அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக நாடுகளில் ஆராய்ச்சிப் பணியும் வாய்ப்புகளும்- -முனைவர் விஜய் அசோகன், ஆராய்ச்சியாளர், அயர்லாந்து 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இராஜபக்சேக்கள் தப்பிக்க ரணில் பிரதமர் ... இலங்கை மக்களுக்கு?

Posted : வியாழக்கிழமை,   மே   12 , 2022  21:37:01 IST


Andhimazhai Image
ஒட்டுமொத்த இலங்கையே கிளர்ந்து எழுந்ததைப் போல பரபரப்பும் பரவசமும் ஊடகங்களில் நிரம்பிவழிய, அந்நாட்டின் நவீன மன்னர்களாக ஆண்டுவரும் இராஜபக்சேக்கள் நிலைமையை மிக லாவகமாகக் கையாண்டுவருகின்றனர். இதன் ஓர் அங்கமாக, ஆறாவது முறையாக பிரதமராகப் பதவியேற்றுள்ளார், இரணில் விக்கிரமசிங்கே.
 
கடந்த திங்களன்று வேறு வழியே இல்லை எனும் நிலையில், பிரதமர் பதவியிலிருந்து விலகினார், மகிந்த இராஜபக்சே. சென்ற மாதம் முதல் வாரத்தில் நடந்ததைப்போல இந்த முறை, பதவிவிலகலானது தொடர் நாடகமாக இடம்பெற முடியாதபடி சூழல் அவர்களுக்கு படுபாதகமாக மாறியது. 
 
சொந்தத் தம்பியாக இருந்தாலும், எவ்வளவு காலம்தான் தாங்கிப் பிடிக்கமுடியும்... மகிந்த பதவிவிலகியதும் அந்த இடத்துக்கு வேறு ஒருவரை நியமித்தாக வேண்டிய நெருக்கடி கோத்தபாயவை அழுத்தியது. 
 
அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகள், அதனால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, உணவு- மருந்துத் தட்டுப்பாடு, நகர்ப்புற மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம், வாழ்வாதார பாதிப்பு ஆகியன ஒரு பக்கம் தொடர்ந்த நிலையில், இந்த வாரக் கடைசிவரைதான் அந்ந்நியச் செலாவணிக் கையிருப்பு தாங்கும் என்கிற சூழல்...
 
இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மே 9ஆம் தேதி முதல் காத்திருக்கிறது, உலக நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு. முன்னர் திட்டமிட்டபடி பேச்சுவார்த்தை தொடங்கி நிலவரம்சார் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. வரும் 23ஆம் தேதிவரை நடைபெறவுள்ள இந்தப் பேச்சில், புதிய அரசாங்கம் அமைந்தவுடன் கொள்கைரீதியிலான முடிவு எடுக்கப்படும் என்றும் உலக நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டாம் கட்டப் பேச்சுக்கு முன்னதாக, கடந்த மாதம் வாசிங்டனில் நாணய நிதியத்திடம் இலங்கை அரசின் குழு 600 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நிதியுதவியைக் கோரியிருந்தது, வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். 
 
உள்நாட்டு அரசியல் விவகாரங்களைத் தாண்டி, அரசாங்கம் என்கிற ஒன்றை இயக்குவதற்கான பன்னாட்டு உரையாடல், உறவாடலிலும் கோத்தபாய முடிவெடுத்தாக வேண்டும். 
 
இந்த வாரத்துக்குள் அதாவது மூன்று நாள்களுக்குள் புதிய அரசாங்கத்தை அமைப்பதாக அவர் நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையில் தெரிவித்தார். 
 
அதற்கு முன்னதாக, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை பிரதமர் பதவியை ஏற்குமாறு அதிபர் கோத்தபாய கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு ஒப்புதல் அளிக்கும்படியாக சஜித் தரப்பிலிருந்து பதில் அளிக்கப்படவில்லை. ஒரு மாத காலமாக அவர் கூறிவருகின்றபடி, அதிபர் கோத்தபாயவும் பதவிவிலகினால்தான், தான் பிரதமர் பதவியை ஏற்கமுடியும் என  நேற்றைக்கு முந்தையநாளும் சொன்னார்.
 
போராடும் தரப்பினருடைய கோரிக்கையும் அதிபர் பதவிவிலக வேண்டும் என்பதாகவே இருக்க, சஜித்தின் இந்த நிலையை அவர்களும் ஆதரித்தனர். ஆனால், போராட்டக்களத்துக்கு சஜித் சென்றபோது அவர் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. போராட்டத்தில் முக்கிய சக்தியாக உள்ள இடதுசாரித் தரப்பு ஒன்று தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 
 
1980-களில் இலங்கை அரசுக்கு எதிரான இடதுசாரி இயக்கமாக எழுந்த மக்கள் விடுதலை முன்னனி- ஜேவிபியின் அனுரகுமார திசநாயக்க தலைமையிலான குழுவினர், தாங்கள் புதிய அரசை அமைக்கத் தயார் என்று தனியாக அறிவிப்பையும் நிபந்தனைகளையும் வெளியிட்டனர். 
 
இதற்கிடையே, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரான சஜித் பிரேமதாசாவும் இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறீசேனாவும் சந்தித்துப் பேசினர். 
 
அதைவிட முக்கியமாக, சீனத் தூதர் கி சென் ஹாங் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று சஜித்தைச் சந்தித்து பேசினார். தன் தலைமையில் அரசாங்கம் அமைந்தால் அது எப்படியான நிலைப்பாடுகளை எடுக்கும் என்று சஜித் அவரிடம் விவரித்தார். சில உதவிக் கோரிக்கைகளையும் அவர் சீனத் தரப்புக்கு முன்வைத்தார் என இலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
 
ஒருபக்கம் அதிபர் பதவியிலிருந்து கோத்தபாய விலகினால்தான் ஆச்சு என இருந்த சஜித், தீவிரமான ஆலோசனைகளில் இறங்கியதை இராஜபக்சேக்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை. 
 
இந்த நிலையில்தான், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான ரணில் விக்கிரமசிங்கேவை, நேற்று கோத்தபாய இராஜபக்சே அழைத்துப் பேசினார். இவ்வளவுக்கும் இலங்கையில் அரசைச் செல்வாக்கு செலுத்தக்கூடிய நான்கு புத்த பீடங்களும் ரணிலைப் பிரதமராக நியமிக்கலாம் எனப் பேச்சு எழுந்தபோதே, அதைக் கடுமையாக எதிர்த்தனர். 
 
போராடும் தரப்புகள், அவர்களுக்கு ஆதரவான அரசியல் கட்சிகள், அமைப்புகளோ அப்படியொன்று நடந்துவிடுமா என்ன என்கிற கோதாவில் இருந்தனர். 
 
எந்த ரணிலை வீழ்த்தி இராஜபக்சேக்களின் இராச்சியம் தொடங்கியதோ, அதே ரணிலிடம் கூட்டுவைத்துக்கொண்டு அந்த இராச்சியத்தைத் தக்கவைக்கவும் அவர்கள் தயங்கவில்லை. 
 
சஜித்தின் தொடர்ச்சியான அலட்சியமான பதிலால், வேறு ஒருவரைத் தேர்வுசெய்ய வேண்டிய நிலை தனக்கு இருப்பதாக கோத்தபாயவும் நியாயப்படுத்திக்கொள்ள முடியும். அதற்காக, ரணிலைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அதிபரான கோத்தபாய நியாயப்படுத்த முடியாது. ஆனாலும் அம்பாந்தோட்டை சகோதரர்கள் வழக்கம்போல தங்களின் வழியில் நினைத்ததைச் செய்துகாட்டினார்கள். 
 
ஒரு நாள் திருப்பமாக, ஆறாவது முறையாக இலங்கை பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார், ரணில் விக்கிரமசிங்கே. 
 
இதன்மூலம், தன்னுடைய அதிபர் பதவிக்கு வந்த ஆபத்திலிருந்து நாடாளுமன்ற அரசியல் மூலமாக தற்காலிகமாக தப்பிவிட்டார், கோத்தபாய.  
 
ஆனால், அண்ணன் மகிந்த இராஜபக்சே, தம்பி கோத்தபாய இராஜபக்சே, சிறிது காலம் விலக்கிவைக்கப்பட்டு கடந்த மாதம் உலக நாணய நிதியத்துடன் நிதியமைச்சராகப் பேச்சு நடத்திய பசில் இராஜபக்சே, அவரையடுத்து பட்டத்து இளவரசராக முடிசூட உருவாக்கப்பட்ட மகிந்தவின் இளைய மகன் நாமல் இராஜபக்சே என இருந்துவந்த பேராட்சிப் பெருங்கனவு தற்காலிகமாக தகர்க்கப்பட்டிருக்கிறது, மக்களின் போராட்டத்தால்!
 
அதிட்டம் போன்றவற்றை நம்புவோரின் பாணியில் சொல்வதானால், ரணில் விக்கிரமசிங்கேவுக்கு மீண்டும் ஒரு முறை யோகம் அடித்திருக்கிறது எனலாம். ஐ.நா. போன்ற உலகளாவிய அமைப்புகள், உறவுகளில் அனுபவமும் மேற்குலகின் செல்லப்பிள்ளையாக இருந்து ஈழவிடுதலைப் போராட்டத்தை அழித்ததில் முன்கை எடுத்தவருமான ரணில் இப்போதைய நிலைமையை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதுதான் பெரும் கேள்வி. 
 
ஏனென்றால், ஏற்கெனவே இராஜபக்சேக்களும் பண்டாரநாயகேக்களும் கோலோச்சிய இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராக ஆகி, நாட்டின் அதிபரானவர், மைத்திரி பால சிறீசேனா.  அப்போது, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் ரணிலுடன் சேர்ந்து அவர் உறுதியளித்த ‘நல்லாட்சி’ அரசாங்கம், அப்படியான ஒன்றைத் தரமுடியவில்லை என்பதும் சில ஆண்டுகளுக்கு முந்தைய கசப்பான யதார்த்தம்! 
 
- இர. இரா. தமிழ்க்கனல்  
 

English Summary
Ranil's reentry as PM in Lanka

 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...