில் எது படித்தாலும் அவருக்கு மனப்பாடம் ஆகியது. தமிழில் அவருக்குள்ள ஆற்றலைக் கண்டு வியக்காதவர் யார்? உலக இலக்கியங்களை எல்லாம் இளமையில் தேடித்தேடி படித்தவர் இவர்.

இவரது சிந்தனையில் கூர்மைக்கும் தெளிவுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது

‘பராசக்தி’ ’மனோகரா’ ஆகிய திரைப்படங்களுக்கு இவர் எழுதிய வசனம். தமிழ்த் திரையுலகுக்கே புதுப்பாதையை வகுத்துக் கொடுத்தது இவரது பேனா. இப்படங்களின் வசனங்கள் இன்னமும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டுமல்ல இலக்கிய ரசிகர்களிடையேயும் கோலோச்சி வருகின்றன.

தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினராக இவர் நுழைந்தபோது பலம் வாய்ந்த காங்கிரஸ் கட்சி எதிரே!கருணாநிதி சட்டமன்ற விவாதங்களில் கலந்துகொண்டு, ‘மின்சார ஓட்டம்போல’ விறுவிறுப்பாக சூடாகப் பேசுவார். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எரிச்சலடைவார்கள். ஓர் எதிர்க்கட்சித்தலைவர் சட்டமன்றத்தில் எப்படிப் பணிபுரியவேண்டும் என்பதற்கு உதாரணகர்த்தா அவர்!

போலீஸ்மானியத்தின் போது, ஒரு முறை தடை செய்யப்பட்ட இவரது நாடகத்தில் இருந்து ஒரு தாலாட்டுப்பாடலை சட்டமன்றத்தில் தைரியமாகக் கூறினார். ஒரு போலீஸ்காரரின் மனைவி, தன் குழந்தையை ‘இங்கே வந்து ஏன் பிறந்தாய் ’ என்று தன் வறுமையை நொந்து பாடும் பாடல் அது. போலீஸூக்கு சம்பளம் குறைவாக இருந்தது அப்போது! சொல்லப்போனால் அறிஞர் அண்ணாவைத்தவிர, எல்லா முன்னணித் தலைவர்களும், இவரது தீவிரம் கண்டு பயந்தனர். ஈ.வெ.கி .சம்பத், அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர். கருத்துவேறுபாடு ஏற்பட்டு ஈ.வெ.கி.சம்பத் வெளியேறியபோது, கட்சி என்ன ஆகுமோ என்று அண்ணாவே சற்று பயந்தார்.

‘சொல்லின் செல்வர்’ என்று பாராட்டப்பட்ட நல்ல பேச்சாளர் சம்பத். இவர் பேச்சைக் கேட்க மக்கள் திரண்டனர்.

ஆனால் கருணாநிதி, இவர் மீது கடும் அம்புகள் தொடுத்தார். ‘குட்டி காங்கிரஸ்’ என்று சம்பத் கட்சியை ’முரசொலி’யில் கேலி செய்தார். கருணாநிதியின் பிரச்சாரத்தின் முன்பு சம்பத் செல்வாக்கு சரிந்தது. அவர் சொன்னதுபோலவே சம்பத் பிறகு காங்கிரஸில் சேர்ந்தார்.

தி.மு.கழகம் சென்னை ஜார்ஜ் கோட்டையைப் பிடிப்பதற்கு முன்பு,சென்னை மாநகராட்சியைத்தான் முதலில் கைப்பற்றியது. அதற்கு முக்கியக் காரணம் கருணாநிதியின் பிரசாரம். வெற்றி விழாவில் , கருணாநிதிக்கு ‘தங்க மோதிரம்’ அணிவித்தார் அண்ணா!

1967 தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி, அரிசிப் பஞ்சம் ஆகியவை காங்கிரஸ் தோல்விக்கு வழிவகுத்தன. என்றாலும் தி.மு.க. தேர்தல் பிரசாரத்தை முடுக்கிவிட்டவர் கருணாநிதி. காங்கிரஸ் ஆட்சியை கேலி செய்யும் இவரது ‘காகிதப் பூ’ என்கிற நாடகம் பற்றி அப்போது ‘டைம்’ பத்திரிகையே குறிப்பிட்டது.

இந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆர். சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. எம்.ஜி.ஆர். கழுத்தில் கட்டுடன் கை குவித்தவாறு, தி.மு.கவுக்கு ஓட்டு கேட்கும் போஸ்டர் ஏழை மக்களை ஈர்த்தது. இப்படி ஒரு போஸ்டர், தயார் செய்யும் ‘ஐடியா’ கொடுத்தவர் கருணாநிதி. அண்ணா மிகவும் தயங்கியதாகக் கூறுவார்கள்.

அண்ணா மறைவுக்குப்பிறகு , கருணாநிதி முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதே மாவட்டச்செயலாளர்கள் தொண்டர்களின் ஏகோபித்த கருத்து. அந்த அளவுக்கு அவர்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார் அவர். நாவலர் நெடுஞ்செழியன் சில மாதங்கள் அரசியல் துறவறம் பூண்டார். பிறகு இவரின் கீழ் அமைச்சரா னார்.

முதலமைச்சராக கருணாநிதியின் அரசியல்  சாமர்த்தியங்களை எழுத தனி பக்கங்கள் வேண்டும். அவை துப்பறியும் நாவலைவிட சுவாரசியமானவை! காங்கிரஸை தமிழகத்தில் செல்வாக்கு இழக்கச் செய்தார். 1971 -ல் இந்திரா காந்தியுடன் இவர் தேர்தல் கூட்டணி கண்ட போது, சட்டமன்றத்துக்குப் போட்டியிட்ட காங்கிரஸூக்கு ஒரு ‘சீட் ’ கூட  கொடுக்கப்படவில்லை! அது முதல் தமிழகத்தில் காங்கிரஸ் பலம் இழந்தது. டெல்லி காங்கிரஸ் மேலிடம், தமிழக காங்கிரஸ் தலைவர்களை மதிக்காத நிலை அன்று முதல் ஆரம்பித்தது.

கருணாநிதி இரு பெரும் எதிர்ப்பு அலைகளைச் சந்திக்க நேர்ந்தது. கட்சியிலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர், அண்ணா தி.மு.க. என்கிற புதுக்கட்சி தொடங்கினார். கருணாநிதியின் அரசியல் கணக்குகள் இவர் விஷயத்தில் தவறாகியது. எம்.ஜி.ஆர். மக்கள் ஆதரவை பெருமளவில் பெற்றார். அடுத்து அவரை பல வகைகளில் தொல்லைக்கு உட்படுத்தியது எமர்ஜென்சி!

மாநிலங்களில் பலம் வாய்ந்த தலைவர்கள் இருக்கக்கூடாது என்பது இந்திராவின் கருத்து. காமராஜரை ஒதுக்கிய இந்திரா காந்தி , கலைஞரையும் வீழ்த்த முயன்றார். கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின், முரசொலி மாறன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்களும் சிறையில்!

சென்னை சிறையில் தி.மு.க. தொண்டர்கள் ஒரு காரணமுமின்றி அடித்து நொறுக்கப்பட்டனர். ஸ்டாலின் , மாறன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். முன்னாள் மேயர் சிட்டிபாபு இந்தத் தாக்குதலில் இறந்தார்.

கருணாநிதிக்கு மத்திய அரசு பல கெடுபிடிகளை விதித்தது. அவர் மேடை ஏறமுடியாத நிலை. ஏன்? கட்சியை கலைக்குமாறு வற்புறுத்தப்பட்டார். சிலர் தி.மு.க.என்கிற கட்சிப்பெயரை மாற்றுமாறு அவருக்கு ஆலோசனை கூறினர்.

ஆனால் கருணாநிதி பாறைபோல உறுதியாக இருந்தார். எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. எமர்ஜென்சி ஒழிந்தது. எமர்ஜென்சியின்போது , அவரை நட்டாற்றில் விட்டுவிட்டு ஓடிப்போன கட்சியின் மூத்த தலைவர்கள், இன்று காணாமல் போய்விட்டார்கள்.

முன்பு கருணாநிதியை எதிரியாக நினைத்த இந்திராகாந்தி , 1980 -ல் மீண்டும் அவருடன் தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்டார்.‘கருணாநிதி நம்பிக்கைக்கு உரியவர்‘ என்று மனம் திறந்து பாராட்டினார். ‘நேருவின் மகளே வருக ! நிலையான ஆட்சி தருக!‘ என்கிற கருணாநிதியின் முழக்கம், தமிழகத்தில் அன்று ஒலித்தது.

கருணாநிதியின் அரசியல் சாதுர்யத்திற்கு இந்த உறவு ஓர் எடுத்துக் காட்டு. எமர்ஜென்சியின் கொடுமைகளில் இருந்தும், ராஜீவ்காந்தி கொலைப்பழி சுமத்தப்பட்டபோதும் கட்சியை மீட்டு மக்களிடையே மீண்டும் செல்வாக்கை நிலை நாட்டியது இவரது அரசியல் சாதுர்ய வெற்றி.

இன்று காங்கிரஸ் கட்சியின் மேலிடத்துடன் அவரது கட்சி வைத்திருக்கும் நட்பு , ‘காகிதச்சங்கிலி’யால் பிணைக்கப்படவில்லை. பலமான இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறது.  இந்த நட்பு, கருணாநிதியின் சாணக்கியதனத்துக்கு ஒரு பெரும் சாட்சி.

கருணாநிதியின் அரசியலில் ஓர் அரிய விஷயம் என்னவென்றால் ஒரு கட்டத்தில் தமிழகத்தின் எல்லாத்தலைவர்களும் அவரை ஆதரித்திருக்கிறார்கள் என்பதுதான். பெரியார் ஈ.வே.ரா, அவரை ஆதரித்ததில் ஒன்றும் அதிசயமில்லை. பெரியாரிடம் தான் தன் அரசியல் வாழ்வை அவர் தொடங்கினார். மதுவிலக்கை அவை கைவிடும்வரையில் ராஜாஜியின் ஆதரவு அவருக்கு இருந்தது. கலைஞர் ஒருமுறை உடல் நலம் குன்றியபோது, ராஜாஜி அவருக்காகப் பிரார்த்தனை செய்துகொண்டு சீக்கிய மதப்படி கையில் அணியும் ஓர் அணிகலனை அனுப்பிவைத்தார். எமர்ஜென்சியை எதிர்த்த சமயம் காமராஜரின் முழு ஆதரவு இவருக்குக் கிடைத்தது. பெரியார், ராஜாஜி, காமராஜர் போன்ற தலைவர்கள் இயற்கை எய்தியபோது, முதலமைச்சர் என்கிற முறையில் முழு அரசு மரியாதை கிடைக்கச் செய்தவர் இவர்.

கருணாநிதிக்கு என்று சில தனிக்குணங்கள் உண்டு. காமராஜருக்குப்பிறகு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அறிந்த ஒரே தலைவர் இவர்தான். எந்த ஊருக்குச் சென்றாலும் கட்சித்தொண்டர்களின் பெயர் சொல்லி நலம் விசாரிப்பார். அதுமட்டுமல்ல , மாற்றுக்கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களையும் அறிந்து வைத்திருந்து நலம் விசாரிப்பார். இலக்கியவாதிகள் எந்தக்கட்சியினராக இருந்தாலும், அவர்களின் எழுத்துக்களை ரசிப்பவர். அத்துடன் நேரில் அவர்களைப் பாராட்டவும் செய்வார்.

90 வயதைக் கடந்த பின்னும் கடந்த ஒரு ஆண்டு முன்பு வரை கருணாநிதி, சுறுசுறுப்பாகப் பணிபுரிந்தார். அவரது ராஜதந்திரங்கள் எதிர்க்கட்சியினரை திணறடித்தன.

இத்தனை விசேஷகுணங்கள்தான் தமிழக எல்லையைத் தாண்டி அவரை டெல்லி அரசியலிலும் கோலோச்சச் செய்தது. இதைச் சொல்லும்போதுதான், இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. உ.பி.யில் பிறந்திருந்தால் கருணாநிதி பிரதமராகி இருப்பார் என்பதே அது!

சொலல்வல்லன் சோர்விலான் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது - என்ற குறள் கருணாநிதிக்கு நூற்றுக்கு நூறு விழுக்காடு பொருந்தும்!

- ராவ், மூத்த பத்திரிகையாளர், ( அந்திமழை ஆகஸ்ட் 2018 இதழில் வெளியான கட்டுரை)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...