அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பெரியார் மீது விமர்சனம் இல்லை! - இயக்குநர் ரஞ்சித் நேர்காணல்- பகுதி 2

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   23 , 2016  18:41:44 IST

சில எதிர்மறை விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

நாம் சிலர் மீது நம்பிக்கை வைப்போம். அவர்களே இப்படியெல்லாம் பேசும்போது என்னதான் செய்வது? அவர்கள் ஏன் இப்படி யோசிக்கிறார்கள் என்று நம்மால் யூகிக்க முடிகிறது.  இதற்கு நான் பதில் சொல்லவேண்டியதில்லை. என் மீது அன்பு கொண்ட பலரும் பதில் சொல்கிறார்கள். நான் சரியாகத்தான் வேலை செய்கிறேன் என்று திருப்தியை அளிக்கிறது இது. யாரிடம் விவாதிக்க வேண்டுமென்று நினைக்கிறேனோ அந்த விவாதம் நடந்துகொண்டிருக்கிறது என்று எண்ணுகிறேன். இந்த விவாதங்களினால்தான் இந்தக் கோபம் வருகிறது. கட்டுப்படுத்த முடியாத, மறுக்கவே முடியாத ஒரு படைப்பைத் தருகையில்தான் இப்படியான கோபங்கள் வெளிப்படும்.

 

 

 

அட்டகத்தியில் மிக நுட்பமாக விஷயங்களை வைத்திருந்தீர்கள். மெட்ராஸும் ஒரு படி அதிகம் தாண்டியது. கபாலி மிக வெளிப்படையாக இருக்கிறது. இதைத் திட்டமிட்டு படிப்படியாக இப்படித்தான் வடிவமைத்தீர்களா?

 

 

மெட்ராஸில் மாரியை எதிர்த்துப் பேசித்தான் ஆகவேண்டும் என்கிறபோது அந்த வசனத்தை வைக்கிறோம். இறுதியில் வெறும் கல்வி மட்டும் போதாது, சமூகக் கல்வியும் வேண்டும் என்பதைப் பேசுவதே கதையின் நோக்கம் என்பதால் அதைப் பேசுகிறோம்.  இடையில் ‘தமிழ் தமிழ்’ என்று பேசுபவர்கள் குறித்து ஒரு வசனம் வைக்கிறோம். அதே போலத்தான் கபாலியில் அதன் கதையே தமிழர்களுக்கு எதிரான ஒரு போக்கைச் சொல்வதாக இருக்கிறது. இதைப் பேசும்போது, தமிழர்களின் எதிரிகளால் உருவாகும் சிக்கல்கள், தமிழர்களுக்குள் உள்ள 

சிக்கல்கள் என எல்லாவற்றையும் பேசவேண்டிய கட்டாயம் வருகிறது. கபாலியின் கதை கோரியவற்றை வைக்கிறேன். கபாலிக்கு முன் மூன்றாவதாக செய்வதாக இருந்த கதை டூச்ணஞீ திச்டூதஞு ண்தூண்tஞுட் பற்றியது. அதை எடுத்திருந்தால் என்னவெல்லாம் சொல்வார்களோ தெரியவில்லை. எல்லோரையும் அரவணைக்கத்தான் விரும்புகிறோம். எல்லோருடனும் உரையாடவே விரும்புகிறோம்.  யாரையும் விரோதியாக்க விரும்பவில்லை. தொடர்ந்து விரோதியாகப் பார்த்துதான் முட்டிமோதி பிரிந்து கிடக்கிறோம். எல்லோரையும் ஒன்றிணைப்பதே இப்போதைய தேவை.  தமிழ் என்கிற ஒற்றை வார்த்தையில் எல்லோரையும் ஒன்றிணைக்க முடியுமா என்றுதான் பார்க்கவேண்டும்.  இதை கலை இலக்கியங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். கபாலி எவ்வளவு முக்கியமோ அதுபோலவேதான் அட்டகத்தியும். அது வெளியான காலகட்டத்தில்,  அப்போதிருந்த என் சூழலில், அதனளவில் அது பேசிய அரசியல் முக்கியம்தான். அதுபோலவே மெட்ராஸும். இப்படங்களை ஷூட் செய்வது, ரிலீஸ் செய்வது எல்லாமே பெரிய விஷயங்கள்தான்.  அதேதான் கபாலிக்கும். எல்லாம் ஒன்றுதான். அட்டகத்தியில் பேசும் பொருள் வேறு. அது காதல். மெட்ராஸ் அப்பட்டமான அரசியல் படம். கபாலியில் தமிழர் நலன் குறித்த ஒரு படம் எனும்போது தமிழர்களுக்குள் இருக்கும் சாதி என்கிற பிரிவினையோடு சேர்த்து ஒட்டுமொத்த தமிழர்களின் நலன் குறித்தும் பேசுகிறோம். படிப்படியாகப் போகவேண்டும் என்று திட்டமிட்டு இதைச் செய்யவில்லை. அப்படியான கதைகளாக அமைந்துவிட்டன.

 

 

 

ஒரு காட்சியில் கோயிலை இடிக்கவேண்டும் எனும்போது கபாலி அதைத் தடுப்பார். ஒரு மக்கள் தலைவராக அவரைக் காண்பிக்க கோயிலை இடிப்பதைத் தடுப்பது என்பதைக் காட்டிலும் வேறு ஏதேனும் பிரச்சனையை கையாள்வதாகக் காட்டியிருக்கலாமே?

 

 

இன்றைக்கு மலேசியாவில் மிகப் பெரிய பிரச்சனை இதுதான். இங்கிருந்து சென்ற தமிழர்கள் இந்தியர்கள். இந்தியர்கள் இந்துக்களாகத்தான் அங்கு பார்க்கப்படுகிறார்கள். அங்கு பல கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. கோயிலை இடிப்பது அங்கு பெரிய பிரச்சனையை உருவாக்கும் ஒரு செயல். நம்மூரில் அதை ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா என்று முடிச்சு போட முடியும். ஆனால் மலேசியாவில் அப்படி அல்ல. அது தமிழர்களின் அடையாளம். அந்த அடையாளத்தை சிதைப்பதை ஒரு ஆதிக்கமாகத்தான் செய்கிறார்கள். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் கோயிலை இடிப்பதும் அதற்காக அங்கே பிரச்சனைகள் நிகழ்வதும் அங்குள்ள யதார்த்தமாக இருக்கையில் இப்படியான காட்சியை வைக்கவேண்டி இருக்கிறது. மலேசியாவில் கபாலி குறித்துப் பேசுபவர்கள் இந்தக் குறிப்பிட்ட காட்சியைக் குறிப்பாகச் சொல்லக் கேட்கிறேன்.

 

 

 

பெரியாரை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள் என்று சிலர் வைக்கும் குற்றச்சாட்டை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

 

அம்பேத்கர் குறித்த உரையாடல் எதுவும் இங்கு நிகழவில்லை. இரட்டை மலை சீனிவாசனையும் எம்.சி.ராஜாவையும் இங்கு யாருக்கும் தெரியாது. ஆனால் பெரியார் தமிழ்ச் சமூகத்தில் பெரிதும் அறிமுகமானவர். யாருக்கும் தெரியாதவர்களை ஒரு போட்டோவாகவாவது அறிமுகப்படுத்தவேண்டுமென எண்ணுகிறேன். அதன் விளைவே இவர்களின் படங்களை வைத்தது. என் தாத்தா ஒரு பெரியாரிஸ்ட்தான். பெரியாரை காண்பிக்கக் கூடாது என்று ஒருபோதும் எண்ணியதில்லை. என் அடுத்த ஸ்கிரிப்டான ‘சார்பட்டா பரம்பரை’யில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை பெரியாரிஸ்டாகத்தான் எழுதியிருக்கிறேன். படம் வரும்போது தெரியும். எனக்கு பெரியாரைப் பிடிக்கும் என்று எல்லா இடங்களிலும் தொடர்ந்து சொல்கிறேன். எனக்கு திராவிட இயக்கங்கள் மீது விமர்சனம் உண்டு.  ஆனால் பெரியார் மீது ஒரு விமர்சனமும் கிடையாது. சரியான வாய்ப்பு வரும்போது இதைப் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.

 

 

 

ஒரு திரைப்படம் குறித்து ஊடகங்களில் பேசும் வாய்ப்பு பொதுவாக இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் அல்லது பிற தொழில்நுட்பக் கலைஞர்களுக்குத்தான் வழங்கப்படும். ஆனால் உங்கள் உதவி இயக்குநர்கள் ஒரு ஊடகத்திற்கு கபாலி குறித்து பேட்டி வழங்க அனுமதித்தீர்கள். இத்தன்மையை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்?

 

 

பொதுவாக சக மனிதர்களை மதிக்கத் தெரிந்தாலே போதும். இடையில் கொஞ்ச நாள் அலுவலகத்தில் என் மேஜையில் பெல் வைத்திருந்தேன். நான் பெல் அடித்தால் ஒரு அசிஸ்டண்ட் வந்து என்ன என்று கேட்கவேண்டும் என்று எண்ணுவதே சரி என்று தோன்றவில்லை. ஆகவே பெல்லை எடுத்துவிட்டேன். நான் சொல்வதற்கு முன்னால், அவர்களே வேலையைப் புரிந்து செய்துவிடுவார்கள். என்னை பிறர் திட்டும்படி நான் வைத்துக்கொள்ள மாட்டேன். அப்படித்தான் என் அலுவலகத்திலும் இருக்கிறார்கள். நான் படித்த இலக்கியங்கள், வாசிப்பு இதெல்லாம் எனக்கு ஒருவேளை இப்படியான படிநிலைகளில் எனக்கு நம்பிக்கை இல்லாமல் செய்திருக்கலாம்.  என் உதவி இயக்குநர்களுக்கு அடிக்கடிச் சொல்வேன் ‘பெண்கள் குறித்துப் பேசுகையில் கவனமாக இருக்கவேண்டும், திருநங்கைகளைப் பற்றி இழிவாகப் பேசக்கூடாது. நம்மிடமிருந்து செல்லும் எதுவொன்றும் யாரையும் இழிவுபடுத்தக்கூடாது’ என்பேன். நினைப்பதைச் சொல்ல இங்கு எல்லோருக்கும் உரிமை உண்டு.

 

 

நீங்கள் உதவி இயக்குநராக இருந்த இடங்களில் இச்சுதந்திரம் உங்களுக்கு இருந்ததா?

 

 ‘தகப்பன்சாமி’யில் பணிபுரிகையில் டப்பிங், எடிட்டிங் நடக்கும்போது உள்ளே நுழைந்தேன் என்பதற்காக என்னை வெளியேறச் சொன்னார்கள். ‘நான் வேலை பார்க்கும் படத்தின் வேலை நடக்குமிடத்தில் நான் இருக்க அனுமதி இல்லையா’ என்று மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். அங்கு சீனியர், ஜூனியர் பிரச்னை மிக அதிகம். ஆனால் வெங்கட் பிரபு சாரிடம் அது எதுவும் கிடையாது. அவர் எங்களை மிகச் சுதந்திரமாக விடுவார். நட்புடன் நடத்துவார். சென்னை 28ல் டப்பிங், எடிட்டிங் என்று எல்லாவற்றிலும் வேலை பார்ப்பேன். அவ்வளவு சுதந்திரமான இடத்திலேயே எனக்கு சில சமயம் கோபம் வரும்.

 

உங்கள் படங்களில் பெண்களின் கதாபாத்திரங்கள் எல்லாமே ஆளுமை நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். ரஜினியின் முந்தையப் படங்களில் பெண்களின்சித்தரிப்புக்கும் உங்களின் சித்தரிப்புக்கும் சற்றும் தொடர்பில்லை. 

 

 

நான் பார்த்த பெண்கள் அனைவரும் ஆளுமை மிகுந்தவர்கள்தான். உரிமைக்காக சண்டை போடுபவர்கள்தான். என் குடும்பத்தில் சுற்றத்தில் நண்பர்களிடத்தில் என எல்லா பெண்களுமே ஆளுமை கொண்டவர்கள்தான். அவர்களைத்தான் என் படங்களில் நான் பிரதிபலிக்கிறேன். பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலில் ஓரிடத்தில் கர்ப்பப்பையை வெட்டியெறியச் சொல்கிறார் பெரியார்.  ‘தாலி கட்டிக்காதே’ என்கிறார். அதையெல்லாம் படிக்கும்போது எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பெண்களை வேறு மாதிரி பார்க்க வைத்தது. எந்த இடத்திலும் பெண்களைத் தவறாகக் காண்பிக்கக் கூடாது என்கிற பொறுப்பு எனக்கு இருக்கிறது. ஓர் ஆணாக எனக்கு ஆணின் உளவியல் தெரியும். உங்களைப் பற்றி நான் எழுதுகிறேன் என்றால் உங்களைப் புரிந்துகொள்ள நிறைய படிக்கவேண்டும். பழகவேண்டும். என் மனநிலையிலிருந்து நான் எழுதக்கூடாது. உங்கள் மனநிலையிலிருந்துதான் எழுதவேண்டும். அதைத்தான் நான் செய்கிறேன்.

 

சமூக வலைத்தளங்களில் கபாலியை ஒட்டி உங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் வரும் விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

எதிர்ப்பை விடுங்கள். ஆதரவை முதலில் நான் கண்டிக்கிறேன். என் சாதியொழிப்பு நிலைக்காக என்னை ஆதரிப்பவர்களைச் சொல்லவில்லை. சுயபெருமையையும் சுயதம்பட்டத்தையும் நிறுத்தவேண்டும் முதலில். ஏதோ ஓரிடத்தில் எனக்கு பேனர், போஸ்டர்  வைத்து  பாலபிஷேகம் செய்ததாகக் கேள்விப்பட்டு அதிர்ச்சியாகிவிட்டது.  என்னை ஒரு சாதிப் பெயர் போட்டு எழுதுவதை நான் விரும்புவதில்லை. என்னை ஒரு சாதிக்குள் அடைத்துப் பார்க்கவேண்டாம். நான் சாதியை ஒழிக்கவெண்டுமென்று வந்திருக்கிறேன். நான் செய்யும் வேலைக்கு என்னை சாதியற்றவன் என்று சொல்வதையே நான் விரும்புகிறேன். ஒரு குறிப்பிட்ட சாதியின் ஆளாக நிறுத்துவதை நான் ஆதரிக்கமாட்டேன். சுயசாதி பெருமிதம் எதற்கு இங்கே? அந்தப் பெருமிதம்தான் நாளடைவில் உனக்குக் கீழே இன்னொரு சாதியை ஒடுக்க நினைப்பதில் போய் முடிகிறது. ஆகவே  சாதிப் பெருமை வேண்டாம். அதிகாரம் உன்னிடம் இருக்கும்போது அது இன்னொருவனுக்குப் போகிறதென்றால் அதில் எந்தத் தவறும் இல்லை. அதிகாரம் கிடைக்கும்போது பிரபலப்படுத்தி, ஆண்டப் பரம்பரையாக ரசித்து ருசித்து உன்னை மாற்றிக்கொள்வாய் என்றால், அந்த அதிகாரம் உனக்கும் கீழே செல்வதற்கான எல்லா உரிமையும் உள்ளது. அதைப் புரிந்துகொள்ளவேண்டும். இதுநாள் வரை உன்னை அடக்கியவனுக்கும் உனக்கும் வித்தியாசம் வேண்டாமா? எனக்கு ஆளும் வாய்ப்பு கிடைத்தால் ‘நான் ஆண்ட பரம்பரை’ என்று எனக்குக் கீழ் உள்ளவர்களிடம் மார்தட்ட மாட்டேன். ‘நாமெல்லோரும் சமம்’ என்பேன். சாதிப் பெருமையும் சாதி அடையாளமும் தேவையில்லை. பெரியார் சாதி ஒழிப்புக்காகப் போராடினார். அவர் சாதியை யாரும் அடையாளப்படுத்தவில்லை. ஆனால் அம்பேத்கரை அடையாளப்படுத்தினார்கள். ஏன் அம்பேத்கரையும் பெரியார் மாதியான ஒரு பொதுவான தலைவராக ஏற்றுக்கொள்ளக்கூடாது? நம்மை எதிரியாக நினைப்பவர்களிடம் நாம் உரையாடலாம். ஆனால் அதற்கு நாம் முதலில் குற்றமற்றவர்களாக இருக்கவேண்டும். அது முக்கியம். நான் நினைப்பதற்கு மாறாக, சாதியொழிப்புச் சிந்தனைக்கு எதிராக தன் சாதியைச் சேர்ந்தவன் என்று யாரும் என்னைக் கொண்டாடுவது எனக்கு சுமையாகவே முடியும். அது சமத்துவத்திற்கு எதிரானது.

(முற்றும்)

 

சந்திப்பு:  கவின்மலர்.  அந்திமழை ஆகஸ்ட் 2016 இதழில் வெளியான நேர்காணல்



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...